யாழ்நரகத்தில் தீர்மானிக்கப்படும் சில கூட்டணிகள் !! (கட்டுரை)

Read Time:7 Minute, 19 Second

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டால், கடந்த வாரம் ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து செயற்பட உடன்பட்டனர். ஆறு கட்சிகளுடன் தொடங்கிய பேச்சுவார்த்தை, இறுதியில் ஐந்து கட்சிகள் உடன்பட்ட ஆவணம் ஒன்றில் கையொப்பமிடுவதுடன் நிறைவுற்றது.

இந்த இணைவு எதைச் சாதிக்கப்போகிறது என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்தாலும் இதை ஒரு நல்ல தொடக்கமாகக் கருதியோரும் உண்டு. தமிழ்க்கட்சிகள் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளன என்று மகிழ்ந்தோரும் உண்டு.

இந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அதிககாலம் நிலைக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை, கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனின் கூற்றொன்றை, மேற்கோள் காட்டியிருந்தது. சுமந்திரன், “ஐந்து கட்சிகள் உடன்பட்ட ஆவணம், ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தையின் அடிப்படையாகக் கொள்ளப்பட மாட்டாது. இதை நாம், எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் அனுப்பவில்லை. இவ்வாவணம் பேச்சுகளின் போது, முக்கிய இடம் பிடிக்காது” என்று தெரிவி
த்திருந்தார்.

இது புதிதல்ல. ஆனால் இக்கூற்று, சில கேள்விகளை எழுப்புகிறது. முதலாவது, பல்கலைக்கழக மாணவர்கள் கட்சிகளை இணைத்துப் பேச்சுகளை நடத்துவதற்கு அடிப்படையாக இருந்தது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்கள் வாக்களிப்பது என்ற வினாவுக்கு விடை தேடுவதே ஆகும். அதன் அடிப்படையிலேயே, இந்த ஆவணம் கையொப்பமிடப்பட்டது. இன்று இந்த ஆவணம், ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேசுவதற்கான ஆவணம் இல்லை என்றால் இவ்வாவணம் எதற்கு?

சுமந்திரன் குறிப்பிடுவது போல, ‘இதிலுள்ள கோரிக்கைகள் புதியவையல்ல, இவை தமிழர்களின் வரலாற்றுரீதியான நிலைப்பாடாகும்’ எனில் இவ்வாவணம் புதிதாக எதையும் சொல்லவில்லை என்பது ஒன்று.

இவ்வாறான ஓர் ஆவணம், தேர்தல் நோக்கமின்றித் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த ஆவணமாயின் ஏன் பிற தமிழ்க் கட்சிகள் இணைக்கவில்லை என்பது இரண்டாவது.

இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13 கோரிக்கைகளுடன் பெரும்பாலான தமிழ்கட்சிகள் உடன்படும். ஆனால், ஏன் இந்த ஆறு கட்சிகளுடன் மட்டும், பேச்சு நடத்தப்பட்டது. ஏனைய கட்சிகள் ஏன் இணைக்கப்படவில்லை. இது தேர்தலுக்கானது இல்லையெனில், குறைந்தபட்சம் ஏனைய தமிழ்க்கட்சிகளுக்கு அழைப்பாவது அனுப்பியிருக்கலாம்.

அவ்வாறு அழைப்பது அடிப்படையான ஜனநாயகச் செயற்பாடு. அழைப்பை ஏற்பதும் நிராகரிப்பதும் கட்சிகளின் முடிவு.

ஆனால், பொது உடன்பாடு எட்டப்படும் நோக்கில், இந்த முயற்சி பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டதாக இருந்தால், ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். இதில் ஏனைய கட்சிகள் பங்கேற்கவோ அல்லது கோரிக்கைகளுடன் உடன்பட மறுத்திருப்பின், அக்கட்சிகளின் நோக்கம் மக்கள் மத்தியில் இயல்பாகவே அம்பலப்படும். எனவே, அனைத்துத் தமிழ்க்கட்சிகளையும் அழைப்பதே பொருத்தமானது. ஆனால் அவ்வாறு நிகழவில்லை.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கூட்டணியாக உருப்பெறத் தொடங்கிய ஆறுகட்சிக் கூட்டணி, ஐந்தாக முடிந்துள்ளது. இதன் அர்த்தம், 13 அம்சக் கோரிக்கைகளைக் கூட்டணியில் இருந்து விலகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையா? கூட்டணிகளும் கூட்டுச் செயற்பாடுகளும் மிகுந்த கவனத்துடனும் மக்கள் நல நோக்கில் செய்யப்பட வேண்டும். தமிழ்த் தேசியவாத அரசியலுக்கு இது புதிது.

உடன்பட்ட 13 அடிப்படைகளையும் பிரதான இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது வெளிப்படை. இது அனைவரும் அறிந்ததே. இந்தப் பின்னணியில் இவ்வாறான ஓர் ஆவணத்தைத் தேர்தலில் ஆதரவு தருவதற்கான அடிப்படை என்ற ரீதியில் உருவாக்கியமை எதைக் காட்டுகிறது.

கையொப்பமிட்ட ஐந்து கட்சிகளும் இந்தக் கோரிக்கைகளுக்கு இரண்டு பிரதான வேட்பாளர்களும் உடன்பட மாட்டார்கள் என்பதை நன்கறிவர். அப்படியாயின் இந்தச் செயல் எதைக் காட்டுகிறது.

ஒற்றுமையின் பெயரால், தமிழ் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்துள்ளார்கள். அதையே தொடர்ந்தும் செயற்படுத்தத் தமிழ்த் தலைமைகள் மீண்டும் முயல்கின்றன. மக்களை மய்யமாகக் கொள்ளாத பிற்போக்கு அரசியலின் இன்னொரு காட்சி, இப்போது ஐந்து கட்சிக் கூட்டணி என்பதன் பெயரால் அரங்கேறுகிறது.

சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் பலவற்றை இலங்கையில் கண்டுள்ளோம். எல்லாச் சந்தர்ப்பவாதக் கூட்டணிகளிலும், அவற்றின் உறுப்பு அமைப்புகள் தமது அடிப்படைக் கொள்கைகளுக்குத் துரோகமிழைப்பது தவிர்க்க இயலாதது.

ஏனெனில், இத்தகைய கூட்டணிகள் பொதுப்படக் குறுக்கு வழியில் எதையேனும் சாதிப்பதை வேண்டியே உருவாகின்றன. அவ்வாறு உருவானதொரு கூட்டணியே இப்போது ஏற்பட்டுள்ள கூட்டணி. இவர்கள் மக்களை இன்னொரு முறை ஏமாற்றத் தயாராகி விட்டார்கள். இதற்கான விலையைத் தமிழ் மக்களே கொடுக்க வேண்டி வரும். சில கூட்டணிகள், பாழ்நரகத்தில் தீர்மானிக்கப்படுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதியோர் பல்கலைக்கழகம்!! (மருத்துவம்)
Next post தாய்ப்பால் கொடுக்க அஞ்சும் பெண்கள்!! (மகளிர் பக்கம்)