இந்த பூமி நம்முடையது… சுயநலமாக இருங்க!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 12 Second

நாப்கின் நமக்கு அறிமுகமாகாத கால கட்டத்தில் நம் பெண்கள் மாதவிடாயின் போது பருத்தி துணியைப் பயன்படுத்தி வந்தார்கள். சிலர் துவைத்துப் பயன்படுத்துவர், சிலர் எரிப்பார்கள், சிலர் துணியைப் புதைத்து விடுவார்கள். அப்பொழுது கருப்பை தொடர்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அந்த வசந்த காலத்தில் நம் பெண்கள் பத்து பதினைந்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்கள், ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். துணி பயன்படுத்திய காலத்தில் பெண்களுக்குக் கருப்பை பிரச்சனை வந்ததா? அல்லது நாப்கின் பயன்படுத்தும் இந்த காலத்தில் பெண்களுக்குக் கருப்பை பிரச்சனை வந்ததா? என்கிற கேள்வியோடு, அதற்கான பதிலைத் தேடியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த இஷானா.

‘‘பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின், ஆறு மாதம் ஃபேஷன் டிசைனிங் படித்தேன். படிக்கும் போதே சின்னதா கடை (Boutique) வைக்க வேண்டும் என்ற யோசனை இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் நான் படித்துக் கொண்டு இருந்தேன். அதனால் சம்பாத்தியம் எல்லாம் இல்லை என்பதால், என் யோசனையை அம்மாவிடம் கூறினேன். அம்மாவோ அதற்கு, ‘‘நீ படிக்கிறத விட்டுட்டு ஏதேதோ பண்ணிட்டு இருக்க”ன்னு கோவப்பட்டாங்க. நான் அவரிடம், டிகிரி எனக்கு சிலபஸ்தான் சொல்லி தரும். ஆனால், பிடித்த படிப்பு படிக்கும் போது எனக்கான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் என்றேன். அதற்கு அம்மா, ‘‘இப்ப எங்ககிட்ட உன் கல்யாணத்திற்காக சேர்த்து வைத்திருக்கும் காசு தான் இருக்கு, மத்தபடி எல்லாம் வேறு இல்லைன்னு’’ சொல்லிட்டாங்க.

உடனே நான் அம்மாவிடம் என்னுடைய கல்யாணத்திற்காக சேர்த்து வைத்தது என்னுடைய தொழிலுக்கு உதவட்டும்னு சொல்லி அந்த காசைக் கொண்டு பொட்டிக் மற்றும் டெய்லரிங் ஷாப் ஆரம்பித்தேன்’’ என்றவர் பெண்களுக்கான அந்த நாட்களில் பிரச்னையால் அவதிப்பட்டுள்ளார்.
‘‘எல்லா பெண்களுக்கும் பொதுவாக ஏற்படும் மாதவிடாய் பிரச்னை தான் எனக்கும் ஏற்பட்டது. ஆனால் எனக்கு மாதவிடாயின் போது பயன்
படுத்தும் நாப்கினால் பிரச்னை ஏற்பட்டது. அந்த நேரத்தில் நாப்கின் பயன்படுத்தினால் இன்பெக்‌ஷன் ஏற்படும். அதனால் மருத்துவரிடம் சென்று ஆலோசனையும் பெற்றேன். அவர்கள் எல்லா விதமான பரிசோதனையையும் செய்தார்கள். ஆனால் அதில் எந்த பிரச்னையும் இல்லைன்னு ரிசல்ட் வந்தது. அம்மாவிடம் இதை பற்றி பேசிய போது, நாப்கினுக்கு பதில் துணியை பயன்படுத்த சொன்னாங்க.

ஆனால் துணி பயன்படுத்துவது எனக்கு கம்பர்டபிலா இல்லை. அதனால் துணியால் மறுபடியும் பயன்படுத்தக்கூடிய நாப்கின்களை தயாரிக்க முடியுமான்னு யுடியூபில் தேடிப் பார்த்தேன். எனக்கான விடையும் வந்தது. அதை கொண்டு நானே காட்டன் துணிகளால் ஆன, மீண்டும் பயன்படுத்தும் வகையில் நாப்கின்களை தைக்க ஆரம்பித்தேன். கடைக்கு வரும் பெண்களில் சிலர் இதை பார்த்து அவர்களும் சில யோசனை சொல்லி ஊக்குவித்தார்கள். அதில் சிலர் இதை எப்படி நாமே துவைத்து மறுபடியும் பயன்படுத்துவதா? என்று முகம் சுளித்தனர். தற்போது மார்க்கெட்டில் கிடைக்கும் நாப்கின்களை தூக்கி எறிகிறோம். அதை மற்றொருவர் எடுத்து போடுகிறார். நம்மலோடது எடுக்கவே நாம் தயங்கும் போது, அதை மற்றவர் எடுக்கும் போது எவ்வளவு கஷ்டமாக இருக்கும்.

இதை ஏன் நாம் சிந்திப்பதில்லை” என்று கூறும் இஷானா, இதை வெறும் உடற்கழிவிற்காக மட்டும் பயன்பாட்டில் கொண்டு வருவது இவரது நோக்கமில்லையாம். நாப்கின்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் குறைக்க வேண்டும் என்பது தான் இவரின் முக்கிய நோக்கம் என்று பேசியவர் இது குறித்து விளக்கினார். ‘‘நாங்கள் உருவாக்கும் நாப்கினில் லீக் புரூப் வைப்பதில்லை. லீக் புரூப் வைத்தாலும் அதில் பிளாஸ்டிக் தன்மையை இணைக்க வேண்டும். எக்கோ ஃபிரண்ட்லியாக இருக்காது. மாதவிடாயின் காலத்தில், மூன்று நாட்கள் என்று கணக்கிட்டால் ஒரு பெண் குறைந்தபட்சம் பத்து நாப்கின்களை பயன்படுத்த வேண்டி இருக்கும். அப்போது வருடத்திற்கு கணக்கிட்டு பாருங்கள். அதில் அவர்கள் பாதியளவாவது குறைக்க வேண்டும் என்று நாங்கள் உழைத்து வருகிறோம்.

எங்களிடமிருந்து ஒரு வருடத்திற்கு ஆறு நாப்கின்கள் என்று இவர்கள் வாங்கி பயன்படுத்தினால் கிட்டத்தட்ட நான்கு டன் நாப்கின் வேஸ்டேஜ் மண்ணுக்குள் வராது. இந்த கணக்கு கோவை நகரத்திற்கு மட்டும். குளங்களால் சூழப்பட்ட நகரம் தற்போது குப்பைகளால் நிரம்பி வருகிறது. குடிநீரின் அளவு குறைந்து வருகிறது. நாலு நாப்கின் மண்ணில் புதைந்திருந்தால், அந்த இடத்தில் நாலு பக்கெட் தண்ணீர் உள்ளே போகவிடாமல் பார்த்துக் கொள்கிறது. அதே சமயம் எங்களின் நாப்கினை துவைக்க அரை பக்கெட் தண்ணீர் போதும். நீரையும் சேமிக்கலாம், மண்ணையும் பாதுகாக்கலாம்.
அழித்தொழிப்பு என்கிற வார்த்தைக்கு அர்த்தம் நாம்தான். வெறித்தனமாக அழித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு பக்கம் குழந்தைகளுக்காக சொத்துகள் சேர்க்கிறோம். அதே வேலையில் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் இந்த பூமி நமது இல்லை என்று நாசம் செய்கிறோம். இப்படி இருக்க நமது குழந்தைகளுக்கு எதை விட்டு வைத்து செல்ல போகிறோம். வரும் காலங்களில் மரம் நடலாம், நல்லது செய்யலாம் என்று நினைத்தாலும் கூட அதற்கு மண் ஒத்துழைக்குமா? பிளாஸ்டிக்கால் நம் சுற்றுப்புறச் சூழல் வீணாவதை தடுக்க வேண்டும். அதற்காக தான் எங்களால் முடிந்த அளவு இந்த நாப்கின்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் செய்வது புதுமை அல்ல. ஆனால், ஏற்கனவே செய்து கொண்டிருப்பவர்களையும், தற்போது புதிதாக வந்திருக்கும் எங்களையும் மக்கள் விரைவில் திரும்பி பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் நம் பாட்டியெல்லாம் எதை பயன்படுத்தினார்களோ அதையேதான் இன்றும் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பத்து குழந்தைகளுக்கு மேல் பிறந்தார்கள். இன்று ஊர் முழுதும் கருத்தரிப்பு மையங்களின் எண்ணிகை அதிகரிப்பதை கண்முன் பார்க்கிறோம். நம் உடலை பற்றி எந்த ஒரு அக்கறையும் இல்லாமல், ஈசி கோயிங் என்கிற கோட்பாட்டிற்குள் வாழ்ந்து வருகிறோம்” என்று கூறும் இஷானா, நீண்ட நேரம் நாப்கின்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி கூறினார். “பள்ளி, கல்லூரி மாணவிகள் நாங்கள் தயாரிக்கும் நாப்கின்களை பயன்படுத்தும் போது, இதை மாத்தவோ, அப்படி மாற்றினால் எங்கு வைப்பது என்கிற சிக்கல் இருக்கிறது என்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோம் என்றால், 60 ரசாயன நாப்கினை 30 ஆக்குவதுதான் முதல் நோக்கம் என்கிறோம்.

அதனால், இந்த மாதிரி சூழலில் அதை பயன்படுத்தி, வீட்டில் இருக்கும் மற்ற நேரங்களில் காட்டன் துணியால் செய்யப்பட்டிருக்கும் எங்களுடையதை பயன்படுத்திக்கலாம். கடைகளில் விற்கப்படும் நாப்கின்களை குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் தான் பயன்படுத்த வேண்டும். காரணம் அதில் ரத்தக்கசிவை ஜெல்லாக மாற்றக்கூடிய ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இதனை அதிக நேரம் பயன்படுத்தும் போது, அந்த ரசாயன மாற்றம் உங்களுக்கு இன்பெக் ஷன் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. மேலும் சிலர் ஒரு நாள் முழுக்க மாற்றாமல் பயன்படுத்துகிறார்கள். ரத்தக்கறை நாப்கினில் படவில்லை என்றாலும், அதை நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுவது அவசியம் சிலருக்கு துணியால் பயன்படுத்தப்படும் நேப்கின்கள் ஹைஜீனிக்காக இல்லை என்று நினைக்கிறார்கள்.

நம் கண் முன் துவைத்து, அதை மீண்டும் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்வதை நம்பாமல், நமக்கு தெரியாமல் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் ஒன்றை நம்புகிறோம். அதை பிரித்து பார்த்தால் உள்ளே என்ன இருக்கிறது என்பது கூட தெரியாது. தற்போது ஒரு சிறிய முயற்சி எடுத்திருக்கிறோம். இதில் யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ அவர்களுக்கு கற்றுத்தரவும் முன்வருகிறோம். இந்த பூமி நம்முடையது. அதன் சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பதற்கு சுயநலமாக இருப்பதில் தப்பில்லை’’ என்று கூறும் இஷானாவிற்கு, அடுத்த ஆறு மாதத்திற்குள் தனது துறையில் நூறு தொழில் முனைவோரை உருவாக்க வேண்டுமாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குறைவான சுய இன்பம் நிறைவான மகிழ்ச்சி : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!! (அவ்வப்போது கிளாமர்)
Next post உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் இதைப் படிங்க!! (அவ்வப்போது கிளாமர்)