விவாகரத்து செய்யாமல் விவாகம் செய்யலாமா? (மகளிர் பக்கம்)
அன்புத்தோழி,
எனக்கு வயது 38. பத்தாம் வகுப்புதான் படித்திருக்கிறேன். என் அத்தை மகனை திருமணம் செய்து கொண்டேன். ஓராண்டு எந்த பிரச்னையும், இல்லாமல் வாழ்க்கை நன்றாகவே சென்றது. அத்தை பையன் என்பதால் மாமியார் வீட்டில் மற்றவர்கள் சந்திக்கும் பிரச்னை எதையும் நான் சந்திக்கவில்லை. வாழ்க்கை இயல்பாகவே போய்க் கொண்டிருந்தது.இந்நிலையில் அவருக்கு கூட வேலை செய்யும் பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வந்தன. நான் நம்பவில்லை. காரணம் என் கணவர் என்னிடம் அன்பாகவே நடந்து கொண்டதுதான். ஆனால் சில நாட்களில் வீட்டுக்கு வருவது குறைந்தது.
வீட்டில் யார் கேட்டாலும், நான் கேட்டாலும் பதில் சொல்வதில்லை. அதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வந்தது. கேள்வி கேட்டால் அடித்து கொடுமைப்படுத்துவார்.திடீரென வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டார். வீட்டில் இருப்பவர்கள் அலுவலகத்திற்கு சென்று விசாரித்த போது, சண்டை போட்டு அனுப்பிவிட்டார். அதன் பிறகு அந்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்துவதாக கேள்விப்பட்டேன். இனி வாழ்க்கையே அவ்வளவுதான் என்று உடைந்துப் போனேன். இரண்டு ஆண்டுக்குள் என் வாழ்க்கையே முடிந்து விட்டது. அந்த நேரத்தில் அவரது தம்பிதான் ஆறுதலாக இருந்தார்.
அன்பாக பேசுவார். அப்போது அது எனக்கு தேவையாக இருந்தது. அந்த அன்பு எங்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது. நான் கர்ப்பமானேன். என்னை தனிக்குடித்தனம் வைத்தார். திருமணமும் செய்து கொண்டார். அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனால் அது எனக்கு அப்போது பெரிதாக தெரியவில்லை. கணவர் கைவிட்டுப் போன நேரத்தில் நடுத்தெருவில் நின்ற என்னை அவர் அன்புதான் மீட்டெடுத்தது. அவர் இல்லை என்றால் நான் எப்போதே இறந்துப் போயிருப்பேன். இப்போது எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எங்கள் விஷயம் அவர் மனைவிக்கு தெரிந்ததும் பிரச்னை ஆனது.
ஆனால் அவர் ‘எனக்கு 2 பேரும்தான் முக்கியம்’ என்று உறுதியாக இருந்ததால் பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனால் அவர் மனைவி என்னிடம் பேசுவதில்லை. நானும் பேசுவதில்லை. ஆனால் 2 குடும்பமும் நிம்மதியாக, வசதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அவரது முதல் மனைவிக்கும் குழந்தைகள் உள்ளன. இப்படி நிம்மதியாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென பிரச்னை. காரணம் என் முதல் கணவர். ஆம் திடீரென ஒருநாள் வீட்டுக்கு வந்தவர் ‘மனைவி’ என்று உரிமை கொண்டாடினார். அதற்கு நான் திட்டியதற்கு, ‘பணம் கொடு போய் விடுகிறேன்’ என்றார்.
நான், ‘முடியாது’ என்று சொன்னதற்கு, ‘நான்தான் உனக்கு சட்டப்படியான புருஷன். என்னை விவாகரத்து செய்யாமல் என் தம்பியை திருமணம் செய்து கொண்டாய். அது செல்லுபடி ஆகாது. நான் சொன்னதை கேட்கலனா என்னை ஏமாத்திட்டு கள்ளக்காதல் செய்கிறாய்னு போலீஸ்ல புகார் தந்து விடுவேன்’ என்று மிரட்டுகிறார். என் கணவர் இல்லாத நேரங்களிலும், வெளியில் பார்க்கும் இடங்களிலும், முதல் கணவர் மிரட்டுகிறார். அதனால் இப்போது நிம்மதி இழந்து தவிக்கிறேன். அவரை விவாகரத்து செய்யாமல் நான் 2வது திருமணம் செய்தது பிரச்னையாகுமா?
இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்படி திடீரென வந்து மிரட்டுவதை புகார் அளித்தால் ஏற்றுக் கொள்வார்களா? அவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகுதான் நான் திருமணம் செய்தேன். அது தவறா? அவருக்கும் குழந்தைகள் இருக்கின்றன. அவரை இப்போது விவாகரத்து செய்ய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? சட்டப்படி என் வாழ்க்கைக்கு பாதுகாப்பு கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும். எனக்கு வழிகாட்டுங்கள் தோழி.இப்படிக்கு,பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
நட்புடன் தோழிக்கு,
உங்கள் வாழ்க்கை மாறியதற்கான காரணங்களை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் செய்தது சரியா, தவறா என்பதை விட உங்கள் பிரச்னையில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றி மட்டும் சொல்கிறேன். ஒரு திருமண வாழ்க்கையில் இருந்து சட்டப்படி மண விலக்கு அல்லது விவாகரத்து பெறாமல் ஒருவர் இன்னொரு திருமணம் செய்ய முடியாது. அப்படி செய்தால் அது சட்ட மீறலாகும். அதை காரணம் காட்டி வாழ்க்கை துணையில் ஒருவர் சட்டப்படி விவாகரத்து பெற முடியும்.
அவர் இந்துவாக இருந்தால் இந்து திருமணச் சட்டம், கிறிஸ்தவர்களாக இருந்தால் இந்திய திருமணச் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம்,முஸ்லீமாக இருந்தால் ஷரியத் சட்டப்படி விவாகரத்து பெறலாம். நீங்கள் வேறு எந்த மதமாக இருந்தாலும் விவாகரத்து பெற சட்டத்தில் வாய்ப்பு உண்டு. கலப்பு மணம் செய்திருந்தால், பதிவுத் திருமணம் செய்திருந்தாலும் பிடிக்காத வாழ்க்கையில் இருந்து விலகி விவாகரத்து பெற முடியும். ஆனால் நீங்கள் முறையாக விவாகரத்து பெறாமல் 2வது திருமணம் செய்து இருக்கிறீர்கள். அது சட்டப்படி தவறு.
அதனை காரணம் காட்டி அவர் விவாகரத்து பெறுவது அல்லது விலகிச் செல்ல முடியுமே தவிர சட்டப்படி உங்களுக்கு தண்டனை வாங்கித் தர முடியாது. அதுமட்டுமல்ல உங்களுக்கு முன்பே உங்கள் முதல் கணவர் திருமணம் செய்திருக்கிறார். அவரது 2வது மனைவியின் மூலம் குழந்தைகள் இருக்கின்றன. அது மட்டுமல்ல பல ஆண்டுகள் இருவரும் பிரிந்து இருந்ததாக சொல்கிறீர்கள். அவருடன் வாழ்ந்த போது உங்களை அடித்து கொடுமைப்படுத்தி இருக்கிறார். அந்த காரணங்களை காட்டி இப்போதும் நீங்கள் விவாகரத்து வழக்கு தொடரலாம்.
விவாகரத்து பெறலாம். அதனால் விரைந்து விவாகரத்து வழக்கு தொடர்ந்து தீர்வு பெறுவது நல்லது. அதற்கு முன்பு ஒரு வழக்கறிஞர் ஆலோசனைகள் பெற்று, அவர் மூலம் வழக்கு தொடுக்கலாம். பொது வெளியில் சொல்ல முடியாத, விவாதிக்க முடியாத விஷயங்களை வழக்கறிஞரிடம் பேசும் போது சொல்லி ஆலோசனை பெற முடியும். மேலும் உங்கள் முதல் கணவர், இப்போது ஏதாவது தொல்லை கொடுத்தால், மிரட்டினால் உடனடியாக நீங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம்.
வழக்கறிஞர் ஆலோசனையின்படி புகார் மனு தயாரிக்கலாம். அவர் உதவியுடன் கூட காவல் நிலையம் சென்று புகார் அளிக்கலாம். இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லி முடிக்கிறேன். ஆணோ, பெண்ணோ நியாயமான காரணங்களுக்காக 2வது திருமணம் செய்வது தவறல்ல. ஆனால் அதற்கு முன்பு முதல் திருமணத்தில் இருந்து சட்டப்படி விலக வேண்டும். அதன் பிறகு, 2வது திருமணம் செய்வது நல்லது. அப்படி செய்வதின் மூலம் தேவையற்ற பிரச்னைகளை, சங்கடங்களை தவிர்க்க உதவும்.
தொகுப்பு: ஜெயா பிள்ளை
என்ன செய்வது தோழி பகுதிக்கான கேள்விகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி
‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை – 600 004
வாசகிகள் கவனத்துக்கு,
பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக… ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல…
Average Rating