தேங்காய்ப்பாலில் இத்தனை சத்துக்களா?! (மருத்துவம்)
நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் நாம் பயன்படுத்தும் தேங்காய்ப்பாலில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்கள் குறித்து International Journal of Current Microbiology and Applied Sciences (IJCMAS) என்கிற இதழுக்காக மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் மதுரை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையைச் சேர்ந்த கோகிலவாணி.
‘‘தேங்காய்ப்பாலில் நமது உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்துக்கள் அபரிமிதமாக உள்ளது. அதிலுள்ள அதிகளவு நார்ச்சத்து, வைட்டமின் C, E, B1, B3, B6 மற்றும் அயன், செலீனியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை பெற்றுத் தருகிறது. தேங்காய்ப்பாலில் Lactose என்ற அமிலம் இல்லாததால் அது மாட்டுப் பால் அருந்தாதவர்களுக்கு (Lactose Intolerance Patient) மாற்றுப்பாலாக அமைகிறது.
100 மி.லி. தேங்காய்ப்பாலில் கலோரி – 240 Kcal, கார்போஹைட்ரேட் – 5.8 g, கொழுப்பு – 22.5 g, புரதம் – 3.0 g. வைட்டமின்களான தயாமின் (B1) – 0.05 mg, நியாசின் (B3) – 0.78 mg, B6 – 0.04 mg, C – 2.8 mg, E – 0.20 mg ஆகியவையும் தாது சத்துக்களான கால்சியம் – 16 mg, இரும்புச்சத்து – 1.8 mg, பாஸ்பரஸ் – 100 mg, மெக்னீசியம் – 38 mg, பொட்டாசியம் – 260 mg ஆகியவையும் அடங்கி உள்ளன.
தேங்காய்ப்பாலில் உள்ள Lauric Acid என்ற அமிலம் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நோய்த்தொற்று கிருமிகளிலிருந்து பாதுகாத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. தேங்காய்ப்பாலில் கொழுப்புச்சத்து உள்ள போதிலும் இவை மற்ற கடலை வகையைப் போல அல்லாமல் நல்ல வகை கொழுப்பினை (Medium Chain Fatty Acid) கொண்டுள்ளதால் இதய வால்வுகளில் கொழுப்பு சேராமல் தடுத்து இதய நோய்களிலிருந்து நம்மை காக்கிறது.
அது மட்டுமின்றி உடலால் தேங்காய்ப்பாலில் உள்ள கொழுப்பினை சேகரித்து வைக்க முடியாததால் மாரடைப்பு போன்ற நோய் ஏற்படாமல் தடுக்கிறது. உடலில் மெக்னீசியம் அளவு குறையும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இத்தகைய மெக்னிசீயம் என்ற கனிமச்சத்து தேங்காய்ப்பாலில் அதிகளவு உள்ளது. மேலும் அதிகளவு கால்சியமும் உள்ளது. இதனால் இவை எலும்புகள் வலுப்பெற உதவுகிறது. மெக்னீசியம் நரம்பு அணுக்களில் உண்டாகும் வலியைத் தடுக்கிற வலி தடுப்பானாக செயல்படுவதோடு, தசைவலிக்கு சிறந்த நிவாரணியாக செயல்படுகின்றன.
ரத்தசோகை குறைபாடு உள்ளவர்களின் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதால், ரத்த அணுக்களுக்கு ஆக்ஸிஜன் செல்லாமல் அனீமியா என்ற ரத்தசோகை நோய் ஏற்படுகிறது. ஒரு கப் தேங்காய்ப்பாலின் மூலம் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தில் 25 சதவிகிதத்தை நாம் பெற முடியும். கடல் உணவிலுள்ள செலினியம் என்ற ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்(Antioxidant) இதில் நிரம்பியுள்ளதால் முடக்குவாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றது.
தேங்காய்ப்பாலில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த கொதிப்பினை கட்டுக்குள் வைக்கும் தன்மை வாய்ந்தவையாக உள்ளது. இதிலுள்ள வைட்டமின் E ஆரோக்கியமான சருமத்தினை பெற உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் C, காப்பர் போன்றவை தோல் சுருக்கத்தினை தடுக்கின்றன. இதில் அதிகளவு இருக்கிற நார்ச்சத்து பசியின்மையை ஏற்படுத்தி உடல்பருமனை குறைக்கச் செய்கின்றன. தேங்காய்ப்பாலானது தாய்ப்பாலுக்கு நிகரானது என்று ஆய்வுகள் மூலம் அறியப்படுகிறது.
இதில் நுண்சத்துக்கள், தாதுச்சத்துக்கள், உயிர்ச்சத்துக்கள் ஆகியவை மிகுந்துள்ளதால் தாய்ப்பாலை உமிழும் குழந்தைகளுக்கு தேங்காய்ப்பால் பரிந்துரைக்கப்படுகின்றது. தாயும் தொடர்ந்து தேங்காய்ப்பால் பருகி வந்தார் எனில் அவருடைய உடல்நலம் மேம்பட்டு சுரக்கும் பாலின் தரமும் உயரும். தேங்காய்ப்பாலினை வாரம் இருமுறை நேரிடையாகவோ அல்லது ஏதாவது உணவுடனோ சேர்த்து உட்கொள்வது நல்லது என்று இந்திய மருத்துவ கவுன்சிலும் அறிவுறுத்தியுள்ளது’’ என்கிறார் கோகிலவாணி.
Average Rating