இளையராஜாவுடன் வாசிக்கணும்!! (மகளிர் பக்கம்)
சென்னை அம்பத்தூரில் உள்ள அந்த வீட்டினை கடக்கும் போது நம்மை அறியாமல் நம்முடைய மனதும், காலும் தாளம் போட ஆரம்பிக்கும். இசைக்கு குறிப்பாக டிரம்ஸ் இசைக்கு நம்மை சுண்டி இழுக்கும் வல்லமை உள்ளது. மதுரையை பூர்வீகமாக கொண்டுள்ள ராம்ஜி தான் அந்த மந்திர இசைக்கு சொந்தக்காரர். 13 வயதே நிரம்பி இருக்கும் ராம்ஜி டிரம்ஸ் இசையை கற்றுக் கொள்வதற்காகவே சென்னையில் தன் தந்தையுடன் வசித்து வருகிறார்.
‘‘அம்மாவும், சகோதரியும் மதுரையில் இருக்காங்க. அம்மா அங்க வி.ஏ.ஓவா வேலைப் பார்க்கிறாங்க. என்னுடைய இசைப் பயிற்சிக்காக நானும் அப்பாவும் இங்க சென்னையில் இருக்கோம். அப்பாவும் இசை பிரியர். அவர் தபேலா மற்றும் மிருதங்கம் வாசிப்பார்’’ என்று கூறும் ராம்ஜி இதுவரை 300க்கும் அதிகமான மேடைகளில் இசை நிகழ்ச்சி நிகழ்த்தி இருக்கார். இசையில் மட்டுமில்லை, படிப்பிலும் ராம்ஜி முதலிடம்தான். ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வது சிரமமாக இருப்பதாய் கூறும் ராம்ஜியின் வீடு எங்கும் பலவித இசைக் கருவிகளால் நிறைந்திருக்கிறது.
‘‘என்னிடம் இருபதுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் இருக்கு. அப்பாவும் இசைப்பிரியர் என்பதால் எல்லாவிதமான இசைக்கருவிகளையும் எனக்காக வாங்கிக் கொடுத்துள்ளார். நான் குழந்தையா இருக்கும் போது, டிவியில் வரும் சினிமா பாடல்களுக்கு தாளம் போடுவேன். அது நாளடைவில் பழகிப் போனது. அந்த பழக்கம் ஒரு கட்டத்தில் இசையை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. இப்போது ட்ரம்ஸ்லில் நானே Fusion பாடல்கள் வாசிக்கிறேன்” என்ற இந்த குட்டி ட்ரம்ஸ் மாஸ்டரை பற்றி அவரின் தந்தை பேசத் துவங்கினார்.
‘‘ராம்ஜிக்கு சின்ன வயசில் இருந்தே பொம்மைகள், விளையாட்டு பொருட்களைவிட இசையில்தான் ஆர்வம் அதிகம். என்னுடைய மிருதங்கம்தான் அவனுக்கு பிடித்த விளையாட்டு பொருள். படிப்பில் முதல் மாணவனாய் வந்தாலும், அவனுக்கு இசைதான் சந்தோஷம் தந்தது. அதனால் அவனுக்கு இதே துறையில் எதிர்காலத்தை அமைத்து தரலாம் என்று ட்ரம்ஸ் க்ளாஸில் சேர்த்துவிட்டேன். ட்ரம்சில் மொத்தம் எட்டு கிரேட் உள்ளது. சின்ன பையன் பாதியில் ஆர்வம் குறைந்துவிடலாம், அதனால் விருப்பமுள்ள வரை பயிற்சி எடுக்கட்டும் என்று நாங்கள் அவனை வற்புறுத்தவில்லை.
ஆனால், குறைந்த நாட்களிலேயே அந்த எட்டு க்ரேடுகளையும் கற்று தேர்ச்சி பெற்றான். அதன்பிறகு நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் கலந்துகொள்ள
ஆரம்பித்தான்’’ என்றார். ‘‘நான் பல மேடை நிகழ்ச்சியில் வாசிச்சு இருக்கேன். ஆனால் ட்ரம்ஸ் சிவமணி சாருடன் வாசித்த அனுபவம் என்னால் வாழ்நாளில் மறக்கமுடியாது. ஒரு நிகழ்ச்சிக்காக ட்ரம்ஸ் சிவமணி சார் வந்திருந்தார். அது தெரிந்து, எப்படியாவது அவரை பார்த்துவிட வேண்டும் என்று, நானும் அப்பாவும் பல மணி நேரம் முன்னரே சென்று அவருக்காக காத்திருந்தோம். பெரும் கூட்டம் திரண்டிருந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் அவரின் இசைக்காக காத்திருந்தனர். சிவமணி சாரும் நிகழ்ச்சியில் வாசிக்க ஆரம்பித்தார்.
அவர் வாசிப்பதை அருகே சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. நான் கூட்டத்தின் நடுவே முட்டி மோதிக் கொண்டு மேடையின் அருகே சென்றேன். அவர் வாசிப்பதை பார்த்துக் கொண்டு இருந்த போது, திடீரென்று சிவமணி சார், என்னிடம் ட்ரம்ஸ் குச்சிகளை கொடுத்து, வாசிக்க சொன்னார். சுத்தியிருந்த கூட்டமும் சியர் செய்ய, நானும் வாசித்தேன். கூட்டத்தினர் கொடுத்த உற்சாகத்தில், என்னை மறந்து சிவமணி சாருடைய வேகத்திற்கு ஈடுகொடுத்து வாசித்தேன். நிகழ்ச்சி முடிவில், சிவமணி சார், அவருடைய ட்ரம்ஸ் குச்சிகளை என்னிடம் கொடுத்து, வாழ்த்தினார்” என்கிறார், ட்ரம்ஸ் சிவமணி கொடுத்த குச்சியை நமக்கு பெருமையாய் காண்பித்தபடி.
‘‘மதுரையில் இருக்கும் போதே பல நிகழ்ச்சிக்கான வாய்ப்பு வந்தது. எல்லாம் சென்னையில் என்பதால், ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வந்து செல்வது சிரமமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் அடிக்கடி பள்ளிக்கு லீவ் போடுவதால் படிப்பும் பாதிச்சது. அதனால் நானும் அப்பாவும் சென்னைக்கே வந்துவிடலாம் என்று முடிவு செய்தோம். அப்பா மின்வாரியத்தில் வேலைப் பார்த்து வந்ததால், சென்னைக்கு மாற்றல் கேட்டு வந்துட்டோம். அம்மாவுக்கு மாற்றல் கிடைக்கல. அதனால அம்மா மதுரையில் இருக்காங்க. அவங்களுக்கு மாற்றல் கிடைக்கும் வரை நானும் அப்பாவும் சில நாட்கள் சென்னையில் தனியே இருக்கலாம்ன்னு முடிவு செய்தோம்” என்று கூறும் ராம்ஜிக்கு இசையமைப்பாளராக வேண்டும் என்று விருப்பமாம்.
‘‘இங்கு பல மேடை நிகழ்ச்சியில் நான் வாசிச்சு இருந்தாலும், உலகமெங்கும் சென்று ட்ரம்ஸ் வாசிக்கணும் மற்றும் இசைஞானி இளையராஜா சாருடன் சேர்ந்து வாசிக்கணும்ன்னு ராம்ஜி அடிக்கடி சொல்வான்’’ என்றார் ராம்ஜியின் தந்தை. ‘‘இந்த சின்ன வயசில் அவனுடைய கனவுகள் மற்றும் மனதைரியமும்தான் என்னை சென்னைக்கு அழைத்து வந்தது. 13 வயதில், அவனுக்குள் இப்படி ஒரு தீர்க்கமான விருப்பம் இருக்கும் போது, ஒரு தந்தையாக நானும் அவனுடைய கனவுக்கு துணையாய் நிற்க வேண்டும். அவனுடைய கனவுகளை நிறைவேற்றுவதே என்னுடைய கனவாய் மாற்றியுள்ளேன்” என்கிறார் தீர்க்கமாய்.
“ராம்ஜி எப்போதெல்லாம் திறந்த வெளி மேடையில் வாசிக்கிறானோ அப்போதெல்லாம் மழை பெய்துவிடும். அப்படி ஆகும் போது, கீபோர்ட், கிட்டார் வாசிப்பவர்கள் உடனே அவர்கள் இசைக் கருவியை தங்கள் முதுகில் மாட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். ஆனால் ராம்ஜியிடம் ஒரு பத்து இசைக்கருவிகளாவது இருக்கும். அதை கழட்டி, எடுத்துச்செல்லவே ஒரு மணி நேரமாகும். அப்போதெல்லாம் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் மேடையைவிட்டு இறங்கியதும், பார்வையாளர்கள் எங்களைச் சூழ்ந்து, ‘உங்க பையன் ரொம்ப நல்லா வாசிக்கிறான்.
பெரிய ஆளாய் வருவான்’ என்று சொன்னதும், அந்த கஷ்டமெல்லாம் மறைந்து போய்விடும்” என்றார் சிரித்தபடி. இதுவரை 19 விருதுகள் வாங்கியிருக்கும் இந்த சுட்டி பையன், அடுத்து இரண்டு படங்களில் கமிட்டாகியிருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன், ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, உலகப்புகழ் பியானோ கலைஞர் லிடியன் நாதஸ்வரத்துடன் வாசித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன், மதுரையில் ஒரு பள்ளிக்கு சிறப்பு விருந்தினராய் சென்று, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியிருக்கிறார்.
பறை, கீபோர்ட், ரிதம் பேட் என ஒவ்வொரு இசைக் கருவியை வாசிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருக்கும் ராம்ஜி, ஏழு வயதில் வாசிக்க கற்று, சில வருடங்களிலேயே கிராண்ட் மாஸ்டராகியிருக்கிறார். கண்களை கட்டி வாசிப்பது, நெருப்புடன் வாசிப்பது என்று பல வித்தைகளை கற்று வைத்திருக்கிறார். கடைசியாக ஒவ்வொரு இசைக் கருவியாய் நமக்கு வாசித்துக்காட்டி அசத்திய ட்ரம்ஸ் ராம்ஜிதான் அடுத்த தலை
முறையின் குட்டி சிவமணி என்பதில் எந்த சந்தேகமில்லை.
Average Rating