எகிறும்… குறையும்! (மருத்துவம்)
நீரிழிவு வந்துவிட்டதா? கவலை வேண்டாம்… முறையாகப் பயன்படுத்தினால், அது உங்கள் நல்வாழ்வுக்கான ஆயுதம்!
‘மருத்துவரைச் சந்திக்கச் செல்கையில் ரத்தப்பரிசோதனை செய்தால் போதும்’ என்றே நீரிழிவாளர்கள் பலரும் நினைக்கின்றனர். நீரிழிவின் நிலை என்பது ஒவ்வொரு நாளுமே மாறுபடக் கூடியது. கடைசியாகச் சாப்பிட்ட உணவைப் பொறுத்து, செயல்பாடுகளை ஒட்டி, மருந்து எடுத்துக்கொண்ட நேரத்துக்கு ஏற்ப என ஏராளமான நிகழ்வுகளோடு, ரத்த சர்க்கரை அளவு சம்பந்தப்பட்டிருக்கிறது. அதனால் என்றைக்கோ ஒருநாள் எடுக்கப்படுகிற ரத்தப் பரிசோதனை முடிவானது முழுமையானதல்ல.
உதாரணமாக… நீரிழிவு பிரச்னை அல்லாத சாதாரண நபர் நடைப்பயிற்சிக்குப் பிறகு குளுக்கோஸ் அளவை சோதித்தால் 99 mg/dl என்கிற அளவில் இருக்கலாம். அவரே, உணவுக்கு அரை மணி நேரம் பின்பு சோதித்தால், உணவைப் பொறுத்து 200 mg/dl என்கிற அளவுக்கு எகிறி இருக்கும். இதுவே உணவுக்கு 2 மணி நேரத்துக்குப் பிறகு 139 mg/dl என்கிற அளவுக்குக் குறையும்.
ரத்த சர்க்கரை அளவைக் கூட்டவோ, குறைக்கவோ ஏராளமான காரணங்கள் உண்டு. இவையே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து நீரிழிவின் நிலையைத் தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் கூட இம்மாறுதல் நிகழும்.
ரத்த சர்க்கரையை அதிகரிக்கும் முக்கிய காரணிகள்…
உணவு
உடல் மற்றும் மன அழுத்தம்
உடல்நலக் குறைவு
மரபணு மாற்றங்கள்
மருந்துகளை தாமதமாக உட்கொள்ளுதல் / மறந்து விடுதல்
உடலியல் ரீதியாக மந்தமாகச் செயல்படுதல்
புகை பிடித்தல்
ரத்த சர்க்கரையை குறைக்கும்
முக்கிய காரணிகள்…
உணவைத் தவிர்த்தல் / தாமதித்தல்
உடலியல் ரீதியாக சுறுசுறுப்பாகச் செயல்படுதல் / உடற்பயிற்சி
மருந்துகளை முறையாக உட்கொள்ளுதல்
அளவுக்கு மீறி மது உட்கொள்ளுதல்
எந்த அளவு எகிறும்? எந்த அளவு குறையும்?
ரத்த சர்க்கரை அளவு மாறுபாடுவது ஒவ்வொருவருக்கும் வேறுபடக் கூடியது. ஒன்றோ, பலவோ இதற்கான காரணங்களாக இருக்கலாம். உதாரணமாக… உணவு அருந்திய உடன் புகை பிடிப்பது சிலரது வழக்கம். பொதுவாக இவர்கள் உடற்பயிற்சி செய்வதும் இல்லை. இவர்களது ரத்த சர்க்கரை அளவு நிச்சயமாக கிடுகிடுவென உயரத்தான் செய்யும்.
மருத்துவர் அறிவுறுத்தலை முறையாகப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒவ்வொரு உணவுக்குப் பிறகும் பாதுகாப்பு எல்லைக்குள் ரத்த சர்க்கரை அதிகரிக்கும். அடுத்த உணவு வேளைக்குள் குறைந்துவிடும். இப்படியே மாறி மாறி இருந்தாலும், ஒரே சீராக இருக்கும். நல்ல அளவீடுகளைத் தாண்டாது. நீரிழிவாளர்களுக்கு இப்படி இருப்பதில்லை என்பதுதான் பிரச்னை. ஒரே நாளில் பலமுறை ரத்த சர்க்கரை அளவு பாதுகாப்பு எல்லையைத் தாண்டி வெளியிலும் செல்லும். அதனால்தான் மருத்துவர்கள் குறிப்பிட கால இடைவெளிகளில் ரத்த சர்க்கரை அளவை வீட்டிலேயே பரிசோதிக்கச் சொல்கிறார்கள்.
முறையான பரிசோதனை திட்டத்தில் இருந்தாலே, கிடைக்கிற அளவீடுகளைப் பொருத்து, வாழ்க்கைமுறை மாற்றங்கள் செய்து, நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க முடியும். உணவு ரத்த சர்க்கரையை அதிகரிக்கும் என்பதாலேயே, உணவு கெட்ட விஷயம் அல்ல. ஆரோக்கியமான சமச்சீர் உணவை குறித்த நேரத்தில் எடுத்துக் கொள்வது ரத்த சர்க்கரையை நல்ல அளவீடுகளுக்குள் கொண்டுவர நிச்சயம் உதவும். விரதம் இருந்தோ, பட்டினி கிடந்தோ ரத்த சர்க்கரையை குறைக்க நினைத்தால், அது அபாயத்தையே அளிக்கும். என்றைக்காவது விருந்தில் திளைக்க விரும்புகிறவர்களுக்கும் இதே எச்சரிக்கைதான். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும்போது விருந்து சாப்பிடலாம் ஆனாலும், அளவாக. கட்டுப்பாட்டில் இல்லாத காலகட்டத்தில் விருந்து என்பது விரும்பத்தகாதது.
சோதனை மேல் சோதனையா?
வீட்டிலேயே செய்துகொள்ள வேண்டிய குளுக்கோமீட்டர் சோதனைகள், மருத்துவரைச் சந்திக்கிற போது எடுத்துக்கொள்கிற ரத்தப் பரிசோதனை ஆகியவை மட்டுமல்ல… அவசியமான இன்னும் சில சோதனைகளும் நீரிழிவாளர்களுக்கு உண்டு. ‘வரும்முன் காப்போம்’ என காலம் காலமாகச் சொல்லப்படுகிற அதே விஷயம்தான் இதுவும். நீரிழிவு காரணமாக ஏற்படுகிற பல்வேறு பின்விளைவுகளைத் தவிர்க்கவும் தடுக்கவும் தள்ளிப்போடவும் இந்தச் சோதனைகள் நிச்சயம் உதவும்.
கண்கள், பாதம், இதயம், சிறுநீரகம், நரம்புகள், ரத்த நாளங்கள் என உடலின் சகல பகுதிகளையும் தாக்கும் சர்வ வல்லமை நீரிழிவுக்கு உண்டு என்பதால், இச்சோதனைகள் உயிர் காக்கும் உபாயங்களாகவே கருதப்பட வேண்டும். ஆரம்ப நிலையிலேயே ஒரு பிரச்னை அறியப்பட்டு விட்டால், சிகிச்சையும் எளிது… செலவும் குறைவு. உண்மையில் நீரிழிவு மேலாண்மைக்காக நாம்செலவழிக்கிற பணமானது, கட்டுப்பாடு அற்ற நீரிழிவினால் ஏற்படுகிற பிரச்னைகளின் செலவுகளை விட மிகக் குறைவானதே.
இவை முக்கிய சோதனைகள்…
HbA1c கடந்த 3 மாத காலத்தில் நமது உடலின் குளுக்கோஸ் அளவுகள் எப்படி இருந்தன என்பதை ஒரே ஒரு ரத்தப் பரிசோதனையில் சொல்வதுதான் இது. இந்த அளவீடை அறிவதன் மூலமே நீரிழிவு சார்ந்த குழப்பங்களை எளிதில் அடையாளம் கண்டுவிட முடியும்.
ரத்தக் கொழுப்பு சோதனை
நீரிழிவாளர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம். அதனால், ஆண்டுக்கு ஒரிரு முறை லிபிட் புரஃபைல் எனும் கொழுப்பு சோதனை எடுத்துக் கொள்வது நல்லது.
ரத்த அழுத்த சோதனை
நீரிழிவோடு ரத்த அழுத்தமும் சேர்ந்து அதிகரித்தால் பிரச்னைகளும் நீளும். கண்களும் சிறுநீரகங்களும் கூட பாதிக்கப்படலாம். அதனால், அவ்வப்போது BP சோதிப்பது அவசியம்.
மைக்ரோஅல்புமின் (சிறுநீரகச் செயல்திறன்) சோதனை
நமது சிறுநீரகங்கள் எந்த அளவு வேலை செய்கின்றன என்பதை அறிய ஒரு சிறுநீர் சோதனை தேவை. சிறுநீரிலுள்ள புரத அளவு பல விஷயங்களை நமக்குச் சொல்லும். அதோடு, க்ரியாட்டினின் ரத்தப் பரிசோதனை மூலம் முழுமையாக சிறுநீரகச் செயல்திறனை உணரலாம்.
கண் பரிசோதனை
ஆண்டுக்கொரு முறை கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆப்தமாலஜிஸ்ட் செய்கிற இச்சோதனை மூலம் நீரிழிவு காரணமாக கண்ணுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆரம்பதிலேயே தவிர்க்க முடியும்.
பாதப் பரிசோதனை
ரத்த சர்க்கரை அளவு கன்னாபின்னாவென அதிகரித்தால், அது காலையும் கூட விட்டுவைக்காது. டயாபடிக் நியூரோபதி சோதனைகள் வாயிலாக பாதம் மற்றும் கால்களில் உணர்ச்சி குறைபாடு உள்ளதா என்பதை அறிந்து, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
பல் பரிசோதனை
ஆண்டுக்கு இரு முறை பல் மருத்துவ சோதனையும் அவசியம். நீரிழிவு கட்டுக்குள் இல்லை எனில், அது பற்களையும் பாதிக்கும்.
Average Rating