எல்லா பெண்களும் சூப்பர்வுமன்தான் !! (மகளிர் பக்கம்)
‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஐதராபாத்தான். பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ பினான்ஸ் படிச்சேன். அதில் நான் கோல்டு மெடலிஸ்ட். படிப்பு முடிச்சிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்தேன். அதன் பிறகு சொந்தமாக மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றை துவங்கினேன். சில காலம் அந்த நிறுவனத்தை நிர்வகித்து வந்தேன். நன்றாக தான் போனது. ஆனால் என்னால் அந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதற்கிடையில் எனக்கு திருமணமானது, மகனும் பிறந்தான். அப்போது ஆரம்பித்தது என் பிரச்னை. காரணம் என்னுடைய பிரசவத்தில் காம்பிளிகேஷன் இருந்தது. இருந்தாலும் சுகப்பிரசவம் தான் வேண்டும் என்று அதற்கான முயற்சி எல்லாம் எடுத்தேன். என்னுடைய மனதைரியத்தால் அந்த கட்டத்தையும் தாண்டி வந்தேன். குழந்தை பிறந்த பிறகு சிலருக்கு ஒரு விதமான மனஉளைச்சல் ஏற்படும்.
அதில் நானும் ஒருத்தி என்று சொல்லலாம். குழந்தை பிறந்த சந்தோஷத்தை கொண்டாட முடியாமல் ஒரு வித டிப்ரஷனுக்கு தள்ளப்பட்டேன். விளைவு என்னுடைய எடை கணிசமாக அதிகரிக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 24 கிலோ எடை கூடியிருந்தேன். என் நிலையை பார்த்து நானே கொஞ்சம் பயந்து தான் போனேன். எப்படியாவது எடையை குறைக்க வேண்டும் என்று குழந்தை பிறந்த 40 நாட்களில் இருந்தே பயிற்சியினை துவங்கினேன். முதலில் நடைப்பயிற்சி, ஜாக்கிங்ன்னு செய்தேன். அதன் பிறகு கிக்பாக்சிங் பயிற்சி எடுத்தேன். ஆரம்பத்தில் எனக்கு என் மேலே நம்பிக்கை இல்லை. ஆனால் பயிற்சிக்கு பிறகு எடை குறைய ஆரம்பித்த பிறகு தான் எனக்குள் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது’’ என்றவர் பல விதமான பிட்னஸ் பயிற்சியினை மேற்கொண்டுள்ளார்.
‘‘கிக்பாக்சிங் ஒரு பக்கம் இருந்தாலும் பல விதமான பிட்னஸ் பயிற்சி, நடன பயிற்சி என என்னால் முடிந்த எல்லா விதமான பயிற்சியும் எடுக்க ஆரம்பிச்சேன். சில காலம் ஏரோபிக்ஸ் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தேன். 2016ம் ஆண்டு வரை எனக்கானது என்ன என்று தெரியாமல் இருந்தேன். அதன் பிறகு தான் என்னுடைய விருப்பம் ஹை இன்டேன்ஸ் இன்டர்வெல் மற்றும் சர்க்யூட் பயிற்சி என்று தெரிந்து கொண்டேன். அதாவது இருதயம் மற்றும் தசைகள் வலுவடைய செய்யும் பயிற்சிகள். இதற்கிடையில் கிக்பாக்சிங் பயிற்சியும் பெண்களுக்கு அளித்து வந்தேன். மேலும் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கான உடற்பயிற்சியும் அளித்தேன். இரண்டு வருடம் கழிந்தது.
அந்த சமயத்தில் தான் எஃப் 45 என்ற உடற்பயிற்சி கூடத்தில் இருந்து அழைப்பு வந்தது. அங்கு மாஸ்டர் ஆல்பர்ட் கீழ் நான் ஜிம் டிரையினருக்கான பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஜிம்மிற்கு வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கான பயிற்சி அளிக்க வேண்டும். அதன் பிறகு எஃப் 45யில் நானும் ஒரு பயிற்சியாளராக வேலைக்கு சேர்ந்தேன். பல பிரபலங்களுக்கு அவர்கள் ஃபிட்டாக இருக்க பயிற்சி அளித்து இருக்கேன். அது எனக்குள் ஒரு தன்னம்பிக்கையினை உருவாக்கியது. என்றாலும் தனித்து செயல்பட முடியும் என்று மனஉறுதியை அளித்தது’’ என்றவர் எஃப் 45 யின் கிளை ஒன்றை சென்னையில் துவங்கினார்.
‘‘ஐதராபாத்தில் எங்களின் உடற்பயிற்சி கூடத்தின் மூன்று கிளைகள் உள்ளது. அங்கு மட்டுமே விரிவுப்படுத்தாமல் மற்ற நகரங்களிலும் இதனை விரிவுபடுத்தினால் என்ன என்று யோசனை ஏற்பட்டது. உடனே சென்னையில் இதற்கான பிரான்சைசியினை துவங்கினேன். சென்னையில் பலதரப்பட்ட ஜிம்கள் இருந்தாலும், ஒருவரின் மனம் மற்றும் உடல் சார்ந்த இரண்டு பிரச்னைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வு கொடுக்கக்கூடிய ஜிம்கள் இல்லை. அதனால் சென்னையில் கிளையினை நான் தலைமை ஏற்க ஆரம்பித்தேன். இங்கு எனக்கான பயிற்சியாளர்களுக்கு நானே பயிற்சி அளித்து அவர்களை தேர்வு செய்தேன். உரிமையாளராக இருந்தாலும், பயிற்சியாளராகவும் வலம் வந்தேன். இதன் மூலம் ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க தேவையான வியாபார நுணுக்கங்களை தெரிந்து கொண்டேன். தற்போது இங்கு 300க்கும் மேற்பட்டவர்கள் என்னுடைய ஜிம்மில் உறுப்பினர்களாக உள்ளனர்’’ என்ற தீப்தி பல பிரபலங்களின் ஆஸ்தான உடற்பயிற்சியாளர்.
‘‘பொதுவாக ஜிம்மில் திரெட்மில், சைக்கிளிங், டம்பிள்ஸ் போன்ற பயிற்சிகள் தான் இருக்கும். ஆனால் இங்கு அப்படிக் கிடையாது. ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பயிற்சி அளிக்கிறோம். இதற்காகவே பிரத்யேக பயிற்சியாளர்கள், டாக்டர்கள், மனநல ஆலோசகர்கள், உணவு ஆலோசகர்கள், பிசியோதெரபிஸ்ட்கள்னு இருக்காங்க. அவர்களின் சிறப்பு கவனிப்பு மூலம் தளர்ந்து இருக்கும் தசைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைய செய்கிறோம். அதே சமயம் மனதளவில் ஏற்படும் பிரச்னைகளுக்கும் தீர்வு வழங்குகிறோம். இவை மட்டும் இல்லாமல், அவர்களின் உணவு குறித்தும் ஆலோசனை அளிக்கிறோம். எனக்கு வெளிநாட்டு உணவுகள் மற்றும் டயட் சார்ந்த உணவுக் கட்டுப்பாடு மீது நம்பிக்கை இல்லை. அப்படித்தான் இருக்கணும்னு சொல்லலாம்.
ஆனால் நடைமுறைக்கு சாத்தியமில்லை. காரணம், ஒரு நான்கு வாரம் இதை கடைப்பிடிப்பாங்க. அதன் பிறகு மீண்டும் பழைய உணவு பழக்கத்திற்கு மாறிடுவாங்க. அது எப்போதும் அவர்களுக்கு பயன்படப் போவதில்லை. நாம் சாப்பிடும் அன்றாட உணவிலேயே அந்த மாற்றத்தை கொண்டு வர முடியும்’’ என்றார் ‘‘நம்ம ஊரின் முக்கிய பிரச்சினையே டயட். ஒருவருக்கு எப்படி உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரியவில்லை. நம்முடைய பாரம்பரிய உணவுதான் சிறந்தது. சாதம், சாம்பார் என வீட்டில் செய்யப்படும் உணவில் இருக்கும் ஆரோக்கியம் வேற எதிலும் இல்லை. பலர் பலவிதமான டயட்டை பின்பற்றி வருகிறார்கள். இவை நிலையானது இல்லை. நம் முன்னோர்கள் நம் நாட்டின் சீதோஷ்ணநிலை மற்றும் நம் மண்ணின் வளத்திற்கு ஏற்ப விளையும் உணவினை தான் சாப்பிட்டாங்க.
ஆரோக்கியமாகவும் இருந்தார்கள். துரித உணவு, வெளிநாட்டு உணவுகள் வந்த பிறகு பாரம்பரிய உணவினை மறந்துட்டோம். அதனால் நாங்க வெள்ளை அரிசிக்கு பதில் சிகப்பரிசியினை பரிந்துரைக்கிறோம். சாதாரண உப்புக்கு பதில் இந்து உப்பு. எண்ணையும் செக்கு எண்ணை பயன்படுத்த சொல்கிறோம். நம்ம ஊரில் என்ன உணவு கிடைக்கிறதோ அதுதான் நமக்கான சிறந்த டயட். நெல்லிக்காயில் இருக்கும் விட்டமின் சி வேறு எதிலும் கிடையாது. அதே போல் கொய்யாவில் உள்ள சத்து ஆப்பிளில் கூட இல்லை. எல்லாவற்றையும் விட நம் அடுப்பாங்கரையிலேயே உள்ளது அனைத்து மூலிகைகள். உணவை பொறுத்தவரை எல்லாவிதமான காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் பழ வகைகள் சேர்த்துக் கொள்வது அவசியம். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைவருக்கும் மாதவிடாய் குறித்து பிரச்னை உள்ளது. இந்த பிரச்னைக்கும் நாம் சாப்பிடும் உணவிற்கும் சம்மந்தம் உள்ளது. நம் ஊரில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டாலே போதும்.
அதை விட சிறந்த டயட் வேறு எதுவும் இல்லை’’ என்றவர் இன்னும் இரண்டு மாதங்களில் இது குறித்து ஆப் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளார். ‘‘அனைத்தும் கிடைக்கக் கூடிய பயிற்சிக் கூடம் ஒன்றை ஆரம்பிக்க நினைத்து, அதில் உடற்பயிற்சி மட்டுமல்லாமல் மனதளவிலும் பயிற்சி அளிக்க நினைச்சேன். அதன்படி ஒரு ஆப் மற்றும் வெப்சைட் தொடங்க இருக்கிறேன். இரண்டு மாசத்தில் அந்த ஆப் செயல்பாட்டில் வந்திடும். ஒருவருக்குத் தேவையான உடற்பயிற்சி மட்டுமல்லாமல் அவர்கள் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது குறித்து அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்படும். தென்னிந்திய உணவு மட்டும் இல்லாமல், வட இந்தியா, ஆந்திரா என அனைத்து மாநில உணவுகள் சார்ந்த விவரங்கள் இதில் இருக்கும். இத்தோடு இல்லாமல் மனநல ஆலோசகர்களுடன் நேரடியாக பேசலாம்’’ என்றவர் Monday Monks என்ற பெயரில் சொந்தமாக ஒரு பயிற்சி ஸ்டுடியோவை துவங்கியுள்ளார்.
‘‘உடற்பயிற்சி மூலம் நம்முடைய தேகம் மட்டுமல்ல நம்முடைய உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இன்றை காலக்கட்டத்தில் மக்கள் பல விதமான பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். மக்களை இணைக்கும் தளமாக மட்டும் இல்லாமல், அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கக்கூடிய இடம்தான் Monday Monks. பெரிய பாடிபில்டராக இருப்பாங்க. ஆனா அவங்க ஸ்டீராய்டு அதிகமாக எடுப்பாங்க. இதனால் அவர்களின் உடல் உறுப்புகள் பாதிப்படையும் அபாயம் உள்ளது. பலருக்கு சிறுநீரகம் பாதிப்படையும். சிலர் அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைக்கிறார்கள். இதன் காரணமாகவும் அவர்கள் பிற்காலத்தில் பல வித பிரச்னைகளை சந்திக்க நேரும். இயற்கையுடன் ஒன்றி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தாலே போதும் நாம் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க தன்னை தயார்படுத்திக் கொள்ளும்.
மெடிடேஷனில் ஆரம்பித்து மன அழுத்தம், உடல் எடை குறைப்பு, ஜிம்னாஸ்டிக்ஸ், தசை வலுவடைய பயிற்சின்னு… அனைத்தும் ஒரே கூரைக்குள் கலவையாக வழங்குகிறோம் குறிப்பாக பெண்களுக்கு. பெண்களின் வளர்ச்சியினை நான்கு கட்டமாக பிரிக்கலாம். குழந்தையாக இருக்கும் போது எதுவும் தெரியாது. டீன் ஏஜ் பருவத்தில் மாதவிடாய் பிரச்னையை சந்திக்கிறார்கள். அதன் பிறகு குழந்தை பிறப்பு, குடும்ப பராமரிப்பு, பொறுப்பு… என பல விஷயங்களை அவர்கள் சமாளிக்க வேண்டும். இதனால் அவர்கள் உடல் பல விதமான ஹார்மோன் மாற்றங்களை சந்திக்கிறது. இந்த மாற்றங்கள் ஆண்களுக்கு ஏற்படுவதில்லை. இப்போது பெண்களும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள். காரணம் வேலைப்பளு.
வேலைக்கு போகும் பெண்கள் வீட்டையும் கவனிக்க வேண்டும். 80% பெண்கள் இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். பெண்களுக்கான தேவைகள் என்ன? அவர்களின் தேவைகள் சரியான நேரத்தில் கவனிக்கப்படுகிறதா? இந்த கேள்விகளுக்கான விடை முதலில் நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களின் தேவைகள் என்ன என்று யோசித்துக் கொள்ளுங்கள். அவர்களின் தேவைகளை சரியான நேரத்தில் கவனித்தாலே பாதி பிரச்னைக்கான தீர்வு கிடைத்துவிடும்’’ என்றவர் MMA (Mixed Martial Arts) ன் தீவிர ரசிகை.
‘‘ஐதராபாத்தில் இருக்கும் போது, MMA (Mixed Martial Arts) கான பயிற்சி எடுத்துக் கொண்டேன். MMA வீரர் கோனோர் மெக்கிரீகரின் தீவிர ரசிகை நான். இந்தாண்டு கடந்த மாதம் நடைப்பெற்ற UFC 246 போட்டியில் பங்கு பெற்றவர், மூன்றாவது ரேங்கினை தன் பக்கம் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்த போட்டி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பெண்களும் விளையாட்டு துறையில் நிறைய சாதிக்க முன் வரவேண்டும். அவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும், அதற்கான ஒத்துழைப்பு அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த நிலை மாறவேண்டும்’’ என்றார் தீப்தி அக்கி.
Average Rating