‘நோ’வெறும் வார்த்தையல்ல, அது ஒரு முழு வரி!! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 18 Second

சமூகத்தின் ஆணாதிக்க மனநிலையை சாடி வெளியான இந்தி திரைப்படம் ‘பிங்க்’. தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ‘நேர்கொண்ட பார்வை’யாக வெளியாகியுள்ளது. மாஸ் ஹீரோ அஜித் நடித்திருப்பதால் வெகுஜன பார்வை கிடைத்திருக்கிறது. ஒரு ராக் ஷோ முடிவில் ஷரத்தா, அபிராமி, ஆண்ட்ரியா என மூவரும் அவர்களது நண்பன் விஷ்வா மற்றும் அவன் மூலம் அறிமுகமாகும் அவனது நண்பர்கள் அழைப்பில் பார்ட்டிக்குச் செல்கின்றனர்.

ஷரத்தாவை சிறு வன்முறைக்கு உட்படுத்தி பலவந்தப்படுத்த, மூவரும் சேர்ந்து தப்பிக்கிறார்கள். விளைவாக மிரட்டலும் நீடித்த தொந்தரவுக்கும் ஆளாகின்றனர். வழக்கு விசாரணைக்கு வர, அதே பகுதியில் குடியிருக்கும் அஜித் வழக்கை எடுத்துக் கொள்கிறார். சற்றே மனநிலை குலைந்த விதத்தில் இருக்கும் அவர் வழக்கை எடுத்துக்கொள்ள எல்லாமே மாறுகிறது. இப்போதுதான் சமூகத்தின் பார்வையாக, விவாதத் தளத்தில் படம் மாறுகிறது.

ஆணாதிக்கப் பார்வையிலேயே அனைத்தையும் பார்ப்பது, பெண்களின் விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல் இருப்பது, நவீனப் பெண்களின் மீதான கற்பனையான கதாபாத்திர பிம்பம், ஒழுக்க விதிகளை ஒரு பெண் மீறும்போது அவள் மீதான துச்சப் பார்வை எனக் கொட்டிகிடக்கும் பல குப்பை மனோபாவத்தை அலசுகிறது இப்படம். சமகால சமுதாயத்தைப் பற்றிய உரையாடல் படத்துக்கு பலம்.

குறிப்பாகப் படத்தின் முடிவில் அஜித் சொல்லும் ‘நோ வெறும் வார்த்தையல்ல, அது ஒரு முழு வரி’ என்பது ஒவ்வொரு ஆணும் சிந்திக்க வேண்டி விஷயம். எந்த ஒரு பெண், அவள் மனைவியோ, காதலியோ, விலைமகளோ… யாராக இருந்தாலும் அவளின் முழு அனுமதி இல்லாமல், அவரை தொடுதல் மிகப்பெரிய குற்றம். அவள் மறுத்தால் அடுத்த நிமிடம் எந்த ஒரு ஆணும் அவளை வற்புறுத்தக்கூடாது. அதாவது ஒரு பெண், ‘நோ என்று கூறினால் நோ’ – தான்.

சமுதாயத்தில் ஒரு பெண் பாதிக்கப்பட்டு இருந்தால், அவள் குற்றம் சுமத்திய பிறகு, அது அவள் மீதே திசை திரும்புவது துரதிருஷ்டவசமானது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு பெண்ணிற்கு அமையும் போது, அவள் மட்டுமின்றி அவளை சுற்றியுள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் அளிக்க சென்றால் அப்பெண்ணின் புகாரின் சாரம் என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன் அவள் உடை, அலங்காரம் வைத்து எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு படத்தில் இடம் பெற்றிருக்கும் காட்சி முக்கிய சான்று.

அதிகாரவர்க்கம் காவல்துறையை காலங்காலமாக எவ்வாறு பயன்படுத்தி வருகிறது என்பதன் நீட்சியாகவும் சில காட்சிகள் அமைந்துள்ளன. கோர்ட்டில் அஜித் கூறும் நான்கு ரூல்கள் பெண்ணுக்கானதாக இருந்தாலும் அதை உணர வேண்டியது ஆண்கள் தான். கொஞ்சம் உதட்டுச்சாயம் அதிகம் பூசிய பெண் எவ்வாறு இந்த சமுதாயத்தால் பார்க்கப்படுகிறாள். ஒரு பெண் மதுக் குடிப்பதை விமர்சிப்பது மற்றொரு மது குடிக்கும் ஆண்.

தனியாக ஒரு பெண், ஆணோடு வந்தாலோ, சிரித்தும்-தொட்டும் பழகினாலோ அவள், எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கிறாள் என்கிற மனோபாவத்தில்தான் ஆண்களின் மனநிலை இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுமிடத்தில் ஒவ்வொரு ஆணின் சுயப்பரிசோதனை ஆரம்பமாகிறது. பேசும்போது ‘ஸ்கோர்’ செய்யும் அஜித், மெளனங்களிலும் முகபாவங்களிலும் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.

அஜித் நடிப்பைத் தாண்டி இத்தகைய கருப்பொருளை எடுத்து நடித்திருப்பதற்கு தனி பாராட்டு. பெண் உரிமை குறித்த இன்றைய காலக்கட்டத்துக்கு தேவையான மிக முக்கியமான வாதத்தை ஒரு உச்ச நட்சத்திரத்தின் வாயிலாக உரக்க பேசியதில் உயர்ந்து நிற்கிறது. சினிமா என்பதையும் கடந்து பார்வையாளனை சமகால விவாதத்துக்குள் அழைத்து சென்றிருக்கிறது.

ஒரு குற்றத்துக்கு வழங்கப்படும் நீதிதான் அதே போன்ற மற்றொரு குற்றம் நடக்காமல் இருப்பதற்கான பாடம்! இங்கு எல்லோரின் துயரமும் அவரவரோடே விடப்படுகிறது. அப்படி விடக்கூடாது என்பதை அழுத்தமாக சொல்லிய விதத்திலும் இது முக்கியமான படம். காலங்கள் மாறினாலும் பெண்கள் எதை, எப்படி, எவ்வாறு ஆடை உடுத்த வேண்டும், பழக வேண்டும் என இந்தச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் எழுதப்படாத சட்டங்களை உறுதியோடு கேள்வி கேட்பதாலே இது பெண்களின் மீதான அக்கறை சார்ந்ததாகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பார்த்தவுடன் கலங்க வைக்கும் 05 குழந்தைகள்!! (வீடியோ)
Next post I will go out!! (மகளிர் பக்கம்)