தடகளத்தில் தடம் பதிக்கும் ‘தங்க’ மகன்!! (மகளிர் பக்கம்)
வெயிலின் தாக்கத்தால் உருவாகியிருந்த அனல் காற்று குறைந்து, குளிர் காற்று வீசத் தொடங்கிய மாலை நேரம்… ‘‘இன்னும் கால்களை அகலமாக வை; வேகத்தை அதிகப்படுத்து!’’… என்ற பயிற்சியாளர் நாகராஜின் கட்டளைக்கு ஏற்றவாறு, சிரத்தையுடன் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் தடகளப் போட்டியில், ஜூனியர் நேஷனல்ஸ் சாம்பியனான ஜாய் அலெக்ஸ். பயிற்சி முடிந்து வியர்வை சிந்தசிந்த வந்தவரை, இடைமறித்தோம். களைப்பைப் பொருட்படுத்தாமல், தடகள விளையாட்டுக்கும், தனக்குமான உறவு பற்றி பேசினார்.
‘‘சின்ன வயதில் இருந்தே விளையாட்டில் எனக்கு ஆர்வம் அதிகம். முக்கியமாக, தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய பரிசுகள் ஜெயிக்கணும்னு ஆசைப்பட்டேன். அந்தச் சமயத்தில் நான் படித்துக் கொண்டிருந்த செயின்ட் மைக்கேல்ஸ் அகாடமியில் ஸ்போர்ட்ஸ் டே நடைபெற்றது.
அதில் நீளம் தாண்டுதல் (long jump), மும்முறை தாண்டுதல் (Triple Jump) போன்ற போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசு வாங்கினேன். விளையாட்டில் எனக்கிருந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்ட என் பெற்றோர் அத்லெட்டிக்ஸ் கோச் நாகராஜ் சாரிடம் என்னைச் சேர்த்து விட்டார்கள். இப்படித்தான் எனது விளையாட்டுப் பயணம் தொடங்கியது’’ என்றவர், சற்று இடைவெளி விட்டுப் பேசத் தொடங்கினார்.
‘‘ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது இருந்தே போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். தொடக்கத்தில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் பங்கு பெற்று வந்தேன். 2017-ல் இண்டியன் சர்டிஃபிகேட் ஆஃப் செகண்ட்ரி எஜூகேஷன் சார்பாக நடத்தப்படும் மாநில போட்டியில் எங்கள் பள்ளி முதல் தடவையாக கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றது.
அதில் நான், 100மீ, 200மீ மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டேன். 100 மீட்டர் போட்டியில் 11.60 வினாடிகளில் ஓடியும், 200 மீட்டர் போட்டியில் 23.05 வினாடிகளில் கடந்தும் தங்கப் பதக்கம் வென்றேன். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் நான்காவது ஆளாக ஓடி, எங்கள் அணிக்கு வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்தேன்.
அதன் பின்னர், ஸ்போர்ட்ஸ் டெவலப் மெண்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு நடத்தும் ஜூனியர் ஓபன் ஸ்டேட் மீட், ஜூனியர் ஸ்டேட் மீட் எனப் பல போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொள்ள ஆரம்பித்தேன். முதல் தடவையாக, 2017-ல் மதுரை ரேஸ் கோர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஜூனியர் ஸ்டேட் மீட் கடும் சவாலாக இருந்தது. 100 மற்றும் 200 மீ போட்டிகளில் ஓடிய என்னால் எந்தப் பதக்கமும் வெல்ல முடியவில்லை.
தமிழ்நாடு அத்லெட்டிக் அசோசியேஷன் நடத்தும் மாநிலப் போட்டி, 16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஓபன் நேஷனல்ஸ், தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகம் பங்கு பெறும் சவுத் சோன் போட்டிகள், நேஷனல்ஸ் போட்டிகள் என நிறைய போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன்.
கடந்த ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற ஓபன் நேஷனல்ஸ் போட்டியில் தமிழக அணிக்காக, 100 மற்றும் 200 மீட்டர், மெட்லி ரிலே ஆகியவற்றில் ஓடினேன். அதில் பதக்கங்கள் வெல்ல முடியாவிட்டாலும், நிறைய அனுபவம் கிடைத்தது. அந்த அனுபவத்தைக் கொண்டு, அதே ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற சவுத் சோன் போட்டியில், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலமும், மெட்லி ரிலேயில் தங்கமும் வென்றதை என்றைக்கும் மறக்க முடியாது. 2018-ம் ஆண்டில், ஆந்திராவில் நடந்த ஜூனியர் நேஷனல்ஸில் 100 மீட்டர் ஓட்டத்தில், 11.17. விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றதை சமீபத்திய சாதனையாகச் சொல்லலாம்.
இதுவரை, பள்ளிகளுக்கு இடையேயான தேசிய போட்டிகளில் 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட தமிழ்நாடு அத்லெட்டிக் அசோசியேஷன் சார்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் 7 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம், சவுத் சோன் போட்டியில் 1 தங்கம், 1 வெண்கலம், குண்டூரில் நடைபெற்ற(ஆந்திரா) நேஷனல்ஸில் 1 தங்கம், கடந்த ஆண்டு மும்பையில் நடந்த ரிலையன்ஸ் நேஷனல்ஸில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் என மொத்தம் 23 பதக்கங்கள் வென்றுள்ளேன்.
பயிற்சி முறைகள் என்று சொல்ல வேண்டுமானால், கோச் சொல்வதை முக்கியமாக செய்வேன். காலையில் ஸ்கூலுக்குப் போக வேண்டும் என்பதால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயிற்சி செய்வேன். மாலை 5 மணி முதல் 7.30 வரை என தினமும் இரண்டரை மணி நேரம் பயிற்சி செய்வேன்.
முக்கியமாக, கால்கள் மற்றும் தோள்பட்டைகளை வலிமை ஆக்குவதற்கான வொர்க்- அவுட் மீட் நெருங்கும் சமயங்களில் ஸ்பீட் வொர்க்-அவுட் நிறைய பண்ணுவேன். உடலளவில் தயாராகுவது எவ்வளவு முக்கியமோ, அதைப் போன்று மனதளவிலும் தயாராகுவது மிகவும் முக்கியம். எனவே, ஓவர் திங்கிங் பண்ண மாட்டேன். இது மனதைப் பலப்படுத்த உதவும்.
யூத் நேஷனல் போட்டிகளில் மெடல் ஜெயிக்க வேண்டும். இந்தியா சார்பாக, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய மெடல்ஸ் வாங்க வேண்டும். 2024ம் ஆண்டு பிரான்சில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் நமது நாட்டுக்காக மெடல் ஜெயிக்க வேண்டும்.’’ இதுதான் என
லட்சியம் என்றார்.
Average Rating