உரிமைகள் தரப்படுவதல்ல. எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதொன்று!! (கட்டுரை)
அதிகம் “உரிமை” பற்றிப் பேசப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.அதில் உரிமைக்கான போராட்டங்கள் தொடர ப்பட வேண்டும் என்றனர் ஒருசாரார். போராட்டங்கள் மூலமே உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தாம் உறுதிபட நம்புவதாக எடுத்துரைத்தனர் அவர்கள். உரிமை தரப்பட வில்லை என்றனர் மறுசாரார். பொதுவாக உரிமைகள் பற்றிச் சிந்திப்பவர்களும், உரிமை பற்றிப் பேசுபவர்களும் “உரிமை” என்றால் என்ன? அந்த விடயம் சமூகத்தால் எப்படியாக விளங்கிக் கொள்ளப் பட்டிருக்கிறது? என்ற விடயத்தில் தம்மைத் ததெளிவுபடுத்திக் கொள்வது மிகமுக்கியமாகிறது. இதில் உரிமை பெறப்படுவதோ அல்லது தரப்படுவதோ அல்ல, மாறாக உரிமை நிலைநாட்டப்பட வேண்டியதொன்று என்றே சொல்லப்படுகிறது. உரிமை என்பது இடையிட்டு வந்ததல்ல. யாராலும் உருவாக்கப்பட்டதும் அல்ல. அது இயல்பிலேயே இருப்பது, காணப்படுவது. அதனால்தான் அந்த உரிமையை மறுக்கவோ மீறவோ எவருக்கும் அதிகாரமளிக்கப்படவில்லை.
1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைப்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான உலக மாநாட்டின் பிரகடனத்தில் “மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலி ருந்தும் விளைவதே மனித உரிமைகள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் அதன் வகைப்பாடுகள் பற்றிச் சொல்லப்படவில்லை யாயினும், பின்னர் ஐ.நாவின் உறுப்பு நாடுகள் மனித உரிமைகளை குடிமையியல், அரசியல் உரிமைகள், பொருளாதார உரிமைகள், சமூக உரிமைகள், கலாசார உரிமைகள் என ஐந்துவகையாகப் பிரித்துக்கொண்டன.
மேற்குறிப்பிட்ட கூட்டத்தொடரில் உரிமை தொடர்பாகப் பேசப்பட்டபோது “சுருக்” கென்று என் மனதைத் தைக்கொண்ட ஒரு விடயம் இது. “இனி வரும் ஐந்து வருடங்கள் இந்த நாட்டில் அதிகம் தொடப்பட வேண்டிய விடயமும், அதிகம் பேசப்பட வேண்டிய விடயமும் உரிமை தொடர்பாகவே இருக்கப் போகிறது. அதிகம் போரட்டத்துக்குள்ளாகப் போகின்ற விடயமும் உரிமை தொடர்பாகவே இருக்கும் என்றும், அவ்வகைப் போராட்டங்களுக்கூடாக மறுக்கப்பட்ட அல்லது பறிக்கபட்ட உரிமைகள் தொடர்பாகவே அதிகம் பேசப்போகிறோம் என்ற விடயத்தை உறுதிப்படுத்துவதைப்போல சமகாலப் பேரினவாதப் பேச்சுகள் அமைந்திருக்கின்றன. அதுவும் இத் தேர்தல் காலத்தில் இதற்கான அறிகுறிகள் அதிகம் தென்படுவதை ஊடகங்கள் உறுதிப்படுத்திவருகின்றன.
வரும் தேர்தலில் நாடாளுமன்றக் கதிரைகளில் அமரப்போகும் உறுப்பினர்கள் உரிமை தொடர்பாகவே அதிகம் பேசவேண்டி இருக்கும். ஏனெனில் நாடாளுமன்றத்தைத் தவிர பிற இடங்களில் இது பற்றிப் பேச வாய்ப்பிருக்காத வாறு சூழ்நிலைகளை உருவாக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே தான் இது பற்றி கட்சிகளுக்குப்பால் மக்களுக்கான பொது நிறுவனங்களும் இது பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.ஏனெனில் தேர்தலின் பின் இது பற்றிச் சிந்திக்கலாம் என்பது சாத்தியப்படக் கூடியதொன்றல்ல. தேர்தலின் பின் தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும் “நாட்டை எப்படி அரசு முன்கொண்டு செல்லப்போகின்றது” என்ற விடயம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின்னர் தெளிவாக்கப்பட்டு விட்டது. எனவே அது வழியேதான் அவர்கள் நடவடிக்கைகள் தொடரும். அதில் எதுவித மாற்றங்களும் இருக்காது. தற்போது காணப்படும் உரிமைகள் தொடர்பான அவர்கள் நடவடிக்கைகள் இன்னும் எம்மை ஒடுக்குவதாகவே இருக்குமே ஒழிய இம்மியேனும் அவர்கள் தம் நழரையிருந்து இறங்கிவருவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்பதனை, தொல்லியல் தொடர்பாக ஆராயப்படுவதற்காக ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாணத்துக்குரிய செயலணியும், அதில் அங்கத்துவம் வழக்கப்பட்டவர்கள் தொடர்பான தகமை சார் பின்னணியும் தெளிவுபடுத்தியிருப்பதாக ஒரு அரசியல் அவதானி குறிப்பிட்டார்.
இந்தவிடயத்தில் முழுமையாக அரசியல்வாதிகளையும், அவர்கள் தொடர்பான கட்சிகளையும் நம்பி இருப்பது பொருத்தமற்றது என்றும், அதனை அணுகுவதற்கும் மாற்றுசிந்தனை ஒன்று அவசியம் என்றும் எமது உரிமைகள் தொடர்பாகப் பேசக் கூடிய ஆளுமைகளைக் கொண்ட மக்கள் குழு ஒன்றின் அவசியமும் ஆழமாக உணரப்பட்டிருக்கிறதெனவும் அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக நீதிய ற்ற முறையில் அணிகளை உருவாக்கிப் பக்கச் சார்பான நடைமுறைகளை எடுத்துவரும் அரசின் நடவடிக்கைகளுக்கு அது தொடர்பான வரலாற்று ஆவணங்களைச் சமர்ப்பித்து எதிர்வினையாற்ற ஒரு பலமான அணி ஒன்றின் உருவாக்கத்தை காலம் உணர்த்தியிருப்தாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
எமது சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கும் சாபக்கேடுகளில் ஒன்று அது தொடர்பாகப் பேசவல்ல அதிகாரிகள் தமது சுய நலன் கருதி அது பற்றிப் பேசுவதில்லை. அவர்கள் தமது இருப்பினைத் தக்கவைத்துக் கொள்ளக் கூடியவாறே தமது காய் நகர்த்தல்களையும் மேற்கொள்வர். இவர்கள் தாம் பொறுப்புள்ள வர்கள் என்ற சிந்தனையில் இருந்து விலகி சில அரசியல் கட்சி தொடர்பான நிகழ்சி நிரலோடு இயங்குவது இனங்காணப்பட்டிருக்கிற து.
மாதிரிக்கு சமகால நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம். தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தினால் விதிக்கப்பட்ட நடைமுறைகளை அதிகாரிகள் முழுமையாக முறைப்படுத்துகின்றனரா.? உலக சுகாதார நிறுனம் இன்னும் இலங்கையை நோய்தொற்று முற்றாக நீங்காத நாடாக அறிவித்த பின்னும் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதை அவதானிக்க வேண்டிய அதிகாரிகளும், அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவர்களும் முழுமையான பொறுப்போடு செயற்படுகிறார்களா? இல்லையே! அவதானியுங்கள். அது தொடர்பாகச் சிந்திக்க வேண்டியவர்களும் நீங்களே!!
Average Rating