கதிரியக் பரிசோதனைகள்..!! (மருத்துவம்)

Read Time:20 Minute, 1 Second

பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?!

தற்போது ஏற்பட்டுவரும் மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சிகளின் மூலம் மிகத் துல்லியமான முறையில் நோயைக் கண்டறிய முடிகிறது. அதனால் நவீன முறையில் சிகிச்சை அளித்து நோயைக் குணப்படுத்தவும் முடிகிறது. இதற்கு ஆதாரமாக இருப்பது கதிரியக்கவியல்(Radiology) துறை. ரேடியாலஜியின் முக்கியத்துவம் பற்றி கதிரியக்கவியல் நிபுணர் ஐயப்பன் விளக்கமாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

கதிரியக்க சோதனைகள் எதற்காக செய்யப்படுகிறது?!

நம் உடல் உறுப்புகளில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றுக்கு என்ன சிகிச்சையளிக்க வேண்டும் என்பதை மருத்துவர் முதலில் முடிவு செய்தாக வேண்டும். அதற்கு முதலில் அந்த நோயின் தீவிரத் தன்மையை துல்லியமாக, சரியான முறையில் கண்டறிவது/கணிப்பது அவசியம். இங்குதான் ரேடியாலஜி முக்கியத்துவம் பெறுகிறது. கதிரியக்கம் சார்ந்த தொழில்நுட்பங்கள் நோய்களைக் கண்டறியவும் (Radio diagnosis), நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் (Radiotherapy) மிகுந்த பயனுடையதாக இருக்கிறது.

இந்த மருத்துவ முறைகளை Doctor of Medicine in Radio diagnosis (MD-RD), Doctor of Medicine in Radiotherapy (MD-RT) ஆகிய மருத்துவ படிப்புகளை முடித்தவர்கள் மேற்கொள்கிறார்கள். ஒருவர் வயிற்றுவலியுடன் வந்தால் அது சாதாரண வயிற்று வலியா, குடல்வால் (Appendix) பிரச்னையா அல்லது குடலில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதா என்பதை ஸ்கேன் மற்றும் கதிரியக்க பரிசோதனைகள் மூலம் சரியாக கண்டறிந்த பிறகு மருத்துவர் அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்கிறார். இப்படி கண்டறியப்பட்ட நோய்க்குரிய சிகிச்சையை செய்வதற்கு முன்பு நோயாளியும் மருத்துவரும் தங்களை உடல், மனம், பணம் மற்றும் சிகிச்சை முறைகளின் அடிப்படையில் தயார்படுத்திக் கொள்ள இந்த பரிசோதனை முறைகள் பெரும் உதவியாக இருக்கிறது.

Radio diagnosis முறையின் பயன்கள்உடலில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்னைகளைக் கண்டறிய கதிரியக்க நோய் கண்டறிதல் முறை மிகவும் உறுதுணையாக உள்ளது. மூளை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் கண்டறிய எம்ஆர்ஐ ஸ்கேன் உதவுகிறது. இதில் கதிர்வீச்சு இல்லை. காந்த அலைகளைப் பயன்படுத்தி இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. MRI மற்றும் Ultrasound பரிசோதனைகளும் Radio diagnosis முறைகளைச் சேர்ந்ததே.

அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலம் வயிறு, மார்பகம் மற்றும் தொண்டைப் பகுதியிலுள்ள தைராய்டு போன்ற பிரச்னைகளைக் கண்டறியலாம். ரத்தக் குழாய்களில் செல்கிற ரத்தத்தின் வேகம் எப்படி உள்ளது என்பதை Doppler ultrasound scan மூலம் கண்டறியலாம். MRI Scan (Magnetic resonance imaging scan) மூலமாக மூளை, எலும்பு மூட்டுகளில் உள்ள பிரச்னைகளைக் கண்டறியலாம். விபத்துகளின்போது மூளையில் ரத்தக்கசிவு உள்ளதா என்பதைக் கண்டறிய சிடி ஸ்கேன் மிகவும் உதவியாக இருக்கிறது. இதன் மூலம் 5 முதல் 6 விநாடிகளில் மூளையை முழுவதுமாக ஸ்கேன் செய்துவிடலாம். ஆனால், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க குறைந்தது 10 நிமிடங்கள் வரை ஆகும். எனவே விபத்து ஏற்பட்டவர்களின் அவசர நிலையைக் கருதி சிடி ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது. மூளையில் ஏற்படும் தொற்று, கட்டிகள் மற்றும் செயல்திறன் குறைவு போன்றவற்றை எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.

கழுத்திலுள்ள தைராய்டு பிரச்னைக்கு அல்ட்ராசவுண்ட், சிடி ஸ்கேன் செய்யலாம். அல்லது Nuclear medicine test, Iodine 131 test செய்யலாம். கண் சார்ந்த பிரச்னைகளைக் கண்டறிய அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யலாம். மூக்கு மற்றும் காது சார்ந்த பிரச்னைகளைக் கண்டறிய சிடி ஸ்கேன் செய்யலாம். சைனஸ் பிரச்னையைக் கண்டறிய சிடி ஸ்கேன் எடுக்கலாம். எலும்புகளில் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறிய எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், MRI எடுக்கலாம். மார்பகத்தில் உள்ள சாதாரண கட்டிகள் மற்றும் புற்றுநோய்க் கட்டிகளை கண்டறிய அல்ட்ராசவுண்ட், எம்ஆர்ஐ மற்றும் மேமோகிராம் பரிசோதனைகள் செய்யலாம். நுரையீரல் பிரச்னைகளைக் கண்டறிய ஆரம்பத்திலிருந்தே எக்ஸ்ரே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதிலுள்ள சில தொற்றுகள் மற்றும் கட்டிகளை எக்ஸ்ரேயில் கண்டறிய முடியாது.

அதைக் கண்டறிய சிடி ஸ்கேன் மிகவும் உதவியாக இருக்கிறது. 1 மில்லி மீட்டருக்கும் குறைவான பகுதியை பரிசோதனை செய்து, துல்லியமான முறையில் கண்டறிவதற்கு High resolution CT scan எடுக்கப்படுகிறது. இந்த ஸ்கேன் எடுக்கும் செயல்முறை 1 நிமிடத்திற்குள் முடிந்துவிடும். நுரையீரல் சம்பந்தப்பட்ட நிமோனியா, புற்றுநோய் மற்றும் நிலக்கரி, கண்ணாடி தொழிற்சாலை போன்ற சில வேலைகள் சார்ந்த உடல் பாதிப்புகள் ஆகியவற்றைக் கண்டறிய சிடி ஸ்கேன் உதவுகிறது. கர்ப்பப்பையில் கரு உருவாகியுள்ளதா, குழந்தை உயிரோடு உள்ளதா, இரட்டைக் குழந்தையா, பிரசவத்தின்போது குழந்தையின் உயிருக்கு ஆபத்து உள்ளதா என கண்டறியவும் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிரச்னைகளைக் கண்டறிந்து உள்ளேயே அதற்கான சிகிச்சை அளிக்கவும் ஸ்கேன் தொழில்நுட்பம் உதவுகிறது. கர்ப்பப்பையில் உள்ள amniotic நீர் எடுத்து பரிசோதனை செய்யலாம்.

குழந்தைக்கு Down syndrome பிரச்னை உள்ளதா என்பதையும் ஸ்கேன் மூலம் கண்டறியலாம். இதயத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு ECHO பரிசோதனை செய்கிறோம். இதுவும் அல்ட்ராசவுண்ட் போன்று ஒலி அலைகளைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் இதயத்தின் செயல்பாடுகளைக் கண்டறியலாம். இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக உள்ளதா என்பதை சிடி ஸ்கேன் மூலம் கண்டறியலாம். Cardiac MRI Scan மூலம் இதயம் மற்றும் அதன் வால்வுகள் சரியாக உள்ளதா, சரியாக செயல்படுகிறதா என்பதைக் கண்டறியலாம். Nuclear medicine மூலமாகவும் இதயத்தின் செயல்பாடுகளைக் கண்டறியலாம்.

சிறுநீரகத்தில் உள்ள கற்களைக் கண்டறிய முன்னர் எக்ஸ்ரே பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் ஆகியவற்றைத் தாண்டி சிடி ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்வதால் 99 சதவிகித பிரச்னைகளைக் கண்டறியலாம். கல் எங்கே, எப்படி, என்ன அளவில் உள்ளது என்பதை இதன் மூலம் கண்டறியலாம். மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுகள், கட்டிகள் மற்றும் சீழ்பிடித்தல் பிரச்னைகளையும் இதன் மூலம் கண்டறியலாம். பொதுவாக வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு சிடி ஸ்கேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

பித்தப்பையிலுள்ள கற்களைக் கண்டறிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் சரியானதாக இருக்கும். இதற்கு சிடி ஸ்கேன் பொதுவாக எடுப்பதில்லை. கல்லீரலின் செயல்பாடுகள் சரியாக உள்ளதா, அதில் கல், கட்டிகள், தொற்றுகள் ஏதாவது உள்ளதா என்பதை அல்ட்ராசவுண்ட், எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். கணையத்தின் செயல்பாடுகள் மற்றும் பிரச்னைகளைக் கண்டறிய எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன் செய்யலாம். சிறுநீர்ப் பையில் உள்ள கட்டிகள், தொற்றுகள் போன்றவற்றைக் கண்டறிய சிடி ஸ்கேன் உதவுகிறது.

ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பியல் ஏற்படும் புற்றுநோய், தொற்று மற்றும் அது பெரிதாவது போன்றவற்றை எம்ஆர்ஐ மற்றும் அல்ட்ராசவுண்ட் மூலம் கண்டறியலாம். பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய எம்ஆர்ஐ மற்றும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் செய்யலாம். மேலும் கர்ப்பப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகள், தொற்று மற்றும் புற்றுநோயைக் கண்டறிவதற்கு அதற்கேற்ற பரிசோதனை முறைகளை மருத்துவர் ஆலோசனைப்படி மேற்கொள்ளலாம். உணவுக்குழாய் பரிசோதனைக்கு உதவும் பேரியம் பரிசோதனை ஆரம்ப காலத்தில் வயிற்றில் எக்ஸ்ரே மூலமே பரிசோதனைகள் செய்யப்பட்டது. எச்சில் அல்லது உணவை விழுங்குவதில் சிரமம் இருந்தால், அதற்கான காரணத்தைக் கண்டறிய பேரியம் பரிசோதனை அல்லது ப்ளூரோஸ்கோப்பி பரிசோதனைகள் செய்தனர். Barium swallow procedure மூலம் X கதிர்களை செலுத்தி பரிசோதனை செய்வார்கள்.

அப்போது மருத்துவர்கள் அதை நேரடியாக கண் முன்னர் பார்க்க வேண்டும். இதை Fluoroscopy என்று சொல்வார்கள். இப்படி இதை பார்க்கிற மருத்துவருக்கும் கதிர்வீச்சின் தாக்கம் இருக்கும். இருந்தபோதும் அவர்கள் ஒரு புதிய பரிசோதனை முறையை செய்து பார்க்கிறோம் என்ற சந்தோஷத்தோடும், நோயை சரியாக கண்டறிய வேண்டும் என்கிற ஆர்வத்தோடும் அந்த பரிசோதனையை மேற்கொண்டனர். பேரியத்தை தண்ணீருடன் கலந்து தயாரிக்கப்படும் மில்க்‌ஷேக் போன்றதொரு சுண்ணாம்பு பானத்தை ஒரு குறிப்பிட்ட அளவு குடிக்கச் சொல்வார்கள். இந்த பேரியம் நம் உணவு மற்றும் செரிமானப் பாதைகளின் வழியாகச் செல்லும்போது அந்த இடத்தில் X கதிர்களை செலுத்தி அதை நிழற்படமாக எடுத்துப் பார்க்கலாம்.

Upper gastrointestinal (Upper GI) என்கிற மேல் உணவுக்குழாய் மற்றும் வயிற்றின் பாகங்களை பரிசோதனை செய்ய இந்த முறை பயன்படுகிறது. இந்த முறையில் பயன்படுத்தும் பேரியம் X கதிர்களை உறிஞ்சி X-Ray படத்தில் வெள்ளை நிறத்தில் தெரியும். இதன் மூலம் உணவுப் பாதையில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகள் மற்றும் கட்டிகள் போன்றவற்றைக் கண்டறியலாம். இந்த பரிசோதனை முறை முடிவடைய 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஆகிறது. இதில் உணவுக் குழாயை மட்டும் பார்ப்பதற்கு Barium swallow பரிசோதனையும், வயிற்றில் உள்ள பிரச்னையைப் பார்ப்பதற்கு Barium meal பரிசோதனையும் (இதில் பேரியம் சாப்பாடு போல கொடுக்கப்படுகிறது), சிறுகுடலில் உள்ள பிரச்னைகளைக் கண்டறிய Barium meal series பரிசோதனையும் செய்யப்படுகிறது.

இதில் தொடர்ச்சியாக பல படங்கள் எடுத்துப் பார்க்கலாம். பெருங்குடலில் உள்ள பிரச்னைகளைப் பார்ப்பதற்கு ஆசனவாய் மூலமாக இனிமாவோடு (enema) பேரியம் கலந்து கொடுத்து பரிசோதனை செய்யலாம். இந்தப் பரிசோதனையில் பேரியத்தைக் கொடுத்து அப்பகுதியில் எக்ஸ் கதிர்களை செலுத்தும்போது அது பேரியத்தைத் தாண்டிச் செல்ல சிரமப்படும். இதன் மூலம் எந்த இடத்தில் பிரச்னை உள்ளது என்பதைப் பார்க்கலாம். தற்போது வயிற்றில் இதுபோன்ற பிரச்னைகளைக் கண்டறிந்து, உறுதிப்படுத்த Endoscopy முறை கதிரியக்கம் இல்லாமல் பரிசோதனை செய்யபயன்படுகிறது. CT-ScanX கதிர் முறைகளை மேம்படுத்தி 1972-ல் Computed tomography scan (CT-Scan) கண்டுபிடிக்கப்பட்டது.

இதை இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் Godfrey Hounsfield என்பவரும், தென் ஆப்பிரிக்காவில் பிறந்த இயற்பியலாளர் Allan Cormack என்பவரும் கண்டுபிடித்தனர். Tomography என்கிற வார்த்தை tomos, graphia ஆகிய கிரேக்க வார்த்தைகளிலிருந்து வந்தது. Tomos என்பதற்கு Slice (துண்டு) மற்றும் Section (பிரிவு) என்றும், graphia என்பதற்கு describing (விவரித்தல்) என்றும் பொருள் உள்ளது. எக்ஸ்ரே முறையைக் காட்டிலும் கூடுதலான அளவில் எக்ஸ் கதிர்களைச் செலுத்தி எலும்புகள், ரத்த நாளங்கள் மற்றும் உடல் உள்ளுறுப்புகளுடைய மென்மையான திசுக்களின் குறுக்கு வெட்டுத் (Tomography) தோற்றங்களை பல்வேறு கோணங்களில், மிகவும் துல்லியமான முறையில் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான எக்ஸ் கதிர் படங்களை ஒருங்கிணைத்து கணினியின் உதவியோடு பார்க்க இந்த முறை மிகவும் உதவியாக இருக்கிறது.

எனவே இதன் மூலம் எக்ஸ் கதிர் முறையைக் காட்டிலும் துல்லியமான மற்றும் விரிவான தகவல்களை நாம் பெற முடியும். உதாரணமாக, குடல்வால், புற்றுநோய் சார்ந்த பிரச்னைகளின் அறிகுறிகளைத் துல்லியமாக கண்டறிய சி.டி.ஸ்கேன் பயன்படுகிறது. Mammogram பரிசோதனை மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகளை இதில் முன்கூட்டியே கண்டறியலாம். இதில் பாதுகாப்பான முறையில் குறைந்த அளவு எக்ஸ் கதிர்கள் பயன்படுத்தப்படுகிறது. DEXA Scan (Dual energy X-ray absorptiometry) மூலமாக நமது எலும்புகள் எந்த அளவு உறுதியாக உள்ளது என்பதை கண்டறியலாம். எளிதில் செய்யக்கூடிய வலியற்ற இந்த செயல்முறையில் குறைந்த அளவு கதிர்வீச்சு வெளிப்படுகிறது. எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்தி Fluoroscopy கருவி மூலம் செய்கிற Angiogram அல்லது Angiography என்கிற பரிசோதனை மூலமாக உடலின் ரத்த நாளங்களிலுள்ள பிரச்னைகளைக் கண்டறியலாம்.

நகரக்கூடிய உடல் உள்ளுறுப்புகளின் கட்டமைப்புகளை (moving body structure) ஆய்வு செய்வதற்கு இந்த ப்ளூரோஸ்கோப்பி முறை உதவுகிறது. இதில் ப்ளூரோஸ்கோப்பி கருவி மூலம் ரத்தக்குழாய்க்குள் Iodinated Contrast Injection செலுத்தி வெளியில் இருந்து எக்ஸ் கதிர் மூலம் கணினி உதவியோடு உடலில் உள்ள ரத்த நாளங்களை தொடர் படங்களாகப் பார்க்கலாம். உதாரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதை ஆஞ்சியோகிராம் செயல்முறை மூலம் கண்டறிந்து, அந்த அடைப்பை நீக்கி அந்த இடத்தில் Stent என்கிற கருவி பொருத்தப்பட்டு ரத்த ஓட்டம் சரி செய்யப்படுகிறது. இதேபோல இந்த ஆஞ்சியோகிராம் பரிசோதனை மூலம் மூளை, வயிறு, கால்கள் உட்பட உடலின் பிற உறுப்புகளுக்கு செல்கிற ரத்தக் குழாய்களில் ஏற்படுகிற பிரச்னைகளையும் கண்டறியலாம்.

கதிர்வீச்சு எப்போது ஆபத்தாகும்?

கர்ப்ப காலத்தில் அதிகளவு கதிர்வீச்சுள்ள ஸ்கேன்களை எடுப்பதன் மூலம் கர்ப்பப்பையில் உள்ள குழந்தைக்கு ஒரு சில பாதிப்புகள் வரலாம். எனவே, கர்ப்பமான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கதிரியக்க நோய்க் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகளை அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. எனவே அவர்களுக்கு CT Scan செய்வதற்கு பதிலாக Ultrasound scan பரிந்துரை செய்யப்படுகிறது. பொதுவாக Radio diagnosis முறைகளைவிட Radio therapy முறைகளில் வெளிப்படும் கதிர்வீச்சு அளவு அதிகமாக இருக்கிறது. அதிக கதிர்வீச்சு நம்மீது படுவதால் புற்றுநோய் வரலாம் என்றும், ஆஞ்சியோகிராம் அதிக நேரம் செய்வதால் சிலருக்கு சூடுபடலாம் என்றும் சொல்கிறார்கள். ஆனால், இது எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இடங்களில் பயன்படுத்திய அணு ஆயுதங்களிலிருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சின் பாதிப்புகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதுவே கதிர்வீச்சின் பாதிப்புகளை உலகறியச் செய்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவில் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது…!! (மருத்துவம்)
Next post முதல் இரவுக்கு பிறகு…!! (அவ்வப்போது கிளாமர்)