காமாலை கவலை!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 41 Second

சுகப்பிரசவம் இனி ஈஸி

கர்ப்ப காலத்தில் காய்ச்சல் வந்தால்கூட கர்ப்பிணிகள் கண் கலங்க மாட்டார்கள். ஆனால், காமாலை வந்துவிட்டால்தான், பலருக்கும் பயமும் பதற்றமும் பற்றிக்கொள்ளும். தனக்கும் சிசுவுக்கும் ஆபத்து நேர்ந்துவிடுமோ எனும் கவலை தொற்றிக்கொள்ளும். ஆனால், இந்த பயம் இப்போது தேவையில்லை. காமாலையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கும் சுகப்பிரசவம் ஆகும் அளவுக்கு மருத்துவ வசதிகள் நவீனமடைந்துள்ளன. முறையான முன் பிரசவ கவனிப்பு இருந்தால் மட்டும் போதும்!

எது மஞ்சள் காமாலை?

மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிற ஓர்அறிகுறி. இது இரண்டு விதங்களில் வெளிப்படுகிறது. ஒன்று, கிருமி சார்ந்த மஞ்சள் காமாலை(Infectious Jaundice); மற்றொன்று, கிருமி சாராத மஞ்சள் காமாலை(Metabolic Jaundice). பாக்டீரியா, வைரஸ் என்று ஏதாவது ஒரு கிருமி கல்லீரலைத் தாக்கும்போது மஞ்சள் காமாலை ஏற்படுவது முதல் வகையைச் சேர்ந்தது.

மது குடிப்பது, தேவையில்லாமல் மாத்திரை மருந்து சாப்பிடுவது, அதிகமாகக் கொழுப்புணவு சாப்பிடுவது, பித்தப்பைக் கல், பித்தப்பை வீங்கி அடைத்துக்கொள்வது, முன் பிரசவ வலிப்பு, கொழுப்பு கல்லீரல், மலேரியா… இப்படிப் பல காரணங்களால் கல்லீரல் பாதிக்கப்படும்போதும் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இது இரண்டாம் வகையைச் சேர்ந்தது.

வைரஸ்களின் ஆதிக்கம்!

சுற்றுப்புற சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா போன்ற நாடுகளில் கல்லீரலைப் பாதிக்கிற விஷயங்களில் வைரஸ் கிருமிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றில் ஹெபடைட்டிஸ் வைரஸ் அதிமுக்கியமானது. ஏ, பி, சி, டி, இ, ஜி என இவற்றில் பல வகைகள் உள்ளன. ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் பி வைரஸ்களின் தாக்குதல்தான் நம் நாட்டில் அதிகம்.

ஹெபடைட்டிஸ் ஏ மஞ்சள் காமாலை‘ஹெபடைட்டிஸ் ஏ’(HepatitisA) எனும் வைரஸால் ஏற்படுகிற ஒரு தொற்றுநோய் இது. பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை யாருக்கும் இது வரலாம். கர்ப்ப காலத்தில் இது வந்துவிட்டால் சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நோய் வரும் வழி

நோயாளியின் மலத்தில் இந்த நோய்க் கிருமிகள் இருக்கும். ஈக்கள் மூலம் பிற இடங்களுக்குப் பரவும். மாசடைந்த உணவு, அசுத்தமான குடிநீர் மூலம் இவை மனித உடலில் புகுந்து நோயை ஏற்படுத்தும். நோயாளியுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கும் இது பரவலாம். இது பரவியுள்ள இடங்களுக்கு அண்மையில் பயணம் செய்தவர்களுக்கும் இந்த நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

அறிகுறிகள்

பசிக்காது. காய்ச்சல், வாந்தி, களைப்பு ஆகியவை ஏற்படும். வயிறு வலிக்கும். உடல் முழுவதும் அரிக்கும். கண்களும் தோலும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போகும். மலம் வெள்ளை நிறத்தில் போகும்.

ரத்தப் பரிசோதனை

கர்ப்பிணிகள் முதல் முறையாக மருத்துவரைச் சந்திக்கும்போதும் மூன்றாவது டிரைமஸ்டரிலும் மஞ்சள் காமாலை உள்ளதா என பரிசோதித்துக்கொள்வது நடைமுறை. சிகிச்சையும் தடுப்புமுறையும் அலோபதி மருத்துவத்தில் இதற்கெனத் தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. நான்கு வாரங்கள் ஓய்வு எடுத்தாலே காமாலை குணமாகிவிடும். கீழாநெல்லிக்கீரை போன்ற சில அனுபவ மருந்துகளை சித்த மருத்துவத்தில் தருகின்றனர்.

தடுப்பூசி உள்ளதா?

ஹெபடைட்டிஸ் – ஏ அதிக ஆபத்து இல்லாதது. கர்ப்பிணியையோ அல்லது சிசுவையோ இது பாதிப்பதில்லை. இதைத் தடுக்க ஹெபடைட்டிஸ் ஏ தடுப்பூசி உதவுகிறது. வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரித் தடுப்பூசியை(Inactivated Hepatitis A vaccine) கர்ப்பமாகும் முன்னரே போட்டுக்கொள்ள
வேண்டும். கர்ப்பமானதும் இந்தப் பாதிப்பு வந்தவர்களுக்கு ஹெபடைட்டிஸ் ஏ இமுனோகுளோபிலின்(HBIG) தடுப்பு ஊசியை காமாலை வந்த 2 வாரங்களுக்குள் முதல் தவணையாகவும், ஒரு மாதம் கழித்து இரண்டாவது தவணையாகவும் போட்டுக்கொள்ள வேண்டும்.

சுத்தம் காக்கும்!

ஹெபடைட்டிஸ் ஏ மஞ்சள் காமாலையைத் தடுக்க குடிநீரைக் கொதிக்கவைத்து ஆற வைத்து குடிக்க வேண்டும். உணவு தயாரிக்கும்போதும் அதைப் பயன்படுத்தும்போதும் சுத்தம் மற்றும் சுகாதார முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். உணவுப் பண்டங்களை நன்றாக மூடிப் பாதுகாக்க வேண்டும். உணவைச் சாப்பிடும் முன்பும் சாப்பிட்ட பின்பும் கைகளை நன்றாக கழுவிச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். சுத்தம், சுகாதாரம் குறைந்த உணவு விடுதிகளில், சாலையோரக் கடைகளில் சாப்பிடக்கூடாது.

உணவுக் கட்டுப்பாடு

இந்த நோய் உள்ளவர்கள் இறைச்சி, முட்டை, தயிர், வெண்ணெய், நெய் போன்ற கொழுப்பு மிகுந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. காரணம், இந்த நோயின்போது கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதால், கொழுப்பு உணவுகள் செரிமானம் ஆகத் தாமதமாகும். எளிதில் செரிமானம் ஆகக் கூடிய ஆவியில் அவித்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளை அதிகப்படுத்த வேண்டும். அரிசிக் கஞ்சி, இளநீர், மோர், கரும்புச்சாறு, குளுக்கோஸ், பழச்சாறுகள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

ஹெபடைட்டிஸ் பி மஞ்சள் காமாலைஹெபடைட்டிஸ் – பி(Hepatitis-B) வைரஸ் கிருமிகள்கல்லீரலைத் தாக்குவதால் ஏற்படும் மஞ்சள் காமாலை இது. ரொம்பவும் ஆபத்தானது.

நோய் வரும் வழி

இந்த நோய்க்கிருமி ரத்தம், தாய்ப்பால், விந்து மற்றும் பெண் பிறப்புறுப்புத் திரவங்களில் வெளியேறி அடுத்தவர்களுக்கும் பரவுகிறது. கர்ப்பிணிக்கு/தாய்க்கு இந்த நோய் இருந்தால் குழந்தைக்கும் ஏற்படுகிறது. உடலுறவு மூலமும் ரத்ததானம் மூலமும் இது மற்றவர்களுக்குப் பரவக்கூடியது. இவர்களுக்குப் போடப்பட்ட ஊசிக்குழலையும் ஊசியையும் சரியாகத் தொற்றுநீக்கம் செய்யாமல், அடுத்தவருக்கு ஊசி போட்டால், அந்தப்புதிய நபருக்கும் இந்த நோய் ஏற்படுகிறது.

நோய் பாதிப்பு

பசி இருக்காது. காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, அதீத களைப்பு போன்ற அறிகுறிகள் உண்டாகும். மஞ்சள் காமாலை ஏற்படும். கண்களும் தோலும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். சிறுநீர் மஞ்சள் நிறத்திலும், மலம் வெள்ளை நிறத்திலும் போகும். வயிறு வலிக்கும். தோல் அரிக்கும். எலும்பு மூட்டுகளிலும் தசைகளிலும் கடுமையான வலி உண்டாவது இதற்கான முக்கிய அறிகுறி.

இந்த அறிகுறிகள் அனைத்தும் சில வாரங்களில் மறைந்துவிடும்.என்றாலும், இந்த நோய் உடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகக் கடுமையாகும். இதன் அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது. நாட்கள் ஆக ஆக கல்லீரல் சுருங்கும்(Liver Cirrhosis). கல்லீரலில் புற்றுநோய் வரும். உயிருக்கு ஆபத்து நெருங்கும்.

கர்ப்பிணிக்கு என்ன பாதிப்பு?

பிரசவ நேரத்தில் அதிக உதிரப்போக்கு, ‘கோமா’ எனும் ஆழ்நிலை மயக்கம். சிறுநீரகப் பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.

சிசுவுக்கு என்ன பாதிப்பு?

கர்ப்பம் கலைந்துவிடலாம். குறைப்பிரசவம் ஆகலாம். குழந்தை இறந்து பிறக்கலாம்.

தடுப்பூசி உள்ளதா?

‘ஹெபடைட்டிஸ் – பி’ நோய்க்கு முழு நிவாரணம் தருகிற சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால், இதை வரவிடாமல் தடுத்துக்கொள்ள ‘ஹெபடைட்டிஸ் – பி’ தடுப்பூசி’ உள்ளது. கர்ப்பமாகும் முன்னரே இதைப் போட்டுக்கொண்டால் நல்லது.கர்ப்பிணிக்கு மஞ்சள் காமாலை இருந்தால், பிறக்கப்போகும் குழந்தைக்கும் அது பரவிவிடும்.

இதைத் தடுக்க, ‘ஹெபடைட்டிஸ் -பி’ இமுனோகுலோபுலின் எனும் தடுப்பு ஊசியை குழந்தை பிறந்த 12 மணி நேரத்துக்குள் போட வேண்டும். இத்துடன் வழக்கமான ‘ஹெபடைட்டிஸ் – பி’ தடுப்பூசியையும் போட வேண்டும். இந்த இரண்டையும் ஒரே தொடையில் போடக்கூடாது. தனித்தனி தொடைகளில் போட வேண்டும்.குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு…

குழந்தை குறை மாதத்தில் பிறந்து உடல் எடை 2 கிலோவுக்குக் குறைவாக இருந்தால், முதல் தவணைத் தடுப்பூசியை பிறந்தவுடன் போடக்கூடாது. பிறந்த 30-ம் நாளில் முதல் தவணையையும், ஒரு மாதத்திலிருந்து 1 ½ மாதத்துக்குள் இரண்டாம் தவணை, 6 மாதங்கள் முடிந்ததும் மூன்றாம் தவணை போட்டுக்கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்மை நோய்கள் அலர்ட்! (மருத்துவம்)
Next post தமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்! (மகளிர் பக்கம்)