சூரிய நமஸ்காரம்!! (மகளிர் பக்கம்)
எபோலா, சார்ஸ், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், சிக்குன் குன்யா என நவீன நோய்கள் பலவற்றைப் பார்த்து பீதி கொள்கிறோம். ஆனால் இவை எல்லாம் ஒட்டுமொத்தமாக பலி கொண்ட உயிர்களை விட மிக மிக அதிகம்… வாழ்க்கைமுறை சார்ந்த பிரச்னைகளால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை!
உடல் இயக்கமே இல்லாமல் சும்மா உட்கார்ந்தபடி இருப்பதால் வரும் சர்க்கரை நோய், இதய நோய்கள், உடல் பருமன் போன்ற பிரச்னைகளை சமாளிப்பதற்குத்தான் உலகெங்கும் மக்கள் அதிகம் செலவழிக்கிறார்கள்.
‘‘மனிதன் என்பவன் காடுகளில் அலைந்து திரிந்து வேட்டையாடி உண்பதற்குப் படைக்கப்பட்டவன். அந்த வாழ்க்கையில் அவனுக்கு இப்படியான நோய்கள் வந்திருக்க வாய்ப்பே இல்லை. விவசாயம் என்ற விஷயத்தை அறிந்துகொண்டு, என்றைக்கு அவன் வீடு கட்டி உட்கார ஆரம்பித்தானோ, அன்றிலிருந்து துவங்கின பிரச்னைகள்’’ என்கிறார்கள் உயிரியல் அறிஞர்கள்.
இந்த வாழ்க்கை சொகுசான பல வசதிகளைக் கொடுத்திருக்கலாம். ஆனால் கூடவே வாழ்நாள் முழுக்க வதைக்கும் நோய்களையும் கொடுத்துவிட்டன. இப்போதெல்லாம் டாக்டர்கள் சொல்லும் அட்வைஸ்கள் இவைதான்… ‘உட்கார்ந்தே இருக்காதீர்கள்; குனிந்து நிமிர்ந்து கொஞ்சம் வேலை செய்யுங்கள்; தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்’. இந்த இடத்தில்தான் கைகொடுக்கிறது சூரிய நமஸ்காரம். மிகச் சிறந்த உடல் இயக்கத்துக்கான பலன்களை இது தருகிறது. பலருக்கு நிவாரணம் தரும் ஒரு மருந்து, யாரோ ஒருவருக்கு அலர்ஜியைத் தந்து வாட்டி வதைப்பது இயல்புதானே! அதுபோல சூரிய நமஸ்காரத்தையும் எல்லோராலும் செய்துவிட முடியாது. யாரெல்லாம் செய்யக் கூடாது, ஏன் செய்யக்கூடாது என்றும் நாம் பேசலாம்.
இங்கும் வெளிநாடுகளிலும் சூரிய நமஸ்காரம் செய்யத் தொடங்கிய பலர், பிற யோகா ஆசனங்கள், ஆழமான தேடல் என்று விரிவடைந்துள்ளனர். சிலர் யோகாவை முறையாகப் படிக்கத் தொடங்கி விட்டனர். சிலர் வேறு பயிற்சிகளுக்குப் போய்விட்டனர். எந்த ஒரு சரியான பயிற்சியையும் ஈடுபாட்டோடு தொடர்கிறபோது, அது வாழ்க்கைக்கு நிறைய வளங்களைக் கொண்டு வரும்.
சரி, அப்படி என்னதான் ஸ்பெஷல் இந்த சூரிய நமஸ்காரத்தில்? அந்த டிஸைன்… அதன் அமைப்புதான் ஆகச்சிறப்பு. மனிதர்களின் ஆரோக்கிய சாரத்தை அறிந்து, அதில் வேலை செய்கிற நிபுணத்துவம். பெரும் சவால்கள் இல்லாமல், சாதாரண மனிதர்களும் செய்கிற மாதிரியான அந்த முறை!அப்படியான நேர்த்தி இருப்பதால்தானோ என்னவோ, எந்த நிலையிலும் அது மிகச் சிறந்த பலனைத் தந்துவிடுகிறது. பலரும் முறைப்படி செய்யாமல் தங்கள் இஷ்டத்துக்கு சூரிய நமஸ்காரத்தில் எதையாவது சேர்த்துச் செய்கிறார்கள்;
சிலர் இதன் படிநிலையில் சில நிலைகளை விட்டுவிடுகிறார்கள்; சிலர் இதை மந்திரத்தோடு சேர்த்துச் செய்கிறார்கள்; சிலர் மூச்சோடு மட்டும் செய்கிறார்கள்; சிலர் இதை ஏதோ உடற்பயிற்சி மாதிரி செய்கிறார்கள். ‘ஏதோ சொல்கிறார்களே, செய்து பார்ப்போம்’ என்று அரைகுறை ஈடுபாட்டோடு செய்பவர்கள் உண்டு;
பிறர் வற்புறுத்தலால் மனசில்லாமல் கஷ்டப்பட்டு ஈடுபடுபவர்கள் உண்டு; விருப்பம் இருந்தும் உடல் ஒத்துழைக்காததால் எப்படியாவது செய்பவர்கள் உண்டு… எவரும் அதனால் பலன் பெறுவது சாத்தியமாகிறது! இந்த மண்ணில் பிறந்த எல்லோருக்கும் ஏதோ ஒன்றை பூமித்தாய் அருள்வது போல சூரிய நமஸ்காரமும் பலன்களை வாரி வழங்குகிறது.
ஒரே பயிற்சி ஒருவருக்கு உயிராகவும், இன்னொருவருக்கு கொஞ்சமும் ஈடுபாடில்லாமலும் ஆகிவிடுவதுண்டு. அதை எப்படிப் பார்க்கிறோம், அது பற்றி என்னவெல்லாம் உணர்கிறோம், யார் வழிகாட்டுகிறார்கள், அவர்கள் எப்படிப்பட்டவர்கள், எந்த அளவு ஈடுபாடும் ஆர்வமும் இருக்கிறது, எவ்வளவு தூரம் சரியாகச் செய்கிறோம் என்றெல்லாம் ஒரு பயிற்சியில் நிறைய அம்சங்கள் உள்ளன.
சிலருக்கு வீட்டுச்சூழல் பயிற்சிக்கு ஏற்றதாக இருக்காது, சிலருக்கு வீட்டில் இடமே இருக்காது, சிலருக்கு எல்லாம் இருந்தும் பயிற்சியைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பர், சிலர் அவசர அவசரமாய் சில நாட்கள் மட்டும் தப்பாய் செய்து பார்த்து பலன்கள் இல்லையே என்று கைவிட்டு பலவீனமான ஒருவராய் பரிணாமம் பெற்றுவிடுவார்கள்.
ஆனால் ஆழமாகவும் நிதானமாகவும் யோசிக்கும் ஒவ்வொருவருக்கும் தங்களின் பயிற்சிகள் எத்தனை தூரம் உண்மையான ஈடுபாட்டுடன் கூடியது, அதில் எத்தனை சதவீதம் தங்களின் முயற்சி இருக்கிறது என்பது புரியும். அப்படிப்பட்டவர்கள், தங்களின் தடைகளை அகற்றி தாங்களே சிறப்பாய் பயிற்சியில் ஈடுபட முடியும்.
யோகா ஆசிரியராக இருப்பதால், என்னிடம் பயிற்சி பெறும்- பெற்ற பலர், இந்த புற விஷயங்களை -முன் தயாரிப்புகளை மிகவும் விரும்புவர். ‘‘அது வாழ்க்கையையே மாற்றிவிட்டது’’ என்பார்கள். ‘‘பயிற்சியின் பயன்களை நிறையப் பெற முடிகிறது’’ என்பார்கள். ‘‘மிகவும் மகிழ்ச்சியாய் ஈடுபட முடிகிறது’’ என்பார்கள். மறுபக்கம் ஒரு சில ஆர்வமில்லாதவர்கள், தேவையில்லாமல் பேசுவதாகவும் நினைத்திருக்கலாம்.
இனி சூரிய நமஸ்காரத்தின் அமைப்பை சற்று விரிவாகப் பார்க்கலாமா? இதுவும் கடினமானதல்ல; இது மிகவும் முக்கியமான ஒரு பயிற்சியும் கூட. நம் எல்லோருக்குமே தெரியும், இந்த உடல் எவ்வளவு முக்கியமானது என்று! அரிய படைப்பு என்று! அறிவியலில் உச்சம் தொட்ட பிறகும், எதை எதையோ உருவாக்கும் வல்லமை அடைந்த பிறகும், நம்மால் ஒரு மனிதரை உருவாக்க முடியவில்லை. உடலின் உறுப்புகள், ஒன்றை மற்றொன்றோடு இணைக்கும் இணைப்பு, இவற்றோடு மூளை, மனம், நரம்புகள், உணவு என்பது சக்தியாக மாறும் அதிசயம்… எத்தனை மகத்தான படைப்பு இந்த உடல்!
அப்படிப்பட்ட உடலினை உறுதி செய்ய நாம் இதுவரை செய்த முயற்சிகள்- பயிற்சிகள் என்ன? எத்தனை சதவீதம் அதற்காக செலவழித்திருப்போம்? முதலில் அதன் பெருமையை உணர்ந்துள்ளோமா?நாம் நமது உடலுக்கும் மனதிற்கும் எவ்வளவு முக்கியத்துவம் அளித்துள்ளோம்? அவை பற்றி தெரிந்து கொள்ளவோ, அவற்றின் ஆரோக்கியத்திற்காகவோ என்ன முயற்சிகள் எடுத்திருக்கிறோம்?
அவ்வப்போது இப்படியான கேள்விகளைக் கேட்டுக்கொண்டால், நல்ல மாற்றங்கள் ஏற்படும். குறைந்தது நாம் எங்கு இருக்கிறோம்; எப்படிச் செயல்படுகிறோம்; நமது நேரமும் உழைப்பும் சக்தியும் அறிவும் பணமும் எப்படி செலவாகிறது? நமக்காக ஓயாமல் எப்போதும் வேலை செய்யும், நாம் சொல்வதையெல்லாம் கேட்கும், குறிப்பாக எவ்வளவு தவறாகப் பயன்படுத்தினாலும் தாங்கிக் கொள்ளும் நமது உடலுக்கு இதுவரை என்ன செய்தோம்? என்கிற சின்னச்சின்ன கேள்விகளுக்கு பதில் தேட வேண்டும். அந்த பதிலில்தான் இருக்கிறது, நம் வாழ்வை மாற்றும் முயற்சிக்கான முதல் படி!
உடலினை உறுதி செய்ய நாம் இதுவரை செய்த பயிற்சிகள்-முயற்சிகள் என்ன? எத்தனை சதவீதம் அதற்காக செலவழித்திருப்போம்? முதலில் அதன் பெருமையை உணர்ந்துள்ளோமா?
Average Rating