மக்களுக்காகவே நான்! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 30 Second

கல்பாக்கம் அருகில் கொடைப்பட்டினம் என்கிற ஒரு கிராமம். அந்த கிராமத்தில் அவசரம், ஆபத்து என்றால் கூட அருகில் மருத்துவ மனையோ, மருத்துவ வசதியோ கிடையாது. இப்படிப்பட்ட கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஜெயச்சந்திரன். தங்கள் கிராம மக்களுக்கு கிடைக்காத இந்த வசதியினை இனி யாரும் பெறாமல் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் 1971 ஆம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் இலவசமாக மருத்துவ சேவையினை ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் ரூ.2 வாங்க தொடங்கியவர், பின் இறுதி வரை ரூ.5 மட்டுமே வாங்கியுள்ளார். இப்படியே 41 வருடங்கள் ஓடியது. அப்பகுதி மக்களும் அவரை கடவுளாகவே பார்க்க ஆரம்பித்தனர். இன்றும் யாரிடமாவது 5 ரூபாய் டாக்டர் என்றால், உச்சரிக்கப்படும் பெயர் டாக்டர் ஜெயச்சந்திரன். கடந்த ஆண்டு இவர் இறைவனடி சேர்ந்தார். அவர் தன் வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்தவர் என்பதால் அவரின் சேவை பாதையில், அவரின் மகள் இப்போது பயணிக்க துவங்கியுள்ளார். ‘‘நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் சொன்னது போல், என் வாழ்க்கை ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’’ என்று துணிந்து பேசுகிறார் டாக்டர் சரண்யா.

‘‘அப்பாவின் இறுதி சடங்கில் ஜாதி, மத, இன வேறுபாடின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். கோயில் பூசாரி ஒருவர் அப்பாவுக்கு பூஜை செய்து வழி அனுப்பியது என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மக்கள் அப்பா மேல் வைத்திருந்த மரியாதையை பார்த்து நான் கொஞ்சம் மிரண்டு தான் போனேன். அவரின் இறுதி சடங்கில் நான் கண்ட ஒவ்வொரு காட்சிகள் எனக்குள் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. அவரைப் போல அவரது பசங்களாகிய நாங்களும் வாழ வேண்டுமென்று முடிவு செய்தோம்” என்று கண்ணீருடன் கூறுகிறார் டாக்டர் சரண்யா. டாக்டர் ஜெயச்சந்திரன் செய்து வந்த தொழிலை மகள் துணிந்து தொடங்கினார். கணவர், தம்பிகள் என குடும்பத்துடன் இணைந்து, தற்போது சென்னையில் 64 இலவச முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இதோடு தங்களால் முடிந்த அறுவை சிகிச்சைகளையும் இலவசமாக செய்கின்றனர். இது குறித்து டாக்டர் சரண்யா பேசினார். “அரசு மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக இருப்பதோடு, மாமனாரின் மருத்துவமனையையும் கவனித்து வருகிறேன். இரண்டு தம்பிகளும் மருத்துவ துறையில்தான் இருக்கிறார்கள். கணவரும் கண் மருத்துவர். அப்பாவின் இறப்புக்கு பிறகு அவரை போலவே நாங்களும் முயற்சி செய்கிறோம். ஆனால், போதுமான அளவு எங்களால் நிதி திரட்ட முடியவில்லை. அப்படி கிடைக்கும் பட்சத்தில் இன்னும் நிறைய ஏழை மக்களுக்கு உதவ முடியும். ஒரு இலவச முகாம் நடத்துவது சாதாரண காரியமில்லை. குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் இதற்காக நிறைய உதவி செய்து வருகின்றனர்.

2012 ஆம் ஆண்டு ‘‘டாக்டர் ஜெயச்சந்திரன்” என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்று துவங்கினோம். அதன் மூலம் இலவச முகாம்கள் நடத்துவது, மருத்துவ வசதிகள் குறித்து அனைத்து ஆலோசனைகளையும், சேவைகளையும் இன்றும் தொடர்ந்து செய்து வருகிறோம். “தாய் அன்பின்” என்ற மற்றொரு அமைப்பின் மூலம் ஏழை குழந்தைகளின் கல்விக்கான உதவிகளை செய்கிறோம்’’ என்றார். ஏதோ சம்பாதித்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல் தனது சம்பாத்தியத்தில் முடிந்த வரை ஏழை மக்களுக்கு சேவை செய்ய துடிக்கிறார். ‘‘பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால், மக்களை சம்பாதிப்பது மிக கடினமான ஒன்று. மருத்துவத் தொழில் என்பது பணம் சம்பாதிக்க அல்ல, மக்களுக்கு சேவை செய்யவே’’ என்று கூறும் டாக்டர் சரண்யா மக்களை சம்பாதிக்கிறது மட்டுமல்லாமல் அவர்களுக்கான சேவைகளையும் செய்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பித்தல் என்னும் ‘கலை’!! (மகளிர் பக்கம்)
Next post நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள்!! (வீடியோ)