உண்மையை பேசுவதால் என்னை கொல்ல சதி: விஜயகாந்த் பரபரப்பு பேச்சு
நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க. உள்ளாட்சித் தேர் தலில் தனித்து போட்டியிடுகிறது. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் விஜயகாந்த் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- கடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டேன். நான் தனித்து நிற்பதுபோல் மற்ற கட்சிகளும் போட்டியிட தயாரா? என்று கேட்டேன். யாரும் பதில் சொல்லவில்லை.
இப்போது உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. வுக்கு மாற்றாக எங்கள் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கவே வந்துள்ளேன்.மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் சம்பாதிப்பதில் மட்டுமே அரசியல்வாதிகள் கவனம் செலுத்துகின்றனர். அவர்கள் நடத்தும் பத்திரிகைகளைத் தான் படிக்க வேண்டும், டி.வி.யைத்தான் பார்க்க வேண்டும்.
என்னை பொறுத்தவரை நியாயத்துக்கு முக்கியத்துவம் தருவேன். தவறை சுட்டிக் காட்டுவேன். தவறு என்றால் ஒப்புக் கொள்வேன். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். ஒரு வருடத்தில் சென்னையில் கொசுக்களை ஒழித்துக் காட்டுவேன். மாநகராட்சி பள்ளிகளை தனியார் பள்ளிகள் போல் தரமானதாக மாற்றிக் காட்டுவேன்.
ஆளும் கட்சி வந்தால்தான் மாநகராட்சிக்கு நிதி உதவி கிடைக்கும் என நினைக்காதீர்கள். மாநகராட்சிக்கு என்று தனி நிதி இருக்கிறது. மத்திய அரசு தரும் நிதியும் இருக்கிறது. பணம் கொடுத்தால் அதை வாங்கிக் கொண்டு மாற்றி ஓட்டுப் போட்டு விடாதீர்கள்.
`நூற்றுக்கு நூறு’ என்று டி.வி.யில் விளம்பரம் செய்கிறார்கள். மக்கள் அப்படி சொல்லவில்லை. டி.வி. விளம்பரத்திற்கு கொடுக்கப் படும் பணம் நமது வரிப்பணம். அ.தி.மு.க.வை அழித்து விடலாம் என்றும், விஜயகாந்தை என்ன செய்யலாம் என்றும் நினைக்கிறீர்கள். அதனால்தான் எங்களுக்கு முரசு சின்னம் கிடையாது என்றார்கள்.
காட்டு யானைத்தான் நாம் பார்க்க வேண்டும். சின்ன முயலை பற்றி சிந்திக்கக் தேவையில்லை என்கிறீர்கள். நீங்களும், முயலாகவும், எலியாகவும், பூனையாகவும் இருந்ததை யோசித்துப் பாருங்கள்.
சின்னத்தை முடக்கிய பின்னரும் நாங்கள் தனித்து நிற்கிறோம். நீங்கள் சின்னம் இல்லாமல் நிற்கத் தயாரா? எனக்கு மக்கள்தான் எஜமானார்கள். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி செய்வார்கள் என்று பட்டா கொடுக்கவில்லை. அவர்கள் ஆட்சிதான் தொடர்ந்து வரவேண்டுமா?
நான் அடிப்பதை போன்ற காட்சியை டி.வி.யில் திரும்பத் திரும்ப காட்டினார்கள். நான் யாரை அடித்தேன். எனது நண்பனை அடித்தேன். பருப்பு விலை உயர்ந்து விட்டது. விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. பிறகு எப்படி நூற்றுக்கு நூறு என்று சொல்ல முடியும்.
உண்மையை பேசினால் என்னை கொலை செய்து விடுவார்கள் என்கிறார்கள். நான் மரணத்தை கண்டு அஞ்சவில்லை. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. எனவே உண்மையை சொல்ல நான் தயங்க மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.