தீர்க்கமான தருணம் !! (கட்டுரை)

Read Time:24 Minute, 53 Second

தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை, இப்பத்தியில் பல விடயங்கள் எழுதப்பட்டாயிற்று. முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எதிர்பார்ப்புகள், அரசியல்வாதிகளாலும் பெருந்தேசிய ஆட்சியாளர்களாலும் முஸ்லிம்கள் பெற்ற அனுபவங்கள், முன்னாள் எம்.பிக்களாக இருந்தவர்களினதும் புதுமுக வேட்பாளர்களினதும் (அவ)இலட்சணங்கள், ஒரு வேட்பாளர் கொண்டிருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகள், அடுத்த நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டியதன் முக்கியத்துவம், அவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றவர்களின் தரமும் தகுதியும் எந்த மட்டத்தில் இருக்க வேண்டும் என்பவற்றை எல்லாம், விலாவாரியாகப் பேசியிருக்கின்றோம்.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாலும் கொவிட்-19 தொற்றுப்பரவுகைக் காலத்தில் வீட்டில் ஓய்வாக இருந்தமையாலும் மேற்குறிப்பிட்ட விடயங்களைச் சற்று நேரமொதுக்கி, அலசிப் பார்ப்பதற்கு இத்தேர்தலில் அதிக காலஅவகாசம் கிடைத்தது. எனவே, இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்து, தாம் இடப்போகும் புள்ளடிகள் குறித்து, தீர்க்கமான முடிவை எடுக்கும் காலமாக, இத்தருணம் காணப்படுகின்றது. எத்தனையோ தேர்தல்களைக் கடந்து வந்து விட்டோம்; எவ்வளவோ அரசியல்வாதிகளைப் பார்த்து விட்டோம்; நாம் காணாத தேர்தலா? என்ற மனவோட்டத்திலோ அல்லது, யாருக்காவது வாக்கைப் போட்டுவிட்டு வருவோம் என்ற அக்கறையற்ற போக்கிலோ, வாக்களிப்பது தொடர்பான முடிவை எடுக்கக் கூடாது. ‘நமது ஊருக்கு எம்.பி வேண்டும்’, ‘நாம் காலம்காலமாக ஆதரிக்கும் கட்சியே இந்தக்கட்சி’, ‘இந்த வேட்பாளர் நமக்குத் தெரிந்தவர்’, இவர் நமது பிரதேசத்தைச் சேர்ந்தவர்’, ‘வழமையாக இவருக்குத்தானே வாக்களிப்போம்’, ‘இவரை விட்டால், வேறு யார் இருக்கின்றார்கள்’, ‘இன்னும் ஒரு முறை, இந்த அரசியல்வாதிக்கு வாக்களித்துப் பார்ப்போம்’ என்றெல்லாம் எண்ணிக் கொண்டு, முஸ்லிம்கள் பிழையான தெரிவுக்கு வாக்களித்துவிடக் கூடாது.

இறங்குமுக போக்கு

கடந்த 25 வருடங்களுக்குள், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் என்பது, அந்த மக்களுக்கான அரசியலாகப் பரிணமிக்கவில்லை. உண்மையைச் சொல்லப் போனால், வடக்கு, கிழக்கிலும் தென்னிலங்கையிலும் முஸ்லிம் அரசியல் இறங்குமுகமான ஒரு போக்கில் செல்வதை, உன்னிப்பாக அவதானிப்போரால் புரிந்து கொள்வது கடினமன்று. முன்னைய காலங்களில், பெரும்பான்மைக் கட்சிகளின் ஊடாகவே, முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகள் கொஞ்சமேனும் நிறைவேற்றப்பட்டன.

அனகாரிக தர்மபால காலத்துக்கு முன்பிருந்தே பெருந்தேசியவாதமும் இனவாத சிந்தனையும் இத்தீவை ஆட்கொண்டிருந்தாலும் கணிசமான பெரும்பான்மையின அரசியல்வாதிகளின் மனதில் இனவாதம், இனக்குரோதம் பெரியளவில் இருக்கவில்லை. இதனால், ஐக்கிய தேசிய கட்சியிலும் சுதந்திரக் கட்சியிலும் அங்கம்வகித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஊடாகவே, முஸ்லிம்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டன.

தனிக்கட்சியோ, தேசிய தலைவர் என்ற இறுமாப்போ, மக்களை இனரீதியாகப் பிரித்து நோக்குகின்ற அணுகுமுறையோ இல்லாமல், மூத்த முஸ்லிம் தலைவர்கள் பலர், முஸ்லிம் சமூகத்துக்குப் பல சேவைகளைச் சத்தமில்லாமல் செய்து முடித்து இருக்கின்றார்கள். ஆனால், ஒருபுறத்தில் ஆயுதப் போராட்டமும் அதற்கு இணைவாகப் பேரினவாதமும் முன்கையெடுத்தன. நடுவில், முஸ்லிம் சமூகம் இருதலைக் கொள்ளியாக அகப்பட்டுக் கொள்ள நேரிட்டது.

இக்காலப்பகுதியிலேயே, முஸ்லிம்களுக்கான தனித்துவ அடையாளக் கோட்பாட்டுடன் முஸ்லிம் கட்சியொன்று உருவாக்கப்பட்டது. கிழக்கை மய்யமாகக் கொண்டே, ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டாலும், ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களினதும் அபிமானத்தை, மெதுமெதுவாக வென்ற அரசியல் கட்சியாக, அக்கட்சி முன்னேறியது.

அஷ்ரபுக்கு பின்னர்

மு.காவின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், ஒப்பீட்டளவில் அபிவிருத்தி அரசியலில் நீண்டகாலத் திட்டமிடல்களைக் கொண்ட பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார்.

அதுமட்டுமன்றி, உரிமை அரசியலில் ஒரு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்தார். முஸ்லிம் அரசியலில், ஒரு பொற்காலம் என்று அக்காலம் கருதப்படுவதுண்டு. அஷ்ரபின் மரணம், திட்டமிட்ட கொலையாக இருக்குமென்றால், இந்தப் பேரெழுச்சிதான் அவரைத் தீர்த்துக் கட்டுவதற்காக, ‘அவர்களின்’ கண்ணை உறுத்திய விடயமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அஷ்ரபின் மறைவுக்குப் பிறகு, அக்கட்சிக்கு இணைத் தலைவர்களில் ஒருவராகவும் பின்னர் தலைவராகவும் நியமிக்கப்பட்ட ரவூப் ஹக்கீம், பாரிய பொறுப்பைக் கொண்டிருந்தார். ஆனால், கிழக்கில் உருவாகிய மு.காவைத் தனித்துவ அடையாளத்துடன் முன்கொண்டு செல்வதில் அவர் விட்ட தவறுகள், அதனைத் தட்டிக்கேட்ட சக அரசியல்வாதிகளுடனான முரண்பாடுகள் பலர் கட்சியை விட்டு வெளியேறவும் பல புதிய கட்சிகள் தோற்றம் பெறவும் அடிப்படைக் காரணமாகியது எனலாம்.

ஆனால், இன்று மூன்று ‘காங்கிரஸ்கள்’ உள்ளடங்கலாக நான்கைந்து முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் அரசியல் பரப்பை நிரப்பியிருக்கின்ற போதிலும் கூட முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படவில்லை. அபிவிருத்தி அரசியலில் சில முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டாலும் உரிமை அரசியல் மற்றும் நீண்டகால அடிப்படையிலான பாரிய திட்டங்கள் போன்ற விடயங்களில் முஸ்லிம் அரசியலானது, 2000ஆம் ஆண்டு அஷ்ரப் விட்டுச் சென்ற இடத்திலேயே நிற்கின்றது.

நான்கைந்து கட்சிகள், பல தேசியத் தலைவர்கள், அரசியல் அணிகள்; உருவாகியிருப்பதுடன், பெருந்தேசியக் கட்சிகளிலும் பல முஸ்லிம் எம்.பி.க்கள் அங்கம் வகித்தாலும் கூட அஷ்ரபின் பணிகளையோ அல்லது அவருக்கு முன்பிருந்த தலைமைகள் செய்த பணிகளையோ முன்கொண்டு செல்ல முடியாமல் போயிருக்கின்றது. இணக்க அரசியலும் தனித்துவ அரசியலும் சுயமிழந்து நிற்கக் காண்கின்றோம்.

விடைதெரியா கேள்வி

முன்னைய காலங்களில் நேரடியாக பெரும்பான்மைக் கட்சிகளுக்கு முஸ்லிம்கள் வாக்களித்தனர். ஆனால் இன்று முஸ்லிம் கட்சிகள் அவற்றையெல்லாம் சேகரித்துக் கொண்டு சென்று மொத்தமாக பெரும்பான்மைக் கட்சிகளின் கூடைகளுக்குள் போடுகின்ற வேலையைத்தான் செய்கின்றன. முஸ்லிம் கட்சி, உரிமை, அபிவிருத்தி என்ற கோஷங்களின் ஊடாக அவர்கள் இதனைக் கொண்டு சென்று சிங்கள ஆட்சியாளர்களிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து ‘கிடைப்பவற்றை’ வாங்கிக் கொண்டு வருகின்றார்கள் என்பது பரம ரகசியமல்ல.

இந்தப் பின்னணியில், இப்போது உரிமை வீரர்கள் போல காட்டிக் கொள்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகளும் தளபதிகளும் கடந்த 20 வருடங்களில் எந்த உரிமையைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்கள்? நீங்கள் செய்த பாரிய வேலைத்திட்டம்? என்ன என்ற மில்லியன் டொலர் கேள்விக்கு மட்டும் இவர்களால் பதில் சொல்லவே முடியாது. தேசிய தலைவர்களாக பந்தா காட்டியமை, அமைச்சுப் பதவிகள், பிரதியமைச்சுப் பதவிகள் பெற்றமை, நெருக்கமானவர்களுக்கும் தேசியப்பட்டியல் எம்.பியை பெற்றுக் கொடுத்தமை, நாடாளுமன்ற உறுப்புரிமையூடான வரப்பிரசாதங்கள் மற்றும் இவற்றையெல்லாம் தக்கவைத்துக் கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்தை ஊர் ஊராக துண்டாடியமை, உட்கட்சிக்குள் பல அணிகளை உருவாக்கியமை, பிரதேசவாதத்தை தூண்டிவிட்டமை என்பவற்றைத் தவிர ஆனபலன் ஏதுமிருந்தால் வெளிப்படுத்தலாம்.

வாக்கு ஒரு கருவி

இப்படியான அனுபப் பின்புலங்களோடுதான் இந்தத் தேர்தலை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்றது. கடந்த பல வருடங்களாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயற்பட்டனர் என்பதை மக்கள் அறிவர். ‘இவரை இனி நாடாளுமன்றத்திற்கு அனுப்பக்கூடாது’ என்று பல அரசியல்வாதிகளைப் பார்த்து மக்கள் புலம்பிய சந்தர்ப்பங்கள் ஏராளமுண்டு. ‘அவரைப் போன்ற தகுதியானவர்களுக்குத்தான் அடுத்த முறை வாக்களிக்க வேண்டும்’ பேசிக் கொண்ட தருணங்களும் பலவுண்டு. எனவே இதனையெல்லாம் மீட்டிப் பார்க்கும் காலகட்டமாக மீதமிருக்கி;ன்ற நாட்கள் உள்ளன.

உலகில் பல நாடுகளில் வாக்கு என்பது ஒரு மிகப் பெரிய கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. அதனால் மக்களுக்குச் சேவை செய்யாவிட்டால் அக்கருவியை தமக்கெதிராக பயன்படுத்தி விடுவார்கள் என்ற பயம் மேற்கத்தேய நாடுகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு பொதுவாக காணப்படுகி;ன்றது.

ஆனால் அப்படியொரு நிலைமை இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில் இல்லை. மக்கள் சேவகர்கள், சமூக சிந்தனையாளர்களை விட, மக்களை சிறப்பாக ஏமாற்றத் தெரிந்தவர்கள்தான் ஆளுமையுள்ள அரசியல்வாதிகளாக கருதப்படுவதையும், நெடுங்காலம் கோலோச்சுவதையும் அவதானிக்க முடிகின்றது. வாக்கு என்பது ஒரு பலமான ஆயுதம் என்பது அதனைப் பிரயோகிக்கின்ற விதத்திலேயே தங்கியிருக்கின்றது.

சிறுபிள்ளையின் கையில் பெறுமதிமிக்க ஒரு பொருளைக் கொடுத்தால் அந்தப் பிள்ளை அதை விளையாட்டுத்தனமாகவே கையாளும். அதுபோல ஒரு வாக்கி;ன் பெறுமதி உணராமல் மக்கள் செயற்படுவார்களாயின் அதிலிருந்து எந்தப் பிரயோசனமும் கிடைக்கும் எனக் கூற முடியாது.

உலகில் ஒரு குறிப்பிட்டளவான மக்களுக்கு இன்னும் வாக்குரிமை கிடைக்கவில்லை. சில நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிராந்தியங்களில் மக்கள் இவ்வுரிமைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். இலங்கையராகிய நமக்கு அது வரப்பிரசாதமாக கிடைத்திருக்கின்றது. எனவே அதனை சரியாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

சீரமைக்க வாய்ப்பு

முஸ்லிம் கட்சிகள் மற்றும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடந்தகாலச் செயற்பாடுகள் மேலே குறிப்பிடப்பட்டவாறு அமைந்திருக்கின்றமையால், அதனை சீரமைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக ஓகஸ்ட் 5 நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முஸ்லிம் சமூகம் பயன்படுத்த வேண்டியுள்ளது.

இம்முறை தேர்தலி;ல் பல ரகமான முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். பொதுவாக அவர்களது கடந்தகாலம், பின்புலம், பண்புகள், அரசியலுக்குள் குதிப்பதற்கான நோக்கம் பற்றியெல்லாம் அந்தந்த மாவட்ட மக்களுக்கு தெரியும். அல்லது அதனை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பண்டிகைக்கால ஆடைத் தெரிவு பற்றி சிந்திப்பதை விட, யாருக்கு, எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது பற்றி ஆராய்வதற்கு முஸ்லிம்கள் அதிக நேரம் ஒதுக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

இத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்களைப் பொறுத்தமட்;டில்…. அரசியல் தலைவர்கள், இரண்டாம் நிலை தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் போட்டியிடுகி;ன்றார்கள். அதேபோல் புதுமுக வேட்பாளர்கள், வேறு ஒருவருக்காக வாக்குச் சேகரிக்கும் நோக்கில் களமிறக்கப்பட்டவர்கள், வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில் போடப்பட்டவர்கள், அரசியல் கற்றுக்குட்டிகள், அரசியல் முகவர்கள் என்போரும் வேட்பாளர்களாக மக்களிடம் வந்திருக்கின்றார்கள்.

மேற்குறிப்பிட்ட பழைய மற்றும் புதிய அரசியல்வாதிகளிடையே தலைவராக, எம்.பி.யாக இருந்த காலத்தில் மக்களுக்குச் சேவையாற்றத் தவறியவர்கள், வாக்குறுதியை நிறைவேற்றாத பேர்வழிகள், தொழில் வழங்க பணம் பெற்றவர்கள், போதைப் பொருளுடன் தொடர்புடையவர்கள், சமூக சிந்தனையற்றவர்கள், பணம் உழைப்பதற்காக அரசியலுக்கு வந்தவர்கள், பெருந்தேசியத்தின் கைக்கூலிகள், சண்டித்தனம் செய்ய முற்படுவர்கள், மக்களை மதிக்காதவர்கள், கள்ளமனம் கொண்டவர்கள், முஸ்லிம் சமூகத்திற்காக வாய்திறந்து பேசாதவர்கள் எனப் பலர் அங்கம் வகிக்கின்றனர் என்பதை ஆழமாக நோக்குகின்ற போது புரிந்து கொள்ள முடியும்.

ஆனாலும், முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை எண்ணிக்கை அடிப்படையிலும் தராதர அடிப்படையிலும் உறுதிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருப்பதை முஸ்லிம் வாக்காளர்கள் யாருமே மறந்து விடக் கூடாது.

எனவே, இப்போது களமிறங்கியுள்ளவர்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்ற ‘சிறந்தவர்களை’ தெரிவு செய்ய வேண்டும். அந்த வகையில், கொஞ்சமேனும் முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுப்பவர்கள், முஸ்லிம்களுக்கு ஒரு அநியாயம் நடக்கின்ற போது அதனை தட்டிக் கேட்கின்ற அரசியல்வாதிகள், தமக்கு கிடைத்த தலைமைப் பதவியூடாக, எம்.பி. பதவி ஊடாக, அமைச்சுப் பதவியை பயன்படுத்தி தனது சமூகத்திற்கு நிஜமாகவே பெரும் சேவையாற்றிய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.

அதேபோல், தேர்தல் இல்லாத காலங்களில் மக்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள், கொடுத்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியவர்கள், மக்களின் தலையில் மிளகாய் அரைக்க நினைக்காதவர்களையும் மிகத் தகுதியான, பக்குவமான புதியவர்களுக்கும் வாக்களிக்கும் ஒப்பீட்டுத் தெரிவை முஸ்லிம்கள் எடுப்பதுடன், தென்னிலங்கைச் சூழலில் இனவாதம் கடந்து முஸ்லிம் சமூகத்துக்குச் சேவையாற்றுகின்ற சகோதர இன அரசியல்வாதிகளுக்கு புள்ளடியிடுவதே ஆரோக்கியமானதாகும்.

இத்தேர்தலில் சரியான தெரிவை மேற்கொள்ளும் விடயத்தில் பொருத்தமற்றவர்களையும் தகுதியான வேட்பாளர்களையும் பிரித்தறிதல் என்பது ஆறாம் அறிவின்பாற்பட்டதாகும்.

ரிஷாட் மீதான விசாரணை விவகாரம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீனை திங்கட்கிழமை (27) குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்றன. எனவே தேர்தலில் போட்டியிடும் கட்சித் தலைவர் என்ற வகையில், அவரது விசாரணை நடவடிக்கைகளைத் தேர்தல் முடியும் வரை பிற்போடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸ் தரப்பைக் கோரியிருந்தது. இந்நிலையிலேயே, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், நீதிமன்றம் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தேர்தல் காலத்தில், தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அதிகரித்த அதிகாரத்தை கொண்ட அமைப்பாக கருதப்படும் தேர்தல் ஆணைக்குழுவின் வேண்டுகோளை, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் கண்டுகொள்ளாமையால் இருதரப்புக்கும் இடையில் முரண்நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பலரது கவனமும் திரும்பியுள்ளது.

அகோரமான உயிர்ப்பலிகளை ஏற்படுத்தியது மட்டுமன்றி, இலங்கை முஸ்லிம்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்துவதற்கும் இன முறுகல் வலுவடைவதற்கும் காரணமாக அமைந்த ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணை நடாத்துவதுடன் இதற்குப் பின்னால் இருந்த உண்மையான சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் இரு நிலைப்பாடுகள் யாருக்குமே கிடையாது.

இதனடிப்படையில், முன்னைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் திருப்தியும் முழுமையும் இல்லாத நிலையில், இந்த அரசாங்கம் இன்னுமோர் ஆணைக்குழுவை நடத்தி, விசாரணைகளை மேற்கொள்வதுடன், குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

அரசியல் காரணங்களுக்காகவே இத்தனை மும்முரம் காட்டப்படுவதாக ஒரு தரப்பினர் சொல்கின்றார்கள் என்பதற்காக நீதி விசாரணைகளை கேள்விக்குட்படுத்தவோ புறக்கணிக்கவோ முடியாது. அந்த அடிப்படையிலேயே பலரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் எனலாம்.

குறிப்பாக, ரிஷாட் பதியுதீன் பல தடவை விசாரணைக்காகவும் வாக்குமூலத்துக்காகவும் சென்றிருக்கின்றார். இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறி வருகின்றார். ஆயினும், கடைசியாக இரு தடவைகள் அழைக்கப்பட்ட போது அவர், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முன்னிலையாகவில்லை என்று விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.

இது தேர்தல் காலமாகும். இக்காலத்தில் ஒவ்வொரு நிமிடமும் அரசியல்வாதிக்கு பெறுமதியானது. எனவே, தேர்தல் பிரசாரத்துக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் தேர்தல் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்புக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கு அமையவே, ரிஷாட் முன்னிலையாகவில்லை என்று மறுதரப்பில் கூறப்படுகின்றது.

இதற்கு முன்னைய காலங்களிலும், தேர்தலைக் கருத்திற்கொண்டு, இவ்வாறு பல அரசியல்வாதிகள் மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற நிலையில், ரிஷாட்டுக்கு அந்த அவகாசம் வழங்கப்படவில்லை.

தேர்தல் ஆணைக்குழுவும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பும் இது விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதும், 27ஆம் திகதி ரிஷாட்டுக்கு என்ன நடக்குமோ என்பதுமே மீதமிருக்கின்ற கேள்விகளாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த பிரபலங்கள் வீட்டில் MBBS டாக்டர் இருக்காங்களா!! (வீடியோ)
Next post சிறப்புமிக்க தானியங்கள் : உளுந்து!! (மருத்துவம்)