பெண் நலம் காக்கும் பஞ்ச சூத்திரம்!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 46 Second

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதல் வாரம், தேசிய ஊட்டச்சத்து வாரமாக இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது. இது அந்த வாரத்துக்கான கொண்டாட்டமாக மட்டுமே இல்லாமல், அந்த வருடத்தில் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு தொடர்பாகவும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக மகளிர் நலம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து வயதினரிடமும் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வை வலியுறுத்துகிறது. இதற்காக பஞ்சசூத்திர வழிமுறைகள் என்ற ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். இதுபற்றி உணவியல் நிபுணர் சிவப்பிரியா விளக்குகிறார்…

ஆறு வயது வரை உள்ள குழந்தைகள், பதின்ம வயது பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இந்த ஆண்டின் கருப்பொருள் ஆகும். பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில், குறைவான உடல் எடையோடு பிறக்கும் குழந்தைகள், உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க முடியும். ஆரோக்கியமான சந்ததியினரை உருவாக்க முடியும்.

1. கர்ப்பிணிப் பெண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்

சமச்சீர் உணவினை உண்ண வேண்டும். ஒவ்வொரு மாதமும் மருத்துவர், மற்றும் ஊட்டச்சத்து நிபுணரை சந்தித்து தேவையான மருத்துவ பரிசோதனைகளையும், இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் மாத்திரைகளைத் தேவையான அளவு அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். சுகாதாரம் மற்றும் தூய்மையான பழக்க வழக்கங்களைத் தெரிந்துகொண்டு அவற்றை தவறாது
கடைப்பிடிக்க வேண்டும்.

2. பாலூட்டும் தாய்மார்கள்

தாய்ப்பாலை குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் கொடுக்கத் தொடங்கிவிட வேண்டும். இது குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியினை தருகிறது. அத்துடன் தாய்க்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பைப் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது. முக்கியமாக மாதவிடாய் நின்ற காலத்தில் இடுப்பு எலும்புமுறிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) அபாயத்தைக் குறைக்கிறது.

3. ஒன்று முதல் ஆறு வயது குழந்தைகள்

குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பின் பழச்சாறு, இட்லி, சோறு, வேகவைத்த காய்கறிகள் போன்ற உணவு வகைகளை சிறிதுசிறிதாக உண்ண கொடுக்க வேண்டும். குறித்த நேரத்தில் தடுப்பு ஊசிகளை போட வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்படி பூச்சி மருந்துகளை குழந்தைக்கு கொடுக்க வேண்டும். குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது ORS கரைசல் மருத்துவரின் ஆலோசனைப்படி அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

4. பதின்ம வயது பெண்கள்

வைட்டமின் மற்றும் கனிமம் நிறைந்த பலவகையான சமச்சீரான உணவினை உண்ண வேண்டும். இரும்புச்சத்தும், கால்சியம் சத்தும் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் முடிந்த வரை குறைத்துக் கொள்ள வேண்டும். உடல்நலம் மட்டும் பேணுவது ஆரோக்கியம் அன்று. உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டின் ஆரோக்கியமும் பேண வேண்டும். உடற்பயிற்சி அவசியம் செய்து சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும்.

5. குடும்பத்தினரின் பொறுப்பு

குடும்பத்தினர் அனைவரும், சுத்தமான நீரையே பருக வேண்டும். பெண் குழந்தை என்று பாரபட்சம் காட்டாமல் ஆணுக்கு நிகராக நல்ல உணவு, சிறந்த கல்வி, தைரியம், தன்நம்பிக்கை அளித்து பெண்ணை வளர்க்க வேண்டும். மன உளைச்சலை சமாளிக்கவும், நிர்வகிக்கவும் கற்றுத்தர வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வலுவான அடித்தளத்தை உருவாக்கி, சர்வதேச அரங்கில் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க முடியும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குறைப்பிரசவமில்லா குழந்தை வேண்டும்! (மருத்துவம்)
Next post ஆன்லைனில் கலக்கும் செட்டிநாடு காரைக்குடி காட்டன் சேலைகள்!! (மகளிர் பக்கம்)