பொலிவியா: புதிய நிறப்புரட்சிகளுக்கான களம் !! (கட்டுரை)
ஆட்சிக் கவிழ்ப்புகள் புதிதல்ல; இன்று ஜனநாயகத்தின் பெயரால் அவை அரங்கேறுகின்றன. இதுதான் புதிது!
இராணுவத்தின் உதவியுடன் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புகள் முடிந்து, இப்போது ஜனநாயகத்தை மய்யப்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்புகள் அரங்கேறுகின்றன.
இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர், ஆட்சிக் கவிழ்ப்புகள், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் நடைபெற்ற போது, அதற்கு நிறப்புரட்சிகள் எனப் பெயரிடப்பட்டன. அந்த வரைபடம், இப்போது இலத்தீன் அமெரிக்காவில் அரங்கேறுகிறது.
அமெரிக்க ஏகபோகத்துக்கும் நவதாராளவாதத்துக்கும் எதிரான, மிகப்பெரிய போராட்டக் களமாக, இலத்தீன் அமெரிக்கா தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக, அதிகளவான சதிப்புரட்சிகளையும் ஆட்சிக் கவிழ்ப்புகளையும் கண்ட பிரதேசமாக, இலத்தீன் அமெரிக்கா திகழ்கிறது.
அமெரிக்கா தனக்குரிய பொம்மை ஆட்சியை நிறுவுவதும் அதைத் தொடர்ந்து, அதற்கெதிரான மக்கள் போராட்டங்கள் அவ்வாட்சியை முடிவுக் கொண்டு வந்து, மக்கள் ஆட்சியை நிறுவுவதும் பின்னர், அம்மக்களாட்சி இராணுவச்சதியால் முடிவுறுவதும் என்ற வட்டம் தொடர்கிறது.
அண்மையில், பொலிவியாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், நான்காவது முறையாகப் போட்டியிட்ட ஜனாதிபதி ஈவா மொறாலஸ், தனக்கெதிராகப் போட்டியிட்ட வேட்பாளரை விட, ஆறு இலட்சம் வாக்குகளை அதிகமாகப் பெற்று வெற்றிபெற்ற போதும், இராணுவத் தலையீட்டின் விளைவால், அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இலத்தீன் அமெரிக்காவில், ஆட்சிக் கவிழ்ப்பின் இன்னோர் அத்தியாயம் இப்போது அரங்கேறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, வெனிசுவேலாவில் எதைச் செய்ய முயன்று அமெரிக்கா தோற்றதோ, அதை அப்படியே பொலிவியாவில் அரங்கேற்றி இருக்கிறது.
ஈவோ மொறாலஸ்: பழங்குடிகளின் தலைவர்
2005ஆம் ஆண்டு, பொலிவியாவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஈவோ மொறாலஸ் வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவானார்.
பழங்குடிகளில் இருந்து ஜனாதிபதியாகத் தெரிவான முதலாவது மனிதர் என்ற பெருமை இவரைச் சார்ந்தது. ‘ஐமாறா’ பழங்குடி இனத்தைச் சேர்ந்த மொறாலஸ், தனது தொழிற்சங்கச் செயற்பாடுகளால் நன்கறியப்பட்டார்.
குறிப்பாக, பழங்குடிகள் பயன்படுத்தும் ‘கொக்கா’ இலையைத் தடைசெய்ய அமெரிக்கா முயன்றபோது, (அது கொக்கெயின் என்ற போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுவது என்று காரணம் காட்டி) உரிமைப் போராட்டத்தைப் பழங்குடிகள் முன்னெடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, தொழிற்சங்கத் தலைவராகிய மொறாலஸ், தனது திட்டங்களால் பழங்குடிகளின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளப் போராடினார். 1980களில் தனது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகப் பலமுறை சிறை சென்றார்.
1995ஆம் ஆண்டு, தேர்தல் அரசியலில் நுழைந்த இவர், 1997ஆம் ஆண்டு, முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்து, முழு பொலிவிய மக்களின் கவனத்தைப் பெற்றார். இதைத் தொடர்ந்து, 2005ஆம் ஆண்டுத் தேர்தலில், 54சதவீதமான வாக்குகளைப் பெற்று, ஜனாதிபதியானார்.
இவரது தெரிவு, பழங்குடி மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதேவேளை, இது அமெரிக்காவுக்கும் பொலிவியாவில் செயற்பட்டு வந்த சுரங்க நிறுவனங்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
மொறாலஸ், இடதுசாரிச் சிந்தனைகளுக்கும் சோசலிசச் செயற்றிட்டங்களுக்காக நன்கறியப்பட்டவர். இவரது திட்டங்களால் பழங்குடிகள் நன்மையடைந்தார்கள். சாதாரண உழைக்கும் மக்களுக்கு, கௌரவமான வாழ்வு சாத்தியமானது. இதனாலேயே, தனது இரண்டாவது, மூன்றாவது பதவிக்காலத்தை, 60சத வீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வென்றார்.
அண்மையில் நடந்த தேர்தலிலும் இரண்டாவதாக வந்த போட்டியாளரை விட, ஆறு இலட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று, வெற்றிபெற்றிருந்தார்.
இவரது பதவிக்காலத்தில், பொலிவியாவில் வறுமை அரைவாசியாகக் குறைந்துள்ளது. ஆண்டொன்றுக்கு சராசரியாக ஐந்து சதவீதம் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. இவர் பதவியேற்ற போது, ‘மிகக் குறைந்த வருமானமுடைய நாடு’ என அறியப்பட்ட பொலிவியா, இப்போது குறைந்த மற்றும் மத்திய வருமானமுடைய நாடாக வளர்ந்துள்ளது. இந்த மாற்றங்கள், இலகுவில் நடந்தேறியவையல்ல.
திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி, இயற்கை வளங்களைச் சரியாகவும் வினைத்திறனுடனும் பயன்படுத்துதல், ‘சமூக நல அரசு’ என அரசாங்கத்தை மாற்றயமை, இவற்றில் பிரதானமானவை.
2006ஆம் ஆண்டு, ஜனாதிபதியாகியவுடன் ஈவோ செய்த முதற்காரியம், எண்ணெய், எரிவாயுக் கைத்தொழில்களைத் தேசிய மயமாக்கினார். இது பொலிவியாவில் இயங்கி வந்த பல்தேசிய எண்ணெய்க் கம்பெனிகளுக்குப் பெரிய இடியாகியது.
இவ்வளவு காலமும், மிகக்குறைந்த செலவில் எண்ணெய் எடுத்து, இலாபம் பார்த்த கம்பெனிகளுக்கு, இது உவப்பானதாக இருக்கவில்லை. இந்த நடவடிக்கை மூலம், பெருந்தொகையான பணம், அரசாங்கத்தைச் சேர்வதற்கு வழி செய்தது. இவரது அடுத்த நடவடிக்கை, அரசாங்கத்துக்கும் தனியாருக்கும் சொந்தமானதாகவும் பயன்பாடற்றும் கிடந்த சுமார் 134 மில்லியன் ஏக்கர் நிலத்தை, நிலமற்ற பழங்குடி மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தமையாகும்.
இம்மக்களில் பெரும்பான்மையானோர், அடிமைகளாக வேலை செய்து வந்தவர்கள். இந்நடவடிக்கை, விவசாயத்தை ஊக்குவித்தது; தன்னிறைவை நோக்கி, பொலிவியாவை நகர்த்தியது. எல்லாவற்றுக்கும் மேலாக, நிலத்தைப் பெற்ற பழங்குடி மக்கள், வறுமையில் இருந்து விடுதலை பெற்றனர்.
எண்ணெய், எரிவாயுவைத் தேசிய மயமாக்கியதன் விளைவால், கிடைக்கப்பெற்ற வருமானத்தில் இருந்து, பொலிவியா முழுவதும் 4,500 அரசாங்கக் கல்விச் சாலைகள், பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.
இதனால், பழங்குடிக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பதற்கான வாய்ப்பும் பாடசாலைக்குச் செல்வதற்கான சூழலும் உருவானது. கடந்த பத்தாண்டுகளில் இந்நடவடிக்கைகள், பொலிவியாவில் உள்ள பழங்குடிச் சமூகங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பெரியதாகும்.
குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதை ஊக்குவிக்க, பாடசாலைக்குச் செல்லும் வறுமைப்பட்ட, குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான நிதி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம், பாடசாலை செல்லும் குழந்தைகளுக்கு, ஆண்டொன்றுக்கு 200 பொலிவியனோஸ் (5,500 இலங்கை ரூபாய்) வழங்கப்படுகிறது. இவ்வாண்டு, இந்த உதவித்தொகையை 2.2 மில்லியன் மாணவர்கள் பெறுகிறார்கள்.
2009ஆம் ஆண்டு, மொறாலஸ் 60 வயதைக் கடந்தவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 2,400 பொலிவியனோஸ் (65,000 இலங்கை ரூபாய்) பெறுவார்கள். அதேபோல, பெண்களுக்கான இலவச மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கைகள், இரண்டு விடயங்களைச் சுட்டுகின்றன. முதலாவது, மக்கள் நலன்நோக்கு இருந்தால், மக்களின் நலன்களை நிறைவுசெய்யக் கூடிய நிதிவளங்களை நாடுகள் கொண்டுள்ளன.
இரண்டாவது, அரசாங்கங்கள், தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து கொள்ளையிடுகின்ற தொகையின் பெறுமதி, எவ்வளவு என்பதைப் பொலிவிய உதாரணம் சுட்டிக்காட்டி நிற்கின்றது.
சதியின் பின்னணியும் பொலிவியாவின் எதிர்காலமும்
தனது மக்கள் நலச் செயற்பாடுகளின் ஊடு, நன்கறியப்பட்ட மொறாலஸை பதவியில் இருந்து அகற்ற, அமெரிக்காவும் பல்தேசியக் கம்பெனிகளும் நீண்டகாலமாகக் காத்துக் கொண்டிருந்தன.
பொலிவிய அரசமைப்பு, ஒருவருக்கு இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவிவகிக்க அனுமதிக்கிறது. இதனால் 10 ஆண்டுகளில், மொறாலசின் தொல்லை முடிந்துவிடும் எனப் பொறுமை காத்தன. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, மொறாலஸ் அரசமைப்பை மக்கள் ஆணையுடன் திருத்தி, மூன்றாவது முறையாகப் போட்டியிட்டார். இதையெதிர்த்து நடைபெற்ற எதிர்ப்புகள், வெற்றி பெறவில்லை. இதனால் இம்முறை நடைபெற்ற தேர்தலிலும் அவர் வெற்றி பெறுவார் என அறிந்து, ஓர் ஆட்சிக்கவிழ்ப்புக்கான பணிகள் இடம்பெற்றன.
இதன் இறுதி விளைவே, இராணுவத்தின் கோரிக்கைக்கு பணிந்து, மொறாலஸ் பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறி உள்ளமையாகும். இந்தச் சதியின் தீவிரம் யாதெனில், ஜனாதிபதி பதவி விலகினால், அடுத்துப் பதவியேற்க வேண்டிய பதவி நிலையில் உள்ள அனைவரும் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்; அவர்களும் பதவி விலகியுள்ளனர்.
இப்போது பல்தேசியக் கம்பெனிகளுக்கும் அமெரிக்க நலன்களுக்கும் வாய்ப்பான ஒருவர் ஜனாதிபதியாகி உள்ளார். அவர் ஜனாதிபதியாகியவுடன் செய்த முதல் காரியம், “அரசமைப்புத் திருத்தம் செல்லாது” என அறிவிப்பு வெளியிட்டமையாகும்.
இதன் மூலம், அடுத்த தேர்தலில் மொறாலஸ் போட்டியிடுவது தடுக்கப்படுகிறது. ஏனெனில், மொறாலஸ் போட்டியிட்டால் வெற்றி பெறுவார் என்பதை அவர்கள் அறிவார்கள்.
இன்று, இலத்தீன் அமெரிக்கா எங்கும் இவ்வாறான ஆட்சி மாற்றத்துக்கான முனைப்புகள் நடக்கின்றன. அதேபோல, அதையெதிர்த்து மக்கள் போராட்டங்களும் வெடிக்கின்றன. பொலிவியாவில், ஈவோ மொறாலஸ் நீக்கப்பட்டது அநீதியானது எனக்கூறி, பழங்குடிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், பலர் இறந்துள்ளனர். இப்போராட்டங்கள் பொலிவியாவில், அமெரிக்கா நினைத்ததை செய்வது, இலகுவானதல்ல என்பதைக் காட்டுகின்றன.
ஆனால், பொலிவியாவில் நடைபெற்ற இந்தச் சதியை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நாடுகளும் வாய்மூடியிருக்கும் ‘ஜனநாயக சக்திகள்’ என்று தம்மை அழைக்கும் அமைப்புகளும் மனிதர்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
இன்று பொலிவியாவில் நடப்பது நாளை இன்னொரு நாட்டில் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இச்சம்பவங்கள் குறித்து, அவதானமாக இருக்க வேண்டிய காலத்தின் கட்டாயம்; ஆட்சி மாற்றங்களில், அமெரிக்காவின் பங்கு இல்லையென்று யார் சொன்னது?
Average Rating