ஒன்பது ஆண்டுகளை இழக்கலாமா? (மருத்துவம்)
நீரிழிவை ஒரு பிரச்னையாகவே கருதாமல் இருப்போரின் அலட்சிய கருத்துகளுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரத்தை அளித்துள்ளது சீனாவில் அண்மையில் நடைபெற்ற ஓர் ஆய்வு.
நீரிழிவு என்கிற காரணத்தால் யாராவது இறந்ததை நிரூபிக்க முடியுமா?
இப்படி ஒரு சர்ச்சை சில ஆண்டுகளாகவே உண்டு. வேறுசில மருத்துவ முறைகளை ஆதரிப்போர் இதற்காக வாதமும் செய்வது உண்டு.
அவர்கள் கூறுவது ஒருவிதத்தில் உண்மைதான். நீரிழிவு என்பது நோய் அல்ல; குறைபாடு மட்டுமே என்கிற மருத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் பார்த்தால், இது நோய் அல்லதான். ஆனால், ஏராளமான பிரச்னைகளுக்கு இதுவே வாசல். கண், நரம்பு, இதயம், பாதம், சிறுநீரகம் உள்பட உடல் முழுக்க பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மை நீரிழிவுக்கு உண்டு என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.
நீரிழிவாளர்களுக்கு சராசரியாக 9 ஆண்டுகள் ஆயுள் குறையும் அபாயம் உள்ளது என்பது அண்மையில் வெளியான ஆய்வு முடிவு. பெரும்பாலும் கிராமங்களில் போதிய சிகிச்சை வசதிகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணம். நீரிழிவாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், அதன் விளைவுகளால் ஏற்படும் இறப்பு விகிதம் இதுவரை அவ்வளவாக வெளிப்படாமல் இருந்தது.
அதனால், நீரிழிவு ஏற்படுத்தும் மோசமான தாக்கம் புரிந்துகொள்ளப்படாமலே இருந்தது. இதய நோய், பக்கவாதம் உள்பட வேறு பல பிரச்னைகளே மரணங்களுக்கு நேரடிக் காரணங்களாக பதிவு செய்யப்பட்டதால் உண்மை புலப்படாமல் இருந்தது. இப்போது மரணங்களுக்கு மூல காரணம் என்ன என்பதைத் துல்லியமாக அறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால், இந்த விபரங்கள் உலகுக்குக் கிடைத்துள்ளன.
சீனாவில் மட்டுமல்ல… ஆசியாவின் பல நாடுகளில் கடந்த பத்தாண்டுகளில் நீரிழிவால் தாக்கப்பட்டோரின் அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது. மக்கள்தொகை அதிகமுள்ள சீனாவில், இப்போதைய நிலவரப்படி 10 கோடி பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த அதிர்ச்சி எண்ணிக்கை 7 கோடியாக இருக்கிறது.
இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், சீனாவிலுள்ள பெக்கிங் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள், 30 – 79 வயதுக்குட்பட்ட 5 லட்சம் மக்களின் இறப்புக்கும் நீரிழிவுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 2004 முதல் 2008 வரை சீனாவின் 5 நகரங்கள் மற்றும் 5 கிராமங்களில் இருந்த 5 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டு, இவர்களில் யாரேனும் இறந்தால் என்ன காரணத்துக்காக இறக்கின்றனர் என 2014 வரை ஆய்வு செய்தனர்.
ஆய்வு முடிவுகளின்படி, நீரிழிவாளர்கள் உயிரிழக்கும் அபாயம் பிறரைக் காட்டிலும் 2 மடங்கு அதிகமாக உள்ளது. இதய நோய், பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, கல்லீரல், கணையம், மார்பகப் புற்றுநோய் மற்றும் நோய்த்தொற்று உள்பட பலவகை பாதிப்புகளால் நீரிழிவாளர்கள் மிக அதிக அளவில் இறந்துள்ளனர்.
சீனாவில், பொதுவாக கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் நீரிழிவால் பாதிக்கப்பட்டோர் அதிக அளவில் (முறையே 4 சதவிகிதம் மற்றும் 8 சதவிகிதம்) உள்ளனர். ஆனாலும், நகர்ப்புற நோயாளிகளை விட கிராமப்புற நோயாளிகளுக்கே அபாயம் அதிகமாக உள்ளது.
ஆய்வின் ஒட்டுமொத்தக் கருத்தாக, நீரிழிவாளர்களுக்கு சராசரியாக 9 ஆண்டுகள் ஆயுள் குறையும் அபாயம் உள்ளது என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. இந்த ஆய்வு அளிக்கிற உண்மைகள் சீனாவுக்கு மட்டுமல்ல… இந்தியாவுக்கும் ரொம்பவே பொருந்தும். நீரிழிவை அலட்சியப்படுத்தாமல், முறையான சிகிச்சை அளித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.இன்றே தொடங்குவோம் அதற்கான செயல்திட்டத்தை நாம் ஒவ்வொருவரும்!
Average Rating