அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் மோதி என்ன செய்திருப்பார்? (உலக செய்தி)
அரசியலுக்கு வரும் ஆசை தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
“நவம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று தேசிய மாணவர் படை தினமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ´மன் கீ பாத்´ நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை உறுப்பினர்களுடன் மோதி கலந்துரையாடினார்.
இந்த உரையாடலின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் மோதி பதிலளித்தார். அப்போது ஹரி என்ற மாணவர், “நீங்கள் அரசியல்வாதி ஆகவில்லை என்றால் வேறு என்ன செய்திருப்பீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த மோதி, “ஒவ்வொரு குழந்தைக்கும் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்பது குறித்து பல ஆசைகள் இருக்கும். ஆனால் உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அரசியலுக்கு வரும் ஆசை எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை.
´அரசியலுக்கு வரவில்லை என்றால் நான் என்ன செய்திருப்பேன்´ என்ற எண்ணமே எனக்கு வந்ததில்லை. நான் எங்கு இருந்தாலும் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, நாட்டின் நலனுக்காக இரவும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருப்பேன்” என்று மோதி கூறினார்.
மேலும், தனது உரையின்போது, தாய்மொழி குறித்து பேசும்போது, மகாகவி சுப்ரமணிய பாரதியாரின், ´முப்பது கோடி முகமுடையாள் உயிர்…”´ என்று தொடங்கும் பாடலை மேற்கோள் காட்டி பேசியதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி சிலர் கட்சியே தொடங்காமல் பேசுக்கின்றனர் என்று கூறியதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
“அதிமுகவை நேரடியாக எதிர்க்கும் தைரியம் ஸ்டாலினுக்கு இல்லை. அதனால் தான் மற்றவர்களை தூண்டிவிடுகிறார். அதிமுக அரசு யாருக்கும் அடிமை இல்லை.
கட்சியே தொடங்காமல் சிலர் பேசுகின்றனர். யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை. டிடிவி தினகரன் மற்றும் குடும்பத்தினர் அதிமுகவை எவ்வளவு பாடாய் படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று தமிழக முதல்வர் பழனிசாமி பேசியதாகவும், அதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் என்றும் இல்லை என்று கூறினார்.
“கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறு சரிவு ஏற்பட்டது. ஆனால் அது வேலூர் தேர்தலில் சரி செய்யப்பட்டது. இடைத்தேர்தல் வெற்றி மூலம் தமிழகத்தில் என்றும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்று மக்கள் காண்பித்துள்ளனர். அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் என்றும் இல்லை´´ என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் அருகே கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கழுமரம் ஏறிய அரசனின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
“திருப்பத்தூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள நரியனேரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து வலது புறமாகச் செல்லும் உட்புறச் சாலையில் விவசாய நிலத்தின் நடுவில் பழமையான நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இக்கல்லானது 11 அடி நீலமும் 3 அடி அகலமும் உள்ளது.
இக்கல்லில் நீண்ட கழுமரத்தில் ஆண் ஒருவர் அமர்ந்த நிலையில் உள்ளார். அவரது இடது கை மார்பிலும், வலது கை மேல்நோக்கி உயர்த்தியவாறும் உள்ளன. தலைக்கு மேல்புறம் பெரிய அளவிலான குடை சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்குடை அவரை ஒரு அரசன் என அடையாளப்படுத்துகிறது.
கல்லின் இடதுபுறத்தில் நின்ற நிலையில் பெண், எரியும் விளக்கை ஏந்தியவாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது இறந்த அரசனை தெய்வமாக வழிபடும் நிலையை எடுத்துரைப்பதாக உள்ளது” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Average Rating