தமிழ்த் தேசிய வாக்குகளைக் குறிவைக்கும் பேரினவாதக் கட்சிகள் !! (கட்டுரை)

Read Time:13 Minute, 46 Second

‘நித்திரையா தமிழா, நீ நிமிர்ந்து பாரடா, இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு, எழுந்து சேரடா…’ என்று ஆரம்பிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடலொன்றை, ஜனவரி 12, 2018இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டமொன்றில், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒலிபரப்பியது. அந்தப் பாடலின் இறுதி வரிகள், ‘தலைவன் எங்கள் தலைவன் உண்டு நிமிர்ந்து பாரடா, தமிழ் ஈழம் எங்கள் கையில் என்று எழுந்து சேரடா…’ என்றவாறாக அமைந்திருக்கும். இங்கு தலைவன் எனும் இடம், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் குறிக்கும்.

அப்போது, இலங்கையின் ஜனாதிபதியாகவும் சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் மைத்திரிபால சிறிசேன பதவி வகித்தார். யாழ். மாவட்டம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் சுதந்திரக் கட்சி தலைமை என்பது, அங்கஜன் இராமநாதனிடம் இருந்தது; இப்போதும் அவரிடம்தான் இருக்கிறது. அவர், மைத்திரியின் நல்லாட்சி அரசாங்கத்தில், பிரதி அமைச்சராகவும் இருந்தார். அவர் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திலேயே, புலிகளின் பாடல் ஒலிபரப்பட்டது.

குறித்த பிரசாரக் கூட்டம் இடம்பெறுவதற்கு, சரியாக ஒரு வாரத்துக்கு முன்னர்தான், 2018 புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் வாழ்த்துகளைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு, விடுதலைப் புலிகள் தொடர்பில் பெரும்பாலும் விட்டுக்கொடுப்புகளைச் செய்வதில்லை. புலிகளின் கடந்தகால நிலைப்பாடுகள் சார்ந்து விமர்சனங்கள், விவாதங்கள் இருந்தாலும், தமிழ் மக்கள், அவற்றை அதிகம் கவனத்தில் கொள்வதில்லை.

ஏனெனில், தங்களுடைய குடும்ப உறுப்பினர்களே புலிகள் என்பதுதான், தமிழ் மக்களில் பெரும்பாலானோரின் எண்ணம். அதனால், புலிகளுக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கடந்த காலத்தில் வெளிப்படுத்திய பல தரப்புகளும், மக்களை நோக்கி வருவதற்காக அவற்றை நிறுத்திக் கொண்டிருக்கின்றன. அதில், புலிகளுக்கு எதிராக நின்று போரிட்ட தரப்புகளும் அவர்களோடு ஒத்தோடிய துணைக்குழுக்களும் கூட அடக்கம்.

அதன் ஒரு தொடர்ச்சியாகவே, பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்களின் வடக்கு, கிழக்குப் பிரதிநிதிகளாக இருக்கும் நபர்களும், புலிகளை முன்வைத்துத் தேர்தல் அரசியலை முன்னெடுக்கின்றனர். அதற்கு, அங்கஜன் இராமநாதன் மாத்திரமல்ல, முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் விதிவிலக்கானவர் அல்ல.

இந்தப் பத்தி, வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்த் தேசிய அரசியலில், நம்பிக்கை கொண்ட சனக்கூட்டத்தை நோக்கியே எழுதப்படுகின்றது. மாறாக, தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கையற்ற தரப்புகளை நோக்கி அல்ல.

கடந்த பொதுத் தேர்தலில், யாழ். தேர்தல் மாவட்டத்தில் விஜயகலா வெற்றி பெற்றிருந்தார். அவர் பெற்ற வாக்குகளில் கணிசமானவை, தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கை கொண்ட மக்களால் வழங்கப்பட்டவை. அவை, மறைந்த தியாராஜா மகேஸ்வரனின் பெயராலும் விழுந்தன. மகேஸ்வரனின் பெயராலோ, விஜயகலாவின் பெயராலோ, அவர்களின் சொந்த ஊர்ப் பின்னணியாலோ, தமிழ்த் தேசிய வாக்குகள், பௌத்த சிங்கள பேரினவாதக் கட்சிக்காகப் பொதுத் தேர்தல்களில் வழங்கப்பட முடியாது. (ஜனாதிபதித் தேர்தல் வேறு வகையானது)

ஏனெனில், தமிழ்த் தேசியத்தில் நம்பிக்கை கொண்ட மக்களின் ஒரு தரப்பினர், மேற்சொன்ன காரணங்களுக்காக, இவர்களுக்கு வாக்களிக்க முனைவது, பேரினவாதக் கட்சிகளின் பிரதிநிதிகளைத் தமிழ்த் தேசியப் பரப்புக்குள் வைத்துக் கொள்வதற்குக் காரணமாகிவிடும்.

கடந்த பொதுத் தேர்தலில், விஜயகலா பெற்ற வெற்றி, உதிரி வாக்குகளால்ல் நிகழ்ந்தது. அந்த உதிரி வாக்குகளுக்குள் அதிகமானவை, தமிழ்த் தேசியத்தின் நம்பிக்கை கொண்ட வாக்குகளாகும். அதனால், இன்னொரு தமிழ்த் தேசிய கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றி பறிபோனது.

தமிழ்த் தேசிய கட்சிகளுக்குள் நிகழும் மோதல்களால், பேரினவாதக் கட்சியொன்று அங்கு வெற்றி பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த முறை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குக் கிடைத்த வாக்குகளுக்குப் பின்னரான, தமிழ்த் தேசிய வாக்குகளும் உதிரி வாக்குகளும் முன்னணிக்கு ஓர் ஆசனத்தை வழங்கும் அளவுக்கு இருந்திருக்க வேண்டும். மாறாக, விஜயகலாவுக்கு விழுந்த கணிசமான தமிழ்த் தேசிய வாக்குகளும் அங்கஜனுக்கு விழுந்த 12,000 அண்மித்த வாக்குகளும் முன்னணிக்கான வெற்றியைத் தட்டிப் பறித்தன.

1994 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அநுர பஸ்தியானின் ஆதரவாளர்கள் சிலரினால் பொலிஸார் சிலர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டனர். அது தொடர்பிலான அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்று உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய அநுர பஸ்தியானின் ஆதரவாளர்களான சதாசிவம் இராமநாதன் உள்ளிட்ட மூவரே வழக்கைத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கின் தீர்ப்பு 1995இல் வந்தது. வழக்கைத் தாக்கல் செய்த அநுர பஸ்தியானின் ஆதரவாளர்கள் மூவரும் தண்டப்பணம் கட்டினர். துப்பாக்கி காட்டி மிரட்டியமை உறுதிப்படுத்தப்பட்டது.

சதாசிவம் இராமநாதன், வடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் காலத்தில், துப்பாக்கியைக் கொண்டு மிரட்டியமை தொடர்பிலான குற்றச்சாட்டொன்று எழுந்தது. அப்போது இராமநாதன், தன்னுடைய மகனான அங்கஜனின் வெற்றிக்காகத் துப்பாக்கியைத் தூக்கியிருந்தார். 1990களின் ஆரம்பத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தராக இருந்த இராமநாதனும் அவரது மகனும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர், சுதந்திரக் கட்சியில் இணைத்து கொண்டு, யாழ்ப்பாணம் வந்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி அரசியலொன்றைக் கட்டியெழுப்ப முனைந்தார்கள். ஆனால், துப்பாக்கி மிரட்டல் அரசியலால் பெரிய வெற்றிகளைச் சாதிக்க முடியாது என்ற புள்ளியில், ‘இராமநாதன்கள்’ புலிப்புராண அரசியலைச் செய்யப் புறப்பட்டு இருக்கிறார்கள். அது, என்ன நோக்கங்களுக்கானது என்பதைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு, பேரினவாதக் கட்சிகளில் பயணிப்பவர்களால், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். கடந்த பொதுத் தேர்தலில், வன்னி மாவட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்புக் கிடைக்காத ஒருவர், ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு, 3,000 வாக்குகளைத் தமிழ்த் தேசியத்தின் பெயரால் அந்தக் கட்சிக்கு பெற்றுக்கொடுத்து, அந்தக் கட்சியின் இன்னொரு சமூக வேட்பாளரின் வெற்றியை உறுதிப்படுத்தினார். அதனால், தமிழ்த் தேசிய கட்சிகளின் வெற்றி அச்சுறுத்தலுக்கு உள்ளானது.

யாழ்ப்பாணத்தில், பேரினவாதக் கட்சிகளில் வந்தாலும் தமிழர் ஒருவரே நாடாளுமன்ற உறுப்பினராகவார் என்கிற சாந்தப்படுத்தல் வசனமொன்று உச்சரிக்கப்படுகின்றது. ஆனால், அந்த வசனம் அச்சுறுத்தலானதுதான். ஏனெனில், வடக்கு-கிழக்கில் யாழ். தேர்தல் மாவட்டம் தவிர்ந்த, ஏனைய நான்கு தேர்தல் மாவட்டங்களிலும் (வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை) தமிழ் மக்களின் வாக்குகள், பேரினவாதக் கட்சிகள், அவர்களின் ‘சிலீப்பர் செல்’களுக்கு விழுவதாலும் தமிழ் மக்களுக்கான பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருக்கின்றது.

மட்டக்களப்பிலிருந்து நான்கு தமிழ்ப் பிரதிநிதிகள், நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்பது ஓர் அடிப்படை. ஆனால், அதிக நேரங்களில் அவ்வாறு நிகழ்வதில்லை. ஏனெனில், தமிழ்த் தேசிய கட்சிகள் பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதால் சிதறும் வாக்குகள், பேரினவாதக் கட்சிகளில் வரும் தமிழ் வேட்பாளர்களுக்காக விழும் வாக்குகள் கொடுக்கும் விலை அது. பேரினவாதக் கட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள், மட்டக்களப்பில் வெற்றிபெறுவதில்லை; அவர்கள் பெறும் வாக்குகள், அதிகம் மற்றைய சமூகத்து வேட்பாளரின் வெற்றியை உறுதிப்படுத்தவே உதவி இருக்கின்றன.

பிள்ளையானின், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, இவ்வாறு ஹிஸ்ல்புல்லாஹ்வின் வெற்றியை ஒரு முறை உறுதி செய்திருந்தது. ஆக, தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கையற்ற பிள்ளையானின் கட்சியினர், பேரினவாதக் கட்சிகளுடன் இணைந்து, தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைத் தோற்கடிப்பதாகக் குற்றஞ்சாட்டுவதற்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் பேரினவாதக் கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள், சுதாகரித்துக் கொள்ள வேண்டும். மகேஸ்வரனின் பெயருக்காக, விஜயகலாவுக்கு வாக்களிப்பதையோ, சொந்த ஊரை முன்வைத்து அவர்களுக்கு வாக்குக் கேட்பதையோ, நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அதுபோல, இராமநாதன்களின் புலிப் புராண உள்நோக்கத்தையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கை கொண்டவர்களைக் குறிவைத்துக் கொண்டு, இந்தப் பேரினவாதக் கட்சிகளும் அவர்களின் துணைக்குழுக்களும் நாடகங்களை அரங்கேற்றி, வாக்கு அபகரிப்பைச் செய்யும். அது, தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்தும் ஆபத்துக்குள் முடங்குவதற்கே வழிவகுக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முளைகட்டிய தானியங்களை சாப்பிடச் சொல்வது ஏன்?! (மருத்துவம்)
Next post கொடிய கொரோனா சாத்தான்குளம் போலீஸ்!! (வீடியோ)