கொரோனா வைரஸ் மீது போர்தொடுத்தல் !! (கட்டுரை)
சிவில் நிர்வாகத்துக்கும் இராணுவ நிர்வாகத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் பாரியன. போர்க்கால அடிப்படையில் செயற்படுவதற்கும் போர் போன்று செயற்படுவதற்கும் இடையிலான வேறுபாடுகள் முக்கியமானவை. ஆனால், இவை குறித்துக் கவனம் செலுத்தும் மனநிலையில், இலங்கை இல்லை என்பதை, அண்மைய நிலைமைகள் எடுத்துக் காட்டுகின்றன.
இலங்கை மிகுந்த நெருக்கடியான காலப்பகுதியிலும் சிவில் நிர்வாகத்தால் ஆளப்பட்டது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் அரசாங்கத்தின் சிவில் நிர்வாகம் இயங்கியது. அது, நாடு முழுவதும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது என்பதையும் முழு நிலப்பரப்பின் இறைமையும் இலங்கை அரசிடமே உள்ளது என்பதையும் சான்றுப்படுத்துவதற்கு உதவியது. இதுவும், சிவில் நிர்வாகத்தின் வலிமைகளில் ஒன்றாகும்.
இலங்கையின் சிவில் நிர்வாகத்தின் வரலாறு மிக நீண்டது. அது, பிரித்தானியர் காலந்தொட்டு, வலுவாகக் காலூன்றித் தன்னை நிலைப்படுத்தி உள்ளது. இடைக்கிடையே அது சவாலுக்கு உட்பட்டாலும் ஆண்டாண்டு காலமாய் நிறுவனமயப்பட்டு, சமூகத்தின் அங்கமாய் சிவில் நிர்வாகம் மாறிப் போனமையால், அது நின்று நிலைத்தது.
இலங்கை, மெதுமெதுவாக சர்வாதிகாரத்தின் பாதையில் நடக்கத் தொடங்கியபோதெல்லாம், அதற்கான எதிர்ப்பின் குரல் பல வழிகளில் சிவில் நிர்வாகத்துக்கு உள்ளிருந்தே எழுந்துள்ளது. இலங்கை, இன்றுவரை குறைந்தபட்ச ஜனநாயகப் பண்புகளைத் தக்கவைத்திருப்பதற்கான காரணிகளில் இதுவும் ஒன்றாகும்.
இன்று, கொரோனா வைரஸை, இலங்கை ஓர் எதிரியாக எதிர்கொள்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால், இலங்கை கொரோனா வைரஸுடன் ஒரு போரில் ஈடுபட்டுள்ளது. இந்த மனநிலையிலேயே அரசாங்கம் இயங்குகிறது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட சூழல், இதற்கு இன்னும் வாய்ப்பானது. அரசியல்வாதிகள் அனைவரும் வீட்டில் இருக்கிறார்கள்; இராணுவத்தினர் வீதியில் நிற்கிறார்கள். சிவில் நிர்வாகம், ஊரடங்கின் பெயரால் முடக்கப்பட்டுள்ளது. சர்வரோக நிவாரணியாக, இராணுவம் முன்னிறுத்தப்படுகிறது; தப்பில்லை, ஏனெனில் இலங்கை யுத்தத்தில் அல்லவா இருக்கிறது.
இங்கு இரண்டு செய்திகளைச் சொல்ல வேண்டும்.
முதலாவது, இன்று கொரோனா வைரஸ் சார்ந்து நடக்கும் விடயங்களை, அரசாங்கத்தின் இந்நடத்தையையும் சிந்தனையையும் சார்ந்து விளங்க வேண்டும்.
இரண்டாவது, நீண்டகால நோக்கில், இலங்கையின் சிவில் சேவை, முழுமையாக இராணுவமயமாகும் தன்மையை நோக்கி நகர்கிறது. இரண்டும் மிக ஆபத்தானவை.
இலங்கையின் அரசியல் மற்றும் சமூகவெளிகள், மெதுமெதுவாகச் சுருங்குகின்றன.
அவ்வெளிகளை, இராணுவம் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கைப்பற்றுகின்றது. எஞ்சியவற்றை இராணுவம், இலையான் மொய்ப்பது போல மொய்த்து அச்சமூட்டுகிறது.
இராணுவத்தை நடத்துவது போல, நாட்டு மக்களை நடத்த முடியாது. இந்த உண்மை அரசாங்கத்துக்கோ, அதில் அங்கம் வகிப்போருக்கோ புரியவில்லை. இப்போது, அரசாங்கம் கண்ணுக்குத் தெரியாததும் அதேவேளை பிரகடனப்படுத்திய எதிரியோடு, காற்றிலே கத்தி வீசிக் கொண்டிருக்கிறது.
இலங்கை மக்களின் இன்றைய உடனடித் தேவை, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதேயன்றி, வெற்றிகொண்டு கொண்டாடி மகிழ்வதல்ல. கடந்த மூன்று வாரங்களில், தொடர்ச்சியாக மாற்றமடையும் கொள்கை முடிவுகளை நாம் கண்டோம். இந்த மாற்றங்கள், அறிவியல் சார்ந்தனவல்ல; அரசியல் சார்ந்தனவுமல்ல. அவை, வெறுமனே இராணுவத்தின் மேன்மையை முன்னிறுத்தும் நோக்கம் கொண்டவை மட்டுமே.
போர்கள், வெற்றியையே நோக்காகக் கொண்டவை. அவற்றில் பெரும்பாலானவை, எந்த விலை கொடுத்தாலும், வெற்றி இலக்கை அடைந்துவிட வேண்டும் என்ற வெறித்தனத்தைத் கொண்டிருப்பவை. அவற்றுக்கு, மனித உயிர்களோ, உடமைகளோ, உணர்ச்சிகளோ ஒரு பொருட்டல்ல. இதனால்தான், போர்கள் முடிந்து, திரும்பிப் பார்க்கின்ற போது, பெற்றவைகளை விட, இழந்தவை அதிகம் என்ற உண்மை உறைக்கிறது.
கொரோனா வைரஸ் என்ற திரை, மெதுமெதுவாக சர்வாதிகார ஆட்சிக்கான அடித்தளத்தை உருவாக்க வழிகோலுகிறது. இலங்கையின் இப்போதைய செல்நெறி தொடருமாயின், இலங்கை இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வாய்ப்புள்ளது. நாம், கொரோனா வைரஸுடனான போரை வென்ற வெற்றிக்களிப்பில் திளைக்கும் பொழுதுகளில், எமது அனைத்து உரிமைகளும் களவாடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.
முதலில், கொரோனா வைரஸை எதிரியாகவும் அதற்கெதிரான போராட்டத்தைப் போராகவும் பார்க்கும் மனோநிலையில் இருந்து, நாம் வெளிவரல் வேண்டும்.
இது, போர் என்றால் நாம் எல்லோரும் போர் வீரர்கள். நாம் போர் வீரர்கள் என்றால், நாம் இராணுவத்தின் அங்கம். எனவே, நாம் இராணுவ நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கடமைப்பட்டவர்கள்.
இது, ஆபத்தானது மட்டுமல்ல, அபத்தமானதும் கூட. போரைப் புறந்தள்ளி அன்பைப் பொதுவில் வைப்போம். இன்று, இலங்கையர்கள் வேண்டி நிற்பது இதை மட்டுமே.
Average Rating