ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? (மகளிர் பக்கம்)
எனக்கு நீண்ட தலைமுடி இருந்தது. அதிகம் உதிர்ந்ததால் நான் அதை கத்தரித்துக் கொண்டேன். இப்போதும் முடி உதிரும் பிரச்னை இருந்தாலும், என் முடி வறண்டு உயிரற்று காணப்படுகிறது. மேலும் முடியின் நுனியில் வெடிப்பு ஏற்பட்டு முடி உடைகிறது. என் தலைமுடி பளபளப்பாகவும் மற்றும் வறண்டு போகாமல், ஆரோக்கியமாக இருக்க என்ன செய்யலாம். ஆலோசனை கூறுங்கள்.
– வளர்மதி, கன்னியாகுமாரி
எல்லாப் பெண்களும் தங்களுடைய தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் மற்றும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அழகான தலைமுடி இருக்கும் பெண்களுக்கு எப்போதும் ஒரு கர்வம் இருக்கும். அவர்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது அவர்களின் தலைமுடி தான். ஆனால் இன்றைய சூழலில் பல காரணங்களால் தலைமுடி பிரச்னையினை பெண்கள் சந்தித்து வருகிறார்கள். தலைமுடி உடைந்து போவது, தலைமுடி நுனியில் வெடிப்பு, பொடுகு பிரச்னை மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு மனதளவில் பெரிய அழத்தம் ஏற்படுகிறது. பெண்களின் தலையாய பிரச்னைகளுக்கான தீர்வினை வழங்குகிறார் அழகுக்கலை நிபுணர் சுமதி.
வறண்ட முடிக்கு நிவாரணம்!
தொடர்ந்து ரசாயனம் உள்ள டைக்கள், ஹேர் ஸ்ட்ரெயிடனிங், பர்மிங் போன்ற காரணங்களால் தலைமுடியில் உள்ள ஈரப்பதம் குறைந்து வறண்டு காணப்படும். இதனால் அவை சீக்கிரம் உடைந்துப் போகும் வாய்ப்புள்ளது. டை அல்லது கலரிங் செய்ய விரும்புபவர்கள், ஏதாவது ஒரு டையினை வாங்காமல், நல்ல தரமான அழகு நிலையம் சென்று அங்குள்ள கைத்தேர்ந்த நிபுணர்கள் மூலம் தலைமுடிக்கு கலரிங் செய்வது நல்லது. அவர்கள் பெரும்பாலும் அமோனியா இல்லாத நிறங்களை தான் பயன்படுத்துவார்கள். மேலும் அவர்கள் சரியான முறையில் செய்வதால் முடிக்கு பாதிப்பு ஏற்படது.
*அடிக்கடி ஷாம்பு கொண்டு தலை குளித்து வந்தால், முடியினை வறண்டு போகச் செய்யும். இதனால் முடி உடைந்து போகும் வாய்ப்புள்ளது. அதனால் வாரம் இரண்டு முறை தலைக்குளித்தால் போதும். தினமும் தலைக் குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
*தலைக்கு குளிக்கும் ேபாது, மறக்காமல் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு நிமிடமாவது தலைமுடியில் கண்டிஷனர் இருப்பது அவசியம். இதனால் தலைமுடி அதிகம் வறண்டு போகாமல் இருக்கும்.
*உங்கள் தலைமுடிக்கு ஏற்ற கண்டிஷனர்களை பயன்படுத்துவது நல்லது. காரணம் வேறு கண்டிஷனர் பயன்படுத்தும் போது, அது உங்களுக்கான பலனை அளிக்காமல் இருக்கலாம்.
*தலைக் குளித்ததும் நன்கு துவட்டிவிட்டு காயவைத்தால் போதும். ஷேர் டிரையர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதில் இருந்து வெளியாகும் சூடான காற்று தலைமுடிக்கால்களை பாதிக்கும்.
*இரண்டு மாதம் ஒரு முறை அழகு நிலயம் சென்று தலைமுடிக்கான சிகிச்சையினை எடுத்துக் கொள்ளலாம். அதாவது ஹேர் ஸ்பா போன்ற சிகிச்சை முறைகள். இது கூந்தல் வலுவாக இருக்க உதவும்.
*ஹேர் ஸ்டைலிங் செய்ய பயன்படுத்தும் பொருட்கள் தலைமுடியில் தங்கிவிடும். அதனாலும் முடியில் பாதிப்பு ஏற்படும், அதை தவிர்க்க கிளாரிஃபையிங் ஷாம்பூக்களை பயன்படுத்தலாம்.
*தலைகுளித்து கண்டிஷனர் பயன்படுத்தி முடியினை அலசிய பிறகு கடைசியாக குளிர்ந்த நீரால் அலசுங்கள். இது தலைமுடியில் உள்ள க்யூட்டிக்கல்சில் பாதிப்பு ஏற்படாமலும் மற்றும் தலைமுடியில் உள்ள ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்கும்.
எண்ணெய்ப்பசை பிரச்சினையா?
*செபேசியஸ் சுரப்பியில் இருந்து அதிக அளவு சீரம் உற்பத்தியாகும் காரணத்தால் தலை மண்டையில் எண்ணெய் தன்மை அதிகமாக இருக்கும்.
*முடியின் நுனியில் மட்டும் கண்டிஷனர் பயன்படுத்தலாம். இது முடியின் நுனிப்பகுதி வறண்டு போகாமல் பாதுகாக்கும்.
*எண்ணெய்த்தன்மை கொண்ட முடிகளுக்கு என உள்ள பிரத்யோகமான ஷாம்பூக்களை பயன்படுத்தலாம். இதனால் அது தலைமண்டையில் உள்ள எண்ணெய் தன்மையை பேலன்ஸ் செய்யும்.
*அவ்வப்போது தலைமுடிகளை சீவுவதை தவிர்க்க வேண்டும். இது சேயேசியஸ் சுரப்பியை தூண்டாமல் இருக்கும். மேலும் எண்ணெய் பசை அதிகம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
* தலைமுடியின் வேர்கார்களுக்கு மட்டும் எண்ணெய்ப் பசைக்கான சிறப்பு ஷாம்பூக்களை பயன்படுத்தலாம். மற்ற முடி பாகங்களுக்கு சாதாரண மைல்ட் ஷாம்புக்களை பயன்படுத்தலாம். முடியில் வேர்கால்களில் ஷாம்பூவை போடும் போது, சிறிது நேரம் மசாஜ் செய்து இரண்டு நிமிடம் கழித்து கழுவலாம்.
*விட்டமின் ஈ, ஆன்டிஆக்சிடென்ட் பியூரிஃபையிட் வாட்டர் கொண்ட பியூரிஃபையின் ஷாம்புக்களை பயன்படுத்தலாம். மேலும் தலைமுடிக்கான ஸ்பா சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், எண்ணெய் தன்மை கட்டுப்படுத்தும்.
மன அழுத்தம்:
*உங்கள் உடம்பு சீராக செயல்பட எவ்வாறு ஓய்வு தேவையோ அதே போல் தலைமுடிக்கும் ஓய்வு அவசியம். அதனால் தினமும் போதுமான மணி நேரம் நிம்மதியான தூக்கம் அவசியம்.
*நல்ல சத்துள்ள ஆரோக்கியமான உணவினை சாப்பிட பழகிக்கொள்ளுங்கள். உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க விட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் தேவை. அதை நீங்கள் உணவு மூலமாக சாப்பிடும் போது அவை உங்களின் தலைமுடியினை பலப்படுத்தும்.
*அதே சமயம் காபி, நிகோடின் மற்றும் இதர துரித மற்றும் தேவையற்ற உணவினை தவிர்த்துவிடுவது நல்லது. இது உங்களின் முடிக்கு மேஜிக் செய்யும்.
*ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியினை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.
*நீங்களாக புத்தகத்திலோ அல்லது மற்றவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு வீட்டில் இருந்தே ஏதாவது தீர்வுகளை ட்ரை செய்ய வேண்டாம். அது உங்களுக்கே எதிர்மறையாக முடிய வாய்ப்புள்ளது. அதனால் நிபுணர்களின் ஆலோசனையை பெற்று அதன் படி நடந்துக்கொள்வது அவசியம்.
*திக அளவு புரத சத்துள்ள உணவினை எடுத்துக் கொள்வது அவசியம். முழு கோதுமை, பருப்பு வகைகள், முளைக்கட்டிய பயர் வகைகள், பால், சோயா… போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
*இரும்பு, கால்சியம், சிங்க் போன்ற சப்ளிமென்ட்களை சாப்பிட்டால் மறுபடியும் உங்களின் முடி இழந்த பொலிவினை பெறும்.
*துரித உணவுகளைத் தவிர்த்து கீரை, பச்சைக் காய்கறிகள், சீஸ், பால் போன்றவற்றை அதிக அளவு எடுத்துக் கொள்ளலாம்.
*சர்க்கரை, காபியில் இருக்கும் கஃபேன், டின்னில் அடைக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
* தலைமண்டையில் உள்ள பி.எச் அளவினை சமநிலைப் படுத்துவதற்கு நிறைய தண்ணீர் குடிக்கணும்.
இதை நினைவில் கொள்ளுங்க.
*நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ மற்றும் கண்டிஷனரை எப்போதும் பயன்படுத்த கூடாது. அவ்வப்போது சீதோஷநிலைக்கு ஏற்ப, உங்களின் தலைமுடியின் தன்மையும் மாறுப்படும். அதனால் அந்தந்த சீதோஷநிலைக்கு ஏற்ப உங்களின் ஷாம்புவையும் கண்டிஷ்னரையும் மாற்றி பயன்படுத்துங்கள்.
*நீங்கள் எந்த ஊருக்கு போனாலும் உங்களின் டிராவல் லிஸ்டில் ஷாம்பூ, கண்டிஷ்னர், சீரம் மூன்றும் அவசியமாக இருக்க வேண்டும்.
*எண்ணெய் தலைமுடிக்கு நல்ல போஷாக்கு அளிக்கும். அதனால் தேவையான அளவு எண்ணெயினை உங்கள் தலையில் சரியான இடத்தில் தடவ வேண்டும். மேலும் எண்ணெய் தலை மண்டையில் உள்ள ஈரப்பதம் அனைத்தையும் நீக்கிடும் என்பதால் தலையில் தேவையான அளவு எண்ணெயை தடவி அரை மணி நேரம் கழித்து குளித்துவிட வேண்டும்.
Average Rating