போட்டித் தேர்வுக்கு கை கொடுக்கும் ஆங்கிலம்!! (மகளிர் பக்கம்)
என் பையன் என்னமா இங்கிலீஷ் பேசுறான். என்னை மம்மினு சொல்றான். அதை கேட்கவே சந்தோசமா இருக்கு என ஆங்கில மீடியத்தில் படிக்கும் தனது குழந்தை பேசும் பேச்சு குறித்து மகிழ்ச்சி கொள்ளும் தாய்மார்கள் உண்டு. உண்மையில் தமிழகத்தில் ஆங்கில மோகம் அதிகரித்து காணப்படுகிறதா, ஆங்கிலம் படிப்பதால் என்ன பயன், ஆங்கிலம் அவசியம் படிக்க வேண்டுமா என அடுக்கடுக்கான கேள்விகளுக்கு சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி உதவி பேராசிரியை ரமண தேவிகா பதிலளித்தார்.
ஆங்கிலம் கற்க வேண்டியதன் அவசியம் என்ன?
உலகத்தில் 200 கோடி பேர் ஆங்கிலம் பேசுகின்றனர். உலக அளவில் நடைபெறும் வர்த்தகத்துக்கு தொடர்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. பல்வேறு அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான புத்தகங்கள் ஆங்கிலத்தில் தான் உள்ளன. அவற்றை முழுவதுமாக அறிந்து கொள்ளவும், வேலை வாய்ப்பின் நுழைவு வாயிலாகவும் ஆங்கிலம் இருப்பதால் நாம் கூடுதலாக ஒரு மொழியை கற்கவேண்டிய அவசியத்தின் காரணமாகவும் ஆங்கிலம் கற்பது அவசியம்.
இது தவிர பல்வேறு இணையதளங்கள் தங்களது நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் வேலை வாய்ப்பு செய்திகளை ஆங்கிலத்தில்தான் வெளியிடுகின்றன. நவீன காலத்தில் சமூக வலைத்தளங்களும் தங்களது பதிவுகளை ஆங்கிலத்திலேயே வெளியிடுவதால் அதை அறிந்து கொள்ள நாம் ஆங்கிலம் கற்பது அவசியம்.
ஆங்கிலம் கற்பது கடினம் என சிலர் கூறுகிறார்களே?
ஆங்கிலம் கற்பது கடினம் அல்ல. ஆர்வமும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும் எந்த மொழியையும் கற்றுக் கொள்ள முடியும். நம்மை ஆண்ட பிரிட்டிஷார் நம் மொழியை கற்காத நிலையில் எந்த நவீன வசதிகளும் இல்லாத அந்த காலத்தில் நம் முன்னோர்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டு பிரிட்டிஷாரிடம் உரையாடினார்கள். இப்போது பல்வேறு ஆப்கள் நமக்கு ஆங்கிலம் கற்றுத்தர தயாராக இருக்கின்றன. நிலவுக்கு சந்திராயனை அனுப்பிய நம்மால் ஆங்கிலத்தை கற்பது எளிது. பிறர் கேலி கிண்டல் செய்தால் அதை பொருட்படுத்தாமல் never ever give up என்ற வார்த்தைகளை முன்னிறுத்தி கற்க வேண்டும்.
ஆங்கிலம் கற்க எந்த ஆப்கள் உதவுகின்றன?
Hello English, english conversation, bbc learn english போன்ற ஆப்கள் மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் கற்க உதவுகின்றன. இது தவிர நாம் அன்றாட செய்திகளை ஆங்கில செய்தி தாள்களை வாசித்து அறிந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சினிமாவை விரும்புவோர் அது தொடர்பான செய்திகளையும், அழகு குறிப்புகளை விரும்புவோர் பியூட்டி டிப்சையும், கிரைம் செய்திகளை விரும்புவோர் என அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ற செய்திகளை ஆங்கில நாளிதழ்கள், வார இதழ்களில் படிக்கலாம்.
ஏன் கார்ட்டூன்கள் காமிக்சை கூட ஆங்கிலத்தில் படித்தால் நாம் ஆங்கில அறிவை பெறலாம். தொடக்கத்தில் சில செய்திகளை புரிந்து படிக்க 10 நிமிடங்கள் கூட ஆகலாம். புதிய வார்த்தைகளை அறியவும் செய்தித்தாள்கள் உதவுகின்றன. ஆங்கில சினிமா படங்களை பார்ப்பதன் மூலமும் ஆங்கில அறிவை பெறலாம். முன்பு இது ஒன்றே வழியாக இருந்த நிலையில் தற்போது ஆங்கிலம் கற்க இந்த தலைமுறையினருக்கு பல்வேறு வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.
ஐ.டி துறை வருகையால் ஆங்கிலம் கற்போர் அதிகரித்துள்ளனரா?
பொதுவாக கலைக்கல்லூரிகளில் பி.காம் படிப்புக்கு அடுத்து ஆங்கில இலக்கியம் பட்டப்படிப்பு முதலில் நிரம்பிவிடும். பின்னர் தான் பி.எஸ்சி கணிதம், அறிவியல் நிரம்பும். எனவே ஆங்கிலத்துக்கு எப்போதும் மவுசுதான். அதிலும் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை வருகையால் ஆங்கிலம் கற்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இப்போதும் கூட சேக்ஸ்பியர் போன்ற நாடாக ஆசிரியர்களின் இலக்கியத்தை கற்கும் ஆவலில் பி.ஏ. ஆங்கில இலக்கியத்தை பலர் தேர்ந்தெடுக்கின்றனர்.
ஆங்கிலம் கற்க நமக்கு (அகராதி) டிக்ஸ்னரி மிகவும் உதவுகிறது. ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற அகராதிகளை பயன்படுத்தலாம். அதில் ஒவ்வொரு வார்த்தையும் எந்த மொழியில் இருந்து உருவானது என்ற குறிப்புகளுடன் இடம் பெற்றுள்ளது. தற்போது ஆன்லைனில் கூகுள் டிரான்ஸ்லேசன் போன்ற வசதிகளும் உள்ளன.
வேலைவாய்ப்புக்கு ஆங்கிலம் எப்படி உதவுகிறது?
கால்சென்டர், ஐ.டி துறைகளில் தற்போது பல இன்ஜினியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் தாங்கள் படித்த பாடத்தில் வேலை பெறுவதை விட தங்களது ஆங்கில அறிவால் தற்போது லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் வாய்ப்புக்காக பலர் நட்சத்திர ஓட்டல்களில் வரவேற்பாளராக, மனிதவளத்துறை அதிகாரிகளாக பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுவதை நாம் காணலாம். இது தவிர ரயில்வே, வங்கி தேர்வு, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப் பெற ஆங்கிலம் மிகவும் அவசியமாக உள்ளது.
ஏனெனில் அந்த போட்டித் தேர்வுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இடம்பெற்றுள்ளது. அதில் கேள்விகளை புரிந்து கொண்டால் தான் சரியாக விடையளிக்க முடியும். வேலை விஷயமாக வெளிநாடு செல்லும் போது அங்கு உரையாட ஆங்கிலம் மிகவும் அவசியம்’’ என்கிறார் உதவி பேராசிரியை ரமண தேவிகா.
Average Rating