பிரபலங்கள் விரும்பும் பிரபல சிகிச்சை!! (மருத்துவம்)
உடல் மற்றும் மனம் புத்துணர்வு பெறவும், தூக்கமின்மை நீங்கி மனச்சோர்வை தவிர்க்கவும் ஆயுர்வேதத்தில் சிரோதரா என்ற சிகிச்சைமுறை பிரபலமாக இருக்கிறது. பல்வேறு பிரபலங்களின் விருப்பத்துக்குரிய சிகிச்சையாகவும் சிரோதரா இருக்கிறது. இதுபற்றி ஆயுர்வேத மருத்துவர் அசோக் குமார் விளக்குகிறார்.
சிரோதரா என்பது …சமஸ்கிருதத்தில் சிரசு என்பது தலையையும், தரா என்பது ஊற்றுதலையும் குறிக்கும். நோயாளியை தரா பலகையில் படுக்க வைத்து மேலே தொங்கவிடப்பட்டுள்ள பாத்திரத்திலிருந்து மூலிகைத் திரவத்தை நோயாளியின் நெற்றியின்மேல் தொடர்ச்சியாக இடைவிடாது ஊற்றுதலே சிரோதரா என்று சொல்கிறோம்.
இச்சிகிச்சைக்கு வருபவர்களை தலை, கை, கால், உடல் ஆகியவற்றில் எண்ணெய் தேய்த்துப் பிறகு படுக்க வைக்க வேண்டும். தரா என்ற பலகையில் படுக்க வைத்த பிறகு, தலைக்கு மேல் 2 லிட்டர் கொள்ளளவு உள்ள பாத்திரம் இருக்கும். இது தங்கத்தாலோ, வெள்ளியினாலோ அல்லது மண்ணினாலோ ஆன பாத்திரமாக இருக்கலாம்.
மூலிகை எண்ணெய், பால், மூலிகை மோர் அல்லது மூலிகை கஷாயம் போன்றவற்றில் ஏதாவது ஒன்று அந்த பாத்திரத்தில் நிரப்பப்பட்டு இருக்கும். 1 அல்லது 1 ½ லிட்டர் பாத்திரத்தின் நடுவில் ஒரு துளையிட்டு 6 அங்குலம் நீளமுள்ள, நூல் அல்லது துணி தொங்க விடப்பட்டிருக்கும். அது நோயாளியின் நெற்றியிலிருந்து 3 அங்குலத்திற்கு மேல் தொங்கவிடப்பட்டு இருக்கும்.
தொங்கவிடப்பட்டுள்ள நூலின் வழியாக மூலிகை திரவமானது மிதமான வெப்பத்தில் நோயாளியின் நெற்றியின் மீது தொடர்ந்து ஊற்றப்படும். அவ்வாறு ஊற்றப்படும் திரவமானது வலது, இடது புறமாகப் படும்படி ஊற்றப்படும். அவ்வாறு ஊற்றும்போது, ஊற்றும் திரவமானது கண்களில் படாதபடி இருக்க புருவத்திற்கு மேல் துணியால் ஆன பேண்ட்(Band) பயன்படுத்த சுற்றிக்கட்ட வேண்டும்.
சிகிச்சையின் வகைகள்
நோயின் தன்மைக்கேற்ப மூலிகைத் திரவியம், மருத்துவரால் நிர்ணயிக்கப்படுகிறது. தக்ரதரா, தைலதரா, கஷாயதரா, சீரதரா என்ற வகைகள் உண்டு. நோயின் தன்மைக்கேற்ப எவ்வித சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை மருத்துவர் நிர்ணயம் செய்வார். ஒரு மணி முதல் ஒன்றரை மணி நேரம் வரை இந்த சிகிச்சை. 7, 14, 21 நாட்கள் என சிகிச்சை அளிக்கலாம்.
7 நாட்கள் சிகிச்சை முறையின்போது முதல் நாள் ஒரு மணிநேரம் செய்யத் தொடங்கி. அடுத்து வரும் 6 நாட்களில் ஒவ்வொரு நாளும் 5, 5 நிமிடம் அதிகரித்து செய்து ஏழாவது நாட்களின் முடிவில் ஒன்றரை மணி நேரம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
14 நாட்கள் மேற்கொள்ளப்படும் சிகிச்சையில் 7 நாட்கள் மேற்சென்னபடி செய்யப்படும். 7 நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு அதாவது 8-வது நாளிலிருந்து ஒன்றரை மணி நேரத்திலிருந்து 5 நிமிடம் குறைவாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 14-வது நாள் முடிவில் ஒரு மணி நேரம் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. குழந்தைகள் ஒத்துழைப்பு கொடுத்தால் 6 வயது முதலே இந்த சிகிச்சை கொடுக்கலாம். இந்த சிகிச்சை முறை நோயாளியின் உடல்தன்மையைப் பொறுத்து மாறும்.
வாத நோய் கொண்டவர்களுக்கு தைலங்களில் சீரபலாத்தைலம், பலா அஸ்வகந்தாதி தைலங்களை வாத நோய்க்கு பயன்படுத்தலாம். தக்ரதராவில் மோருடன் சந்தனம் வெட்டி வேர் போன்ற மூலிகைகளை பயன்படுத்தி பித்த நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும். கப நோய் கொண்டவர்களுக்கு அதிமதுரம், கோரைக் கிழங்கு ஆகிய மூலிகையை பயன்படுத்தி அளிக்கப்படுகிறது. இத்தைலங்கள் நாட்டு மருந்தகங்களில் கிடைக்கும்.
சிகிச்சைக்கு தகுதியானவர்கள்
நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, முக வாதம், பக்க வாதம், ஞாபக மறதி, மனநோய், கண், காது மூக்கு தொண்டையில் ஏற்படும் நோய்களுக்கு இச்சிகிச்சை அளிக்கலாம். இன்றைய காலகட்டத்தில் அதிகமாக தூக்கமின்மை, மனச்சோர்வு ஏற்படுவதால் அவற்றுக்கு இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். இந்த சிகிச்சைமுறை நோயாளிகளுக்கு மட்டுமல்லாது, ஆரோக்கியமானவர்களும் மருத்துவரின் ஆலோசனைப்படி உடல் மற்றும் மனம் புத்துணர்ச்சி பெறுவதற்காக இச்சிகிச்சையை எடுத்துக் ெகாள்ளலாம்.
உயர் ரத்த அழுத்தம் தூக்கமின்மை மனநல நோய் உள்ளவர்கள் இந்த சிகிச்சையை ஆயுர்வேத மருந்துகளுடன் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளும்போது நோயின் ஆதிக்கம் படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுகிறது. சினிமா பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் கூட தங்களது வேலைப் பளுவினால் பெற்ற மனச்சோர்வை நீக்க இச்சிகிச்சை முறையைப் பெற்று புத்துணர்வு பெறுகின்றனர். குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இச்சிகிச்சையை மேற்கொள்ளக் கூடாது.
– அ.வின்சென்ட்
நவீன சிரோதரா
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல தரா பலகையானது ‘பைபரால்’ பயன்படுத்தப்படுகிறது. தரா பாத்திரத்தில் குழாய் போன்று வடிவமைக்கப்பட்டு சரியான விகிதத்தில் படும்படி செய்யப்படுகிறது. இச்சிகிச்சை முறை வெளிநாடுகளிலும் பிரபல மடைந்து இருக்கிறது. வெளிநாட்டவரும் மன அழுத்தத்தை நீக்கி புத்துணர்ச்சி பெற இச்சிகிச்சையை எடுத்துக்கொள்கின்றனர்.
இன்றளவும் இச்சிகிச்சையானது கேரளா, தமிழக மாநிலங்களில் பழங்கால முறைப்படி செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான நட்சத்திர உணவு விடுதி மற்றும் ரிசார்ட்களில் ஆயுர்வேதிக் ஸ்பா இயங்கி வருகிறது. அங்குள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெறலாம்.
Average Rating