மதச் சகிப்பின்மையும் ‘இலங்கையர்’ என்ற அடையாளமும்!! (கட்டுரை)
இன்று இலங்கை எதிர்நோக்கும் சவால்களில் பிரதானமானது, இலங்கையின் பல்லின அடையாளத்தைத் தக்கவைப்பதாகும்.
ஒருபுறம், இலங்கையர் என்ற பொது அடையாளத்துக்குள் எல்லோரையும் உள்ளீர்க்க அரசாங்கம் முயல்கின்ற அதேவேளை, இலங்கையில் மத சகிப்பின்மை வளர்ந்துள்ளது.
இன்றைய இலங்கை அரசாங்கத்தின், நீக்கமற நிறைந்த அங்கமாக, பௌத்த சிங்கள தேசியவாதம் நிலைபெற்றுள்ளது. இது, அரசு கோருகின்ற ‘இலங்கையர்’ என்ற அடையாளம், யாது என்ற வினாவை எழுப்புகிறது.
இலங்கையர் என்ற அடையாளம், தனிமனிதர்களது இனத்துவ, மத அடையாளங்களை அங்கிகரித்து, அதனூடாகத் தோற்றம் பெறுகின்ற அடையாளமா அல்லது பௌத்த சிங்களப் பெருந்தேசியவாத அகங்காரம் கோருகின்ற ஒற்றைப்பரிமாண அடையாளமா என்பதை, ஆழ்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது.
இங்கு, இலங்கையின் மத சகிப்பின்மையின் வரலாற்றைக் கொஞ்சம் பார்க்கலாம்.
இலங்கையில் மதச் சகிப்பின்மையின் எழுச்சி, மதத்தை விட, வர்க்க நலன்களுடன் கூடிய உறவுடையது. இலங்கையின் மறைக்கப்பட்ட வரலாறுகளில் இதுவும் ஒன்று.
கொலனித்துவ ஆட்சியின் கீழ்க் கிறிஸ்தவ மிஷனரிகளின் மதமாற்றல் செயற்பாடுகள், 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவில் பௌத்த, சைவ மீளெழுச்சிகளுக்குக் காரணமாயிற்று. அம் மீளெழுச்சிகளின் முன்னோடிகள், அவர்களுடைய கிறிஸ்தவப் போட்டியாளர்களைப் போல, குறிப்பிட்ட உயர்வர்க்க நலன்களின் பிரதிநிதிகளாக இருந்தனர்.
வெவ்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள், ஒப்பீட்டளவில் இணக்கத்துடனேயே வாழ்ந்து வந்தனர். தேரவாத, மஹாயான பௌத்த பிரிவுகளுக்கிடையே இருந்துவந்த பகைமை, 20ஆம் நூற்றாண்டு வரை, பௌத்தத்துக்கு வேறெந்த மதத்துடனும் இருந்த முரண்களைவிடக் கடுமையானது.
பௌத்த பிரிவுகளுக்கு இடையே இருந்துவந்த மோதல்கள், பெரும்பாலும் மதகுருமாரையும் அவர்களைச் சார்ந்தோரையும் கொண்ட போட்டிப் பிரிவுகள், அரச சலுகைகளுக்காகப் போட்டியிட்டதன் விளைவுகளாகும்.
எழுச்சி பெற்றுவந்த சிங்கள பௌத்த முதலாளி வர்க்கத்தின் தேவைகளுக்கு அமையவே, மிஷனரிச் செயற்பாடுகளுக்கு எதிர்வினையான ஓர் அரசியல் சக்தியாக, பௌத்தம் வடிவமைக்கப்பட்டது.
புரட்டஸ்தாந்து கிறிஸ்துவ சமூகத்தைவிடப் பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின்தங்கியிருந்த, ஆனால் எண்ணிக்கையில் பெரிதான கத்தோலிக்க சமூகம், எச்சரிப்பு உடையதாயிற்று.
19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் நிகழ்ந்த பௌத்தர்களுடனான ஒரு மோதலையடுத்து, கத்தோலிக்க சமூகம், பெரிதும் சிங்கள பௌத்தர்களைக் கொண்டதொரு சூழலுக்குத் தன்னைத் தகவமைத்துக்கொண்டது.
மேற்குக் கரைப்பகுதியில் வாழ்ந்த கத்தோலிக்கர்களில் பெரும்பாலானோரைத் தமிழுக்குப் பதிலாகச் சிங்களத்தைத் தமது வீட்டுமொழியாக்குமாறு திருச்சபை தூண்டியது. திருச்சபையின் நோக்கங்கள் உயர்குடிகளின் நலன்கள் சார்ந்தனவாகவே இருந்தன.
இலங்கையில் சிங்களப் பேரினவாதம் தொடக்கத்திலிருந்தே சிங்கள பௌத்தத்தைத் தனது அடிப்படையாக்கிக் கொண்டது. தமது சுய முன்னேற்றத்துக்காகப் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ அடையாளத்தை ஏற்ற மேட்டுக்குடிகள், அரசியல் இலாபத்துக்காகப் புத்த மதத்துக்கு மீளத் தயங்கவில்லை.
சிங்கள பௌத்த அடையாளத்தை விடச் சாதி அடையாளம் முக்கியமாயிருந்த ஒரு காலமும் இருந்தது. சர்வசன வாக்குரிமை இல்லாத சூழலில், மேட்டுக்குடி அரசியலில், ஆதிக்க வர்க்கங்களிடையே சாதி வேறுபாடு முக்கியமானதாக இருந்தது. ஆனால் நிலவுடைமை சார்ந்த ‘கொவிகம’ சாதியின் சமூக ஆதிக்கம் குறையத் தொடங்கிய சூழலில், நிலவுடைமை, முதலாளிய வர்க்கத்தினரிடையே சமரசம் ஏற்பட்டது.
மத அடையாளம் குறுகிய காலத்துக்கு அடக்கி வாசிக்கப்பட்டு, மொழி அடையாளம் முதன்மைப்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும், இப்போது சிங்கள பௌத்த ஆதிக்கப் போக்கு வலுவாக உள்ளது.
எனினும், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவப் பெருமுதலாளிகளுக்கும் சிங்களப் பௌத்த பெருமுதலாளிகளுக்கும் உள்ள உறவு சுமுகமாகவே உள்ளது.
பௌத்த அடையாளத்தை வற்புறுத்துவதில் கருத்து வேறுபாடுகளுடன், சிங்கள இன அடையாளம் வலுப்பட்ட சூழலில், தமிழ் இன அடையாளம், அதன் தலைமையில் இருந்த ஆதிக்கச் சக்திகளான, யாழ்ப்பாணச் சைவ வேளாள சாதியைச் சார்ந்த ஒரு மேட்டுக்குடிச் சிறுபான்மையின் நலன்களையொட்டி உருவானது.
அந்த நலனை வலியுறுத்துவதற்குத் தமிழ்ச் சமூகத்திலிருந்து சவால் எழாத நிலையில், அச்சிறுபான்மைத் தமிழ் அடையாளம் ஒன்றை வலியுறுத்துவதையும் வளர்த்தெடுப்பதையும் விடுத்து, யாழ்ப்பாணச் சைவ வேளாள ஆதிக்கத்தை முன்னிறுத்தி வந்தது. இதன் எச்சசொச்சங்கள், இன்னமும் தமிழ்ச் சமூகத்தில் ஆழமாக உள்ளன.
இந்தப் பின்புலத்திலேயே ‘இலங்கையர்’ என்ற அடையாளத்தைக் கோருவோர் யார், அதற்கு ஆதரவளிப்போர் யார், என்ற வினாக்கள் எழுகின்றன.
முதலில், இலங்கையைப் பல்லினங்கள், பலமதங்கள், பலபண்பாட்டுகள் கொண்ட நாடாக, நாம் அடையாளம் காண்போம். இந்த உண்மையை ஏற்றுக் கொள்வோம். அதன் பின்னர், ‘நாம் இலங்கையர்’ என்ற அடையாளம் குறித்துப் பேசுவது பற்றிச் சிந்திக்கலாம்.
Average Rating