எதிர்ப்பு சக்தி அளிக்கும் சுண்டைக்காய்! (மருத்துவம்)
சுண்டைக்காய் கால் பணம்… சுமை கூலி முக்கால் பணம்’ இது சுண்டைக்காயை பற்றிச் சொல்வதற்காக பயன்படுத்தப்படுகிற ஒரு பழமையான சொல். இதுபோலவே யாராவது ஒருவரின் கருத்துக்களை அலட்சியப்படுத்த விரும்பினால், ‘அவன் கிடக்கிறான் சுண்டக்காய் பயல்’ என்று எள்ளி நகையாடுவதும் உண்டு. விவரம் தெரியாத சிறியவன் என்று பொருள்பட இப்படி சொல்வதுண்டு. ஆனால், இந்த சுண்டைக்காய் மருத்துவத்தில் எத்தகைய பயன் உடையது என்பது நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தில் மட்டுமல்லாமல் இன்றைய நவீன ஆய்வுகளிலும் கூட உறுதி செய்யப்பட்டு இருப்பது நாம் இதனை அடிக்கடி உணவில் உட்கொள்ள வேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்தும்.
ஐங்காயப்பொடி என்று ஒரு மருந்து. இதனை மருந்து என்றும் சொல்லலாம் உணவு என்றும் சொல்லலாம். மணத்தக்காளி வற்றல், சுண்டை வற்றல், சீரகம், பெருங்காயம் ஆகியவை உடன் சிறிது உப்பு சேர்த்து வேப்பம்பூவும் சேர்த்து உணவில் பிசைந்து சாப்பிட கொண்டு வருகிற போது வயிற்றில் இருக்கிற கிருமிகளும்… ஏன் வைரஸ் போன்ற நுண்கிருமிகள் கூட அழிந்துபோகும். பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்படுகிற ஒரு பரவலான பிரச்னை பேதி.
இதற்கு குடல் கிருமிகள், வைரஸ் கிருமிகள், அமீபியாசிஸ் என்று சொல்லப்படுகிற நோய்க்கு காரணமான கிருமிகள் போன்றவற்றை எல்லாம் அழித்து செரிமான பாதையை சீர் செய்வதற்கும் சுண்டை வற்றல் ஒரு மிக முக்கியமான மருந்தாகவே இருக்கிறது.
எளிமையாக வளரக்கூடிய/ கிடைக்கக்கூடிய இந்த தாவரத்திற்கு இத்தனை பயன் உள்ளதா என்று நமக்கு இப்போது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால், இதில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சொல்கிற தகவல்களை எல்லாம் இன்னும் நம்மை பேராச்சரியத்தில் கொண்டுவிடும்.
கத்தரி குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் அதாவது சொலானேசி(Solanaceae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் மருந்தாகவும் உணவாகவும் மிக அதிக அளவில் நமக்கு பயனைத் தருகிறது. நாம் தினசரி பயன்படுத்துகிற தக்காளி, உருளைக்கிழங்கு, மணத்தக்காளி, தூதுவளை, கண்டங்கத்திரி போன்ற உணவுகளும் மருந்துகளும் கீரைகளும் நமக்கு இந்த குடும்பத்தில் இருந்துதான் கிடைக்கிறது.
பாட்டி வைத்தியத்தில் நாம் பார்த்து வருகிற தாவரங்களை பார்க்கிறபோது இந்த தாவரக் குடும்பங்கள் எல்லாம் நமக்கு உடலுக்கு உண்டான சத்துக்களை… குறிப்பாக வைட்டமின் சத்துக்களையும் கால்சியம் முதலிய சத்துகளையும் நமக்கு வழங்குகின்றன என்று நமக்கு புரியும். தக்காளியில் இருக்கும் லைகோபீன்(Lycopene) எப்படி ஆன்டி ஆக்சிடென்டாக(அதாவது உடலுக்கு தேவை இல்லாமல் இருக்கிற நச்சைக் கட்டுப்படுத்தி நமக்கு உடலில் முதுமை பெற செய்யாமல்) இருக்கிறதோ, அதுபோன்ற ஆன்டி ஆக்சிடன்ட் தன்மை சுண்டை வற்றலுக்கும் இருக்கிறது.
கண்டங்கத்தரி, தூதுவளை ஆகியவை இரண்டும் சுவாசப் பாதையில் ஏற்படுகிற குறைபாடுகளை தவிர்ப்பதற்கும் சளி கட்டுவதை வெளியேற்றுவதற்கும் சுவாசப்பாதையில் அடைப்பு குறைப்பதற்கும் பயன்படுகிறது. புற்றுநோயைத் தடுக்கக்கூடிய தன்மையும் சுண்டைக்கு இருக்கிறது என்பது இன்னும் ஆச்சரியமாக இருக்குமல்லவா?! எப்படி என்றால் உடலில் உள்ள உறுப்புகளில் ஏற்படுகிற வீக்கத்தையும்(Inflammation), சுவாசப்பாதையில் ஏற்படுகிற அடைப்பு வீக்கத்தைக் கரைக்கக் கூடிய தன்மையும் சுண்டை வற்றலில் இருக்கிறது. இரைப்பையிலும் குடலிலும் ஏற்படுகிற புண்களை ஆற்றக்கூடிய தன்மையும் சுண்டை வற்றலுக்கு இருக்கிறது என்று சில ஆய்வுகளின் மூலம் தெரிய வருகிறது.
நம்முடைய இரைப்பையில் அமிலம் சுரக்கிறது. இந்த அமிலத்தால் ஏற்படக்கூடிய புண்களை ஆற்றக்கூடிய தன்மை சுண்டை வற்றலுக்கு இருக்கிறது. சாதாரணமாக குடல் புண்களை ஆற்றக்கூடிய தன்மையும் சுண்டை வற்றலாலும் ஏற்படுகிறது. ரத்தக்கொதிப்பை குறைப்பதற்கும் சுண்டை வற்றல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
சுண்டை வற்றலை தொடர்ந்து உணவு உட்கொண்டு வருகிறபோது அதிக சர்க்கரையினால் ஏற்படுகிற, குறிப்பாக Fructose-ஆல் ஏற்படுகிற அழுத்தத்தை குறைப்பதாக சமீபத்திய ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.
ரத்தம் தடிமனாகி ரத்தம் உறைதல் ஏற்பட்டு, அதன் காரணமாக இதயத்தில் ஏற்படுகிற அடைப்புகளை நீக்கும் தன்மை சுண்டை வற்றல் இருக்கிறது. அதாவது Anti coagulation என்று சொல்வோம். இதில் இருக்கிற Isoflavonoids என்று சொல்லப்படுகிற வேதிப்பொருளும் வீக்கத்தைக் குறைத்து வலி நிவாரணியாக இதயத்தை பாதுகாக்கிற பொருளாக இருக்கிறது.
உடலில் சுவாசப் பாதையில் அடிக்கடி ஒவ்வாமை ஏற்படுவதும் செரிமான பாதையில் ஒவ்வாமை ஏற்படுவதன் காரணமாக சிலருக்கு அடிக்கடி சுவாச நோய்கள் செரிமான நோய்கள் வரலாம். அத்தகைய நோய்களை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை ஒரு சீராக வைத்துக் கொள்கிற தன்மை(Immunomodulation) சுண்டை வற்றலில் இருக்கிறது என்பதும் ஆய்வுகளின் மூலம் நமக்குத் தெரிகிறது.
ரத்தத்தை ஊற வைக்கும் செயலை Erythropoiesis என்று சொல்வோம். அந்த தன்மையும் சுண்டைக்காய்க்கு இருக்கிறது. இதை விட முக்கியமாக நீரிழிவை கட்டுப்படுத்துவதற்கும், நீரிழிவின் காரணமாக சிறுநீரகத்தில் ஏற்படுகிற பாதிப்புகளை குறைப்பதற்கான தன்மையும்(அதாவது சிறுநீரக பாதுகாப்பு தன்மை) சுண்டை வற்றலில் இருக்கிறது என்பதை ஆய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
சுண்டை வற்றல் மிக அதிகமாக சிறுநீரை ஏற்படுத்தி உடல் சோர்வை ஏற்படுத்தாமல், சீரான அளவில் சிறுநீரை வெளியேற்றுவதற்கு உதவுகிற தன்மையும் பெற்றிருக்கிறது. பால் சுண்டைக்காய் என்று சொல்லப்படுகிற மெல்லிய சுண்டைக்காய் ஒரு தட்டு தட்டி அதனை மோரில் ஊற வைத்து வெயிலில் வைத்து எடுத்துக் கொள்கிறபோதுதான் அதனை சுண்டை வற்றல் என்று சொல்கிறோம்.
சில நேரங்களில் இதனை உப்பில் ஊற வைத்து உலர வைப்பார்கள். ஆனால், உப்பில் வைப்பதைவிட மோரில் ஊற வைத்து எடுத்துக் கொள்வதுதான் நன்மையை பயக்கும். எப்படி என்றால் செரிமான பாதையில் ஏற்படுகிற கிருமிகள் அழிந்து விடுகிறது. அந்த நன்மையை ஏற்படுத்துவதற்காக ப்ரோபயாட்டிக் என்ற உணவுப்பொருளை பயன்படுத்தச் சொல்வோம். அந்த ப்ரோபயாட்டிக்கானது மோரிலும், தயிரிலும் இருக்கிறது. அது சுண்டை வற்றல் சேர்த்து சாப்பிடுகிறபோது செரிமானப் பாதையின் கோளாறுகளை நீக்குவதில் மிக முக்கிய பங்காற்றுகிறது.
சுண்டைக்காய் ஆங்கிலத்தில் Turkey berry என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இது துருக்கியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஆனாலும் கூட இயல்பாகவே அமெரிக்காவின் புளோரிடா ஆகிய பகுதிகளில் எல்லாம் நெடுங்காலமாகவே இருந்து வந்திருக்கிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட பாரம்பரிய மருத்துவத்தில் சேர்ந்திருக்கிறது என்று பார்க்கிறபோது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூட இந்த தாவரம் நம் நாட்டிற்கும் வந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன.
கடினமான குத்துச்செடி வகையைச் சேர்ந்த தாவரமாக இருக்கிற காரணத்தாலும், சிறுசிறு முட்கள் இருக்கிற காரணத்தாலும் இந்த தாவரம் வீடுகளில் சிலர் வளர்ப்பதில்லை. ஆனால், சுண்டைக்காயின் இத்தனை மருத்துவ குணங்களை உணர்ந்துகொண்டால் இச்செடியினை இல்லம்தோறும் வளர்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு முறை நட்டு வைத்தால் கூட, தொடர்ந்து 10 முதல் 15 ஆண்டுகளுக்கு இதிலிருந்து சுண்டைக்காய் கிடைக்கும். இதனை நாம் வெளியிலோ வீட்டுத் தோட்டத்திலோ… ஏன் பெரிய தொட்டிகளில் கூட நாம் வளர்த்துக் கொண்டு பயன்படுத்திக் கொண்டு வரலாம்.
Average Rating