இதய சிகிச்சை அரங்கம்!! (மருத்துவம்)
இதயநலன் காக்க செய்யப்படும் பரிசோதனைக்காக மருத்துவமனைகளில் Cath lab என்ற பகுதி செயல்படும். இந்த Cath lab எந்த விதத்திலெல்லாம் முக்கியத்துவம் பெறுகிறது? சந்தேகம் தீர்க்கிறார் இதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜோதிர்மயா தாஸ்.
Cath Lab பற்றி சொல்லுங்கள்…
‘‘அனைத்து பல்நோக்கு மருத்துவமனைகளிலும் Cath Lab (Catheterization Laboratory) இருக்கும். ஒரு நோயாளியின் இதய நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்காக குறைந்த அளவிலான துளையிடும் பரிசோதனைகள் மற்றும் செயல்முறைகளை மேற்கொள்ளும் ஒரு சிறப்பு மருத்துவ ஆய்வகம் இது.
இங்கு அறுவை சிகிச்சைகளுக்கு பதிலாக இதயத்தையும், இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களையும் எளிதாக அணுகுவதற்கு எப்போதும் Catheters எனப்படும் சிறிய நெகிழ்திறன் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதயத் தமனிகளைப் பார்க்கவும், இதயத்திற்கு செல்லும்போதும், அங்கிருந்து வெளிவரும்போதும் ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் சீராக இயங்குகிறதா என பரிசோதிக்கவும் இங்கு ஒரு சிறப்பு கருவி வைக்கப்பட்டிருக்கும். இந்தக் கருவி மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள், தமனிகளில் அடைப்பு மற்றும் பிற சிக்கல்களை கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கு மருத்துவ பராமரிப்பு குழுவிற்கு உதவுகின்றன.’’
இங்கு என்னென்ன நடைமுறைகளை செய்வார்கள்?
‘‘ரேடியல் ஆஞ்சியோகிராம், ரேடியல் ஆஞ்சியோப்ளாஸ்டி, பெரிஃபெரல் ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோப்ளாஸ்டி, பேஸ்மேக்கர் பொருத்துவது, பலூன் ஆஞ்சியோப்ளாஸ்டி மற்றும் ஸ்டன்ட் பொருத்துவது ப்ரேய்ன்மேப்பிங் போன்ற அனைத்துவிதமான இன்டர்வென்ஷனல் நடைமுறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
பெரும்பாலான ஆய்வகங்களில் இதய நாளத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டவுடன், அந்த அடைப்பை நீக்குவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதய ஓட்டை இருக்கும் குழந்தைகளுக்கு அதை அடைப்பதற்கான நடவடிக்கைகளும் செய்கிறோம். இங்கு அறுவைசிகிச்சை அல்லாத அனைத்தும் செய்யப்படுகின்றன.’’
அங்கு வேலை செய்பவர்கள் சிறப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டுமா?
‘‘இன்டர்வென்ஷனால் செயல்முறைகள் மேற்கொள்பவர்கள் நிபுணத்துவம்பெற்ற இதயநோய் மருத்துவர்களாகத்தான் இருப்பார்கள். குறிப்பாக இவர்கள் கதீட்டர் பயன்படுத்துவதில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றவர்களாகவும், அதில் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங் போன்ற நடைமுறைகள் உடலின் தமனிகளுக்குள், வழிகாட்டும் கருவிகள் மூலம் செய்யப்படுகின்றன.
பல நோயாளிகளுக்கு, இந்த குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய தற்காப்பு நடைமுறைகள் அறுவை சிகிச்சைக்கு மாற்றாக செய்யப்படுகின்றன.
Cath Lab-ல் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களும் கூட இந்த இன்டர்வென்ஷனல் நடைமுறைகளின்போது, மருத்துவர்களுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த நபர்களாவர்.
இந்த செயல்முறைகள் நடைபெறும் நேரத்தில் செவிலியர்கள் உங்கள் கவனிப்பில் மிகவும் நெருக்கமாக ஈடுபடுகின்றனர். தொழில்நுட்ப வல்லுநர்களும், இன்டர்வென்ஷனல் கார்டியலஜிஸ்டுகளுக்கு இணையாக உதவி செய்கிறார்கள் என்பதால் இவர்களும் சிறப்பு பயிற்சி பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள்.’
Average Rating