மாற்றம் ஒன்றே தேவை !! (கட்டுரை)
ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்குரிய தேர்தல் முடிவுகள், இலங்கையின் நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் எதிர்கால இனத்துவ அரசியல் நகர்வுகள் குறித்தும் பல்வேறு சிந்தனாவோட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதேவேளை, தமிழ் அரசியல் தலைமைகளினதும், அதன் எதிர் அரசியல் தலைமைகளினதும் மக்களதும் கருத்தோட்டங்களை மிகத் தெளிவாக வெளிக்காட்டி நிற்கிறது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில், தமிழ் பேசும் இனம், ஓரணியில் நின்றும் சிங்களப் பெரும்பான்மை மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றியீட்டிய ஜனாதிபதியாக, குறிப்பாக சிங்கள மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார்.
இந்தத் தெரிவு என்பது, இலங்கை அரசியல் தலைமைகளுக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கும் மிகத் தெளிவானதொரு செய்தியைத் தெரிவித்திருக்கின்ற அதேவேளை, இலங்கைச் சிறுபான்மை மக்களும் தமது செய்தியைச் சிங்கள மக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள் என்பது மிகத் தெளிவாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது.
காலம் காலமாக, இனத்துவ அரசியலில் மோதுண்டு சிதறிய இனங்கள், இன்று இரு முகங்களாகப் பிரிந்து நின்று, தமது இதய ஓட்டங்களை, பிராந்திய அரசியலுக்கும் சர்வதேசத்துக்கும் புலப்படுத்தி நிற்கின்றன.
இத்தேர்தல் முடிவுகள், சிறுபான்மைச் சமூகங்களைப் பொறுத்தவரையில், அரசியல் தலைமைகளுக்கு ஒரு தெளிவான செய்தியைச் சொல்லி இருக்கிறது. இனத்துவ அரசியலில், தீர்மானிக்கும் சக்தியாகச் சிறுபான்மை இனம் ஒருபோதும் இருக்க முடியாது.
இந்தச் சிந்தனையாக்கமானது, கற்பனாவாதம் என்பதை வெளிக்காட்டி நிற்கிறது. காரணம், இலங்கை இனத்துவ விகிதாசாரத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்டோர் சிங்கள மக்களே என்பதை, நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். இரண்டு கோடியே 25 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையில், சுமார் 48 இலட்சத்துக்குக் குறைவானவர்களே, தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழர் சமூகத்தினராவர். இத்தகைய சூழலில், இவர்களில் வாக்களிக்கத் தகுதி பெற்றோர், சுமார் 33 இலட்சம் பேர் எனலாம்.
எனவே, தீர்மானம் ஒன்றை எடுக்கும் சக்தியாக, எவ்வாறு இவ்வினங்கள் இருக்க முடியும் என்பதைச் சிங்கள மக்கள் மிகத் தெளிவாகச் சிறுபான்மை அரசியல் தலைமைகளுக்கும் மக்களுக்கும் கூறியிருக்கிறார்கள். இதனை, கோட்டாபயவின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றி, வெளிக்காட்டி நிற்கிறது.
இந்தவகையில், சிறுபான்மை இனங்கள் மிகத்தெளிவாகத் தமது அடிப்படை அரசியல் உரிமைகள் தொடர்பாக, தனிநாடு கோரவில்லை என்பதுடன் பிளவுபடாத நாட்டுக்குள் தம்மையும் சம அதிகாரம் உள்ள சமூகக் குழுமமாக இணைத்துக் கொள்ளும்படியும் அதற்கான அதிகார, அந்தஸ்தைத் தரும்படியும், ஒரு மாகாண ஆட்சிமுறையில் உச்சபட்ச அதிகாரப் பகிர்வையும் போர்க் கைதிகள் விடுதலை, கல்வி, தொழில்வாய்ப்பு என்பவற்றையும் நாடிநிற்கிறார்கள் என்ற செய்தி தெளிவாகச் சிங்கள மக்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.
எனவே, இலங்கைச் சிறுபான்மை இனங்கள் குறித்த அச்ச நிலை, பயத்தைப் பெரும்பான்மை சமூகம் போக்கிக்கொள்ளக் கூடிய தெளிவை, இந்தத் தேர்தல் முடிவுகள் மிகத் தெளிவாகக் காட்டி நிற்கின்றன.
அதேவேளை, இலங்கை இனத்துவ அரசியலில் ஏற்க முடியாததும், தீர்வுகளை எட்ட முடியாததுமான கோரிக்கைகளை மிகத்தெளிவாகத் தமிழர்கள் நிராகரிக்கிறார்கள். இதனால் தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கோரியவர்கள், மக்களிடம் தோற்றுப் போனார்கள் என்று, மிகத் தெளிவான செய்தியும் இக்கோரிக்கைகளுக்காக வாக்குக் கேட்டவர்களையும் மக்கள் நிராகரித்து உள்ளார்கள் என்ற செய்தியையும் சரியான வழிப்படுத்தல் இன்றி, நடுநிலை வகிப்பதாகத் தெரிவித்தவர்களை, மக்கள் நம்ப போவதில்லை என்ற செய்தியையும் தமிழ் மக்களின் தேர்தல் முடிவுகள் பறைசாற்றியுள்ளன.
இந்த வகையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ் கட்சியையும் அதன் கோட்பாடுகயையும் அரசியல் நகர்வுகளையும் வடக்கு கிழக்கில் தமிழர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் நிராகரித்திருக்கிறார். சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் போன்றவர்களுக்கும் இதே பாடத்தையே தமிழ் மக்கள் புகட்டி இருக்கிறார்கள்.
மேலும், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளின் தேர்தல் கால வழிகாட்டல் அற்ற தலைமைத்துவ முடிவுகள் மூலம், தமிழ் மக்கள் எப்பக்கம் உள்ளவர்கள், அவர்களது அபிலாசைகள் என்ன என்பதையும் மக்களுக்குப் பொருத்தமானதும் நடைமுறைச் சாத்தியமான வழியைத் தெரிவு செய்வதன் அவசியத்தையும் தேர்தல் முடிவுகள் வௌிப்படுத்தி நிற்கின்றன.
மேலும், மொட்டுக் கட்சி சார்பாகத் தமிழ் பேசும் மக்களிடையே, குறிப்பாகத் தமிழ் மக்களிடையே செயற்பட்ட தமிழ்த் தலைவர்கள், தாம் வென்றதாக வெற்றிக் கோசம் எழுப்பினாலும், இவர்கள் கோட்டாபய சார்பாகப் பேரம் பேசக்கூடிய எந்தளவு வாக்குகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.
தாம் கோட்டாபயவுக்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும் உழைத்ததற்காகவும் அவர் சலுகை ஒன்றை வழங்கினாலும், உண்மையில் இவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் மக்களால் இவர்களுடைய கருத்துகள் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதுடன், தமிழ் மக்கள் மிகத் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்.
சலுகை என்பதற்கு அப்பால், ஒரு நியாயமான, நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு ஒன்றைத் தாமும் இந்தத் தீவில் சம அந்தஸ்துள்ள மக்கள் என்ற அடிப்படையில், ஆட்சியில் பங்காளிகள் என்ற அந்தஸ்தைத் தரும்படி கோரியிருந்தார்கள்.
சிங்களதேசம் இந்தக் குறைந்தபட்சத் தீர்வை வழங்கியாவது, சிறுபான்மை மக்களைத் தமது தேசத்தின் மக்களாக அரவணைத்துக் கொள்ளுமா? தொடர்ந்தும், கொழுந்துவிட்டு எரியும் அணையா நெருப்பாக மாற்ற உழைக்கப் போகிறதா என்பதே, புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன் வைக்கப்பட்டுள்ள கேள்வியாகும்.
இதற்குப் பொதுஜன பெரமுன பொறுப்புடன் செயல்பட்டால், நடந்து முடிந்த தேர்தல் இடங்களில், பச்சையாகக் காணப்பட்ட இடங்களை, எதிர்வரும் தேர்தலில் சிவப்பு நிறமாக மாற்ற முடியும்; மாற்ற வேண்டிய தேவையும் பொறுப்பும் புதிய ஜனாதிபதிக்கு உண்டு என்பதை, பதவியேற்றபின் ஆற்றிய முதலுரையில் புலக்காட்டி இருக்கிறது.
எனவே, சிறந்த முறையில் நாட்டைக் கட்டி எழுப்பி, சிறுபான்மைச் சமூகங்களுக்கு உரிய உரிமைகளை வழங்கி, இந்நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது, இலங்கைச் சிறுபான்மை சமூகங்களின் எதிர்பார்ப்பாகும்.
அதேவேளை, தமிழ் மக்களின் பின்னால் நாம் இருக்கிறோம், எம் பின்னே தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்று, தமிழ் மக்களின் கருத்துகளுக்குத் தாமும், தமது கருத்துகளுக்குத் தமிழ் மக்களும் உடன்பட்டவர்கள் என்பதைத் தமது வாக்கு பலத்தையும் அரசியலையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களிடம் மீண்டும் பலம் பொருந்திய பிரதிநிதிகளாகத் தன்மையை அடையாளப்படுத்தியுள்ளனர். இந்த அடையாளப்படுத்தல் என்பது, இம்முறை அதிகரித்து, வாக்களிப்பு சதவீதத்தின் அளவிலும் அதிகரிப்பைக் காட்டி நிற்கிறது.
இந்தவகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பயணிக்கும் பாதை சரியானது, தமிழ் மக்கள் பயணிக்க முனையும் பாதை சரியானது என்பதை, மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நன்கு புரிந்துகொண்டுள்ளன.
எனவே, இந்தப் புரிதல், இந்த அரசியல் கள நிலைவரங்களில், மாற்றத்துக்கான ஒரு புதிய பாதையை, அரசியல் மூலோபாயத்தை இணக்கப்பாட்டின் மூலமாக, பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையிலான அரசியல் உரிமை, கல்வி, அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு என்பவற்றைக் கருத்தில் கொண்டு, சமூக நலன் சார் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
கடந்த 70 ஆண்டு கால உரிமைப் போராட்டமும், எதிர்ப்பு அரசியலும் தமிழ் அரசியல் வரலாற்றில் நிறையவே பாடங்களைக் கற்றுத்தந்துள்ளன. அந்தவகையில், அனுபவங்கள் நிச்சயம் இனிப்பானவையல்ல.
எனவே, மிகச் சிறிய மாற்றம், பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும். இன்று தமிழ் மக்களின் நிலைமை, ‘நமக்காக நாமே, மாற்று அரசியல் யதார்த்த முடிவு எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, நிராகரிப்புக்கள் மத்தியில், இணக்கப்பாட்டுக்கு சென்று, ஆட்சியில் பங்காளிகளாவதன் மூலமே, தமிழினத்தைப் பாதுகாக்க முடியும்.
எனவே, இந்த அரசியல் சூழ்நிலையைச் சரியாகப் பயன்படுத்தாமல், தொடர்ந்தும் வெளியில் நின்று ஆதரவு, எதிர்ப்பு அரசியல் செய்வதாக இருந்தால், தமிழ் மக்கள் அத்தகையதொரு நிலையை விரும்பவில்லை. கௌரவமான ஆட்சியில், தமிழினம் பங்காளிகளாக இருந்து, தமது இருப்பைக் காப்பாற்றுவதே இன்றைய தேவையாகும்.
எனவே, காலத்தின் தேவை அறிந்து, ‘நமது தலைவிதியை நாமே மாற்றியமைப்போம்’ என்ற முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்குமா என்பதே, இன்றைய தேவை. அதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யப் போகிறதா? இந்தியா, அமெரிக்கா, சர்வதேசம் விடுதலை வாங்கித் தரும் எனக் கதை சொல்லப் போகிறதா? மாற்றம் ஒன்றே தேவை; அதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யுமா? இது, குறிப்பிட்டளவு தமிழ் மக்களிடம், இன்று எழுந்துள்ள கேள்வியும் விருப்பமுமாகும்.
Average Rating