ஜெனீவா விவகாரத்தில் அவசரப்படாத அரசு!! (கட்டுரை)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு, எதிர்வரும் புதன்கிழமை பிறக்கப் போகின்ற, 2020ஆம் ஆண்டு சிக்கல்களுடன் தான் தொடங்கப் போகிறது.
இந்த அரசாங்கம் பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்துவதற்கு முன்னதாகவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு எதிர்வரும், மார்ச் 3ஆம் திகதி தான் கிடைக்கப் போகிறது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகி விடும்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்கு புதிய அரசாங்கம் இப்போதே தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம், 2014ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டிருந்த நிலையில் தான், பதவியிலிருந்து வெளியேறியிருந்தது.
2015இல் ஆட்சிக்கு வந்த மைத்திரி-– ரணில் கூட்டு அரசாங்கம் தான் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு இருந்து வந்த நெருக்கடியை குறைத்திருந்தது.
ஜெனீவா நெருக்கடிகளிலிருந்து நிரந்தரமான விடுபடுதலாக அது இருக்கவில்லை. மாறாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துடன் இணங்கிச் செயற்படுவதாக, இணை அனுசரணையை வழங்கி, வாக்குறுதி அளித்ததன் பேரில், இலங்கைக்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டது.
அந்தக் காலஅவகாசத்தை வைத்தே, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், ஜெனீவா தீர்மான கடப்பாடுகளை நிறைவேற்றாமல், அங்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், காலத்தை ஓட்டிவிட்டு, போய் விட்டது.
இப்போது புதிய அரசாங்கம் ஜெனீவா ஓட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இது ஒரு அஞ்சலோட்டம் போல ஆகிவிட்டது.
ஆனால், முன்னைய அரசாங்கம் விட்ட இடத்திலிருந்து ஓட்டத்தை தொடங்க, இப்போதைய அரசாங்கம் தயாராக இல்லை. இதுதான் பிரச்சினைக்குரிய விடயமாகவுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் ஜெனீவாவில் இணங்கி அளித்த உறுதிமொழிகள் அரசியலமைப்புக்கு எதிரானவை என்றும் அவை நாட்டின் இறையாண்மைக்கு எதிரானவை என்றும் தற்போதைய அரசாங்கம் கூறுகிறது,
தாம் ஆட்சிக்கு வந்தால் ஜெனீவா தீர்மானம் கிழித்தெறியப்படும் என்று கோத்தாபய ராஜபக் ஷ, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே கூறியிருந்தார். அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்று ஆட்சிக்கு வந்த பின்னரும் தெளிவாக கூறிவருகிறார்.
ஆனாலும், அவர் ஆட்சிக்கு வந்த பின்னர், ஜெனீவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாகவோ, அந்த உடன்பாட்டை கிழித்தெறிந்து விட்டதாகவோ அறிவிக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலின் போது அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ஷ அவசரப்படவில்லை. ஏனென்றால் அவை சிக்கலானவை. ஒன்றில் கை வைத்தால் இன்னொரு பிரச்சி னையைக் கொண்டு வந்து விடக் கூடியவை. உதாரணத்துக்கு, தாம் வெற்றி பெற்றால், நவம்பர் 17ஆம் திகதி காலையில், குற்றச்சாட்டுகளின் பேரில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள புலனாய்வுப் பிரிவினர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
அதுபோலவே, அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனினும் அதற்கு தெளிவான காலவரையறை எதுவும் அளிக்கப்படவில்லை.
நவம்பர் 17 ஆம் திகதி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட கோத்தாபய ராஜபக் ஷ, ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒன்றரை மாதங்களாகியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலனாய்வுப் பிரிவினரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
அதுபோலவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் நடக்கவில்லை. இது உடனடியாக செய்வதும் சாத்தியமில்லை. சிறிது காலம் செல்லும் என்று அரசாங்கத் தரப்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கிறார்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் விடுதலை விடயத்திலும், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் அவசரப்பட்டு உத்தரவுகளை வழங்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தயாராக இல்லை. ஏனென்றால் அது நீதித்துறையுடனான மோதல்களுக்கு காரணமாகி விடக்கூடும் என்ற நிலை உள்ளது.
அதுபோலவே, அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு மீளாய்வு செய்யப் படும் என்றும் வாக்குறுதி அளித்தார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ.
ஆட்சிக்கு வந்த பின்னரும் அதனைக் கூறிக் கொண்டிருந்தவர், ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியிருக்கிறார்.
ஆக, தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுகின்ற அல்லது உடனடியாக நிறைவேற்றுகின்ற அல்லது முழுமையாக நிறைவேற்றுகின்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவோ அவரது அரசாங்கமோ இல்லை என்பது தெளிவாகிறது.
ஜெனீவா தீர்மான விடயத்தில், கோத்தாபய ராஜபக் ஷ அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டைத் தான் வெளிப்படுத்தி வந்தது. ஆனாலும் அவசரப்பட்டு அதிலிருந்து விலகிக் கொள்வது என்பது சர்வதேச அளவில் அரசாங்கத்தின் பெயரைக் கெடுத்து விடும். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து, சர்வதேச நாடுகளுடனான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கிடையில், முரண்பாடுகளில் சிக்கிக் கொள்வதை விரும்பவில்லை.
விரும்பியோ விரும்பாமலோ ஆட்சிக்கு வந்தவுடன் சுவிட்ஸர்லாந்துடன் இராஜதந்திர முரண்பாடுகள் ஏற்பட்டு விட்டன. பிரித்தானியாவுடனும், அமெரிக்காவுடனும் முரண்பாடுகள் வெடிக்காவிடினும், சரியான புரிதல் ஏற்படவில்லை. இவ்வாறான நிலையில், ஜெனீவா தீர்மானத்தில் கையை வைக்கப் போனால், நிலைமைகள் எவ்வாறு செல்லும் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கவே செய்யும்.
முன்னைய அரசாங்கம் ஆட்சியிலிருந்த போது, ஜெனீவா நெருக்கடியில் இருந்து தாங்களே இலங்கையையும், ராஜபக் ஷவினரையும் காப்பாற்றியதாக பலமுறை கூறியிருக்கிறார்கள்.
மஹிந்த ராஜபக் ஷவை சர்வதேச நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்லப்படாமல், மின்சார நாற்காலியில் இருந்து காப்பாற்றியது தாங்கள் தான் என்றும், அவர் 2015 தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கும் என்றும், மைத்திரி,- ரணில் அரசாங்கம் பலமுறை கூறியிருந்தது.
உண்மையில், மின்சார நாற்காலிக்கு மஹிந்த ராஜபக் ஷ கொண்டு சென்றிருப்பார் என்ற விடயமும் சரி, இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கும் என்ற விடயமும் சரி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் சாத்தியப்பட முடியாத விடயங்கள் என்பதே உண்மை.
மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் 2015இற்குப் பின்னர் நீடித்திருந்தால், பல்வேறு சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டிருக்கலாம் என்பது உண்மையே தவிர, பொருளாதாரத் தடை விதிக்கப்படும் அளவுக்கு நிலைமைகள் சென்றிருக்குமா என்பது சந்தேகம் தான்.
அதுபோலவே, இப்போது, ஆட்சிக்கு வந்தருக்கும் அரசாங்கத்துக்கு ஐ.நா மனித உரி்மைகள் பேரவையில், கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்படுமா என்பதிலும் சந்தேகங்கள் உள்ளன.
தற்போதைய அரசாங்கம் இன்னமும், 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் என்ன முடிவை எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.
இந்த தீர்மானம் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிக் கொண்டிருந்தாலும், ஜெனீவாவில் அளிக்கப் போகின்ற பதில் தான் இறுதியானதாக இருக்கும்.
இந்த தீர்மானத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம், விரைவில் பதிலளிப்போம் என்று தான் அரசாங்கம் இப்போது கூறிக் கொண்டிருக்கிறது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டன அதனை ஆராய்ந்து தான், அது இறையாண்மைக்கு எதிரானது என்று அரசாங்கம் கூறியது. இப்போது மீண்டும் ஆராயப்படுகிறது என்றால், அதன் அர்த்தம், என்ன?,
இந்த தீர்மானத்தை நிராகரித்தால், இதனை நிறைவேற்ற முடியாது என்று முரண்டு பிடித்தால் சர்வதேச சமூகம் என்ன செய்யும், அதன் பிரதிபலிப்பு என்னவாக இருக்கும் என்று நோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அது தான் பிரச்சினை.
“இப்போது நிலைமைகள் மாறியிருக்கின்றன. புதிய அரசாங்கம், புதிய மக்கள் ஆணையுடன் பதவிக்கு வந்திருக்கிறது. புதிய ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமரின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு விளக்க வேண்டும்,” என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியிருக்கிறார்.
எவ்வாறாயினும், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளதால், ஜெனீவா தொடர்பான முன்னைய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறோம் என்று இலகுவாக அறிவித்து, அதிலிருந்து நழுவிக் கொள்ள முடியாது.
சர்வதேச உடன்பாடுகள், இணக்கப்பாடுகளில் இருந்து இலகுவாக விலகிக் கொள்ள முடியாது. அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு விடயத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அதனை நினைவுபடுத்தியிருந்தார்.
அது ஜெனீவாவுக்கும் பொருந்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Average Rating