என் பாதை தனித்துவமானது!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 20 Second

கிராமப் பகுதிகளில் இருக்கும் அதிகம் படிக்காத அல்லது படிப்பறிவே இல்லாத பெண்கள் மற்றும் வாழ்வாதாரத்தை தேடும் மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள், முதியவர்களை ஒருங்கிணைத்து மெட்ராஸ்4 என்டர்பிரைசஸ் (Madras4 Enterprises) என்கிற சமூகம் சார்ந்த ஒரு நேரடி மற்றும் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார் கவிதா நரசிம்மன்.

அதென்ன மெட்ராஸ்4 என்ற நம் கேள்விக்கு, ‘‘எனது நிறுவனம் இருக்கும் இடம் மைலாப்பூர். மைலாப்பூரின் பின்கோடு எண் 4 அதனால் இந்தப் பெயரை அடையாளமாக்கினேன்’’ எனச் சிரித்தவாரே மேலும் பேசத் தொடங்கினார்.‘‘நான் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் காமர்ஸ் கிராஜுவேஷன் முடித்து ஐ.டி. நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் 7 ஆண்டுகள் பணியில் இருந்தேன். ஆரம்பத்தில் உணவகம் தொடங்கி நடத்தும் கனவிருந்தது. அப்போது சென்னையில் இருந்து ஏற்காட்டிற்கு செல்லும் சூழல் ஏற்பட, அங்கே என் கனவு மெய்பட்டு, ஏற்காட்டில் ஒரு உணவகத்தை தொடங்கி நடத்தினேன். மீண்டும் சென்னை வர வேண்டிய சூழலில் உணவகத்தை மூடும் நிலை.

தொடர்ந்து சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கும் வித்யா சாகர் சிறப்புப் பள்ளியில் பி.ஆர். மற்றும் கம்யூனிகேஷன் பண்ட் ரெய்சிங் பணியில் இருந்தேன். கிராமப் புறங்களில் இருக்கும் விளிம்பு நிலை மக்களிடையே பயிற்சிப் பட்டறைகளை நடத்த பயணம் செய்ய வேண்டி இருந்தது. அப்போது நிறைய மாற்றுத் திறனாளிகளை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அவர்களிடம் திறமைகள் இருப்பதைக் கவனித்தேன். கூடவே தன்னம்பிக்கையும். தங்கள் திறமையால் அவர்கள் எதையோ ஒன்றை முயற்சித்து அழகாக உருவாக்குகிறார்கள். ஆனால் உருவாக்கியதை சந்தைப்
படுத்தவோ, விற்பனை செய்யவோ அவர்களுக்குத் தெரியவில்லை.

தொடர்ந்து புற்று நோயாளிகளை ஊக்குவிக்கும் ஒரு புராஜெக்டிலும் இருந்தேன். இந்தப் பயணமும் என் அடிமனதில் பாதிப்பை ஏற்படுத்த, நான்கு பேருக்கு உதவுகிற மாதிரி ஏதாவது செய்யணும் என்ற எண்ணம் வரத் தொடங்கியது. விளைவு சென்னை4 என்டர்பிரைசஸ். நண்பர் ஒருவரை இணைத்துக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டேன்’’ என மீண்டும் வெற்றிப் புன்னகை காட்டினார் கவிதா.

‘‘இது வணிகம் சார்ந்த நிறுவனம் கிடையாது. ஆரம்பிக்கும்போதே உற்பத்தி நிறுவனமாக இருக்கக் கூடாது என்பதிலும் உறுதி காட்டினோம். இது விளிம்புநிலை மக்களுக்கான முன்னெடுப்பு. பின்தங்கிய சமூகத்தின் வளர்ச்சிக்கான வழிகாட்டல். அவர்களது நிலையான வாழ்வாதாரத்திற்காக, அவர்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் அவ்வளவே.

தொடர்ந்து திருநெல்வேலி ஆயக்குடி அமர்சேவா சங்கம் தொண்டு நிறுவனத்தை அணுகியபோது, அங்கு போலியோ மற்றும் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் தையல் தொழிலில் இருப்பதை பார்க்க நேர்ந்தது. அவர்கள் தைக்கிறார்கள். ஆனால் தயாரிப்புக்கான கான்செப்ட் மற்றும் பேட்டன்களை உருவாக்கத் தெரியாமல் இருந்தார்கள். அவர்களையும் சேர்த்தே கையில் எடுத்தேன். திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஆறு கிராமங்களைத் தேர்வு செய்தோம். துவக்கம் ரொம்பவே சேலஞ்சிங்காக இருந்தது.

பிளாஸ்டிக் அரக்கனை வேரறுக்க உலகமே போராடும் நிலையில், நானும் எனது பங்கை இதில் முன்னெடுத்தேன். பிளாஸ்டிக் கலப்பு அறவே இல்லாத பொருட்களை அவர்களிடம் கேட்டு வாங்கி விற்பனை செய்ய முடிவு செய்து, கைப்பைகள் தயாரிப்புக்கான துணியில் பேட்டர்ன் மற்றும் டிசைனுக்கான கான்செப்டை உருவாக்கி, அந்தந்த டே-கேர் சென்டரின் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி ஆலோசனைகளை வழங்குவேன். அவர்கள் அவர்களிடத்தில் விளக்கி, வெட்டி அனுப்பிய துணிகளை தைத்து வாங்கி, திரும்பவும் எனக்கு அனுப்பி வைப்பார்கள்.

பருத்தியாலான கைப்பைகள், பெண்கள் அணியும் பட்டியாலா, கைத்தறி புடவைகள், பருத்தியாலான சானிட்டரி நாப்கின்கள், கொட்டாங்குச்சித் துண்டுகளால் செய்யப்படும் விளையாட்டுப்பொருட்கள், கொட்டாங்குச்சி பட்டன்கள், தைக்கும்போது வேஸ்டாகும் துணிகளைக் கொண்டு பெண்கள் அணியும் ஆபரணங்கள், துணியால் மெஸ் செய்யப்பட்ட நோட் கவர், நோட்பேட், கீ செயின், மொபைல் மற்றும் விசிட்டிங் கார்டு ஹோல்டர், கிளிப்புகள் என அவர்களிடம் இருந்து பல தயாரிப்புகள் எங்களுக்கு கிடைத்தன.

மேலும் வெஜிடபிள் டையிங் பயன்படுத்தி பேட்ச் வொர்க் துப்பட்டாக்கள் தயாரிப்பது, சாவிக் கொத்து, புக் மார்க் போன்றவற்றை சொல்லிக் கொடுத்து தயாரிக்க வைக்கிறோம்,.விற்பனையாகும் வரை காத்திருக்காமல், தயாரிப்புகளை பெறும்போதே விலை கொடுத்து வாங்கிவிடுவோம். வாங்கியதும் முகநூலிலும் பதிவேற்றி விடுவேன்’’ எனும் கவிதா அவர்களது உழைப்புக்கு நிறைய அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது என்றார்.‘‘ஒவ்வொரு தயாரிப்பில் இருந்து வரும் வேஸ்ட்களை வைத்து அடுத்தடுத்து பொருட்களை தயாரித்தே இப்போது எங்களிடம் 60க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் விற்பனைக்கு உள்ளது. பல் துலக்கும் பிரஷ்ஷில் துவங்கி, டேபிள் ஸ்பூன், ஸ்ட்ரா என எல்லாமே ஈகோ பிரெண்ட்லி தயாரிப்புகள்.

இதனால் கிராமப்புறம் சார்ந்து 55க்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்தும் எண்ணம் உள்ளது. பொருட்கள் வண்ணம் மாறாமல் தரத்தோடு இருப்பதாகச் சொல்லி வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆர்டர்கள் நிறைய வரத் தொடங்கி உள்ளன. சென்னை அயப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் போன்ற ஒதுக்குப்புறமான பகுதிகளில் இருக்கும் படிக்காத பெண்களையும் ஒருங்கிணைத்து டெய்லரிங் யூனிட்களை அமைத்து, ஆர்டரைப் பொருத்து பைகளைத் தயாரிக்கிறோம்.

பார்வைக் குறைபாடு உடையவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், வீல்சேர் யூசர், வாய் பேச முடியாத காதுகேளாதோர் என அனைவரையும் இதில் இணைக்கிறோம். எங்களிடம் கிடைப்பதில் 80 சதவிகிதம் மாற்றுத் திறனாளிகள் தயாரிப்புகளே. 20 சதவிகிதம் குடும்பப் பின்னணியில் பாதிப்படைந்த பெண்கள் இதில் இருக்கிறார்கள். சில முதியவர்களும் அடக்கம்.

முதியவர்களைப் பயன்படுத்தி பாரம்பரியம் குறையாத கூந்தல் தைலம், கரிசலாங்கண்ணி, பாதாம் எண்ணெய், வெந்தயம், பூந்திக்கொட்டை கொண்டு தயாரான இயற்கை சீயக்காய் பொடி, பயத்தமாவு, வெந்தயம், கஸ்தூரி மஞ்சள், வேப்பிலை, ஆலுவேராவில் தயாரான குளியல் சோப்பு, ஷாம்பு கட்டிகளும் தயாராகிறது. கெமிக்கல் கலக்காத சமையல் மசாலாப் பொடி வகைகள், முளைகட்டிய உலர் தானிய மாவு வகைகளையும் ஆர்டரின்பேரில் செய்து தருகிறோம். கல்யாண தாம்பூல பை ஆர்டர்கள் நிறைய எங்களுக்கு வருகிறது. கெமிக்கல் பயன்படுத்தக்கூடாது என்ற அழுத்தமான முன்னெடுப்பில் பைகளில் பெயர்களை பிரிண்டிங் செய்து தருவதில்லை.

இதனால் ஆர்டர்கள் வராமல் போனாலும் பரவாயில்லை’’ என உறுதி காட்டியவர், ‘‘பிளாஸ்டிக்கில் தயாரான எந்தப் பொருட்களும் எங்களிடத்தில் இல்லை. 15 ரூபாயில் தொடங்கி எங்களிடம் வாங்குவதற்கு வெரைட்டிகள் நிறைய உள்ளது. என்னுடைய சென்னை நிறுவனத்தின், விற்பனை பிரிவில் இருக்கும் சத்தியா மற்றும் தமிழ் இருவருமே தீக்காயம் அடைந்த (burning survivor) பெண்கள். எங்கள் மெட்ராஸ்4 நிறுவனத்தை தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிறது.

நலிவடைந்த மக்களது தயாரிப்பின் சாம்பிள்களை இங்கு காட்சிக்கு வைத்துள்ளோம். எங்களைப் பற்றி ஆன்லைனில் அறிந்து வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வந்து பார்த்துச் செல்கிறார்கள். லாபம் என்ற நோக்கத்தைத் தாண்டி, இதை தயாரிப்பவர்கள் பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகள். அவர்களுக்கான வருமானம் இது. பணம் சம்பாதிப்பதல்ல எங்கள் நோக்கம்’’என முடித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரவுக்கு ஆயிரம் கண்கள்!! (மகளிர் பக்கம்)
Next post ஒருநிமிடம் உறையவைக்கும் வினோதமாக தனித்து வாழும் மக்கள் ! (வீடியோ)