ஆப்பை இழுக்குமா ‘குரங்கு’? (கட்டுரை)
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, “புதிய கூட்டணி அமைத்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளேன்” என்று,
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்களைக் கொழும்புக்கு அழைத்து, மாபெரும் கூட்டமொன்றை, நேற்று முன்தினம் (26) கூட்டி, அவர்கள் மத்தியில் உரையாற்றி உள்ளார்.
சஜித் பிரேமதாஸ, இங்கு உரையாற்றுகையில், “கடந்த தேர்தலின்போது, சிறிகொத்தா தலைமையகம் எங்களுக்கு எதிராகச் செயற்பட்டிருந்தது” என்று வௌிப்படையாகக் குற்றம் சுமத்தினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் சில அங்கத்தவர்களுடன் இணைந்து, தனக்கெதிராகச் செயற்பட்டதாகவும் ஐ.தே.கவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தினார்.
ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) கொழும்பில் நடைபெற்ற அக்கூட்டத்தின் விளைவு என்னவென்றால், ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு துண்டுகளாகப் பிரிவதற்கான பாதைகளை அமைத்துக் கொடுத்துள்ளது என்று சொல்வதுதான் பொருத்தமாக அமையும்; அதுதான் உண்மையும் கூட!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமைக்குச் சார்பாக ஒரு பிரிவினரும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமைக்குச் சார்பாக இன்னொரு பிரிவினரும் என்று, பிளவுபடும் இறுதி எல்லையை எட்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர்களான லலித் அத்துலத் முதலி, காமினி திஸாநாயக்க ஆகியோர் இணைந்து, முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவுக்கு எதிராக அன்று செயற்பட்டிருந்தனர்.
இன்று முன்னாள் அமைச்சர் காமினி திஸநாயக்கவின் மகன் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸநாயக்க, சஜித் பிரேமதாஸவுக்கு எதிராகவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும் செயற்படுவதைப் பார்க்கும் போது, இரத்தத்திலுள்ள ஒற்றுமை, இங்கு தெட்டத்தௌிவாகப் புலனாகின்றது.
இங்கு மேலுமொரு கதை உலாவுகின்றது. அது எதுவென்றால், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் கரு ஜெயசூரியவும் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகத்தான் செயற்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது இவ்வாறிருக்க, சஜித் பிரேமதாஸ தலைமையில், கொழும்பில் நடைபெற்ற ‘ஞாயிற்றுக் கிழமைக் கூட்டத்துக்கு’, பங்காளிக்கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், சமூகமளிக்கவில்லை.
ஆனால், ஹெலஉறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக ரணவக்க கலந்துகொண்டது, தற்போதைய அரசாங்கத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடென்றே யூகிக்க வேண்டியுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுடன் சற்று முறுகல் நிலையிலுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்குக் காரணம், அண்மையில் ரணில் விக்கிரமசிங்கவுடன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், இவை எதற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சமூகமளிக்கவில்லை. இந்தத் தகவலின் அடிப்படையை உறுதிப்படுத்தும் முகமாக, ரவூப் ஹக்கீமைப் பலமுறை அலைபேசியூடாகத் தொடர்பு கொண்டபோதும் முடியாமல் போய்விட்டது. அவர் கண்டியிலும் திருகோணமலையிலும் இருப்பதாக அவருடன் சம்பந்தப்பட்டவர்கள் ஊடாக அறிய முடிந்தது.
இதேவேளை, கொழும்பு தபாலகத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் விசேட அதிதியாகக் கலந்துகொண்டார்.
அந்தக்கூட்டம் முடிவடைந்ததும் ரவூப் ஹக்கீமை அணுகி, “கடந்த பல கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றும், நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை”? என்று கேட்டதற்கு,
ரவூப் ஹக்கீம் சொன்ன பதில் இதுதான். “அவரிடம் (ரணில்) சென்றும் எந்தப் பலனுமில்லை; எனது நேரத்தை, நான் வீணடிக்க விரும்பவில்லை” என்பதாகும்.
ஆனால், பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடப் போகின்றீர்கள் என்று கேட்டதற்கும், முறையான பதில் அளிக்காமல், மழுப்பிவிட்டு, அவ்விடத்தை விட்டுத் திடீரென மறைந்து விட்டார் ரவூப் ஹக்கீம். அவரை நம்பித்தான், ஒரு சமூகம் காத்துக் கொண்டிருப்பதை சகிக்க முடியாமலுள்ளது.
இவை இவ்வாறு இருக்க, “ஒன்றிணைந்து செயற்பட்டால், அரசாங்கத்தைப் பொதுத்தேர்தலில் மாற்றியமைக்க முடியுமென, ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார். அதாவது, இந்தக் கருத்தை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார். ஆனால், இவரின் இக்கருத்து, பிழையான ஒரு செயற்பாட்டையும் வழிகாட்டலையுமே போதிக்கின்றது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது, பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அப்போது ஜனாதிபதியாகத் தெரிவாவதற்கு, ஐ.தே.கவின் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவே மிக முக்கிய காரணியாக இருந்தது; இதுதான் உறுதியான உண்மை கூட.
ஆனால், இதே மைத்திரிபால சிறிசேனா, இதன்பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று, பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் எதிராகச் செயற்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்களுக்கு தேசியப் பட்டியலூடக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி, அதற்கு மேலதிகமாக அமைச்சுப் பொறுப்புகளையும் கொடுத்து, அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டதை, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மறந்து விட்டாரா?
நல்லாட்சி என்று பிரசாரப்படுத்தப்பட்ட, கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற இழுபறிகளை நினைத்துப் பார்த்தால், வேறு கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதியும் மற்றுமொரு கட்சியைச் சேர்ந்த அரசாங்கமும் அமைந்தால் என்ன நடக்கும், மீண்டும் ஐந்து வருடங்களுக்கு இழுபறி நிலையா?
“தற்போது எமது தவறுகளைத் திருத்திக் கொண்டு, புதிய வடிவில் பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்கத் தயாராக வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார். அதுமட்டுமல்ல,
“கட்சிக்குத் தேவையானதை, ஆதரவாளர்கள் கேட்கும் போது, அதை வழங்காவிட்டால், அப்போது, ஆதரவாளர்கள் எவ்வாறான தீர்மானங்களை எடுப்பார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்” என்று புத்திமதி கூறும் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு துருவங்களாகப் பிளவுபடப்போகின்றது என்பதை அறியவில்லையா?
யானையின் கால்களை ரணில் விக்கிரமசிங்கவும் யானையின் வாலை பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸவும் பிடித்துக் கொண்டிப்பது ஹரினின் கண்களுக்கோ, புத்திக்கோ புலப்படவில்லையோ?
அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போதுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும்; ‘முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படும் கதை’ போலாகிவிடும். ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக, அரசாங்கம் மேற்கொண்ட பிரசாத்தின் பிரதான விடயங்களில் முக்கியமானவை, மத்திய வங்கி மோசடியும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுமாகும்.
இந்த இரண்டில் ஒன்றுக்காவது, இதுவரை அரசாங்கம் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கவில்லை என்று ஹரின் பெர்னாண்டோ கூறிக்கொண்டிருக்கின்றார்.
சரி! அவர்கள் கூறுவதைச் சற்று நோக்குவோமானால், ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து, நல்லாட்சி அரசாங்கம் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைத்தது. அந்தத் தெரிவுக்குழு இறுதி அறிக்கையையும் கையளித்தது. அதுசம்பந்தமாகத் தற்போது என்ன நடைபெற்றுள்ளது?
சரி! மத்திய வங்கி மோசடி குறித்து, இதுவரை அரசாங்கம் மக்களுக்குத் தீர்வை முன்வைக்கவில்லை எனக் கூறுகின்றார். சரி! நல்லாட்சி அரசாங்கமோ, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபாலவோ, அன்றைய பிரதமர் ரணிலோ, அர்ஜுன மஹேந்திரனை ஏன் கைது செய்யவில்லை?
இவர்களே களவுசெய்ய வாய்ப்பையும் தப்பிப்பதற்குப் பாதுகாப்பையும் வழங்கிவிட்டு, இப்போது நடந்துகொள்வது வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கின்றது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினரோ அரசாங்கமோ பிணைமுறி மோசடியாளர்கள் பற்றி, இவ்வளவு தகவல்கள் இருந்தும், எவ்வாறாவது அவர்களைக் கைதுசெய்ய வேண்டுமென நினைக்காதது இன்னும் புரியாத புதிராகவேயுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் முதலில், ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைத்து, ஒற்றுமையாக ஆட்சியை அமைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
ஐ.தே.க பிளவடைந்து, தேர்தலில் போட்டியிடுமானால், அதனால் ஒருபோதும் வெற்றியடைய முடியாதெனக் கூறிய கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சிரேஷ்ட தலைவர்கள் ஒன்றிணைந்து தீர்வொன்றைக் காணவேண்டும். அந்தவகையில், தற்போது கரு ஜயசூரிய இவ்விவகாரத்தில் தலையீடு செய்திருப்பதால் விரைவில் இப்பிரச்சினைக்கு முடிவு கிட்டும் என்று நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் தெரிவித்தமையை இங்கு நினைவுபடுத்தலாம்.
ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமானுக்குத் தெரியுமோ தெரியாதோ கட்சியின் பிளவு உறுதியாகி விட்டது என்பது. ஐக்கிய தேசியக் கட்சி, ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலும் பிரிந்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்கான முஸ்தீபுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
வீழ்ச்சியின் விழிம்பில் உள்ள கட்சியைக் காப்பாற்றுவதற்குத் தலைகள் தவறும்போது, ஆதரவாளர்களே முன்வரவேண்டும். இப்போதுள்ள நிலையில், ஐ.தே.கவுக்குள் ஒற்றுமையைப் பலப்படுத்துவது இவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. இந்தப் பிளவு தொடருமானால், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆட்சியமைக்கும் பாக்கியம் இல்லாமல் போய்விடும் என்பது உறுதி.
ரஞ்சன் என்ற ‘வைரஸ்’
உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸைப் போல், ஐக்கிய தேசியக் கட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு விவகாரம்.
ரஞ்சன் ராமநாயக்கவின் பெயர், பேசு பொருளாக உலாவிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், ஐ.தே.கவுக்குள் நிலவும் உட்புசல்களால், அதன் பயணப்பாதை திசைமாறுவதாக, சில அதிகாரமற்ற அரசியல்வாதிகள் அங்கலாய்க்கிறார்கள்.
இவர்களின் இத்தகைய சிந்தனைகளால்தான் இவர்களுக்கு அதிகாரம் கிடைக்கவில்லையென்று நம்பத்தான் வேண்டும்.
ரஞ்சன் ராமநாயக்க, நாடாளுமன்றத்தில், “குறைந்தது இரண்டு நாளுக்காவது, என்னைப் பிணையில் விடுங்கள்; மேலும் சில பதிவுகள் உள்ளன; அவற்றையும் சல்லாடை போட்டுத் தேடினால், துல்லியமாக விளங்கலாம்; எந்தப் பொந்தில் என்ன பாம்பு உள்ளதென்பதைப் பார்க்கலாம்” எனக் கூறியிருந்தார். இவர் யார் யாருடன் பேசினாரோ, அனைத்துக் குரல் பதிவுகளும் இவரிடம் உண்டு. ரஞ்சன் ராமநாயக்க அரசியல்வாதி மட்டுமல்ல, சிங்கள திரையுலகில் முன்னணி கதாநாயகனும் ஆவார்.
இவரின் பிரபல்யம், பெரும்பாலும் பெரும்பான்மை மக்களின் கவனத்தில் தான் உள்ளது. ஆனால், இவ்வளவு பிரபல்யமாக இருந்தும், இவரின் இந்தச் செயற்பாடு பெரும் அதிருப்தியை அளித்துள்ளது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், நீதிபதிகள், அரசியல்வாதிகள் எனத் தொடர்ந்து கொண்டுதான் போகின்றது.
ஆனால், இவரின் வீட்டுக் சென்ற பொலிஸார், அங்கு சோதனையிட்டபோது, இந்தக் குரல் பதிவுகளைக் கண்டு பிடித்துள்ளனர். அது பொலிஸாரின் செயற்பாடு; அவற்றைக்குறை கூறமுடியாது.
கடந்த நாடாளுமன்றத் தொடரில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, “எனது தொலைபேசியை, கணினியை எடுத்துச் சென்ற பொலிஸ், எனது சிறப்புரிமைகளை மீறிச் செயற்பட்டமை குறித்து, எனது செயற்பட்டால் பாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். வேண்டுமென நான் எதனையும் செய்யவில்லை. என்னால் யாரும் பாதிப்படையக் கூடாது. எனது பாதுகாப்புக்காக, நான் இவற்றைச் செய்தேன்” எனவும் கூறியிருந்தார். இதைக் கணிக்கும் போது, இவரின் செயற்பாடு, திரைப்படம் ஒன்றில் சம்பவிப்பது அல்லது நடிப்பது போல்தான் உள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய ரஞ்சன் ராமநாயக்க, “எனது போராட்டம் தொடரும்; அரசாங்கத்தின் பக்கமிருந்து என்னிடம் பேசியோரின் விவரங்களையும் நான் இந்தச் சபையில் தைரியமாகச் சமர்ப்பிக்க விரும்புகிறேன். என்னிடம் ஓடியோ மட்டுமல்ல, வீடியோவும் உண்டு. அவற்றை வெளியிடுவேன். சாட்சிகளை விலைக்கு வாங்கச் செய்யும் முயற்சிகளை நான் அறிவேன். இவற்றுக்கெல்லாம் பெரும் விலை பேசப்பட்டது. அவற்றை நான் சொல்வேன். பிணைமுறி மோசடியாளர்கள் என்னிடம் பேசியவையும் உள்ளன” என ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.
Average Rating