குமரியை வெல்ல குமரியை உண்க!! (மருத்துவம்)
வியப்பூட்டும் கற்றாழை ரகசியம்
ஆரோக்கியம், அழகு என இரண்டு ஏரியாவிலுமே சொல்லி அடிக்கும் கில்லி என்று கற்றாழையைச் சொல்லலாம். சாதாரண உடல் சூட்டிலிருந்து புற்றுநோய் வரை அத்தனைக்கும் நிவாரணமாகும் திறன் கொண்டது கற்றாழை. இதன் அருமையை உணர்ந்த சித்தர்கள், நீண்ட நாட்கள் வாழ்வதற்கு உறுதுணையாகும் வகையில் காயகல்ப மருந்தாகப்பயன்படுத்தியிருக்கிறார்கள்.கற்றாழையின் மருத்துவ மற்றும் வரலாற்றுச் சிறப்புகளைப் பற்றி விளக்குகிறார் சித்த மருத்துவர் வெங்கடேசன்.
உடலை உறுதியாக்கும் கற்றாழை!
உடலை உறுதியாக்கி நோய்களை அருகில் வரவிடாமல் செய்யும் ஆற்றல் கொண்டது கற்றாழை. இதை உணர்ந்துதான் சித்தர்கள் அதைக் கொண்டு காயகல்ப மருந்தாக செய்து பயன்படுத்தியிருக்கிறார்கள். நாமும் செய்து பின்பற்றக் கூடிய எளிய முறைதான் இது.
கற்றாழையின் உட்பகுதியில் உள்ள ஜெல் போன்ற பகுதியான சோற்றை எடுத்து 7 முறை நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். அதை சிறுசிறு துண்டுகள் போன்று வெட்டி, அதன்மீது பனங்கற்கண்டு சிறிது தூவிக் கொள்ள வேண்டும். இதை மூன்றிலிருந்து ஐந்து ஸ்பூன் அளவில் பகல் நேரத்தில் மட்டும் ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும்.
உடல் குளிர்ச்சிக்குக் கற்றாழை !
வெப்பம் மிகுதியால் ஏற்படக்கூடிய உடல்நல பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணியாக கற்றாழை உள்ளது. உடல் சூட்டைக் குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கற்றாழை உதவுகிறது. சர்வரோக நிவாரணிநமது உடல் ஆரோக்கியமாக செயல்படுவதற்குத் தேவையான 22 அமினோ அமிலங்கள் கற்றாழையில் உள்ளது.
வைட்டமின்கள் A, B1, B2, B3,B5, B6, B12, C, E, மற்றும் துத்தநாகம், செலினியம், கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம், குரோமியம், தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாதுக்களும் இதில் உள்ளன. பெருங்குடலை சுத்தம் செய்து, மலத்தை வெளியேற்றும் Aloin, Emodin போன்ற Anthraquinones என்கிற வேதிப்பொருளும், ஜீரண சக்தியை அதிகரிக்கும் Amylases, Bradykinases, Catalases, Phosphokinases போன்ற நொதிகளும், சருமத்தைப் பாதுகாக்கத் தேவையான Lignins போன்றவையும் உள்ளன.
கற்றாழையில் உள்ள Salicylic Acid மற்றும் Saponins, Sterols ஆகியவை புண்களை ஆற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இவை அனைத்தும் ஒருமித்த முறையில் செயல்படுவதால் கற்றாழையை சர்வரோக நிவாரணி என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
புற்றுநோய்க்குத் தீர்வு
ஆரம்பநிலை புற்றுநோய்களுக்கு கற்றாழை நல்ல தீர்வளிப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் Acemannan இதில் உள்ளது. இதை பயன்படுத்தி தற்போது எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய்களுக்கான மருந்துகள் தயாரித்து அமெரிக்க நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வருகிறது. ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; அழகுக்கும்!
பெண்களின் சரும பராமரிப்பில் தனிச்சிறப்பு பெற்றது கற்றாழை. சருமம் பளபளப்பாக இருப்பதோடு பல்வேறு சரும நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் கற்றாழை உதவுகிறது. சோற்றுக் கற்றாழையை வெட்டி எடுத்து, அதில் சிறிது மஞ்சள் பொடியைக் கலந்து குழைத்து, உடல் முழுவதும் தேய்க்க வேண்டும். அதன்பிறகு அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான சுடுநீரில் குளிக்க வேண்டும். இது போல் வாரத்துக்கு இரண்டு நாள் குளித்து வந்தால் பெண்களின் சருமம் மிளிரும். பேரழகி என்று வர்ணிக்கப்படும் கிளியோபாட்ரா சோற்றுக் கற்றாழையைப் பயன்படுத்தி தன்மேனி அழகை பாதுகாத்துக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு.
குமரியை வெல்ல குமரியை உண்க!
சோற்றுக் கற்றாழையை பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டுவர வயாகரா இன்றி இளைஞர்களின் இல்வாழ்க்கை அளவோடு சிறக்கும். இதைத்தான் சித்தர்கள் தங்களுடைய பரிபாஷையில் ‘குமரியை வெல்ல குமரியை உண்க’ என்று குறிப்பிட்டுள்ளனர். மலச்சிக்கலுக்கு முழுமையான நிவாரணம்சோற்றுக் கற்றாழையை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, ஆமணக்கு எண்ணெயில் கலந்து அத்துடன் சிறிது சின்ன வெங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் போன்றவற்றை சேர்த்து காய்ச்சி, லேகிய பதத்தில் தயார் செய்து கொள்ள வேண்டும். மலச் சிக்கல் ஏற்பட்டு அவதிப்படும்போது இதனை ஒரு ஸ்பூன் அளவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் முழுமையாக குணமாகும்.
கூந்தல் வளர்ச்சிதேங்காய் எண்ணெய், சோப்பு, ஷாம்பூ போன்றவை தயாரிக்கும்போது, அவற்றுடன் கற்றாழை கலக்கப்படுகிறது. கற்றாழை பால் எடுத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி ஆறிய பிறகு பாட்டிலில் வைத்து தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி உதிர்வது குறைந்து, முடி கருமையாக இருக்கவும், நன்கு வளர்வதற்கும் உதவுகிறது. புண்களை ஆற்றும் கற்றாழைகாயங்கள் ஏற்பட்டவுடன் கற்றாழையின் சோற்றை எடுத்து அதன் மீது தடவிவர கொப்பளங்கள் மறைந்து புண்கள் குணமாகும். அல்சர் என்கிற வயிற்றுப்புண், மூலநோய் போன்றவற்றுக்கும் சோற்றுக் கற்றாழை சிறந்த நிவாரணம். வாய்ப்புண் மற்றும் நாக்கில் ரணம் வந்து அவதிப்படுபவர்கள் கற்றாழையை வெந்தயப்பொடி கால் ஸ்பூனுடன் கலந்து சாப்பிட்டுவந்தால் புண்கள் ஆறும். அலெக்ஸாண்டருக்கு உதவிய கற்றாழை!
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களை வெற்றி கொண்ட பிறகு, அடுத்த போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தார் மாவீரன் அலெக்ஸான்டர். தொடர்ந்து போர்க்களத்திலேயே வீரர்கள் இருந்ததால் என்ன செய்வது என்று குழப்பம் அலெக்ஸாண்டருக்கு வந்தது.உடனே தன்னுடைய குருவான அரிஸ்டாட்டிலிடம் ஆலோசனை கேட்டார்.அப்போதுதான் சோற்றுக் கற்றாழையைத் தொடர்ந்து 15 நாட்கள் காயங்களின்மீது தடவி வந்தால், புண்கள் ஆறும் என்று ஆலோசனை கூறினார் அரிஸ்டாட்டில். கற்றாழையைப் பயன்படுத்தி வீரர்களின் காயங்களை குணமாக்கிய பிறகு மீண்டும் பழைய உற்சாகத்தோடு போருக்கு வீரர்களை அழைத்துச் சென்று மேலும் பல வெற்றிகளைப் பெற்றார் அலெக்ஸாண்டர்.
யார் சாப்பிடக்கூடாது?
கற்றாழை குளிர்ச்சியானது என்பதால் ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் சோற்றுக் கற்றாழை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
வீட்டில் வளர்க்கும் முறை
கற்றாழை ஒரு செடி வைத்தால் அதனருகே சிறிய சிறிய செடிகளாக வளரக்கூடியது. இதுபோன்ற ஒரு சிறிய செடியை அடிவேருடன் எடுத்து சின்ன சின்ன தொட்டிகளில் வைத்து வீடுகளில் எளிதாக வளர்க்கலாம். தோட்டங்கள் போன்ற மண் தரையில் ஒரு இடத்தில் ஒரு செடியை வைத்து நீரூற்றி வந்தால், பக்கத்திலேயே அடுத்தடுத்து சிறுசிறு செடிகளாக வளர்ந்து பல்கிப் பெருகக்கூடியது கற்றாழை.
Average Rating