‘குறுக்கெழுத்துப் போட்டி’யில் தமிழக உள்ளூராட்சித் தேர்தல் !! (கட்டுரை)

Read Time:12 Minute, 55 Second

தமிழ்நாட்டில் உள்ளூராட்சித் தேர்தல் நடக்குமா? என்பது, விடை தெரிய வேண்டிய ‘குறுக்கெழுத்துப் போட்டி’ போல் இருக்கிறது.

“உள்ளூராட்சித் தேர்தலை நடத்தியே தீருவோம்” என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார். ஆனால், “உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், உள்ளூராட்சித் தேர்தலை நடத்துங்கள்” என்று, தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது, கொண்டு வரப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் மிக முக்கிய நோக்கம், உள்ளூராட்சித் தேர்தலைக் கட்டாயம் நடத்த வேண்டும் என்பதாகும்.

முன்னர் எல்லாம், உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதும் நடத்தாமல் விடுவதும், ஆட்சியாளர்களின் விருப்பமாக இருந்தது. அதை முறியடித்து, ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை, கட்டாயம் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தியே தீர வேண்டும் என்பது, பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டது.

அதுவும், உள்ளூராட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே, தேர்தலை நடத்தி விட வேண்டும் என்று, அரசமைப்புச் சட்டம் தெளிவாகக் கூறுகிறது.

எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்டு விட வேண்டும் என்பதுதான், இந்த 73 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் அடிப்படை நோக்கம். அது மட்டுமின்றி, உள்ளூராட்சி அமைப்புகளான பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மாவட்டப் பஞ்சாயத்து ஆகிய அமைப்புகளுக்கு, எப்படி ‘வார்ட்’ வரையறை செய்ய வேண்டும்? பெண்களுக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கும் எப்படி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல விடயங்களில் தொடங்கி, உள்ளூராட்சி அமைப்புகளுக்கான நிர்வாக அதிகாரம், நிதி அதிகாரம் உள்ளிட்ட அனைத்துமே, அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாக அறுதியிட்டு கூறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்குத் தனியாக மாநிலங்கள் அளவில், ஒரு தேர்தல் ஆணையகம் உருவாக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கு எதிராக என்னென்ன பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளதோ, அதேயளவு பாதுகாப்புகள், இந்தத் தேர்தல் ஆணையாளருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில், முதன் முதலில் தி.மு.க ஆட்சியில் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, 1996இல் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. பிறகு தொடர்ந்து, ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தாலும், கருணாநிதி முதலமைச்சராக இருந்தாலும், தமிழகத்தில் உள்ளூராட்சித் தேர்தல் தள்ளிப்போகவில்லை.

ஆனால், 2016இல் இதற்கு ஒரு சோதனை ஏற்பட்டது. அவசர அவசரமாகத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, அ.தி.மு.க மட்டும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யக் கால அவகாசம் கொடுப்பது போல், ஒரு தேர்தல் அறிவிப்பை, தேர்தல் ஆணையாளர் வெளியிடவே, 2016இல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த நேரத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலை எதிர்த்து, தி.மு.க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

அந்த வழக்கில், ‘அ.தி.மு.க ஆட்சியில் வெளியிடப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பை இரத்துச் செய்து’ டிசெம்பர் 2016க்குள், உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி முடியுங்கள் என்று, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்தத் தேர்தல் இதுவரை நடைபெறவில்லை.

ஜெயலலிதாவின் திடீர் மறைவு, முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் இராஜினாமா, பிறகு புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பு என்று அடுத்தடுத்த அரசியல் மாற்றங்கள், சசிகலா கைது, அ.திமு.கவுக்குள் பிளவு உள்ளிட்ட சச்சரவுகள், தமிழ்நாட்டில் கடந்த மூன்று வருடங்களாக, உள்ளூராட்சித் தேர்தலைத் தள்ளி வைத்து வருகிறது.

‘வார்ட்’ மறு வரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கண்டு, உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, அக்டோபர் 2016இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி ‘வார்ட்’ மறுவரையறை செய்யப்பட்டாலும், மக்கள் கருத்துக் கேட்கப்படவில்லை.

முறைப்படியான இறுதி அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பது, மாநில தேர்தல் ஆணைக்குழு முன்பு தி.மு.க எடுத்து வைத்த முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது.

நவம்பர் 28ஆம் திகதி அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, உள்ளூராட்சித் தேர்தல் நடத்துவது குறித்து, மாநில தேர்தல் ஆணையாளர் அலுவலகம் ஆலோசனை நடத்தினாலும், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க முன்வைத்த ‘வார்ட்’ மறு வரையறை பிரச்சினை குறித்து, உரிய பதிலை அளிக்கவில்லை.

அதனால், அடுத்த நாள் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ள தி.மு.க., சட்டப்படி ‘வார்ட்’ மறு வரையறை செய்து, உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துள்ளது.

உச்சநீதிமன்றம் கூட, “அனைத்துச் சட்ட நடைமுறைகளையும் கடைப்பிடித்து, 13.12.2019க்குள், உள்ளூராட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பை, மாநிலத் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் வெளியிடும் என நம்புகிறோம்” என்று, கடந்த முறை தனது உத்தரவில் தெரிவித்தது.

மாநிலத் தேர்தல் ஆணையாளர் அலுவலகம், “பழைய ‘வார்ட்’ மறுவரையறையை அடிப்படையாக வைத்துத் தேர்தலை நடத்துவோம்” என்று அறிவித்துள்ளது.

இதில், பல சிக்கல்கள் இருப்பதாக, அரசியல் கட்சிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றன. இப்போது, அ.தி.மு.க அரசாங்கம் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்கியிருக்கிறது.

நான்கு மாவட்டங்களில் உள்ள பகுதிகளைப் பிரித்து உருவாக்கப்பட்டுள்ளதால், மொத்தம் ஒன்பது மாவட்டங்களில் உள்ள வார்டுகளை மறு வரையறை செய்தால் மட்டுமே, உள்ளூராட்சித் தேர்தலை முறைப்படி நடத்த முடியும்.

தற்போது புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதன் அடிப்படையில் பார்த்தால், பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஒரு மாவட்டத்துக்கு ‘ஒரு மாவட்டப் பஞ்சாயத்து’ என்ற நிலை மாறி, இரு மாவட்டங்களுக்கு ‘ஒரு மாவட்ட பஞ்சாயத்து’ என்ற நிலை ஏற்படும்.

அதேபோல், ஒரு மாவட்டத்தில் உள்ள ஒன்றியம் அல்லது நகராட்சியின் பகுதி, இன்னொரு மாவட்டத்தில் வரும். இந்தச் சூழலில், உள்ளூராட்சி நிர்வாகம் குழப்பமடைவது மட்டுமின்றி, ஒரு மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு, இன்னொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டரும் எஸ்.பியும் அதிகாரிகளாக இருக்கும் சூழல் ஏற்படும்.

ஆகவே, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டமை, உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதில் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது.

இப்படியோர் இடியப்பச் சிக்கலில், உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படுவது, தமிழ்நாட்டில் ஏறக்குறைய மூன்றரை வருடங்களாக முட்டுச்சந்தில் வந்து நிற்கிறது. அரசாங்கமும் தேர்தல் ஆணையாளர் அலுவலகமும் உச்சநீதிமன்றத்தில் போட்டி போட்டுக் கொண்டு கால அவகாசம் கோரி, நீதிமன்ற அவமதிப்புக்கே உள்ளாகின.

அதற்குள் ஒரு மாநிலத் தேர்தல் ஆணையாளரும் பதவியிலிருந்து விலகி விட்டார். இன்னொரு மாநிலத் தேர்தல் ஆணையகத்தின் செயலாளரும் பதவியிலிருந்து மாற்றப்பட்டு விட்டார். புதிய தேர்தல் ஆணையாளர்; புதிய செயலாளர் நியமிக்கப்பட வேண்டும்.

ஆனால், மாநிலத் தேர்தல் ஆணையகத்தின் நிலைப்பாடு, ஒரே மாதிரிதான் இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் புலம்பும் நிலை உருவாகியுள்ளது.

ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க சமீபத்திய இடைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, உள்ளூராட்சித் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிட முடியும் என்று நம்புகிறது. ஆனால், தி.மு.கவோ வழக்கமான அதிகார துஷ்பிரயோகத்தை, உள்ளூராட்சித் தேர்தலில் அ.தி.மு.க பயன்படுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது என்று நினைக்கிறது.

தி.மு.கவைப் பொறுத்தவரை, இப்போது ஆட்சி அதிகாரத்தை வைத்து, உள்ளூராட்சி அமைப்புகளில் அ.தி.மு.க வெற்றி பெற்று விட்டால், 2021க்குப் பிறகு, தி.மு.கவுக்குத் தலைவலியாக இருக்கும் என்று கருதுகிறது.

ஆனால், இரு கட்சிகளுக்கு இடையில் நடக்கும் போட்டியில், உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல், திரிசங்கு நிலையில் நிற்கிறது. டிசெம்பர் 13ஆம் திகதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு வரும் போது, உள்ளூராட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை அ.தி.மு.க அரசாங்கம் வெளியிட்டிருக்கும்.

ஆனால், ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தெரிவித்த சட்ட நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமல் வெளியிடப்பட்டால், அந்தத் தேர்தல் அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் தடை பிறப்பிக்கும் சூழல் உருவாகலாம்.

இந்தச் சூழலில், தமிழகத்தில் உள்ளூராட்சி ஜனநாயகம் என்பது, மேலும் கானல் நீர் போலவே காட்சியளிக்கப் போகிறதா? அரசியல் சட்டம் வழி காட்டிய பஞ்சாயத்து ராஜ் அமைப்பு, மூன்றரை ஆண்டுகளுக்கு மேலும் முடங்கித்தான் இருக்கப் போகிறதா? இதுவே, இன்றைக்கு தமிழக மக்கள் ஒவ்வொருவர் மனதில் உள்ள கேள்வியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகையே திரும்பி பார்க்கவைத்த ஆடு மேய்க்கும் இளைஞர் !! (வீடியோ)
Next post ஒற்றைக் குழந்தையின் பெற்றோர் கவனத்துக்கு…!! (மருத்துவம்)