தாய்மைக்கு கிடைத்த வெற்றி!! (மகளிர் பக்கம்)
உலக தடகள சாம்பியன்ஷிப்பின் ஜாம்பவானாக இருந்த உசைன் போல்ட் சாதனையை அமெரிக்க வீராங்கனை அலிசன் ஃபெலிக்ஸ் முறியடித்துள்ளார். கத்தாரின், தோஹாவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடை பெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி நடந்த போட்டியில் 4*400 தொடர் ஓட்டத்தில் 12வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் அலிசன் ஃபெலிக்ஸ். இதன் மூலம் உசைன் போல்ட்டின் உலக சாதனையை முறியடித்துள்ளார். உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் உசைன் போல்ட் ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை 11 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். தற்போது அதனை முறியடித்து 12வது பதக்கத்தை அலிசன் ஃபெலிக்ஸ் பெற்றிருக்கிறார்.
இது குறித்து அலிசன் ஃபெலிக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் பெற்ற தங்கப் பதக்கங்களுடன் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு, “இந்த ஆண்டு நான் கடந்து வந்த அனைத்தையும் நினைவில் கொள்கிறேன். இது எல்லாவற்றையும் மீண்டும் கொண்டு வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார். உசைன் போல்ட்டின் சாதனையை இவர் முறியடித்திருந்தாலும், இந்த இடத்துக்கு ஃபெலிக்ஸ் வந்தது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் தனது மகள் கேம்ரினை பெற்றெடுத்த 10வது மாதங்களிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
2000 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தங்கப்பதக்கத்தை வென்று வந்த ஃபெலிக்ஸ், 2018 ஆம் ஆண்டு நவம்பரில் தனது மகளைப் பெற்றெடுப்பதற்கு முன்னர் Preeclampsia வால் (கர்ப்பகாலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம்) பாதிக்கப்பட்டிருந்தார். அவர் 32 வாரம் கர்ப்பமாக இருந்த போது உடல்நிலை பாதிப்பு காரணமாக சிசேரியன் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். குழந்தையோ குறை மாதத்தில் பிறந்தது. குழந்தை மட்டுமின்றி இவரின் உடல் நிலையும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிறந்த குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தோடு ஒரு உணர்ச்சிப்பூர்வமான பதிவைப் பகிர்ந்திருந்தார் ஃபெலிக்ஸ்.
பல்வேறு சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் நலனும் கொஞ்சம் தேற ஆரம்பித்துள்ளது. ஃபெலிக்ஸ்சும் பழைய நிலைக்கு திரும்பினார். பல சிக்கல்களை தாண்டித்தான் இருவரும் பிழைத்துள்ளனர். இந்த சூழ்நிலையில் குழந்தை பிறந்து 10 மாதத்திலேயே மீண்டும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார் 32 வயது நிரம்பிய அலிசன் ஃபெலிக்ஸ். தற்போது 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒலிம்பிக்சில் அதிக தங்கம் வென்ற பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரும் இவரே.
என்ன தான் திறமைசாலியாக இருந்தாலும், சற்று சோர்வடையும் நேரங்களில் தூக்கி எறியும் இந்த உலகில் இருந்து அலிசனும் தப்பவில்லை. நைக் நிறுவனம் அவருக்காக ஸ்பான்சர் செய்து வந்தது. ஆனால் அவர் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்த போது பல இன்னல்களைத் தாண்ட வேண்டியது இருந்தது. நைக்குடன் அவர் கையெழுத்திட்டிருந்த ஒப்பந்தப்படி ஃபெலிக்ஸ் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு அவர் முன்பை போலவே வேகமாக ஓடவில்லை என்றால் அவரது சம்பளம் குறைக்கப்படும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனை எதிர்த்து ஃபெலிக்ஸ் நைக்கின் ஸ்பான்ஸர் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். அதோடு நில்லாமல் விளையாட்டு உலகத்தில் பெண் வீராங்கனைகள் எப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற புதிய உதாரணத்தை உருவாக்குவேன் என்றும் கூறியிருந்தார். தற்போது
அதை நிரூபித்தும் இருக்கிறார் அலிசன் ஃபெலிக்ஸ். இவரை தொடர்ந்து பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி, 10.71 விநாடிகளில் இலக்கைக் கடந்து தக்கப்பதக்கம் வென்றார். இந்த வெற்றியினால், ‘உலக தடகளப் போட்டியில் நான்கு முறை தங்கம் வென்ற வீராங்கனை’ என்ற பட்டத்தையும் ஷெல்லி பெற்றுள்ளார்.
1986 ஆம் ஆண்டு, ஜமைக்கா நாட்டின் கிங்ஸ்டனில் பிறந்தவர் ஷெல்லி. குடும்பம் கடுமையான வறுமையான சூழலில் இருந்தாலும், தன் விளையாட்டுத் திறமையை மேம்படுத்திக் கொள்ள தொடர்ந்து போராடியவர். ஏனெனில், அதைத்தான் தன் எதிர்காலமாக வரையறுத்திருந்தார். உசைன் போல்ட்டுக்கு இணையாகக் களத்தில் சாதனைகள் புரிந்திருந்தாலும், பெண் என்ற காரணத்தினாலே பல இடங்களில் ஷெல்லியின் திறமை அங்கீகரிக்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மை. 2017ஆம் ஆண்டு நடந்த உலக தடகளப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார் ஷெல்லி. அதன்பின், குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகளானதும், மீண்டும் இந்த ஆண்டு தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார்.
இது குறித்து ஷெல்லி பேசும்போது, “நான் மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன். நான் கருவுற்றதை உணர்ந்தவுடன், சில மணி நேரங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் அமர்ந்திருந்தேன். எதிர்காலம் குறித்த நிறைய கேள்விகள் மனசுக்குள் வந்து போனது. சில மணி நேரம் அழுதேன். அவற்றுக்கெல்லாம் முடிவாக, என் குழந்தையுடன் நான் தடகளப் போட்டியில் தங்கம் வாங்குவேன் என்று நம்பினேன்.தாய்மை என்பது பெண்கள் வாழ்வில் நடக்கும் இயல்பான ஒன்று. தாய்மைக்காகத் திறமையை விட்டுக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று முடிவெடுத்தேன்.
கருவுற்ற சமயத்தில் கூட மெதுவான பயிற்சிகள் எடுத்துக் கொண்டே இருந்தேன். பிரசவ அறைக்குள் நுழையப் போகும் சில நிமிடங்களுக்குமுன்பு கூட, வலியுடன் நான் தடகளப் போட்டிகளை ரசித்தேன். என் குழந்தை பிறந்த இரண்டு மாதங்களில், என் வழக்கமான பயிற்சிகளைமேற்கொள்ள ஆரம்பித்துவிட்டேன். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. அதிக வலி காரணமாக சில நாள்கள் பயிற்சி எடுக்காமலேயே இருந்தேன். ஆனால், வெகுவிரைவில் பழைய ஷெல்லியாக மாறி தடம் பதிக்க ஆரம்பித்தேன். தாய்மைக்குப் பின் எனக்கான புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கினேன்.
உலக தடகளப் போட்டிக்காக, கத்தார் வந்த பின்பும் கூட கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. மைதானத்துக்குள் வந்ததும் ஜெயித்தே ஆகவேண்டும் என்று துணிந்து ஓடினேன். என்னுடைய பல நாள் கனவு இந்த வெற்றியின் மூலம் நிறைவேறியது. என் தங்கப் பதக்கத்தை என் தாய்நாட்டுக்காக மட்டுமல்லாமல், பல நேரங்களில் என்னுடைய அரவணைப்பை என் லட்சியத்துக்காக விட்டுக் கொடுத்த என் மகனுக்கும் சமர்ப்பிக்கிறேன். இது ஒரு வீராங்கனையின் வெற்றி மட்டுமல்ல, ஒரு தாயின் வெற்றியும் கூட. என்னைப் பொறுத்தவரை இன்று தான் எனக்கு அன்னையர்தினம்” என்று நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டார் ஷெல்லி.
Average Rating