பாபர் மசூதி தீர்ப்பு: வரலாற்றை கேவலப்படுத்தல் !! (கட்டுரை)
வரலாற்றை விளங்குவதன் அவசியம், தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. வரலாற்றைப் பதிவதும், வரலாற்றை ஆவணமாக்குவதும் எவ்வளவு முக்கியமானதோ, அந்தளவுக்கு முக்கியமானது, வரலாற்றை விளங்கிக் கொள்வது. வரலாற்றைத் தவறாக விளங்குவதும் விளக்குவதும் நிகழக் கூடாத விடயங்கள். இதன் பயங்கரத்தை, அண்மைய நிகழ்வொன்று காட்டி நிற்கின்றது.
அண்மையில், பாபர் மசூதி இருந்த இடத்தின் மீதான, உரிமை கோரும் வழக்கின் தீர்ப்பை, இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தது. இத்தீர்ப்பு, பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கிறது.
இராமர் பிறந்த இடத்தில், மசூதி அமைக்கப்பட்டுள்ளது என்ற பிரசாரமும் அதனோடு சேர்ந்து, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையும் மிக நீண்டகாலமாக நடைபெற்று வந்துள்ளது.
இதற்கு முத்தாய்ப்பாய், இப்போது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு, வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டாதா, நீதியின் அடிப்படையில் வழங்கப்பட்டதா, நம்பிக்கைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டதா என்பதே கேள்வியாக இருக்கிறது. இதற்கு, வழக்கின் தீர்ப்பையும் அதனோடு இணைந்து, வரலாற்றையும் பார்ப்பது முக்கியமானது.
நீதிமன்றத் தீர்ப்பு: பழி ஓரிடம், பாவம் வேறிடம்
பாபர் மசூதி இருக்கின்ற இடம், இந்துக்களுக்குச் சொந்தமானது; அது ‘இராமஜென்ம பூமி’ என்ற கோரிக்கை, முதன்மை பெறத்தொடங்கி, இந்திய சுதந்திரத்தின் பின்னர், 1949ஆம் ஆண்டு, இராமர் சிலையை, மசூதிக்குள் வலுக்கட்டாயமாய் வைத்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, பல்வேறு படிநிலைகளைத் தாண்டி, இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பாக இன்று வந்திருக்கிறது. 1,045 பக்கங்கள் நீளுகின்ற நீதிமன்றத் தீர்ப்பின் ஒற்றை வரிச் செய்தி யாதெனில், இந்துக்களுக்குச் சொந்தமான இடத்திலேயே, மசூதி அமைந்துள்ளது என்பதாகும்.
மிக நீளமான தீர்ப்பாக இருந்தாலும் 786, 797, 798 ஆகிய பந்திகள் முக்கியமானவை. அவை, இத்தீர்ப்பு எவ்வாறு எட்டப்பட்டது என்பதை விளக்கப் போதுமானது.
பந்தி 786: மசூதி கட்டப்பட்ட, 1528 முதல் 1856 வரைக்கும் இடையிலான காலப்பகுதில், மசூதியில் தொழுகை நடத்தியதற்கான சான்றுகள் இல்லை.
பந்தி 797: பெரும்பங்கு சான்றுகளின் (preponderance of probabilities) அடிப்படையில், 1857ஆம் ஆண்டில், கிரில்-செங்கல் சுவர் அமைக்கப்பட்டிருந்த போதிலும், இந்துக்கள் வெளிமுற்றத்தில் வழிபாடு செய்தனர் என்பதற்கான தெளிவான சான்றுகள் உள்ளன. வெளிப்புற முற்றத்தை, அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததைப் பார்க்கும் போது அது தெரிய வருகிறது.
பந்தி 798: உள்முற்றத்தைப் பொறுத்தவரை, 1857ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால், அயோத்தி இணைக்கப்படுவதற்கு முன்னர், இந்துக்கள் அங்கு வழிபாடு செய்ததை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மசூதி கட்டப்பட்ட திகதியிலிருந்து, 1857ஆம் ஆண்டு வரை, உள்முற்றத்தைத் தங்களது கட்டுப்பாட்டில் முஸ்லிம்கள் வைத்திருந்ததைக் குறிக்க, எந்தச் சான்றையும் அவர்கள் வழங்கவில்லை. கிரில்-செங்கல் சுவர் அமைக்கப்பட்ட பின்னர், மசூதியின் கட்டமைப்புத் தொடர்ந்து இருந்தது. மேலும், அதன் எல்லைக்குள், தொழுகை நடத்தப்பட்டது என்பதற்கான சான்றுகள் உள்ளன. 1949ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 22ஆம் திகதி இரவு, இந்துச் சிலைகளை நிறுவி, மசூதியின் புனிதத் தன்மை சேதப்படுத்தப்பட்டதன் மூலம், சட்டவிரோதமாகத் திட்டமிட்ட நடவடிக்கை மூலமாகவே, வழிபாட்டிலிருந்தும் உடைமைகளிலிருந்தும் முஸ்லிம்களை வெளியேற்றுவது நடந்தேறியது. வழக்குகள் தீர்ப்பளிக்கப்படாமல் இருந்த நிலையில், முஸ்லிம்களின் பொது வழிபாட்டுத் தலத்தை அழிக்கும், திட்டமிட்ட செயலில், மசூதியின் முழு அமைப்பும் வீழ்த்தப்பட்டது. 450 ஆண்டுகளுக்கு முன்னர், கட்டப்பட்ட ஒரு மசூதியை, முஸ்லிம்கள் முறைகேடாக இழந்துவிட்டனர்.
மேற்சொன்ன மூன்று பந்திகளும், நீதிமன்றத் தீர்ப்பின் குளறுபடியான தன்மையைக் காட்டிநிற்கின்றன. இந்தத் தீர்ப்புத் தொடர்பில், இரண்டு விடயங்கள் கவனிப்புக்குரியன,
முதலாவது, 450 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மசூதியை, முஸ்லிம்கள் இழந்துவிட்டார்கள் என்பதை, நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. அதன்மூலம், அந்த மசூதி அவர்களுடையது என்பதை, உறுதிப்படுத்துகிறது.
இரண்டாவது, மசூதி கட்டப்பட்டது முதல், பிரித்தானியர்களால் சுவர் எழுப்பப்பட்ட 1857ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில், முஸ்லிம்கள் தொழுகை நடத்தியதற்கான சான்றுகள் மசூதியில் இல்லை என்று குறிப்படும் உச்சநீதிமன்றம், 1857ஆம் ஆண்டுக்கு முன்னர், இந்துக்கள் அங்கு வழிபாடு செய்ததை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று கூறுகிறது.
முஸ்லிம்களிடம் சான்றாதாரம் கேட்கும் நீதிமன்றம், இந்துக்களின் சாத்தியக்கூறுகளைப் போதுமானதாக ஏற்றுக் கொள்கிறது. எனவே, இடம் இந்துக்களுக்குச் சொந்தம் என்று தீர்ப்பளித்துள்ளது.
அதேவேளை, இந்தத் தீர்ப்பு, வரலாறு குறித்துச் சொல்லும் சில செய்திகள் முக்கியமானவை. கி.பி 1528ஆம் ஆண்டில், மொகலாய மன்னன் பாபரின் படைத்தளபதி மீர் பாகி என்பவரால், மசூதி கட்டப்பட்டது என ஒப்புக் கொள்கிறது. பாபர் மசூதி கட்டப்பட்ட வரலாற்றுக் காலத்தில், எந்த ஒரு கோவிலும் அங்கே இல்லை; கோவில் போன்ற அமைப்பிலான எந்தக் கட்டடத்தையும் இடித்துக் கட்டவில்லை எனத் தீர்ப்பு ஒப்புக் கொள்கிறது.
மசூதி கட்டப்பட்ட காலத்தில், வாழ்ந்த சீக்கிய குருவான குருநானக், இராமாயணத்தை ஹிந்தியில் எழுதியவரும் அக்பர் காலத்தில் வாழ்ந்தவருமாக துளசிதாசர் ஆகியோர், இராமரின் கோவிலை இடித்துத்தான், மசூதி கட்டப்பட்டதென அக்பரிடம் முறையிட்டதாகச் சொல்லப்படும் கதைகள், பொய்ப்புனைவுகள் என்பதைத் தீர்ப்பு ஏற்றுக் கொள்கிறது. இதன் மூலம், கோவிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்ற பொய், நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 1992ஆம் ஆண்டு, மசூதி இடிக்கப்பட்டது தவறானது என்றும் தீர்ப்புக் கூறுகிறது.
எனவே, இங்கு இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று, மசூதி இடிக்கப்பட்டதற்குச் சொல்லப்படும் காரணம், கோவில் இருந்த இடத்தில், மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதாகும். இரண்டாவது, மசூதி இடிக்கப்பட்டது தவறானது. இதனாலேயே பா.ஜ.க முதல் ஆர். ஏஸ்.எஸ் வரை, தீர்ப்பைத் “தோல்வியும் இல்லை; வெற்றியும் இல்லை” என்று கூறுகின்றனர்.
இப்போது, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள வழக்கு, இடிக்கப்பட்ட மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலப்பரப்பு, யாருக்குச் சொந்தம் என்ற வழக்காகும். 1992 டிசெம்பர் ஆறாம் திகதி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு, நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில், குறித்த இடத்தில் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை; ஆனால், மசூதி இருந்துள்ளது. முஸ்லிம்கள் வழிபாடு நடத்தியதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை; ஆனால், இந்துக்கள் வழிபட்டதற்கான சான்றுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு; சான்றுகள் இல்லை. எனவே நிலம், இந்துக்களுக்குச் சொந்தமானது. இதுவே, நீதிமன்றத் தீர்ப்பின் வாதம்.
தீர்ப்பானது, இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும், கூட்டு மனச்சாட்சியின் அடிப்படையிலும் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, சாட்சிகள், சான்றுகள், வரலாறுகள் அனைத்தையும் நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் புறந்தள்ளியுள்ளது. இது இந்திய உச்சநீதிமன்றத்துக்குப் புதிதல்ல.
இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதலில் தொடர்புடையவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட அப்சல் குரு மீதான வழக்கில், 2004ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் பின்வருமாறு சொன்னது. ‘அப்சல் குரு, எந்தவொரு பயங்கரவாதக் குழு, அமைப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. ஆனால், இந்தச் சம்பவம் முழுத் தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டால்த்தான், சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி சமாதானம் அடையும்’.
எவ்வாறு, ஓர் அப்பாவியைச் சாட்சியங்கள் எதுவுமில்லாமல், கூட்டு மனச்சாட்சியைக் காரணங்காட்டி, நீதிமன்றம் தூக்கிலிட்டதோ, அதேபோன்றே, இப்போது இஸ்லாமியர்களின் உரிமையை, அதேகூட்டு மனச்சாட்சியைக் காரணம் காட்டிப் பறித்திருக்கிறது.
இதேவேளை, வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது, நீதியின் அடிப்படையில் வழங்கப்பட்டதற்கு மாறாக, சமூக அமைதியை நிலைநாட்டுவதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பாகவே இருக்கிறது. இதனால், இந்தியாவில் வன்முறை ஏற்படாமல், பார்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று சிலர் காரணம் கூறுகிறார்கள்.
இங்கு கவனிக்க வேண்டிய விடயமொன்று உண்டு. 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகிய நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினர். ‘நீதிமன்ற நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்றும், நீதிமன்ற அமைப்பைப் பாதுகாக்காவிட்டால் நாட்டில் ஜனநாயகம் அழிந்துவிடும்’ என்றும் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். அப்படிக் கருத்துத் தெரிவித்த நீதிபதிகளில் ஒருவரான ரஞ்சன் கோகோய்தான், தற்போது, இடித்தவர்களின் கரங்களிலேயே பாபர் மசூதியை ஒப்படைத்த நீதிமன்றின் தலைமை நீதிபதி.
இந்தத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, ஆளும் பா.ஜ.கவின் சுப்ரமணியன்சுவாமி “அடுத்துக் காசியும் மதுராவும் இருக்கின்றன” என்றார். அவரைத் தொடர்ந்து, அனைத்திந்திய அகாரா பரிசத் தலைவர் நரேந்திர கிரி, “பாபர் மசூதியைப் போலவே, மசூதிகள் கட்ட காசி, மதுராவிலும் இன்னும் பிற 3,500 கோவில்கள் இடிக்கப்பட்டன. ஆகவே, இந்த மசூதிகள் இடிக்கப்பட வேண்டும். மத நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக, காசி, மதுரா மீதான தங்களுடைய உரிமையை முஸ்லிம்கள் விட்டுத் தர வேண்டும்” எனவும் கேட்டிருக்கிறார்.
இந்தத் தீர்ப்பை, இலங்கையில் உள்ள இந்துக்கள் பலர் வரவேற்றதைக் காணக் கிடைத்தது. இது, முஸ்லிம் விரோதத்தின் அடிப்படையில் உருப்பெற்றது. வரலாற்று ஆதாரங்களுக்கு முரணாகக் கூட்டு மனச்சாட்சியின் பெயரால், நீதிமன்றின் துணைகொண்டு, தமிழரின் வரலாற்று இடங்கள் பறிபோகும் போது, அதையும் வரவேற்கத் தயாராக வேண்டிய காலம் வரலாம். அப்போதும் இதேபோல, வரவேற்கக் கோருகிறேன்.
Average Rating