சர்க்கரை என்பது உச்சி முதல் பாதம் வரை!! (மருத்துவம்)
கடுமையான சிறுநீரக நோய்(Chronic Kidney Disease) என்பது படிப்படியாக சிறுநீரகம் செயலிழக்கும் நிலை. இதற்கு அடிப்படைக் காரணம் ரத்தக்கொதிப்பு என்கிற உயர் ரத்த அழுத்தமும், நீரிழிவும்தான். இந்த இரு பிரச்னைகளால்தான் மூன்றில் இரு பங்கு நபர்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படுகிறது.இந்தியாவில் ஏறத்தாழ 7 கோடி பேர் நீரிழிவோடு வாழ்கின்றனர். வரும் 2040-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 12 கோடியாக அதிகரிக்கும் என அனுமானிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் இரு நீரிழிவாளர்களில் ஒருவர் சிறுநீரக நோயாளியாகதள்ளப்படும் அபாயம் உள்ளது.நீரிழிவு என்பது, நாம் பொதுவாக நினைப்பது போல ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது மட்டுமே அல்ல. ரத்த சர்க்கரை அளவு விடாப்பிடியாக அதிகமாகவே இருக்கும்பட்சத்தில், சிறிய ரத்தநாளங்களும், ரத்தத் தந்துகிகளும், தமனியின் சுவர் படலமும், நரம்புகளும் கூடப் பாதிக்கப்படும். இதன் விளைவாக, உடலின் அத்தனை பகுதிகளும் – சிறுநீரகம், இதயம் உள்பட – பாதிக்கப்படத் தொடங்கும்.
மற்ற இன மக்களோடு ஒப்பிடுகையில், நீரிழிவால் பாதிக்கப்படும் இந்தியர்களுக்கும் தெற்காசிய மக்களுக்கும் சிறுநீரகமும் சேதமடையும் அபாயம் 4 மடங்கு அதிகமாக உள்ளது. வாழ்நாளிலும் 10 ஆண்டுகளை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. மரணத்தை நோக்கிச் செல்லும் நீரிழிவாளர்களின் எண்ணிக்கையானது சிறுநீரகப் பாதிப்பு காரணமாக 3 மடங்காக வேகம் எடுக்கிறது.
இவை மட்டுமல்ல… சிகிச்சை மற்றும் இன்ன பிற செலவுகளும் 3 முதல் 5 மடங்கு வரை அதிகரிக்கின்றன. ஒரே ஒரு நல்லவிஷயம்… இந்தப் பாதிப்புகள் ஏற்படாமல் வருமுன் காக்க முடியும்!பிரச்னைகளுக்கு எல்லாம் அடிப்படையான ரத்த சர்க்கரை அளவை முறையான மருத்துவ கண்காணிப்பு, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றின் வாயிலாகக் கட்டுப்படுத்துவது ஒன்றே, முதலும் இறுதியுமான பாதுகாப்பு
நடவடிக்கை. திரும்பத் திரும்ப இதையே சொல்வது போலத் தோன்றினாலும், இது பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவு ஏற்படவில்லை என்பதே உண்மை.
இப்போது மிக எளிய சிறுநீர் பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பை முன்கூட்டியே அறிந்து காத்துக்கொள்ள முடியும். Microalbuminuria என்கிற இச்சோதனையை ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். அதோடு, ரத்த அழுத்தத்தின் 130/80 mm/hg என்கிற அளவிலும், தினமும் உட்கொள்ளும் உப்பின் அளவு 5 கிராமுக்கு அதிகமாகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.நீரிழிவு சிகிச்சையின் போது, தாழ் சர்க்கரை பிரச்னையும், எடை அதிகரிப்பும் சிலருக்கு ஏற்படக்கூடும். மெட்ஃபார்மின் போன்ற மாத்திரைகள் காரணமாக, சிலருக்கு லேசான எடை இழப்பும் இருக்கக்கூடும். சிலருக்கு வயிற்றுக் கோளாறுகள் ஏற்படக்கூடும். சருமப் பிரச்னைகளும் வரலாம். இவை காலம்காலமாகப் பயன்பாட்டில் இருந்து வரும் மருந்துகளின் பக்கவிளைவுகள்.
இப்போதோ, நவீன மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நல்ல மருந்துகள் வந்துவிட்டன. நீரிழிவு மருத்துவரால் ஒவ்வொருவருக்கும் ஏற்ற சிறப்பான, சிறுநீரகத்தைப் பாதிக்காத மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைக்க முடியும். அதனால், ஒரு
போதும் சுயமருத்துவம் வேண்டாம்!
நீரிழிவின் அபாய விளைவுகள்
* எடை அதிகரிப்பு / எடை குறைதல்
* உயர் ரத்த அழுத்தம்
* கொலஸ்ட்ரால் அதிகரிப்பு
* பாரம்பரிய தாக்கம்
நீரிழிவின் குழப்பம் எங்கெல்லாம் செல்லும்?
* கண்கள்
* இதயம்
* சிறுநீரகம்
* ரத்த நாளங்கள்
* பாதம்
Average Rating