ஒன்பது வயதில் உலக சாதனையாளர்கள்… கவுரவ டாக்டர் பட்டம்…கலக்கும் ட்வின்ஸ்! (மகளிர் பக்கம்)
“உன்னோட வருங்காலக் கனவு என்ன?” “ஒலிம்பிக்கிலே கோல்டு மெடல் வாங்கணும். ஐ.ஏ.எஸ் படிச்சி கலெக்டரா ஆகணும்” என்கிறார் ஸ்ரீவிசாகன். “உனக்கு?”“நானும் ஒலிம்பிக்லே கோல்டு மெடல் வாங்கணும். எங்க தாத்தா ஒரு நாள் ஹார்ட் பிராப்ளம் வந்து செத்துட்டாரு. நான் நல்லாப் படிச்சி டாக்டர் ஆகணும். எல்லாருக்கும் உதவிப் பண்ணணும்” என்கிறார் ஸ்ரீஹரிணி.ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணியும் இரட்டையர்கள். ஒன்பது வயதுதான் ஆகிறது. ஒரே பிரசவத்தில் பிறந்த அண்ணன் தங்கையான இவர்கள் சமீபத்தில் உலக சாதனை படைத்திருக்கிறார்கள். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்கள் முருகானந்தம், பிரியா தம்பதிகள். இவர்களுக்கு 2010 ல் ஒரே பிரசவத்தில் இரட்டையர்களாக பிறந்தார்கள் ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணியும். தற்போது இருவருக்கும் ஒன்பது வயதாகிறது. கராத்தே என்னும் தற்காப்புக் கலைக்காக இளம் வயதிலே இரண்டு பிளாக் பெல்ட் வாங்கி இருக்கிறார்கள். இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் பங்கெடுத்து இருநூறுக்கும் மேற்பட்ட விருதுகளையும் பட்டங்களையும் வாங்கிக் குவித்து இருக்கிறார்கள்.
சமீபத்தில் உலக சாதனையாளர்கள் பட்டியலில் இவர்களின் பெயரும் இடம் பெற்றிருக்கக் காரணம் இளம் வயதிலே சர்வதேச அளவில் ஏராளமான விருதுகளை வாங்கி இருப்பது தான். ‘வில் மெடல் ஆஃப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ (will medal of world records) மற்றும் ‘வில் மெடல் கிட்ஸ் ரெகார்ட்ஸ்’ (will medal kids records ) ல் உலக சாதனையாளர் என பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். இந்த சாதனைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக ‘யூனிவர்செல் அச்சூவர்ஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்’ (universal achievers book of records ) மற்றும் ‘ஃபூச்சர்ஸ் கலாம் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்’ (future kalam book of records) ஆகியவற்றிலும் உலகச் சாதனையாக பதியப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போது ஸ்ரீவிசாகன் ஸ்ரீஹரிணி ஆகிய இருவரும் குறுகிய நேரத்தில் கண்களைக் கட்டிக்கொண்டு பல்வேறு விதமான தற்காப்புக் கலைகளை நிகழ்த்திக் காட்டினர். இவர்கள் நிகழ்த்திக் காட்டிய தற்காப்புக் கலை இதுவரை யாரும் நிகழ்த்தாத புது விதமான தற்காப்புக் கலையாக இருந்ததால் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பாக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்த இரட்டையர்களின் குரு வி.ஆர்.எஸ். குமார் கடந்த இருபத்தைந்து வருடமாக ஏராளமான மாணவ, மாணவிகளை உருவாக்கி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் இவருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. “என் குழந்தைகளின் கராத்தே பயிற்சிக்கான பொறுப்பை நான் கவனித்துக்கொள்கிறேன். பள்ளிப்படிப்பை என் மனைவி கவனித்துக் கொள்கிறார்” என்கிறார் குழந்தைகளின் தந்தை முருகானந்தம்.“என் கணவருக்கு ஸ்போர்ட்ஸ் ரொம்பப் பிடிக்கும். அதனாலே எங்க பசங்க ரெண்டு பேருக்கும் எதாவது ஒரு விளையாட்டை சொல்லிக் கொடுக்கணும்னு நினைச்சோம். ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணியும் ஒரே நேரத்திலே பிறந்தாங்க. அதனாலே பையன், பொண்ணுன்னு வித்தியாசம் பார்க்காம வளர்கணும்னு முடிவு பண்ணோம். ரெண்டு பேரும் சின்ன வயசிலே ரொம்பத் துறுதுறுன்னு இருப்பாங்க. முதல்லே ஸ்விம்மிங் கிளாஸ் அனுப்புனோம். அது ரெண்டு பேருக்குமே செட் ஆகலை. அதனாலே கராத்தே கிளாஸ் சேர்த்துவிட்டோம்.
மூணு வயசிலே இருந்து கராத்தே கிளாஸ் போறாங்க. ரெண்டு பேரும் சின்ன வயசிலே ரெண்டு பிளாக் பெல்ட் வாங்கி இருக்காங்க. ஒவ்வொரு முறையும் பதக்கம் பரிசுன்னு வாங்கிட்டு வரும்போது ரொம்ப சந்தோசமா இருக்கும். என் பையன் கராத்தே கிளாஸ் மட்டும் இல்லாம. செஸ் கிளாசுக்கும் போறான். என் பொண்ணு ஓவியத்திலேயும் ரொம்ப ஆர்வம். அப்பப்போ கட்டுரையும் எழுதுவா. என் கணவர் நினைச்ச மாதிரி ரெண்டு பேரும் ஸ்போர்ட்ஸ்லே வளர்ந்துட்டு வர்றாங்க. ஒலிம்பிக்லே ரெண்டு பேருமே கோல்டு மெடல் வாங்குவாங்கன்னு நம்பிக்கை இருக்கு” என்கிறார் பிரியா.முருகானந்தம் தொடர்ந்தார்.“எங்க குழந்தைகளோட படிப்பு பாதிக்கக் கூடாதுன்னு கராத்தேவுக்கு நானும். படிப்புக்கு என் மனைவியும்னு பொறுப்பை எடுத்துக்கிட்டோம். காலையிலே ஐந்து மணிக்கு எழுந்து கராத்தே கிளாஸ் போயிருவாங்க. ரெண்டு மணி நேரம் பயிற்சி எடுத்துட்டு அப்புறம் ஸ்கூல் போவாங்க. படிப்பிலேயும் ரொம்ப சூட்டியா இருப்பாங்க. ஸ்கூலிலே நடக்கிற எல்லா போட்டியிலேயும் கலந்துகிட்டு பரிசு வாங்கிருவாங்க. கராத்தே போட்டிக்காக வெளியூருக்குக் கூட்டிட்டு போகும் போது சில நேரத்திலே இவங்களை விட பெரிய வயசா இருக்கிற போட்டியாளர் இருப்பாங்க.
அந்த போட்டியிலேயும் அசராம ஜெயிப்பாங்க. எங்க ரெண்டு பசங்களும் ஒலிம்பிக்ல கலந்துகிட்டு இந்தியாவுக்கு தங்க மெடல் வாங்கி தரணும் அது தான் எங்களோட லட்சியம்” என்று முடித்துக் கொண்டார்.குழந்தைகளுக்கு கராத்தே கற்றுக் கொடுக்கும் மாஸ்டர் வி.ஆர்.எஸ். குமாரிடம் பேசினோம்.“ஸ்ரீவிசாகன் ஸ்ரீஹரிணி ரெண்டு பேரும் ஆறு வருசமா எங்கிட்டே கராத்தே கத்துக்கிறாங்க. எப்பவுமே சரியான நேரத்துக்கு கிளாஸ் வந்துடுவாங்க. இவ்ளோ சின்ன வயசிலே ரெண்டு பிளாக் பெல்ட் வாங்குறது சாதாரண விசயமில்லை. பல வெளிநாடுகள்லே நடந்த கராத்தே போட்டியிலே ஜெயிச்சி இருக்காங்க. என்னோட மாணவர்கள் ஒவ்வொரு இடத்திலேயும் ஜெயிக்கும் போது பெருமையா இருக்கும். இவங்க ரெண்டு பேரும் உலக சாதனையிலே இடம் புடிச்சி இருக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்குது. இந்த குழந்தைகளோட உழைப்புக்கு கண்டிப்பா கோல்டு மெடல் கிடைக்கும்” என்றார்.
Average Rating