பீர்க்கங்காய் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 30 Second

ஆந்திராவில் பீர்க்கங்காயில் செய்கிற காரசார துவையல், கேரளாவில் பருப்பும் பீர்க்கங்காயும் சேர்த்துச் செய்கிற கூட்டு, கர்நாடகாவில் பீர்க்கங்காய் பஜ்ஜி, மகாராஷ்டிராவில் வறுத்துப் பொடித்த வேர்க்கடலை சேர்த்துச் செய்கிற பீர்க்கங்காய் ஃப்ரை… இப்படி இந்தியா முழுக்க பிரபலம் பீர்க்கங்காய்.

இது மட்டுமா?

வியட்நாமில் பீர்க்கங்காயை சூப்பில் சேர்த்துக் குடிக்கிறார்கள். சீனா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்சில் அன்றாட சமையலில் அவசியம் இடம்பெறுகிற காய் இது. கனடாவும் ஸ்பெயினும்கூட பீர்க்கங்காயின் பெருமையை பேசுகின்றன. இப்படி உலகம் முழுக்க வலம் வருகிற புகழ் பீர்க்கங்காய்க்கு மட்டுமே உண்டு. அத்தனைக்கும் காரணம் பீர்க்கங்காயில் மறைந்திருக்கிற மருத்துவ குணங்கள்’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி. பீர்க்கங்காயின் பயன்களைப் பட்டியலிடுவதுடன், அதை வைத்து சமைக்கக்கூடிய ஆரோக்கிய ரெசிபியை பகிர்கிறார் அவர்.

பீர்க்கங்காயின் பெருமைகளைப் பற்றிப் பேச பக்கங்கள் போதாது. நார்ச்சத்து மிகுந்த இந்தக் காய், குறைந்த கலோரிகளை கொண்டது. ஆரோக்கியத்துக்கு அவசியமான அத்தனை உயிர்ச்சத்துகளையும் உள்ளடக்கிய காய் இது. வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோ வின், மெக்னீசியம், தயாமின் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் இதில் உள்ளன. செல்லுலோஸ் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய் என்பதால் மலச்சிக்கலுக்கும், மூல நோய்க்கும் மாமருந்தாக உதவுகிறது.

பீர்க்கங்காயில் உள்ள பெப்டைட் மற்றும் ஆல்கலாயிட் என்கிற இரண்டும் இயற்கையான இன்சுலினாக செயல்படுவதால், ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. பீர்க்கங்காயில் உள்ள அதிகளவிலான பீட்டாகரோட்டின், பார்வைக் கோளாறுகள் வராமலும், பார்வைத் திறன் சிறக்கவும் உதவுகிறது.ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் பீர்க்கங்காயின் பங்கு மகத்தானது. கல்லீரல் ஆரோக்கியம் காப்பதிலும், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கல்லீரலைத் தேற்றுவதிலும் கூட பீர்க்கங்காய் பயன்படுகிறதாம்.

மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.தொடர்ந்து பீர்க்கங்காய் சாப்பிடுகிறவர்களின் சருமம் பருக்களோ, மருக்களோ இல்லாமல் தெளிவாகிறது. சரும நோய்கள் இருப்பவர்களுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தி, நோயைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுத்து, புண்கள் வராமலும் காக்கும்.

ஒட்டுமொத்த உடலையுமே குளிர்ச்சியாக வைத்திருக்கக் கூடியது. சிறுநீர் கழிக்கும் போது உருவாகும் எரிச்சலைக் கட்டுப்படுத்தக்கூடியது.எடை குறைக்க முயற்சி செய்கிறவர்களுக்கு பீர்க்கங்காய் மிக அவசியம். நீர்ச்சத்து அதிகம் என்பது முக்கிய காரணம். பீர்க்கங்காய் சேர்த்த உணவுகளை உண்ணும்போது நீண்ட நேரத்துக்குப் பசி எடுப்பதில்லை.

எப்படி வாங்குவது?

அடர் பச்சை நிறத்தில், இறுக்கமான தோல் கொண்ட காயாக இருக்க வேண்டும். காம்புப் பகுதியும் பசுமையாக இருக்க வேண்டும். கனமானதாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். தோல்களில் வெடிப்போ, நிறமாற்றமோ இருந்தால் வாங்கக்கூடாது.

எப்படி பத்திரப்படுத்துவது?

பீர்க்கங்காய் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த ஒரு காய் என்பதால் உடனுக்குடன் சமைத்து விடுவது சிறந்தது. அதிகபட்சம் 3 நாட்களுக்குள் உபயோகித்துவிட வேண்டும்.

எப்படியெல்லாம் சமைக்கலாம்?

கூட்டாக, பொரியலாக, மசாலாவாக, துவையலாக எப்படி வேண்டுமானாலும் சமைக்கலாம். சாம்பாரில் சேர்க்கலாம். பீர்க்கங்காயின் தோல்கூட மருத்துவகுணம் வாயந்தது என்பதால் அதையும் துவையலாக அரைக்கலாம்.பீர்க்கங்காயை வில்லைகளாக வெட்டி, பஜ்ஜி செய்யலாம். வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை வதக்கி, அத்துடன் பீர்க்கங்காய் துண்டுகளும் சேர்த்து வதக்கி, உப்பு, காரம் சேர்த்து, தொக்காக செய்து சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

பீர்க்கங்காயின் பிற பயன்கள்

பீர்க்கங்காயைக் காய வைத்து உள்ளே இருக்கும் நார்ப் பகுதியைப் பதப்படுத்தி, உடம்பு தேய்த்துக் குளிக்கும் நார் செய்யப்படுகிறது. பீர்க்கை நார் சருமத்தை சுத்தப்படுத்தவும், இறந்த செல்களை நீக்கி, ஆரோக்கியமாக வைக்கவும் கூடியது.பீர்க்கை இலைகளை அரைத்து, சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்களில் பற்று போட்டால் அவை சீக்கிரமே குணமாகும்.

ஆரோக்கிய ரெசிபி

கொங்குபீர்க்கங்காய் கடைசல்

என்னென்ன தேவை?

பீர்க்கங்காய் – 1 கப், பெரிய தக்காளி – 1, பெரிய வெங்காயம் – 1 கப் (எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.) உப்பு, எண்ணெய் – தேவைக்கு, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, சாம்பார் பொடி – 1 டீஸ்பூன், துவரம் பருப்பு, பாசிப்பருப்பு – தலா 1/4 கப்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், மோர் மிளகாய் வற்றல் – 3, உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், பெருங்காயம் – மிளகு அளவு, நெய் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது.

எப்படிச் செய்வது?

துவரம் பருப்பு, பாசிப் பருப்பை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நீர் விட்டு குழைய வேகவிட்டுக் கொள்ளவும். மத்தால் கடைந்து கொள்ளவும். இந்த பருப்பு கடைசலை தனியாக வைக்கவும். தாளிக்க வேண்டியதை எண்ணெயில் தாளித்து பருப்பில் கொட்டவும். கடாயில் எண்ணெய் சிறிது விட்டு வெங்காயம், அரிந்த தக்காளி மற்றும், பீர்க்கங்காயை வதக்கி தாளித்து கொட்டிய பருப்பு கடைசலை விட்டு, சாம்பார் பொடி சேர்த்து நன்கு கொதி வந்ததும் இறக்கவும். இதை குக்கரில் மாற்றி ஒரு விசில் விட்டும் இறக்கலாம். கடைசியாக நெய்யில் 1 டீஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை தாளித்து இந்த கடைசலில் கொட்டவும்.

பீர்க்கங்காய் தோல் துவையல்

என்னென்ன தேவை?

பீர்க்கங்காய் தோல் – 1 கப், புளி விழுது – 20 கிராம், தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒன்றரை டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

பீர்க்கங்காயைக் கழுவி, தோலை சீவி, சின்னதாக நறுக்கித் தனியே வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் வைத்து பீர்க்கங்காய் தோலை, காய்ந்த மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கவும். ஆறியதும் உப்பு, புளி சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். கடைசியில் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்துச் சேர்த்துப் பரிமாறவும்.

பீர்க்கங்காய் பால் கூட்டு

என்னென்ன தேவை?

பீர்க்கங்காய் – 1 கப் (சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்), மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய்ப் பால் – 1/2 கப், கடுகு – 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கு, பச்சைமிளகாய் – 2, சோம்பு – 1 டீஸ்பூன், பட்டை – 1 சிறிய துண்டு, அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், பால் – 1/2 கப், சர்க்கரை – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பீர்க்கங்காயை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நீர் சேர்த்து வேக விட்டு கொள்ளவும். கடாயில் எண்ணெய் சிறிது விட்டு கடுகு தாளித்து சோம்பு, பட்டை போட்டு வதக்கி பச்சை மிளகாய் கீறிப் போட்டு தாளிக்கவும். இதில் வெந்த பீர்க்கங்காய் போட்டு பிரட்டி அரிசி மாவை பாலில் கரைத்து ஊற்றவும். இரண்டு கொதி வரவும் சர்க்கரை சேர்க்கவும். இறக்கும் போது தேங்காய்ப் பால் இட்டு கிளறி இறக்கவும். பீர்க்கங்காய் பால் கூட்டு தயார். சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாதவிலக்கு!! (அவ்வப்போது கிளாமர்)
Next post பொறுப்புணர்வுடன் புள்ளடி இடுதல் !! (கட்டுரை)