குப்பைமேனிக்குள் இத்தனை மகத்துவமா?! (மருத்துவம்)
‘எளிதில் கிடைக்கும் எந்த ஒரு பொருளும் மதிக்கப்படுவதில்லை. அதன் மதிப்பு தெரிவதுமில்லை. அப்படி மிகமிக சாதாரணமான ஒரு செடியாக காட்சி தரும் குப்பைமேனிக்குள் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
சாலையோரங்களிலும், குப்பை மேடுகளிலும் முளைத்துக்கிடக்கும் இதன் பலன் தெரிந்தால் வியந்துபோவோம்’’ என்கிற சித்த மருத்துவர் மாலதி, அதன் நற்பலன்களை நமக்கு விளக்குகிறார்.
குப்பையாக அல்லது குப்பைகளின் தேக்கத்தினால் கேடடைந்துள்ள மேனி என்ற உடலினை, நோய் நீக்கம் செய்து பாதுகாத்திடும் செடி என்ற பொருளிலும் குப்பை மேனி என்று பொருள் கொள்ளலாம்.
குப்பைமேனியின் தாவரவியல் பெயர் Acalypha Indica Linn. அரிமஞ்சரி, பூனைவணங்கி (குப்பைமேனியின் செடியினை வேறுடன் பிடுங்கி பூனையின் முன்பு வைத்தால் பூனை பயந்து அங்கேயே அமர்ந்துவிடும்) என்ற வேறு பெயர்களிலும் குப்பைமேனி அழைக்கப்படுகிறது.
இதன்சுவை கசப்பு மற்றும் கார்ப்பு. இது வெப்ப வீரியமாக உடலில் செயல்படும். இதன் செய்கைகள் வலிநீக்கி, புழுக்கொல்லி, பெருமலம்போக்கி, சிறுநீர்ப்பெருக்கி, வாந்தியுண்டாக்கி, கோழையகற்றி, சூதகமுண்டாக்கி.
இதன் செய்கைகள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகளை இலகுவாக வெளியேற்றும் பண்பு கொண்டிருப்பதைக் காணலாம். இச்செடியின் இலைகள், வேர், வேர்பட்டை, சமூலம் (முழுச் செடி) என அனைத்து பகுதிகளும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
இதன் இலையை நான்கு கைப்பிடி அளவுடன் 800 மிலி நீருடன் சேர்த்து சிறுதீயில் காய்ச்சி 100 மிலி ஆக வற்றச் செய்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கழிச்சல் ஏற்பட்டு வயிற்றில் நீண்ட நாட்களாக தங்கியுள்ள புழுக்கள் மலத்துடன் இலகுவாக வெளியேறும்.
இலையை 4 மடங்கு நீருடன் சேர்த்து பாதியாக காய்ச்சி வடிகட்டிய நீரினைக் கொண்டு நாட்பட்ட ஆறாத புண்களை கழுவிட அதனில் உள்ள அழுகிய திசுக்கள் நீக்கப்பட்டு (குப்பை மேனி தழையால் செய்யப்படும் மத்தன் தைலம் பயன்படுத்திட) புண்கள் எளிதில் ஆறும்.
இலைச்சாறு குழந்தைகளுக்கு 5 மில்லி முதல் 10 மில்லி வரையிலும் பெரியவர்களுக்கு 15 மில்லி முதல் 20 மில்லி அளவு வரை காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க கழிச்சல் உண்டாகி குடலில் தங்கியுள்ள புழுக்கள் மற்றும் கபம் வெளியாகும். இதனால் மலக்கட்டு, கிருமி நோய்கள், மந்தம், செரியாமை, தேமல், படை, அரிப்பு போன்ற தோல் நோய்கள் நீங்கி உண்ட உணவின் சத்துக்கள் உடலினை வன்மை பெற செய்யும்.
இலைச்சாற்றினை குழந்தைகளுக்கு 15 மில்லி முதல் 20 மில்லி பெரியவர்களுக்கு 25 மில்லி முதல் 30 மில்லி வரை காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க வாந்தியுண்டாகி பித்தம் தணிவதுடன் செரியாமை கோழைக்கட்டு, மந்தம், புளித்த ஏப்பம், சுவையின்மை உணவில் விருப்பமின்மை முதலிய பிரச்னைகள் நீங்கும். இலைச்சாற்றினை சிறு தீயில் சுண்டக்காய்ச்சி மெழுகுப்பதத்தில் எடுத்து 130 முதல் 280 மில்லி கிராம் அளவு இருவேளை உள்ளுக்குத் தர குழந்தைகளின் இருமல் நீங்கும்.
இலைச்சாறுடன் தேன் சேர்த்து குழைத்து பற்றுப்போட தொண்டைவலி, வீக்கம், குரல் கம்மல் குணம் உண்டாகும்.இலைச்சாறுடன் கற்சுண்ணாம்புச் சேர்த்து குழைத்துத் தலைவலி, மூக்கடைப்பு, சைனஸ், வீக்கம் உள்ள இடத்தில் வெளியில் பற்றுப்போட விரைவில் குணமாகும்.
சிறிய குழந்தைகள்(2-3 வயது) தொண்டையில், மார்பினில் சளிகட்டிக் கொண்டிருக்கும்போது அதனை துப்பத் தெரியாமல் சுவாசப்பாதையில் அடைத்துக் கொள்ளும். அதனால் மூச்சுத்திணறல், மார்புவலி என வேதனை உண்டாக்கும். அப்போது, இலைச்சாறுடன் சம அளவு வேப்ப எண்ணெய் கலந்து அதனை விரலால் எடுத்து தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவிட தொண்டையில், மார்பில் வயிற்றில் கட்டியிருக்கும் கோழை வாந்தியுடன் வெளியேறி சுகம் உண்டாகும்.
இலைச்சாற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி காதுவலிக்கு காதில் சில சொட்டுக்கள் விட்டும், காதின் வெளியிலும் தடவி வர குணம் உண்டாகும். காதுவலி, காதெழுச்சி, காதடைப்பு, காதுமந்தம் இவற்றிற்கு ஒரு கைப்பிடி இலையுடன் சிறிது கல்லுப்பு சேர்த்து உள்ளங்கையில் வைத்து கசக்கிச் சாறு பிழிந்து இதனுடன் சிறிது கற்சுண்ணாம்பு சேர்த்து குழைத்து அதனை காதினைச் சுற்றி வெளியில் பற்றுப்போட நிவாரணம் கிடைக்கும்.
தொண்டையில் வெளி பக்கமாக அந்தப் பற்றினைப்போட தொண்டைவலி, வீக்கம், குரல் கம்மல் குணமாகும்.விசப்பூச்சிகள் கடித்த வீக்கம், கடிவாய்வலி அவ்விடங்களில் பற்றுப்போட விரைவில் குணமாகும். கட்டிகளின் மீது பற்றுப்போட கட்டிகள் விரைவில் பழுத்து உடைந்து சீழ் வெளியாகி விரைந்து நலம் பெறலாம்.
மது போன்ற போதைப்பொருட்கள் அதிக அளவில் நீண்ட நாட்களாக எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட குடிவெறி மயக்கம் இருப்பவருக்கு, குப்பைமேனி இலையுடன் ஒருகல் கல்லுப்புச் சேர்த்து கசக்கினால் வரும் சாற்றினை காலையில் மட்டும் இரு நாசித் துளைகளிலும் 3 முதல் 5 துளிகள் வரை விட்டு 45 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் ஒரு மண்டலம் தலை முழுகல் செய்து வர குடி வெறிநோய் நீங்கும்.
ஒரு கைப்பிடி இலையுடன் ஒரு பல் பூண்டு சேர்த்து மைய அரைத்து காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க மலத்துடன் வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். இவ்வாறு தொடர்ச்சியாக 10 நாட்கள் அல்லது வாரத்தில் இரு நாட்கள் என ஒரு மாதம் செய்ய குழந்தைகளில் குணப்படுத்த இயலாத தோல்நோய்கள், நாட்பட்ட தேமல், வெண்படை, கரப்பான் மற்றும் சிரங்கு குணமாகும்.
இலையை தனியாகவோ அல்லது எட்டில் ஒரு பங்கு விரலி மஞ்சள்தூள் சேர்த்தோ அரைத்து 5 மில்லிகிராம் குழந்தைகளுக்கும், 15 மில்லிகிராம் பெரியவர்களுக்கும் காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க உடனே வாந்தி ஏற்பட்டு பித்தம் தணியும். செரியாமை, வயிற்று உப்புசம், மாந்தம் மந்தம் ஆகியவை குணமாகும். இதனை ஆசனவாய் வழியாக உட்செலுத்த நாட்பட்ட மலக்கட்டு நீங்கும்.
இலையை மட்டும் நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் இரவில் இளஞ்சூடான பாலில் 5 மில்லிகிராம் அளவு கொடுத்து வர வயிற்று புழுக்கள் அனைத்தும் மலத்தில் வெளியாகி 10 நாட்களில் கிருமிகளால் ஏற்பட்ட தோல்நோய்கள், ஒவ்வாமை, சுவையின்மை, ரத்தசோகை முதலியன குணமாகும்.
இலைப்பொடியினை உடல் வன்மைக்கு ஏற்றபடி ஒரு மில்லி கிராம் முதல் ஒன்றரை மில்லி கிராம் அளவு வரை தேனில் குழைத்துக் கொடுக்க இருமல், ஈளை, இரைப்பு முதலிய சுவாச உறுப்புகளின் பிரச்னைகளில் நல்ல குணம் உண்டாகும்.
சற்று கொரகொரப்பான பொடியினை கறி நெருப்பினில் இட்டு உண்டாகும் புகையினை நாட்பட்ட அழுகிய புழு வைத்த ஆறாத புண்களில் புகையைக் காட்டினால் புழுக்கள் வெளியேறி அழுகிய சிதைந்த திசுக்கள் நீங்கி விரைவில் குணம் கிடைக்கும். சைனஸ் மூக்கடைப்பு தலைவலி முதலியவற்றில் நல்ல நிவாரணம் ஏற்படும்.
குப்பைமேனியை கலவைக் கீரைகளில் ஒரு பகுதியாக சேர்த்து சமைத்து உண்ணும் பழக்கம் இன்றும் நமது தமிழகக் கிராமங்களில் உள்ளது. கலவைக் கீரையை கர்ப்பிணிப் பெண்கள் வாரம் ஒருநாள் பருப்புடன் சமைத்து உண்பதால் சுகப்பிரசவம் ஏற்பட ஏதுவாக அமைகிறது.
இன்றும் சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகளில் நமது சித்த மருத்துவர்கள் ஆறு மாதத்திற்குப் பின்பு, வாரம் ஒருநாள் கலவைக்கீரையை பருப்புடன் சேர்த்து வேக வைத்து கடைந்து உண்ணுதலை கட்டாயமாக அறிவுறுத்துகிறார்கள். கீரையாக சமைத்து உண்டு வர உணர்வு மற்றும் இயக்க நரம்புகளின் சீர்கேடுகள் நீங்கி உடலியங்கில் வன்மையாகும்.
குப்பைமேனி இலைகளை விளக்கெண்ணெய் சேர்த்து மண்சட்டியில் இட்டு வதக்கி ஒரு மண்டலம் பத்தியமாக உண்ண, உடல் நரை திரை நீங்கி இளமையாக, அழகுடனும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் வன்மையாக வாழலாம். இதன் இலைப்பொடியினை பல் ஈறுநோய்களில் பற்பொடியுடன் பயன்படுத்தலாம்.
ஈறுகள் வன்மை பெற இலைப்பொடியினை கலந்த குடிநீரால் வாய் கொப்பளிக்கலாம். வாய்நாற்றம் பற்சொத்தையில் புகையை பல் ஈறுகளில் படும்படி செய்தால் விரைவில் குணம் கிடைக்கும்.இலையின் பொதுக் குணப்பயன்களை பின்வரும் பாடலால் அறியலாம்.
‘தந்த மூலப்பிணி தீத்தந்திடு புண்சர்வ விடம்
உந்து குன்மம் வாதம் உதிரமூ
– லந்தினவு
சூலஞ் சுவாசம் தொடர்பீநிசங் கபம்போம்
ஞாலங்கொள் மேனியதனால்.’
– தேரையர் குணவாகடம்.
குப்பை மேனியின் வேர்வேரினை எட்டு மடங்கு நீர் சேர்த்து எட்டில் ஒன்றாக காய்ச்சி வடித்து உள்ளுக்கு கொடுக்கக் கழிச்சல் ஏற்படும்.
வேரை நன்றாக மைய அரைத்து 5 மில்லிகிராம் அளவு நீரில் கலந்து உட்கொள்ள எலி கடித்த விஷம் நீங்கும். ஆனால் வாந்தியும் கழிச்சலும் உண்டாகும். வேரினைக் கொண்டு வேப்பங்குச்சியைப் போல் பல்துலக்கி வரலாம். பற்கள் உறுதியாகும். ஈறுகள் வலிமையாகும்.
இதன் சமூலத்தை இடித்துச் சாறு எடுத்து இலைச்சாற்றை அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தலாம். சமூலத்தினை நிழலுர்த்தி சூரணம் செய்து பற்பொடிகளில் சேர்த்து பயன்படுத்த பல்நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
சமூலத்தினை எரித்து சாம்பலாக்கி அதனை பற்பொடியுடன் சேர்த்து பயன்படுத்த பொது குணப் பாடலில் உள்ள அனைத்து நற்பலன்களும் உண்டாகும். நாயுரு, வி மரப்பட்டை, அரசம்பட்டை, ஆலம் விழுது சேர்ந்த பல்பொடியில் குப்பைமேனி சமூலம் முக்கிய
இடம்பெறுகிறது.
இவைகளில் செயல்முறை இடர்பாடுகள் உண்டெனக் கருதுபவர்கள் குப்பைமேனியை கொண்டு செய்யும் மேனித் தைலம் மருந்துக்கடைகளில் கிடைக்கிறது. அதனை பயன்படுத்தலாம். அதனை சித்த மருத்துவர்களின் ஆலோசனையின்படி சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
சிறு குழந்தைகள் இதயநோய் உள்ளவர்கள், உடல் மெலிந்தோர், வயிற்றுப்புண், தொண்டை மற்றும் குடல்புண் உள்ளோர், ரத்த அழுத்தம், வேறு நோய்களுக்கு நீண்ட நாட்களாய் மருந்து உட்கொள்வோர் சித்த மருத்துவரின் நேரடி ஆலோசனையின்படியே குப்பைமேனியை உட்கொள்வது நல்லது.
Average Rating