கொரோனாவுக்கு எதிராகக் கை கோர்ப்போம் !! (கட்டுரை)

Read Time:10 Minute, 29 Second

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, நாடு முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. நாடு பூராவும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம், இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருமுறை, சில மணித்தியாலங்களுக்கு மாத்திரம் தளர்த்தப்படுகின்றது. அதுவும், உணவுப்பொருள்கள் கொள்வனவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் மட்டுமேயாகும்.

இவ்வாறான நிலை, இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என்று தெரிகிறது.
ஒரு சில நாடுகளைத் தவிர, உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உயிரிழப்புகள், தற்போது இத்தாலியைப் படுபயங்கரமாக உலுக்கிக் கொண்டிருக்கின்றன.

உலகம் பூராவும் 17,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் கொரோனா வைரஸால் ஏற்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸ், ஒரு மனிதனை உடனடியாக உயிரிழப்பை நோக்கித் தள்ளும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்பட்டாலும், அந்த வைரஸ், மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தியின் தன்மையைப் பொறுத்து, உயிரிழப்பை நோக்கிச் செலுத்தும் ஊக்கியாகச் செயற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அத்தோடு, கொரோனா வைரஸ், 70 ஆண்டுகளுக்கு முன்னரேயே கண்டுபிடிக்கப்பட்டாலும், அதன் தற்போதைய வடிவம் தொடர்பிலான சிக்கலும், அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படாமையுமே, இவ்வாறு அது உலகை உலுக்கி வரக் காரணமாகும்.

இப்படியான நிலையில், தற்காப்பு என்கிற ஒற்றை வார்த்தையே, கொரோனா வைரஸிடம் இருந்து, உலகைக் காப்பாற்றும் பெரிய ஆயுதமாக இன்றைக்கு மாறியிருக்கின்றது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர், சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று, மக்களை அச்சுறுத்துவதாகச் செய்தி வெளியானதும், உலகம் ஒருசில நாள்களுக்குச் சில முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை நோக்கிச் சென்றது.

வைரஸ் தொற்றோடு குறிப்பாக, அதிக காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களை அதிக நடமாட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதிக்காமல், அவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை, சில நாள்களின் பின்னர் கைவிடப்பட்டன.

வெளிநாட்டவர்கள் கடந்து செல்லும் விமான நிலையங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் எந்தவிதப் பரிசோதனைகளும் இன்றி பயணிகளுக்காகத் திறந்துவிடப்பட்டன. ஒரு மாதத்துக்குப் பின்னர், கொரோனா வைரஸ் தொற்று, எல்லா நாடுகளையும் நோக்கிக் கடத்தப்பட்டுவிட்டது.

உலக நாடுகளின் அசட்டையீனமொன்று, இன்றைக்கு உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ளவர்களை, அவரவர் வீடுகளுக்குள் முடக்கிப் போட்டிருக்கின்றது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஆரம்பமாக, வெளிநாட்டவர்கள் உள்நுழையும் விமான நிலையங்களை மூடிவிடுமாறு, சில வாரங்களுக்கு முன்னரேயே மருத்துவர்கள் அரசாங்கத்தைக் கோரியிருக்கிறார்கள்.

ஆனாலும், அதை ஒரு சரியான ஆலோசனையாக அரசாங்கம் கருத்தில் கொள்ளாமல், கடந்த 18ஆம் திகதி வரையில் விமான நிலையங்களை இயக்கியது. அதுவரையில், வெளிநாட்டவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அதுதான், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அடிப்படைக் காரணியாக இருந்திருக்கின்றது.

அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள், அதை மறைத்துக் கொண்டு, நாட்டுக்குள் வருவதற்கும், மற்றவர்களுக்குப் பரப்புவதற்கும் காரணமாகி இருக்கின்றது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றோடு, முதலாவதாக இனங்காணப்பட்டவர் ஒரு சீனப் பெண்மணி. அவர், சிகிச்சை பெற்றுக் குணமாகி நாடு திரும்பினார். இந்தச் சம்பவம், இடம்பெற்ற காலப்பகுதி இரு வாரங்களாகும்.

ஆனால், அதன் பின்னரான கொரோனா வைரஸ் தொற்று என்பது, இத்தாலிய சுற்றுலாப் பயணிகளோடு தங்கியிருந்தவரோடு ஆரம்பித்தது. அதன் பின்னர், இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவ ஆரம்பித்த போது, அங்கிருத்து தப்பிவந்தவர்களால் ஏற்பட்டது.

இந்தப் பத்தி எழுதப்படும் போது, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 102ஐ தாண்டிவிட்டது.

அதில், ஒருவர் சுவிஸ் நாட்டிலிருந்து, மத போதனைக்காக யாழ்ப்பாணம் வந்து சென்ற, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மதபோதகர் ஒருவரோடு நெருங்கிப் பழகியவராவார்.

இப்போது, அந்த மதபோதகரோடும், அவரோடு பழகியதால் தொற்றுக்கு உள்ளானவரோடும் பழகியவர்களைத் தனிமைப்படுத்தும் செயற்றிட்டம் முன்னெடுப்படுகின்றது.

குறித்த மதபோதகர், இந்த மாதம் 15ஆம் திகதி, நாட்டிலிருந்து வெளியேறி இருக்கின்றார். அப்படி, இத்தாலி உள்ளிட்ட தொற்று அச்சுறுத்தலுள்ள நாடுகளில் இருந்து, இலங்கைக்குள் நுழைந்து, சுய தனிமைப்படுத்தல், கண்காணிப்பு இன்றி இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்பில், அரசாங்கத்தால் முறையான கண்காணிப்பு செய்யப்படுகின்றதா என்கிற கேள்வி மக்களிடம் பெரும் அச்சமாக நீடிக்கின்றது.

ஏனெனில், இறுதி நேரத்தில் நாட்டுக்குள் வந்தவர்கள் தொடர்பில், கவனம் செலுத்தும் அளவுக்கு, ஆரம்ப கட்டங்களில் வைரஸ் தொற்றோடு வந்தவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிக்கவில்லை. அதனால், அவர்கள் பெரும்பாலும் வைரஸ் காவிகளாக இருக்கிறார்கள். அது, பெரும் அச்சுறுத்தலாகும்.

ஊரடங்குச் சட்டம் என்பது, இலங்கை மக்களுக்கு புதிதான ஒன்றல்ல. தொடர்ச்சியாக யுத்தமும் வன்முறைகளும் நீடித்த நாட்டில், அவ்வப்போது ஊரடங்குச் சட்டத்துக்கும் வேலையிருந்தது.

ஆனால், தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டத்துக்கும், முன்னையவற்றுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. முன்னைய ஊரடங்குச் சட்டக் காலத்தில், அதை மீறினால், மீறுபவர்களுக்கு மாத்திரமே பாதிப்பு வரும். ஆனால், தற்போதைய ஊரடங்குச் சட்டத்தை மீறி, வைரஸ் தொற்றை வீட்டுக்குள் கொண்டு வருவதானது, சம்பந்தப்பட்ட நபரை மாத்திரமல்ல, அவரைச் சார்ந்தோரையும் பெரும் பாதிப்புக்குள் தள்ளிவிடும்.

அதனால், நாடு எதிர்கொண்டிருக்கின்ற அவசரகால நிலையைப் புரிந்துகொண்டு இயங்குவது அடிப்படையானது. அரசாங்கமும் அதன் நிர்வாகக் கட்டமைப்பும் விடுக்கின்ற அறிவுறுத்தல்களை உள்வாங்கி, சுகாதாரத்துறையின் ஆலோசனைகளுக்கு அமைய நடப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகின்றது. அதனைப் புரிந்து கொள்ளாமல், ஒத்துழைப்பின்றி செயற்படுவதானது, துரோகத்தனமான நடவடிக்கையாகவே பார்க்கப்படும்.

ஏனெனில், கொரோனா வைரஸ் தொற்றை, ஒரு சில வாரங்களுக்குள் கட்டுப்படுத்தாமல் விட்டால், அது இன்னும் மோசமான விளைவுளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அது மாத்திரமின்றி, நாளாந்தம் வேலை செய்தாலே அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற முடியும் என்கிற கட்டத்தில் வாழும் மத்தியதர, அதற்கும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் அதிகமுள்ள இலங்கையில், ஊரடங்குச் சட்டத்தால் தொழில் முடக்கம் நீடித்தால், அது இன்னும் பாரிய இடர்பாடுகளை ஏற்படுத்தும்.

அதனால், ஒருசில நாள்களுக்குள், அதிகபட்சமாக இரண்டு வாரங்களுக்குள் ஒட்டுமொத்தமாக அத்தியாவசிய நடவடிக்கைகளைப் பின்பற்றி, வைரஸ் தொற்றிலிருந்து மீளவேண்டும்; அதுதான், இப்போதைக்கு அவசியமானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிரளவைக்கும் வெறித்தனமான ஒழுக்கமான & சாதனை!! (வீடியோ)
Next post இப்படிப்பட்ட மழைகளை நீங்கள் உங்கள் வாழ்வில் பார்த்திருக்கவே முடியாது ! (வீடியோ)