வேக் அப் டூ மேக்கப்!! (மகளிர் பக்கம்)
காலையில் எழுந்தது முதல் அழகாக இருக்க என்ன வழி என்ற தேடலை கடந்த 22 ஆண்டுகளாக செய்து வருகிறார் ஒரு பெண்மணி. அவரது தேடல் தான் என்ன? என்று கேட்டபோது தன் மனக்குமுறலை கொட்டித் தீர்த்தார் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த காஸ்மட்டாலஜி துறை நிபுணர் ஜெயப்பிரபா சிவக்குமார். ‘‘எந்த துறையில் பணியாற்றுபவர்களையும் இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று வயிற்றுப்பிழைப்புக்காக செய்பவர்கள். மற்றொரு பிரிவினர் சம்பந்தப்பட்ட துறையில் தனது தனித் திறனை காண்பித்து அதில் ஒரு அடையாளம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இதில் இரண்டாம் வகையை சேர்ந்தவர் ஜெயப்பிரபா. 22 ஆண்டுகளாக அழகியல் கலையை விரும்பி செய்து வருகிறார். லியோனரா பியூட்டி என்ற பெயரில் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார்.
புரபஷனலாக செய்ய வேண்டும் என்பதற்காக பல போராட்டங்களை சந்தித்துள்ளார். கடல் கடந்து சென்று இங்கிலாந்தில் இந்த அழகியல் கலையை கற்றவர், செட்டியார் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அமைப்பு வழங்கிய சிறந்த பெண் தொழிலதிபருக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். குழந்தையுடன் வாழ்வது என்பது ஒரு தாய்க்கு வாழ்க்கையில் கிடைக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சி… அதையும் தனது கனவிற்காக தியாகம் செய்தவர். பெண் குழந்தையை தன் தாயிடம் விட்டு விட்டு இலக்கு அடைய இங்கிலாந்து பறந்தார். அங்கு பியூட்டி தெரபியில் டிப்ளமோ படிப்பை முடித்து விட்டு சென்னைக்கு வந்தவர் இங்கு தனக்கான ஒரு இலக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார். ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது.
ஒருமுறை திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விட்டு வரும் வழியில் விபத்தில் சிக்கினார். அழகியல் கலைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. ஆனால் ஜெயப்பிரபா சிகிச்சை முடிந்து பீனிக்ஸ் பறவையாக மீண்டும் எழுந்து தனது பணியை தொடர்ந்தார். ‘‘சென்னையில் மூலை முடுக்கெல்லாம் அழகு நிலையம் உள்ளது. பலர் இந்த ெதாழிலை செய்து வருகிறார்கள். சிகை அலங்காரம், நக பராமரிப்பு, முக அழகு, சரும பராமரிப்பு, மணப்பெண் அலங்காரம் என இதில் பல பிரிவுகள் உள்ளது. அரசால் அங்கீகரிக்கப்படாத சிறிய நிறுவனங்கள் அழகுக்கலை பயிற்சியை இலவசமாக கற்றுத்தருவதாக கூறுவதை நம்பி பயிற்சி பெற்ற பல அப்பாவி பெண்கள் தங்களுக்கு சுய தொழில் கிடைத்துவிட்டதுபோல் நம்பி சேர்கின்றனர். பின்பு அவர்கள் பியூட்டி பார்லரில் சாதாரண ஊழியராக பணிபுரிந்து வாழ்க்கை நடத்துகின்றனர். அல்லது சிறிய அளவில் பியூட்டி பார்லர் நடத்துகின்றனர்.
அழகுக்கலையை டைம்பாஸ்க்காகவும் பாக்கெட் மணிக்காகவும் செய்வது தான் இன்றைய பெண்களின் நிலை. ஆனால் என்னுடைய தேடல் அப்படிப்பட்டது அல்ல. பியூட்டி பார்லர் பயிற்சி மையங்களில் கற்றுத்தரும் வகுப்புகள் எனக்கு போதுமானதாக இல்லை. என்னுடைய தேடல் வேறாக இருந்தது. சென்னையில் பல அழகுக்கலை சார்ந்த படிப்புகளை படிச்சேன். காரணம் அழகுக்கலையில் நாம் சிறந்தவராக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கனவாக இருந்தது. தமிழகத்தின் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் அதற்கான உயர் படிப்பு இருக்கிறதா? என தேடினேன். அதற்கான வழிகாட்டுதல் கூட எனக்கு கிடைக்கவில்லை’’ என்றவர் திருமணம், குழந்தைக்கு பிறகு வெளிநாட்டில் படிக்க சென்றுள்ளார்.
‘‘குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும் போது இங்கிலாந்தில் அழகுக்கலை படிக்க வாய்ப்பு வந்தது. அங்கு சென்று பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்கவே நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டுத்தான் காஸ்மட்டாலஜி சேர்ந்தேன். அங்கு படித்துக் கொண்டிருந்தபோது என் உடன் படித்தவர்கள் பகுதி நேர வேலை பார்த்தனர். நானும் அப்படியே வாரம் இண்டு நாட்கள் ஒரு பியூட்டி பார்லரில் சேர்ந்து பணியாற்றினேன். நான் மட்டுமல்ல அந்த கல்லூரியில் சேர்ந்த பலர் படிப்பு செலவுக்காகவும் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் தாங்கள் படிக்கும் துறையை சார்ந்த வேலையில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார்கள்.
படிப்பு முடித்துவிட்டு சென்னைக்கு வந்த போதும் இங்கு அந்த துறை குறித்த நிலை மாறவே இல்லை. பல ஆயிரம் பேர் பிழைக்கும் இந்த தொழிலை அரசு ஏன் ஒருங்கிணைக்க கூடாது. மேலை நாடுகளில் காஸ்மட்டாலஜிக்கு தனி கல்லூரி உள்ளது. அதுபோல் இங்கும் ஏன் கொண்டு வரக்கூடாது. ஒவ்வொரு அழகியல் குறித்த படிப்புக்கும் தனி பாடப்பிரிவுகள் வேண்டும். படிக்கும்போதே செய்முறை பயிற்சி வகுப்புகளையும் கொண்டு வந்து மாணவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் வகையில் பாடப்பிரிவுகள் அமைக்கலாம். அப்படி செய்தால் யார் வேண்டுமானாலும் பார்லர் தொடங்கலாம் என்ற நிலை மாறி அழகுக்கலை குறித்து நன்கு படித்த, பட்டம் பெற்றவர்கள் மட்டும் புரபஷனலாக தொழில் செய்யும் சூழல் உருவாக்கலாம்.
அது போன்ற எண்ணங்கள் தான் என் மனதில் ஓடிக் கொண்டு இருக்கிறது. எதிர்காலத்தில் அழகியல் கலைக்காக கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது பிரதான லட்சியம் என்று கூட சொல்லலாம்’’ என்றவர் மேக்கப் துறையில் பல புதுமைகளை புகுத்தி வருகிறார். ‘‘என்னுடைய அழகுக்கலை நிலையத்தின் நோக்கமே வேக் அப் டூ மேக் அப்தான். அதாவது காலையில் எழுந்து குளித்துவிட்டு மேக்கப் போட்டுக் கொள்கிறோம். ஆனால் காலை எழுந்ததில் இருந்தே அழகுடன் இருக்க என்ன வழி என எனது தேடுதல் தொடர்கிறது. எல்லா பெண்களும் ஒவ்வொரு விதத்தில் அழகானவர்கள். அதை சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது இலக்கு. இதற்காக உடலில் உள்ள வடுக்கள், கரும்புள்ளிகளை மறைப்பது, கருவளையத்தை பளிச்சிட செய்தல், லிப் லைனர், கன்னத்தை சிவப்பாக்குதல், மணப்பெண் அலங்காரம், மாலை நேர மேக்கப், நகம் வளர்க்கும் கலை போன்றவற்றில் பல புதுமைகளை செய்து வாடிக்கையாளர்களை அசத்தி வருகிறேன்’’ என்றார் ஜெயப்பிரபா சிவக்குமார்.
Average Rating