உணவுக்கு ஒரு திட்டம்!! (மருத்துவம்)
மிக அழகாக வடிவமைக்கப்பட்ட தங்கள் உடலை எப்படி ஆராதிப்பது என பலருக்குத் தெரிவதில்லை. கெவின் ட்ரோடோ (அமெரிக்க எழுத்தாளர்) நீரிழிவாளர் என்றாலே பரிதாபத்துக்கு உரியவராக, விருப்பமான உணவு எதையுமே சாப்பிட முடியாத ஒருவராகவே பலரும் கற்பனை செய்கிறார்கள். உண்மை அப்படியல்ல… சரியான நேரத்தில் சரியான அளவில் சுவையாகவே உட்கொள்ளலாம். நீரிழிவாளருக்கான உணவு என்பது ஒரு நோயாளிக்கான உணவுமுறையே அல்ல. ஆரோக்கியம் விரும்பும் அத்தனை பேருக்கும் பொருந்துகிற உணவுமுறைதான் அது! கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) உணவுகள் ரத்த சர்க்கரை அளவை மாற்றி அமைப்பதில் நேரடியாக பங்கு வகிக்கும். அதனால்தான், உணவுத் திட்டத்தில் கார்போஹைட்ரேட்டுக்கு ஓரளவு கட்டுப்பாடு தேவைப்படுகிறது.
எனினும், ஒட்டுமொத்த உணவுத்திட்டம் ரத்த சர்க்கரையை மட்டுமே மனதில் கொண்டு வரையறுக்கப்படுவதில்லை. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், எடை ஆகிய விஷயங்களுக்கும் அதில் முக்கியத்துவம் உண்டு. இதோ சில உணவுத் திட்டங்கள்… கார்ப் கவுன்டிங் ஒவ்வொரு உணவு நேரத்திலும் எவ்வளவு கார்போஹைட்ரேட் உட்கொள்கிறோம் என கறாராகக் கணக்கிட்டுக் கொள்ளும் முறை இது. பொதுவாக டைப் 1 மற்றும் இன்சுலின் பயன்படுத்தும் நீரிழிவாளர்களுக்கு இதுவே பரிந்துரைக்கப்படுகிறது. மை பிளேட் மெத்தட் நம் உணவுத் தட்டில் இடம்பெறுபவை எவை? இதன் அடிப்படையில் வகுக்கப்பட்ட உணவுமுறை இது. எளிதானதும் சுவாரஸ்யமானதும் கூட. இருப்பினும், டைப் 1 மற்றும் தீவிரமான டைப் 2 நீரிழிவாளர்களுக்குப் பொருத்தமாக அமைவதில்லை. நம் தட்டு முறைப்படி…
சுமார் 9 இன்ச் அளவுள்ள தட்டு எனக் கொள்வோம். அதில் பாதி அளவுக்கு மாவுச்சத்து அற்ற பழங்கள், காய்கறிகள் அல்லது இவை கொண்டு தயாரிககப்பட்ட உணவுவகைகள் இடம் பெறலாம்.
மீதி பாதியை இரண்டு கால்பகுதிகளாகப் பிரித்துக் கொள்வோம். அதில் ஒரு கால்பகுதியில் கார்போஹைட்ரேட் உணவுகள் இருக்கலாம். மறு கால்பகுதியில் புரோட்டீன் (புரதச்சத்து) உணவுகள்.
தட்டுக்கு அருகில் ஒரு டம்ளர். அதில் கொழுப்பு குறைந்த பால் அல்லது பால் பொருள் (தயிர், மோர்)…க்ளைசமிக் இன்டெக்ஸ் – க்ளைசமிக் லோட்
GI என்று கூறப்படும் க்ளைசமிக் இன்டெக்ஸ் ஆனது, ஒவ்வொரு உணவும் ரத்த சர்க்கரை அளவில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என அறிய உதவுகிறது. குறைவான அல்லது நடுத்தர க்ளைசமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுவகைகளைக் கொண்டதே GI உணவுத் திட்டம். சிம்பிள் கார்போஹைட்ரேட் உணவு வகைகள் எளிதில் உடைக்கப்படுவதால், மிக வேகமாக ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து விடும். அதனால் அதிக GI உடைய இதுபோன்ற உணவுகள் ஆபத்தானவை. குறைவான அல்லது நடுத்தர க்ளைசமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுகள் பொதுவாக ‘காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்’ வகையைச் சேர்ந்தவையாக இருக்கும்.
இவை மெதுவாகவே உடைபடுவதால், ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தாலும் கூட, ஆபத்தான நிலையை அளிப்பதில்லை. உதாரணமாக… மாம்பழங்கள் உயர் GI வகையைச் சேர்ந்தவை. ரத்த சர்க்கரை அளவை எகிறச் செய்து விடும். மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஆரஞ்சு பழம் குறைவான GI தன்மை உடையது. குளுக்கோஸ் அளவை ரொம்பவும் அதிகப்படுத்தி விடாது. அதோடு, நுன் ஊட்டச்சத்துகளையும் அளிக்கும். GL என்று கூறப்படும் க்ளைசமிக் லோட் என்பதையும் இந்த உணவுத்திட்டத்தில் கணக்கில் கொள்ள வேண்டும். இதுவும் GI போலவே ரத்த சர்க்கரையில் கார்போஹைட்ரேட் உணவுகள் செய்யும் மாயத்தைக் கணக்கிடும். உதாரணமாக… தர்பூசணி பழத்தில் அதிக GI உண்டு. ஆனால், இதன் GL அளவு குறைவாகவே உள்ளது. காரணம், அதிலுள்ள நீர்ச்சத்து. அதனால் தர்பூசணி சமச்சீர் சத்து பெறும் வகையில் ஓரளவு சேர்த்துக் கொள்ளலாம். GL கணக்கீடு பொதுவாக விதிவிலக்காகவே செயல்படுத்தப்படும். டைப் 2 நீரிழிவு அறியப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் இந்த உணவுத் திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது.
உங்களுக்கு ஏற்ற உணவுத் திட்டம் எது? ஏன்?
நீரிழிவாளர் அத்தனை பேருக்கும் பொதுவான உணவுத்திட்டம் என்று ஒன்றை மட்டும் சொல்லிவிட முடியாது. அவரவர் நீரிழிவுக் கட்டுப்பாடு நிலை,
முந்தைய உணவுமுறை, பணி ஆகிய பல காரணிகளைப் பொருத்து, எளிதாகப் பின்பற்றத்தக்க வகையில் இதை உருவாக்க முடியும். மருத்துவரும் உணவு ஆலோசகரும் நீரிழிவாளரோடு இணைந்து நல்லதொரு உணவுத் திட்டத்தை உருவாக்கித் தருவார்கள்.
Average Rating