கண்களில் உண்டாகும் காயங்கள்!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 17 Second

கண்கள் பாதுகாப்பாய்தான் இருக்கின்றன. கண் இமைகள், கண்ணைச் சுற்றியுள்ள கொழுப்புப் படலம் மற்றும் கபால எலும்பின் கண்களுக்கான பாதுகாப்பறை(Orbital cavity) என்று பல அடுக்கு பாதுகாப்பைக் கண்கள் பெற்றிருக்கின்றனதான்.
ஆனாலும், இவை அனைத்தையும் தாண்டி உடலின் மற்ற உறுப்புகளைப் போலவே கண்களும் காயங்களின் தாக்குதலுக்கு இலக்காக இருக்கின்றன. பெருகி வரும் வாகன விபத்துக்கள், சூழல் மாசுபாடு, வேலைச் சூழல் இவற்றால் கண்களில் ஏற்படும் காயங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வு எல்லோருக்குமே அவசியம்.

Foreign bodies என்கிற அயல் பொருட்களினால் ஏற்படுவது கண்களில் உண்டாகும் காயங்களில் முதன்மையானது. குறிப்பாக, வாகனங்களில் பயணம் செய்பவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னை கண்ணில் தூசி விழுதல். சாலையில் செல்லும்போது காற்றின் மூலமாகக் கண்ணில் விழும் தூசிகள் பெரும்பாலும் கண்ணின் மேற்பரப்பில் தங்கிவிடுகின்றன. கண்களின் இரு ஓரங்களிலும் இவை தேங்கினால் அவற்றை அகற்றுவது எளிது.

பல சமயம் கண்களின் மேல் இமைகளில் தூசி தங்கிக் கொள்கிறது. இமைகளைத் தூக்கி அதை எளிதாக அகற்றி விட முடியும். தூசி விழுந்த உடன் கண்ணை கைகளால் தேய்த்தால் கருவிழியின் மேற்பரப்பில் அது ஒட்டிக்கொள்ளும். மருத்துவரிடம் சென்றால் கண்ணின் மேற்பரப்பை மறத்துப் போகச் செய்வதற்காக ஒரு சொட்டு மருந்து போடுவார். ஓரிரு நிமிடங்களில் கண்கள் மதமதப்பு உணர்வை பெற்றவுடன் நுண்ணோக்கி மூலமாகப் பார்த்து மெல்லிய கருவி மூலம் தூசியை அகற்றி விடுவார்.

கண்ணில் விழும் அயல் பொருட்களை முடிந்த அளவு விரைவாக அகற்றிவிட வேண்டும். கிருமித்தொற்றும், இரும்பு பொருட்களினால் கண்ணில் உண்டாகும் வேதியியல் மாற்றங்களும் பார்வையைக் கடுமையாக பாதிக்க வாய்ப்புண்டு. அதுமட்டுமல்ல வலி, வீக்கம், நீர் வடிதல் போன்ற அறிகுறிகளும் நெடுநாட்களுக்கு இருக்கும்.

சிகிச்சை பெறத் தாமதமாக ஆக குணப்படுத்தும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும். தொழிற்சாலைகள், வெல்டிங், லேத் பட்டறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பல சமயம் வேலையின்போது இரும்புத் துகள்கள் கண்ணில் பட்டுவிடும். எந்திரத்தின் வேகத்தினால் துகள்கள் வெகு வேகமாகக் கண்களை வந்தடைந்து, இமைகளை மூடும் நேரத்திற்குள் கருவிழியைத் தாக்கி விடுகின்றன.

மேலும் கருவிழியின் உட்புறத்திற்கும், கருவிழியைத் தாண்டி கண்ணின் மற்ற பகுதிகளுக்கும் கூட இரும்புத் துகள்கள் சென்று தங்கிவிடுகின்றன. கண்ணின் மேல் புறத்தில் இருக்கும் துகள்கள் வலி, எரிச்சலை உண்டு செய்வதால் நோயாளிகள் விரைவில் மருத்துவரை நாடி விடுவர். ஆனால், உட்புறம் சென்ற துகள்கள் உடனடி தொந்தரவுகள் எதையும் அளிக்காததால் புறக்கணிக்கப்பட்டு வெகு நாட்கள் கழித்து சில பிரச்னைகளை உருவாக்குகின்றன.

சில சமயம் கண்புரை அறுவை சிகிச்சையின் போது கூட இத்தகைய பொருட்கள் கண்களின் உட்புறங்களில் இருப்பதைக் காணலாம்.கண்களின் உள்ளே வரை சென்று தாக்கக்கூடிய அயல் பொருட்களுக்கான மற்றொரு முக்கிய காரணம் பட்டாசுகள். பட்டாசுகளைப் பற்ற வைத்துவிட்டு அவை வெடிக்கத் தாமதமானால் தன்னிச்சையாக அருகில் போய் பார்ப்பது இயல்பு. அப்போது திடீரென பட்டாசு வெடித்தால் அதிக அழுத்தத்துடன் அடைத்து வைக்கப்பட்டுள்ள வேதிப் பொருட்கள் வெடித்து சிதறும் போது நூற்றுக்கணக்கான துகள்கள் கண்களின் உள்ளும் புறமும் தாக்க வாய்ப்புண்டு.

இவ்வாறான சூழலில் துரிதமான மற்றும் முழுமையான சிகிச்சை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். இரும்பு, தாமிரம் போன்ற உலோகங்களாலான அயல் பொருட்கள் கண்களின் தசைகள் உள்ளே வேதியியல் மாற்றங்களை நிகழ்த்தி மாறாத சில விளைவுகளை
ஏற்படுத்தி விடுகின்றன.

கண்களுக்கு காயம் விளைவிக்க வாய்ப்பு அதிகம் உள்ள மற்றொரு முக்கிய தொழில் விவசாயம். வயலில் வேலை செய்யும்போது செடிகளின் இலை, குச்சிகள், மாட்டின் வால், வண்டு, பூச்சிகள் போன்றவற்றால் காயம் ஏற்பட வாய்ப்பு அதிகம். உயிரியல் பொருட்களான(Vegetable matter) இவற்றால் கருவிழியில் ஏற்படும் காயங்களில் எளிதில் பூஞ்சைக்காளான் கிருமி வளர்ந்து விடுகிறது.

பாக்டீரியாக்களும் தாக்க வாய்ப்புண்டு. இதனால் சிறிதாக இருக்கும் காயம் விரைவில் பெரிதாகி சீழ்பிடித்து கண்களின் உட்புறத்திற்கும் பரவுகிறது. பார்வையை முற்றிலும் பாதித்து விடுகிறது. எனவே கண்களில் எந்தக் காயம் பட்டாலும் உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம்.

குழந்தைகள் விளையாடும்போதோ, விளையாட்டாகச் சண்டையிடும்போதோ பேனா, பென்சில் போன்றவை அல்லது விரல் நகங்கள் கண்களில் பட வாய்ப்புள்ளது. அறியாமை காரணமாக குழந்தைகள் இவற்றை பெரிதுபடுத்துவதில்லை. சில சமயம் பெற்றோர் அடித்து விடுவார்கள், திட்டி விடுவார்கள் என்று பயந்தும் இப்படிப்பட்ட சிறு காயங்களைக் குழந்தைகள் மறைத்து விடுவார்கள். விரல் நகம், பேப்பர் முனை இவற்றால் கருவிழியின் மேற்பரப்பில் உள்ள செல்கள் பாதிக்கப்படும். இதனால் வெகு நாட்கள் வரைக்கும் காலையில் எழும் பொழுது கண்ணில் நீர் வடிவது, வெளிச்சம் பார்க்கும்போது கண்கள் கூசுவது போன்ற அறிகுறிகள் தென்படும்.

இந்த அறிகுறிகளையும் முன்பு எப்போதோ பட்ட காயத்தையும் தொடர்புபடுத்திப் பார்க்காமல் அப்படியே விட்டு விடுவதும் உண்டு இப்படிப் பட்ட மெல்லிய காயங்கள் ஏற்பட்டால் தேவையான மருந்துகளைப் பயன்படுத்தி இரண்டு நாட்களுக்குக் கண்களை இறுக்கமாகக் கட்டுப் போட்டு வைத்திருக்க மருத்துவர் அறிவுறுத்துவார். இதை முறையாக செயலாற்றினால் கருவிழிக் காயம் முழுதாக ஆறிவிடும்.

சென்ற வாரத்தில் சந்தித்த இரண்டு நோயாளிகளைப் பற்றிக் கூறுகிறேன். இருபது வயது இளைஞர் ஒருவர். வெல்டிங் பட்டறையில் வேலை செய்பவர். ஒரு மணி நேரத்திற்கு முன்பு வெல்டிங் செய்யும்போது கண்களில் பிசிறு பட்டதாகக் கூறி வந்தார். உடனடியாகக் கண்களில் சொட்டு மருந்து போடப்பட்டு தூசி அகற்றப்பட்டது. மூன்று நாட்களுக்கு மட்டும் இரண்டு வேளை ஊற்றுவதற்காக சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இனிமேல் கண்ணாடி அணிந்து வெல்டிங் செய்யுமாறு அறிவுறுத்தினேன். முற்றிலும் குணமாகி அடுத்த நாள் வேலைக்கு சென்றுவிட்டார் அவர்.

அடுத்த நாள் இன்னொரு நோயாளி. 60 வயது மூதாட்டி. ஒரு வாரம் முன்பு கண்ணில் குச்சி லேசாகக் குத்தியதாகக் கூறி வந்தார். அடிபட்ட அன்று கண்களில் சிறிது விளக்கெண்ணெய் ஊற்றியதாகவும் பின்பு இரண்டு நாட்களுக்கு கடையில் ஒரு மருந்தை வாங்கிப் போட்டதாகவும், அதன்பின் ஒரு சிகிச்சையும் அளிக்கவில்லை என்றும் இப்போது வீக்கம் அதிகமாகி, பார்வை முற்றிலும் குறைந்ததாகவும் கூறினார். பரிசோதித்தபோது கருவிழியின் காயத்தில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு கருவிழியில் ஓட்டை விழுந்திருந்தது. உள்ளிருக்கும் சில பகுதிகள் சீழ் பிடித்து பாதித்திருந்தன.

அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து மருந்துகள் ஊசிகள் அளிக்கப்பட்டது. கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்தாலும் பார்வை கிடைக்க வாய்ப்பு இல்லை என்பது விளக்கப்பட்டது.

இந்த இரண்டு சம்பவங்களும் கூறுவது என்ன? போதிய முன் ஜாக்கிரதையால் இவற்றைத் தவிர்த்திருக்க முடியும். உடனடி சிகிச்சை மூலம் உடனடி தீர்வு பெறலாம். அறுவை சிகிச்சையின் செலவு, வீண் அலைச்சல், பார்வை இழப்பு இவற்றைத் தடுத்திருக்கலாம் அல்லவா?!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை!! (மருத்துவம்)
Next post ஒன்பது வயதில் உலக சாதனையாளர்கள்… கவுரவ டாக்டர் பட்டம்…கலக்கும் ட்வின்ஸ்! (மகளிர் பக்கம்)