“உள்ளதை உள்ளபடி சொல்கிறேன்” (கட்டுரை)

Read Time:26 Minute, 3 Second

அரசியல் தீர்வு என்பது, எப்பொழுது வருமென்று திடமாகச் சொல்ல முடியாது. ஆகையால், அது வருகிற வரைக்குமாவது எங்களுடைய மக்கள் தன்மானத்தோடு, சிறப்பாக வாழுகின்ற சூழலை ஏற்படுத்த வேண்டும். ஆக, மற்றவர்களிடத்தில் கையேந்தி நிற்காமல், தங்களுடைய சொந்தக் காலில் நிற்கிற பொழுது தான், அவர்கள் தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் வாழ முடியும். அதற்கான சூழலலை உருவாக்குவதற்கு, தற்சார் பொருளாதாரக் கட்டமைப்பொன்றை நாங்கள் ஏற்படுத்துவோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ சுமந்திரன் ‘தமிழ்மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

கே: அவருடனான நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது: கே: சமகால தேர்தல் நிலைமைகள், எவ்வாறு உள்ளன?

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில், அரசியல் கட்சிகள் பலவும் சுயேச்சைக் குழுக்கள் பலவும் தேர்தலில் போட்டியிடப் பண்ணப்பட்டிருக்கின்றன. இது ஒரு பழைமையான திட்டம். முன்னரும் இது போன்று நடத்தப்பட்டிருக்கின்றது. ஆட்சியில் இருக்கின்றவர்கள், மக்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்கும் பிரிப்பதற்குமாகச் செய்யும் அனுகுமுறை இதுவாகும்.

இந்த ஏராளமான சுயேச்சைக் குழுக்களுக்கும் சில அரசியல் கட்சிகளுக்கும் தேர்தலில் வெல்வது நோக்கமே அல்ல; அது அவர்களுக்கும் தெரியும். கடைசி வரைக்கும் அவர்கள், ஓர் ஆசனம் கூடப் பெற முடியாது. இது வேறொரு நோக்கத்துக்காகச் செய்யப் படுகிறது. அந்த நோக்கம் என்னவென்றால், இந்தத் தேர்தல் மாவட்டத்தில், பலமாக இருக்கிற கட்சியைப் பலவீனப்படுத்துவதுதான். 200 இற்கும் மேற்பட்டவர்கள், தாங்கள் வேட்பாளர்கள் என்று அறிவித்து இதைச் செய்கிறார்கள் என்றால், அவர்களுக்கு அதற்குரிய சன்மானம் கொடுக்கப்பட்டிருக்கின்றது; ஆனபடியால் காசுக்காக இதைச் செய்கிறார்கள்.

இவ்வளவு அதிகமான பணம், இதற்கே செலவிடப்படுகின்றதென்று சொன்னால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினுடைய பலத்தைக் குறைப்பதற்காக, பல்வேறு வழிகளில் ஏராளமான பணம் செலவிடப்பட்டு, பல ஊடகங்களும் துணை போய், மக்களைக் குழப்புகிற வேலையொன்று நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், அந்தக் குழப்பங்களில் இருந்த மக்களைத் தெளிவு பெற வைக்கிற ஒரே ஒரு வேலையைத் தான், செய்ய வேண்டியிருக்கிறது.அதைச் செய்தால், மக்கள் நிதானமாகச் சிந்தித்து, சரியான முறையில் கூட்டமைப்புக்கு வாக்களிப்பார்கள் என்பது எங்களுடைய நம்பிக்கை.

கே: கடந்த காலத் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், இந்தத் தேர்தலின்போதும் கூட்டமைப்பில் மீண்டும் பிளவுகள் ஏற்பட்டிருக்கின்ற நிலைமையில், கூட்டமைப்புக்கான வாக்கு வங்கியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

கூட்டமைப்பில் இருந்த பிரிந்து நின்று, தேர்தல் கேட்பது இந்த முறை மட்டும் நடக்கவில்லை. கடந்த 2010 ஆண்டே கூட்டமைப்பில் இருந்த ஓர் அங்கத்துவக் கட்சி, பிரிந்து தனியாகத் தேர்தலில் போட்டியிட்டது. சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர், பிரிந்து தனியாகத் தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆகவே, 2010 ஆம் ஆண்டு, தேர்தல் அறிவித்த பிறகு, பிரிந்து போன தரப்புகள் அவர்கள். ஆனபடியால், இதுவொன்றும் இப்ப புதுவிடயம் இல்லை.

இந்த முறை, சுரேஷ் பிரேமசந்திரனும் விக்கினேஸ்வரனும் பிரிந்து போய் இருக்கிறார்கள்; அவ்வளவு தான் வித்தியாசம். கூட்டமைப்பில் இருந்த பிரிந்து போனவர்களுக்குத் தமிழ் மக்கள் எந்தக் காலத்திலும் வாக்களித்தது கிடையாது. அது கஜேந்திரகுமார் பொன்னம்பலமாக இருக்கட்டும், சுரேஷ் பிரேமசந்திரனாக இருக்கட்டும் சிறிகாந்தா சிவாஜிலிங்கம் கூட்டாக இருக்கட்டும் எவருக்கும் தமிழ் மக்கள் வாக்களித்தது கிடையாது. அதேபோல், இந்தத் தடவையும் கூட்டமைப்பில் இருந்த பிரிந்து போனவர்களுக்கு நிச்சயமாக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

கே: இவ்வாறு, பிரிந்து தேர்தலில் போட்டியிட்டாலும் தேர்தல் முடிந்த பின்னர் பிரிந்தவர்களை இணைத்துக் கொள்ளும் சாத்தியங்கள் இருக்கின்றனவா?

மக்கள் வாக்களிக்கிறதைப் பொறுத்து, நாங்கள் அதைச் செய்யலாம். மக்கள், அவர்களுக்கு ஒரு சிறிய அங்கிகாரம் கொடுப்பார்களாக இருந்தால், நாங்கள் அவர்களை நிச்சயமாகச் சேர்த்து இயங்குவோம். ஆனால், மக்கள் அவர்களை நிராகரித்தால், மக்கள் நிராகரித்தவர்களை நாங்கள் சேர்த்து வைக்க வேண்டிய தேவை இருக்காது.

கே: கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டதைத் தொடர்ந்து, அது புலிகளின் கொள்கை என்றும் கூட்டமைப்பு நாட்டை பிளவுபடுத்த முயல்வதாகத் தெற்கில் பிரசாரம் முன்னெடுக்கப்படுவதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாங்கள் சொல்லியிருக்கிற அரசியல் நிலைப்பாடு, இதற்கு முன் நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் அதே அரசியல் நிலைப்பாட்டைத் தான் சொல்லியிருக்கிறோம். அதற்கு எதிராக, நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்குகள் எல்லாத்தையும் நாங்கள் வென்றிருக்கிறோம்.

குறிப்பாக, ஒரு வழக்கில் சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா, துரைராஜசிங்கம் என்ற வழக்கில் நான் வாதாடியிருந்தேன். அதில், சமஷ்டி தீர்வைக் கோருவதற்கு, இலங்கைத் தமிழ் மக்களுக்கு உரிமை இருக்கிறது என்று இலங்கையின் உயர் நீதிமன்றமே தீர்ப்புக் கொடுத்திருக்கிறது. ஆனபடியால், இது புதிதாக அவர்கள் சொல்லுகிற விடயமும் இல்லை; நாங்களும் புதிதாகச் சொல்கிற விடயமும் அல்ல.

ஆனால், இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாங்கள், சற்று விரிவாக எங்களுடைய பொருளாதார மீள் எழுச்சி சம்மந்தமாகச் சொல்லியிருக்கிறோம். மாற்றுப் பொருளாதார அமைப்பொன்று, அதாவது, தற்சார் பொருளாதார அமைப்பொன்றை, நாங்கள் ஏற்படுத்துவோம். இது, ஒரு புது விடயம்.

அதற்கு காரணம் என்னவென்றால், அரசியல் தீர்வு என்பது, எப்பொழுது வருமென்று திடமாகச் சொல்ல முடியாது. ஆகையால், அது வருகிற வரைக்குமாவது எங்களுடைய மக்கள் தன்மானத்தோடு, தங்களுடைய சுய வருமானத்தோடு, சிறப்பாக வாழுகிற சூழலை ஏற்படுத்த வேண்டும். ஆக, மற்றவர்களிடத்தில் கையேந்தி நிற்காமல், தங்களுடைய சொந்தக் காலில் நிற்கிற பொழுது தான், அவர்கள் தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் வாழ முடியும். அதற்கான சூழலை உருவாக்குவதற்கு, தற்சார் பொருளாதாரக் கட்டமைப்பொன்றை நாங்கள் ஏற்படுத்துவோம். தற்சார் என்று சொல்கிற பொழுது, அரசாங்கத்தில் சார்ந்திருக்காது, தானாக மக்களாலேயே இயங்கக் கூடிய ஒரு பொருளாதார பொறிமுறை ஆகும்.

அதை ஏற்படுத்துவதற்கு, நாங்கள் ஏற்கெனவே பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். அது சம்பந்தமான நிபுணர்களின் பங்களிப்பையும் கேட்டுப் பெற்றிருக்கிறோம். சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில், வர்த்தக தரப்பினருடனான பேச்சுவார்த்தையில், தங்களுடைய பிரதிநிதித்துவத்தையும் பங்களிப்பையும் வழங்குவதாக எங்களுக்கு உறுதியளித்து இருக்கிறார்கள்.

கே: அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என்று நீங்கள் கூறியிருக்கின்ற நிலையில், கடந்த அரசாங்கத்தில் ஆதரவை வழங்கியும் எதுவும் நடக்கவில்லை; ஏமாற்றப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றனவே?

ஒன்றும் நடக்கவில்லை என்று சொல்பவர்கள் நாடாளுமன்ற இணையத்துக்குப் போய், 2019 ஐனவரி 16 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசமைப்புக்கான மாதிரி வரைபைப் பார்வையிட வேண்டும். அரசியல் தீர்வு சம்பந்தமாக எவ்வளவு பாரிய முன்னேற்றத்தைக் கடந்த ஐந்து வருட காலத்தில், நாங்கள் செய்திருக்கிறோம் என்பது புலப்படும்.

நாங்கள், 15 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு வழிநடத்தல் குழுவில் 21 உறுப்பினர்களில் எங்களில் இரண்டு பேர் மட்டும் இருந்து கொண்டு, அந்தக் குறுகிய காலத்தில் அனைவரையும் இணங்கப் பண்ணி, ஒரு வரைபொன்றைச் செய்திருக்கிறோம்; அதில் ஒற்றையாட்சி முறை நீக்கப்பட்டிருக்கிறது. சமஷ்டி என்ற பெயர் போடப்படவில்லை. ஆனால் முற்று முழுதாக, அதனுடைய குணாதிசயம் ஒரு சமஷ்டி முறையிலான ஆட்சி முறை தான். மஹிந்தவே அதை இப்போது ஏற்றிருக்கிறார். இவ்வளவையும் கடந்த காலத்தில் நாங்கள் சாதிக்கக் கூடியதாக இருந்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அதனை நிறைவேற்றுவதற்கு, முன்னதாக அரசாங்கம் கவிழ்ந்து விட்டது. ஆனால், ஒன்றுமே நடக்கவில்லை என்று சொல்லவே முடியாது. அது மட்டுமல்ல, அரசியல் கைதிகள் சம்மந்தமான விடயத்தில் மூன்றில் இரண்டு பகுதியினர் விடுவிக்கப்பட்டார்கள். மிகுதியானவர்களையும் விடுவிப்பதற்கான காத்திரமான நடவடிக்கையை நாங்கள் தற்போதும் எடுத்திருக்கிறோம். நில விடுவிப்பு இன்னுமொன்று. இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 80 சதவிகிதமான தனியார் நிலங்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன.

கே: பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில், கட்சிக்குள் நீங்கள் வலியுறுத்தி வந்தாலும் பெண்கள் பிரதிநிதித்துவம் கட்சிக்குள் போதுமான அளவிலில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து உங்களது நிலைப்பாடு என்ன?

நானும் இந்தக் குற்றச்சாட்டை, கட்சி மீது வைத்திருக்கிறேன். வாயளவில் பேசுகிறதே தவிர, சரியான முறையில், பெண்களின் பிரதிநிதித்துவத்தைக் கட்சி செய்வது கிடையாது.

கே: தேர்தலில் இறங்கும் பெண்கள், வெற்றி பெறுவதற்கான வேட்பாளர்களாக அல்லாமல் வாக்குகளைக் கட்சிக்குப் பெற்றுக் கொள்வதற்கான வேட்பாளர்களாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. குறிப்பாக, சசிகலா ரவிராஜ், தனது கட்சியின் மகளிர் அணி கூட, முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றஞ்சாட்டுகிறாரே?

மகளிர் அணி அவருக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது. நான் மகளிர் அணியுடன் அதைப் பற்றி பேசியிருக்கிறேன். அவர்கள் அதை நிராகரித்துள்ளார்கள். ஆனால், மகளிர் அணிக்குள்ளேயே, பல குழப்பங்கள் இருக்கின்றன.

யாழ். மகளிர் அணி செயலாளர் என்று சொல்லப்பட்ட ஒருவர், எனக்கு எதிராக மோசமானதும் பொய்யானதுமான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.அதன் காரணமாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார். ஆக, மகளிர் அணிக்குள்ளே யார் எப்படிச் செயற்படுகின்றார்கள் என்று என்னால் சொல்ல முடியாவிட்டாலும் மகளிர் அணியாக, திருமதி ராவிராஜுக்கு அவர்கள் முழு ஆதரவையும் கொடுப்பது எனக்குத் தெரியும். ஆனால், அவர் தன்னைக் கட்சியினர் கட்டுப்படுத்துவதாகவும் தான் நிர்ப்பந்திக்கப்படுவதாகக் கூறினாலும் அது யார் என்று சொல்லாதவிடத்து அதைப்பற்றி எனக்குத் தெரியாது.

கே: சுமந்திரன் என்றாலே சர்ச்சையாக இருக்கிறது. அந்தச் சர்ச்சை மற்றவர்களால் தோற்றுவிக்கப்படுகிறதா அல்லது சர்ச்சை ஏற்படுமென்றே தெரிந்து ஒரு பிரபலத்துக்காக நீங்களே தோற்றுவிக்கிறீர்களா?

நானாக ஒன்றையும் தோற்றுவிப்பதில்லை. நான் உள்ளதை உள்ளபடி சொல்கிறேன். மற்றவர்கள் அதைச் சர்ச்சையாக்குகிறார்கள். அப்படி ஏதாவது ஒரு விடயம் சர்ச்சையானால், அதற்கான தெளிவுபடுத்தல்களைச் செய்கிறேன்; அவ்வளவு தான்.

கே: தேர்தல் காலத்திலும் சரி,அதற்கு முன்னரும் சரி, கூட்டமைப்புக்கு உள்ளும் கூட்டமைப்புக்கு வெளியிலும் இருக்கின்ற கட்சியினரும் உங்களை இலக்கு வைத்து குற்றம் சாட்டுவதற்கான காரணம் என்ன?

கூட்டமைப்பின் முக்கியமான செயற்பாடு எல்லாவற்றிலும் நான் முக்கிய பங்கு வகித்திருக்கிறேன். அரசியல் தீர்வு விடயத்தில், சம்மந்தன் ஐயாவோடு அதை முன்னகர்த்தியிருந்தேன். அரசமைப்புப் பேரவை செயலகத்தைப் பொறுப்பாக நிர்வகித்தது நானும் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்னவும் தான்.

ஆகையால் எங்களுடைய கட்சியின் அடிப்படையான நோக்கமும் அரசியல் தீர்வைப் பெற வேண்டும் என்பது தான். ஆக, கட்சியை நோக்கி, குற்றச்சாட்டை முன்வைக்கிற பொழுது,என்னைத் தவிர்த்துச் செய்ய முடியாது. ஆகவே, என்னைத் தான் தாக்க வேண்டும்.

மற்ற விடயங்கள் சம்மந்தமாகவும் கூட குறிப்பாக, வெளிநாட்டு தொடர்புகள், தென்னிலங்கையில் இருக்கிற மற்றைய கட்சிகளுடனான தொடர்புகள் விடயங்களிலும் கூடுதலான பங்களிப்பைச் செய்திருக்கிறேன். ஆகையால், கட்சியினுடைய செயற்பாட்டை விமர்சிப்பதாக இருந்தால், என்னுடைய செயற்பாட்டைத் தான் விமர்சிக்க வேண்டி வரும்.

கே: நடைபெறவுள்ள தேர்தலில் உங்களைத் தோற்கடிக்க வேண்டுமெனப் பலரும் முன்னெடுத்து வருகின்ற பிரசாரம் தொடர்பில், உங்களது பார்வை என்ன?

இதுவே கடந்த தேர்தலிலும் இருந்தது. அந்தப் பிரசாரம் தான் என்னைக் கடந்த தேர்தலிலும் வெல்ல வைத்தது. இந்தத் தேர்தலிலும் அதே போன்ற பிரசாரம் தான் என்னைக் கூடுதலாக வெல்ல வைக்கும்.

கே: பகிரங்க விவாதம் குறித்து, தற்போது பேசப்படுகிறது. அது தொடர்பில், உங்கள் கருத்த என்ன?

பகிரங்க விவாதம் யார் யாருக்கு இடையில் நடப்பதென்பது முக்கியமான ஒரு விடயம். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு, நான் பகிரங்கமாக விவாதிப்பது கடந்த பத்து வருடத்தில் பல தடவைகள் நடந்திருக்கிறது. அண்மையில் கூட, அப்படியான விவாதமொன்றுக்கு நான் வந்தால் தான் வருவேன் என்று வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு, கடைசி நேரத்தில் தான் வருவதைத் தவிர்த்து இன்னொரு நிலையில் இருக்கிற வேறு இருவரை அவர் அனுப்புவதாகச் சொன்ன காரணத்தால், நானும் வேறு இருவரை அனுப்பினேன். ஆனால், நாங்கள் வராத காரணத்தால் ஏற்பாட்டாளர்கள் அதை இரத்துச் செய்து விட்டார்கள்.

ஆனால், அதற்கு முன்னதாகவே விக்னேஸ்வரன் அணியிலிருந்து ஒருவரும் வருவதாக இல்லை. விக்னேஸ்வரன் எப்போதுமே பகிரங்க விவாதத்துக்கு வரத் தயாராக இல்லை. அருந்தவபாலனையும் சுரேஷ் பிரேமசந்திரனையும் அனுப்புவதாகச் சொல்லிவிட்டு, அவர்களையும் நிறுத்திவிட்டார்கள். வேற ஒருவரும் வருவதாகச் சொல்லவில்லை.

ஆகவே, ஒரு குறித்த மட்டத்திலே நடைபெறுகிற விவாதமாக அறிவித்துவிட்டு, பிறகு வேறொரு தளத்திலே அந்த விவாதம் நடப்பதாக வந்தபோது, ஏற்பாட்டாளர்கள் அதனை இரத்துச் செய்து விட்டார்கள். ஆனால், எப்போதுமே சுரேஷ் பிரேமசந்திரனுடனோ கஜேந்திரகுமாருடனோ விவாதிப்பதற்கு தயாராகத் தான் இருந்திருக்கிறேன். சில தினங்களுக்கு முன்னர் சிறிகாந்தா தன்னோடு விவாதிக்கும் படியாக ஒரு சவால் விட்டிருக்கின்றார். அந்தச் சவாலை நான் ஏற்றிருக்கிறேன். இப்படியான சவால்களை நான் ஏற்றிருந்த போதும், இன்னமும் ஒருவரும் விவாதத்துக்கு வரவில்லை; அதற்கான உரிய பதில்களையும் சொல்லவில்லை.

கே: கூட்டமைப்புத் தவறான பாதையில் செல்கிறது; மக்களை ஏமாற்றி விட்டது என்று சொல்லி, மாற்று என்று தேர்தலில் போட்டியிடும் தரப்புக் குறித்து உங்களது கருத்து என்ன?

அவர்கள் எல்லோருமே கூட்டமைப்போடு சேர்ந்திருந்தவர்கள். எந்தக் கொள்கை காரணமாகவும் விலகிப் போனவர்கள் அல்ல. குறிப்பாக, கஜேந்திரகுமார் அணி 2010ஆம் ஆண்டு ஆசனப் பங்கீடு காரணமாக விலகிப் போனவர்கள். வேறு எந்தக் கொள்கை காரணமாகவும் விலகிப் போனவர்கள் அல்லர்.

அதேபோல, 2015ஆம் ஆண்டு சுரேஷ் பிரேமசந்திரன் அணி, எங்களோடு சேர்ந்து தான் போட்டியிட்டது. ஆகவே, அவர்களுக்கும் வேறு எந்தக் கொள்கை மாறுபாடும் அங்கு இருக்கவில்லை. ஆனால், அவர் மிக மோசமாகத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, தனக்குத் தேசிய பட்டியல் ஆசனம் வேண்டுமென்று கேட்டிருந்தார். ஆயினும் அது கொடுக்க முடியவில்லை.

மக்களாகத் தேர்ந்து எடுக்கப்படாமல் அவரைத் தோற்கடிக்கப்பட்ட பின்பு, அவரைத் தேசிய பட்டியல் மூலமாக, நாடாளுமன்றம் கொண்டு வர முடியாது. ஆகையால் அதைக் கொடுக்கவில்லை என்பதற்காக, விலகிப் போனார். ஆக, அவர்கள் இருவரும் ஆசனத்துக்காக விலகிப் போனர்கள்.

விக்னேஸ்வரனைப் பொறுத்தவரையில் அவர் எங்களுக்கு முரணாகச் செயற்பட ஆரம்பித்த பிறகு, அது குறித்து நாங்கள் பேசிய போதெல்லாம், கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையின் படியே நடக்கிறேன் என்பது தான் அவருடைய பதிலாக இருந்தது. 2013ஆம் ஆண்டு, தேர்தல் விஞ்ஞாபனத்தின் படியே ஒழுகுகிறேன்; அதையே கடைப்பிடிக்கிறேன் என்று தான் சொன்னார். ஆக, எங்களுடைய கொள்கையின்படி செயற்படுகிறேன் என்று தான் சொல்லியிருக்கிறார். அப்படியானால், ஏன் தன்னுடைய பதவிக் காலம் முடிந்து, மறுநாள் புதுக் கட்சியைத் தொடங்கினார் என்பது, ஒருவருக்கும் தெரியாது. ஆகப் பதவிக் காலம் இருக்கிற வரைக்கும், கூட்டமைப்பின் முதலமைச்சராகத் தான் இருந்தவர். ஒரு கொள்கை வித்தியாசமும் அவருக்குத் தெரியவில்லை. அவராகவே, இதே கொள்கையில் தான் இருக்கிறேன் என்று சொல்கிறார். ஓர் இரவில் அவரின் கொள்கை மாறியது; ஏன் என்று தெரியவில்லை. என்ன மாறான கொள்கை என்று இன்னமும் ஒருவருக்கும் தெரியாது; அவருக்கும் தெரியாது.

கே: உங்களைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் அவ்வாறு தோற்கடிக்கப்பட்டால் உங்களது கட்சியில் தேசிய பட்டியல் வழங்கப்படுமென்றும் இல்லாவிட்டால் தேசிய கட்சிகளினூடாகவேனும் தேசிய பட்டியலூடாக வருவார் என்றும் சொல்கின்றனரே?

நான், தேர்தலில் தோற்கடிக்கப்பட்டால் கடைசி வரைக்கும் தேசிய பட்டியல் ஊடாக வர மாட்டேன். இது இந்த முறை நான் சொல்கிற விடயம் மட்டுமல்ல. சென்ற தடவை தேர்தலில் முதன் முதலாகப் போட்டியிட்ட போதும் தேர்தலுக்கு நிறைய நாள்களுக்கு முன்பாகவே பகிரங்கமாக அறிவித்திருந்தேன். மக்கள் என்னைத் தெரிவு செய்யாவிட்டால், நான் அரசியலில் இருந்து ஒதுங்குவேன். மக்கள் நிராகரித்தால், அது மக்கள் தீர்ப்பாக ஏற்றுக்கொள்வேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறப்புமிக்க தானியங்கள்: கோதுமை!! (மருத்துவம்)
Next post 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சோனு சூட்!! (வீடியோ)