கொழும்பு மாவட்டத்தில் தொடர்மாடி வீடுகள் நிர்மாணிக்கும் புதிய திட்டம்!! (கட்டுரை)
கொழும்பு மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமாக உள்ள காணிகளில் பல்வேறு தொடர்மாடி வீடுகள் நிர்மாணிக்கும் புதிய திட்டங்கள் பற்றி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரேணுகா பெரேரா வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்தவிடம் எடுத்துக் கூறினார்.
புதிதாக நியமிக்கப்பட்ட வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுரத்த வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீடமைப்புத் திட்டங்கள் பற்றி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போது அதிகார சபையின் தலைவர் பின்வரும் புதிய திட்டங்களை இராஜாங்க அமைச்சருக்குத் தெளிவுபடுத்தினார்.
மருதானை 797 வத்தையில் உள்ள காணியில் தொடர்மாடி வீடுகள், கண்டி குண்டசாலையில் உள்ள அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் வீடுகள் நிர்மாணித்தல், மொரட்டுவை சொய்சாபுரவில் உள்ள காணியில் தொடர்மாடி வீடுகள் நிர்மாணித்தல், மட்டக்குழி காக்கைதீவில் உள்ள காணியில் தொடர்மாடி வீடுகள் நிர்மாணித்தல், கம்பஹா மாவட்டத்தில் அதிகார சபைக்குச் சொந்தமான இரண்டு காணித் துண்டுகளில் வீடமைப்புக் கிராங்கள், கொழும்பில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைக் காரியாலய ஊழியர்கள் செத்சிரிபாயவுக்கு இடமாற்றப்பட்ட பின்னா் தலைமைக் காரியாலயத்தின் காணியில் 30 மாடிகள் கொண்ட சொப்பிங் மோல், ஆடம்பர வீடுகள், வியாபார நிலையங்கள், வாகன தரிப்பிடங்கள் அமைத்தல்.
அத்துடன் தற்பொழுது இந்திய அரசாங்கத்தினால் வடக்கு மாகாணத்தில் 600 வீடுகள் 300 மில்லியன் ருபா செலவிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, காலி மாவட்டங்களில் 600வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இந்திய அரசாங்கம் நிர்மாணப் பணிகள் முடிந்த பின்னரே அதற்குரிய நிதியை வழங்கி வருகின்றது. கடந்த கால ஆட்சியின் போது மொனறாகலை, கொழும்பு, ஹம்பாந்தோட்ைட போன்ற மாவட்ட அலுவலகங்களில் பல்வேறு நிதிமோசடிகள், ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. அவை குறித்து உள்ளக கணக்காய்வாளர்கள் அதிகாரிகளினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அதற்கமைவாக ஹம்பாந்தோட்டை முன்னாள் மாவட்ட முகாமையாளர் உட்பட 4 அதிகாரிகள் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளனர். ஹம்பாந்தோட்டையில் காணி கொள்வனவு செய்தலில் 600 மில்லியன் ருபா மோசடி இடம்பெற்றதையடுத்தே இவ்விவகாரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வீடுகள் நிர்மாணிக்கவென 338727 வீடுகளுக்கான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை மீள அறவிடுவதில் அதிகாரிகள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதுவரை 30வீதமே அறவிடப்பட்டுள்ளது. இக்கடன்கனை மீள அறவிடுவதன் மூலம் மேலும் பல குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்களை மாவட்ட அதிகார சபைகள் மூலம் வழங்க முடியும்.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ஆரம்பித்த சகல வீடுகளும் முற்றாக நிர்மாணிக்க முடியாமையினால் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன. இவ்வீட்டுப் பயனாளிகள் மிகுதி வீட்டுக் கடன்களை கோரி அடிக்கடி தலைமைக் காரியாலயத்திற்கு வந்து முறையிடுகின்றனர். நாடு முழுவதில் 2500 வீட்டு உரிமைப்பத்திரங்கள் பூரணப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ள உலக குடியிருப்பு தினத்தில் பிரதமர் தலைமையில் உறுதிப்பத்திரங்களையும் உரிய வீட்டுரிமையாளருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ரேணுகா பெரேரா இங்கு உறுதியளித்தார்.
Average Rating