நல்ல தொடக்கம்; தொடரட்டும் நல்லபடியாக… !! (கட்டுரை)

Read Time:13 Minute, 16 Second

வடக்கு, கிழக்கின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன், ‘மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம்’ என்ற அமைப்பு, புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

யாழ். ஆயர் அதிவணக்கத்துக்குரிய ஜஸ்டின் பேணார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, நல்லை ஆதீன குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோரின் இணைத் தலைமையில், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த ஐம்பதுக்கும் அதிகமான துறைசார் நிபுணர்கள், பேராசிரியர்கள், புலமை சார்ந்தோர் இணைந்து, மேம்பாட்டு மன்றத்தில் செயற்பட முன்வந்துள்ளனர்.

இந்தப் பூமிப்பந்தில், பிரச்சினைகள் இல்லாத தனிநபர்கள் இல்லை. பிரச்சினைகள் இல்லாத குடும்பங்கள் இல்லை. பிரச்சினைகள் இல்லாத சமூகங்கள் இல்லை. ஆகவே, பிரச்சினைகள் எல்லோருக்கும் பொதுவானவையே.

இவ்வாறாக, பிரச்சினைகள் அனைவருக்கும் பொதுவானவைகளாக இருந்தாலும், போர் அரக்கன் மூர்க்கத்தனமாகக் கோரத்தாண்டவம் ஆடிய மண்ணில் வாழும் தமிழ் மக்களது பிரச்சினைகள், வேறு விதமானவைகளாகவும் சிக்கல்கள் நிறைந்தவைகளாகவும் காணப்படுகின்றன; தொடர்கின்றன.

ஆயுதப் போர் நிறைவுக்கு வந்து, பத்து ஆண்டுகள் ஓய்ந்துவிட்ட போதிலும், தமிழ் மக்களது அன்றாடப் பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லை; தீர்வதற்கான அறிகுறிகளையும் காணவில்லை. மாறாக, பிரச்சினைகள் மேலும் சிக்கலுக்குள் சென்று கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், அடிப்படைப் பிரச்சினையான அரசியல் பிரச்சினை அப்படியே இருப்பதாகும். அதுகூட, மேலும் சிக்கலுக்குள்ளேயே சிக்கியுள்ளது. ஸ்ரீ

மறுவளமாக, இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற, அனுபவிக்கின்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்கு, அரசியல் பிரச்சினையே பிரதான காரணமாகவும் அமைந்துள்ளது.

உதாரணமாக, யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு உயர்ப் பாதுகாப்பு வலயத்துக்குள் ஒருவரது வீடும் விவசாயக் காணியும் கையகப்படுத்தப்பட்டு இருப்பின், அவரது இருப்பும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி, அவர் அன்றாடப் பிரச்சினைகளுக்குள் அகப்பட்டிருப்பார்.ஆனால், அவரது வீடும் காணியும் விடுவிக்கப்படாமைக்குக் காரணம், அடிப்படைப் பிரச்சினையான அரசியல் பிரச்சினையே ஆகும்.

இவ்வாறாக, 72 ஆண்டுகால இனப்பிணக்கான அரசியல் பிணக்கு தீராத வரை, நாளாந்தம் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அன்றாடப் பிரச்சினைகளும் தீரப்போவது இல்லை.

ஆனாலும், அடிப்படைப் பிரச்சினையான அரசியல் பிரச்சினை தீர்க்கப்படுமா? அதற்காக, இன்னும் எத்தனை ஆண்டுகாலம் தமிழினம் காத்திருக்க வேண்டுமென்று எவருக்கும் தெரியாது.

இந்நிலையில், ஒருபுறம் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையில் மறுபுறம், அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காணவேண்டிய தேவைப்பாடுகள் நிறையவே இருக்கின்றன.

இது இவ்வாறு நிற்க, இதுவரையான காலப்பகுதியில், எமது அரசியல்வாதிகளால் அன்றாடப் பிரச்சினைகளைக் கணிசமான அளவில்கூடப் பூர்த்திசெய்ய முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியே உள்ளது.

2010ஆம் ஆண்டில் போர் நிறைவுபெற்ற காலங்களில், ஆட்சியில் இருந்தவர்களுடன் ஐக்கியமாக இருந்தவர்களாலும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியிலிருந்து 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரையிலான நல்லாட்சி காலப்பகுதியில் ஆட்சி அமைக்கவும் அவ்வாறாக அமைத்த ஆட்சியை நடத்தவும் ஆதரவு வழங்கியவர்களாலும், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாரியளவில் உயர்த்த முடியவில்லை. அன்றாடப் பிரச்சினைகளைப் பெருமளவில் தீர்க்க முடியவில்லை.

இதற்கிடையே, இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகள், வெறுமனே அரசியல்வாதிகளாலும் அரச திணைக்களங்களாலும், அரச சார்பற்ற நிறுவனங்களாலும் மாத்திரம் தீர்க்கப்படக் கூடியதும் அல்ல என்பதையும், நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஆகவே, இந்நிலையில் இதுபோன்ற அபிவிருத்தி மன்றங்களது வருகை அவசியமானதே; வரவேற்கக்கூடியதே. ஆனால், மறுபுறத்தில் அவற்றினது இயலுமை, தொடர்ச்சித் தன்மை என்பன குறித்துக் கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது.

புதிதாக அமைப்புகளைத் தொடங்குவது மிகச் சுலபம். ஆனால், அவற்றை வினைத்திறன் உள்ளதாகத் தொடருவது ரொம்பக் கடினம். ஆகவே, இன்று இவ்வாறு சமயத் தலைவர்களாலும் புத்திஜீவிகளாலும் உருவாக்கப்பட்ட அமைப்பு, பத்தோடு பதினொன்றாக இருக்க முடியாது. இவற்றுக்குப் பாரிய சமூகப் பொறுப்பு உள்ளது.

இன்று தமிழ் மக்கள் மத்தியில் பல சமூக அமைப்புகள் இயங்கி வருகின்றன. இதற்கு, கணிசமான புலம்பெயர்ந்த உறவுகள், பெரும் பங்களிப்புச் செய்து வருகின்றார்கள்.

ஆனாலும், இவ்வாறான அமைப்புகளுக்கு இடையிலான புரிந்துணர்வு, குறைவாகவோ, இல்லாமலோ உள்ளது என்றுகூடக் கூறலாம். ஆகவே, புதிதாகத் தற்போது உருவாக்கம் பெற்றுள்ள மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம், சமூக அமைப்புகளுக்கான ‘தாய்’ அமைப்பாக மிளிர வேண்டும்.

தமிழ் மக்களிடையே ஆங்காங்கே அவ்வப்போது, மதம் சார்ந்த முரண்பாடுகள் தோன்றுகின்றன அல்லது, தோற்றுவிக்கப்படுகின்றன.இது போன்ற நிலைமைகள், போர் நடைபெற்ற காலங்களில் வடக்கு, கிழக்கு மண்ணில் காணப்படவில்லை; தோன்றவில்லை. தமிழ் மக்கள் அப்போது மதத்தால் இரண்டாக இருந்தாலும், இனத்தால் (தமிழ்) ஒன்றுபட்டிருந்தோம்.

ஆனால், இன்று ஏற்பட்டுள்ள இவ்வாறான சி(று)ல முறுகலுக்குள் எண்ணெய் வார்க்க, பல தரப்புகள் கங்கணம் கட்டி வரிசையில் நிற்கின்றன. ஆகவே, இந்து – கிறிஸ்தவ மத அமைப்புகளின் தலைவர்கள் இணைத் தலைவர்களாகச் செயற்படுகின்றபோது, இவ்வாறு ஏற்படுகின்ற பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறியலாம்; கிள்ளி எறிய வேண்டும்.

அதுபோல, வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும், இவ்வாறான இணைத் தலைமையிலான உறவு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த இணைத் தலைமை, பிறப்பில் இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ வாழுபவர்களை அடிப்படையில் தமிழர்களாக இணைக்க வேண்டும்.

தமிழ் மக்களது வெளிச் சூழலை, பிறிதொருவர் நிர்ணயித்தல் (சுதந்திரம்) அடிமைத்தனம் எனப்படும். ஆனால் இன்று, எங்கள் அரசியல்வாதிகளுக்கு இடையே புரிந்துணர்வுகள் அ(றுந்து)ற்று, எங்களது உளச்சூழலைக் கூட (மனதை), வெளியே இருப்பவர்கள் நிர்ணயிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இவற்றின் தோற்றக் காரணத்தைக் கண்டுபிடித்தாலே, வெற்றிக்கான திறவுகோலை வடிவமைத்துக் கொள்ளலாம்.

ஆகவே, வடக்கு, கிழக்கின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம், தமிழ் அரசியல்வாதிகளால் உதாசீனம் செய்ய முடியாத பலம்கொண்ட அமைப்பாக எழுச்சி பெறவேண்டும்.

தமிழ் மக்கள், தங்களது அரசியல்வாதிகள் மீது முழுமையாக நம்பிக்கை இழந்துவிட்டார்கள். யார் உண்மையானவர்கள்; யார் உண்மை போல நடிக்கின்றார்கள் என, முழுமையாகக் குழம்பிய நிலையில் உள்ளார்கள்.

முன்பு போல இல்லாது, அரசியல் விமர்சனங்கள் நிறைந்த உலகத்தில், தற்போது நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதனை விட, சமூக வலைத்தளங்கள் வழியாக நாளாந்தம் பல கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனது உண்மைத் தன்மை தொடர்பிலும், மக்கள் குழப்பமடைந்து வருகின்றனர்.

ஒரு பொதுமகன், யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். அது அவரது தெரிவு விருப்பம். ஆனால், அவ்வாறு வாக்களித்து வெற்றி பெறுபவர் அடுத்து வருகின்ற ஐந்து ஆண்டுகள் ஆசனத்தில் இருக்கப் போகின்றார். ஆகவே, பிழையானவர்களைத் தெரிவுசெய்தால், மீண்டும் சரியானவர்களை மீளத் தெரிவுசெய்ய, ஐந்து ஆண்டு காலம் காத்திருக்க வேண்டும்.

இன்று அனைத்துச் செயற்பாடுகளிலும் அரசியல் நுழைந்துவிட்டது. நகர சபையினர் குப்பையை எடுக்கும்போது, சில கட்சிகளைச் சார்ந்தவர்களின் வீடுகளில் மாத்திரமே குப்பைகளைச் சேகரிப்பதாக மக்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் அண்மையில் தெரிவித்துள்ளார்.

ஆகவே, குப்பை அள்ளுவது வரை அரசியல் சென்று நாற்றம் அடிக்கின்றது. இவ்வாறு நாற்றம் அடிப்பதாலேயே, நல்லவர்கள், கௌரவமானவர்கள், சமூகநோக்கில் நடுநிலை நிற்பவர்கள் போன்றோர் அரசியலுக்குள் வர அச்சப்படுகின்றார்கள்.

ஆகவே, நாற்றம் எடுக்கும் அரசியலை மாற்றத்துக்குள் கொண்டுசெல்ல, இவ்வாறான பொது அமைப்புகள் முயற்சி செய்யவேண்டும்.

தென்னிலங்கையில், தங்களது மதம் சார்ந்து பௌத்த அமைப்புகள் நடந்து கொள்வது போல, மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றமும், தங்களது இனம் சார்ந்து நடந்துகொள்ள வேண்டும்.

போரால் தமிழ்ச் சமூகம் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டுள்ளது. அந்தச் சமூகத்தின் கட்டமைப்புகள் சிதைவடைந்து கிடக்கின்றன. ஒழுங்கமான சமூக அமைப்புகள் ஒழுங்கின்றிச் சிதறிக் கிடக்கின்றன.

இந்நிலையில், இருக்கின்ற இந்த நிலையிலேயே, எமது சமூகம் தொடர்ந்தும் இருக்க முடியாது. அல்லது, “இந்த நிலையையே, இவ்வாறு ஏற்று வாழ வேண்டும்” என எவரும் சொல்லவில்லை; சொல்லவும் முடியாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துபாயில் மட்டுமே நடக்கும் சில வினோத விஷயங்கள்!! (வீடியோ)
Next post பீரியட்ஸ் யோகா!! (மகளிர் பக்கம்)