விளையாட்டு இளவரசி!! (மகளிர் பக்கம்)
மதுரை அருகே, கருமாத்தூர் அருளானந்தர் கலைக்கல்லூரியில் இரண்டாமாண்டு கணிதம் பட்டப்படிப்பு படிக்கும் அந்த மாணவி கால்களில் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கிறார். கல்லூரி படிக்கும் காலத்தில் சினிமா தியேட்டர், பீச் என பொழுது போக்கிக் கொண்டிருக்கும் மாணவிகள் மத்தியில் இவர் வித்தியாசமானவர். ஒவ்வொரு கல்லூரியின் விளையாட்டு மைதானங்களாக பறந்து பறந்து விளையாட்டு பயிற்சி செய்கிறார். அவர் பெயர் பாண்டீஸ்வரி.
மைதானத்தில் வெள்ளை நிற பேன்ட் சட்டை அணிந்து அநாயசமாக காலைத்தூக்கி எதிரே உள்ள பெண்ணின் தோள்பட்டையில் ஒரு உதை விடுகிறார் டேக் வாண்டோ பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாண்டீஸ்வரி. தொடர்ந்து எதிரே உள்ள பெண்ணின் பின்னந்தலையில் மற்றொரு உதை. அருகே இருந்த பயிற்சியாளர் அவரது பாயின்ட் 1 பிளஸ் 3 என 4 மதிப்பெண்களை தருகிறார்.
அது என்ன தோள்பட்டையில் உதைத்ததற்கு 1 மதிப்பெண், பின்னந்தலையில் அடித்ததற்கு 3 என கேட்டபோது… ‘‘அது பிரன்ட் கிக், இது பேக் கிக்’’ என மதுரை பாஷையில் நமக்கு விளக்கம் அளித்தார் பாண்டீஸ்வரி. டேக்வாண்டோ எனப்படும் கராத்தே போன்ற தற்காப்புக்கலையில் அவர் கடந்த 2014ல் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ளார். இது தவிர அவருக்கு நீளம் தாண்டுதல், டிரிபிள் ஜம்ப், கைப்பந்து, 4×100 மீட்டர் தொடர் ஓட்டம் என 21 போட்டிகளில்தான் வென்ற பட்டியலையே நம்மிடம் அளித்துவிட்டார்.
உங்களுக்கு விளையாட்டில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது என்றதும், அவர் நான்காம் வகுப்பு படித்த காலத்திற்கு தன் மலரும் நினைவுகளை அழைத்து சென்றார். ‘‘அப்போ 9 வயது இருக்கும். ஊர்ல நடந்த நீளம் தாண்டுதல் போட்டியில ஒரு ஆர்வத்துல கலந்துக்கிட்டேன். ேபாட்டியில் முதல் பரிசாக எனக்கு ரூ.200 ரூவா தந்தாங்க.
அப்ப பிடிச்ச ஓட்டம் தான் இப்பவும் தடகளப் போட்டி, கைப்பந்து என எல்லா விளையாட்டுலையும் அசத்தி வருகிறேன். இங்குள்ள செயின்ட் கிளாரட் பள்ளிக்கூடத்துல +2 படிக்கும் போது அந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் இருவரும் தந்த ஊக்கம் தான் இப்ப நான் கோயம்புத்தூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் என ஓடி ஓடி ஒவ்வொரு விளையாட்டிலும் சாம்பியன் பட்டங்களை குவித்து வருகிறேன்’’ என்றார் பாண்டீஸ்வரி.
‘‘என் அண்ணன் கைப்பந்து விளையாடுவார். அதை பார்த்து நானும் ஏன் கைப்பந்து விளையாடக்கூடாது என நினைத்து பயிற்சி பெற்றேன். அதிலும் பதக்கங்களை குவித்து வருகிறேன். நீளம் தாண்டுதலில் எனது சாதனை அளவு 4.64 மீட்டர். கைப்பந்து போட்டியில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் 3வது இடம் பிடித்து நான் இடம்பெற்ற குழு வெற்றி வாகை சூடியுள்ளது.
மாலை 3.30க்கு கல்லூரி விட்டதும் உடனே மைதானத்துக்கு வந்துடுவேன். மாலை 4 மணி முதல் 6 மணி வரை தினமும் 2 மணிநேரம் பயிற்சி பெறுவேன். மதுரை எம்.ஜி.ஆர் ஸ்டேடியத்தில் நடந்த பல்கலைக்கழக அளவிலான நீளம் தாண்டுதல் போட்டியில் தான் எனது சாதனை அளவான 4.64 மீட்டர் இலக்கை அடைந்தேன். இது என் வாழ்நாளில் மறக்க முடியாதது’’ என்றார் உற்சாகத்துடன் பாண்டீஸ்வரி.
Average Rating