போலி பாஸ்போர்ட் மோசடி வழக்கில் மோனிகாவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை
பொய்யான பேரில் பாஸ்போர்ட் வாங்கியதற்காக அபுசலீம் பெண் நண்பரும் பிரபல இந்தி நடிகையுமான மோனிகா பேடிக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1993_ம் ஆண்டு மும்பையில் தொடர்குண்டு வெடித்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் மற்றும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியான அபுசலீம் மற்றும் அவரது பெண் நண்பரும் பிரபல இந்தி நடிகையுமான மோனிகாவையும் போலீசார் தேடி வந்தனர்.
போலீசார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இவர்கள் இருவரும் போலி பாஸ்போர்ட்டுகள் வாங்கிக்கொண்டு துபாய் சென்றுவிட்டனர். ஆந்திரா மாநிலம் கர்நூல் நகர விலாசத்தை கொடுத்து மோனிகா பேடி தன்னுடைய பெயரை சனா மாலிக் கமல் என்று கூறியும் அபுசலீம் தன்னுடைய பெயரை ரமில் கமல் மாலிக் என்று கூறியும் போலீ பாஸ்போர்ட்களை வாங்கிவிட்டனர். அபசலீமின் முதல் மனைவி சபீனா ஆஸ்மியும் போலி பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். இவர்கள் அனைவரும் கடந்த 2001_ம் ஆண்டு போலி பாஸ்போர்ட்டு வாங்கியுள்ளனர்.
இந்த நிலையில் அபுசலீமும் அவரது பெண் நண்பர் மோனிகா பேடியும் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி துபாய் சென்றதை புலனாய்வு துறையினர் விசாரணையின் போது கண்டுபிடித்தனர்.
இதனையொட்டி ஐதராபாத் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அபுசலீம் மற்றும் மோனிகா பேடி மீது சட்டபிரிவு 420 (ஏமாற்றுதல்)120 பி(கிரிமினல் சதி) ஆகிய பிரவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்த வழக்கில் ஓய்வு பெற்ற சப்_இன்ஸ்பெக்டர் அப்துல் சத்தார், தபால் ஊழியர் கோகரி சாகிப், முகமது யூனஸ், ஸ்ரீநிவாஸ்,நூர் முகமது ஆகியோர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் அபு சலீமும்,மோனிகா பேடியும் தூக்குத்தண்டனை இல்லாத போர்ச்சுக்கல் நாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டனர். இதுபற்றி தெரிந்த புலனாய்வு பிரிவினர் போர்ச்சுக்கல் நாட்டுடன் நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தி சில நிபந்தனைகளுடன் அவர்கள் இருவரையும் இந்தியா கொண்டுவரப்பட்டு ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் இந்தியா கொண்டுவரப்பட்டு ஏறக்குறைய ஓராண்டு முடியும் தருவாயில் போலி பாஸ்போர்ட்டு வழக்கில் சி.பி.ஐ.கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் மோனிகா பேடி,அப்துல் சத்தார்,கோகரி சாகிப் ஆகியோர்களுக்கு தலா 5 ஆண்டுகள் கடும் தண்டனையும், முகமது யூனசுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஸ்ரீநிவாஸ்,மற்றும் நூர் முகமது ஆகியோர்களை கோர்ட்டு விடுதலை செய்துள்ளது.
மோனிகா பேடி பொய்யான பேரில் பாஸ்போர்ட்டு வாங்கியதற்காக சட்டப்பிரிவு 120 பி,420,419_ன் கீழ் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பேடிக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஸ்பெசல் பிராஞ்ச் போலீஸ் அலுவலக கிளார்க் ஸ்ரீநிவாஸ், டிராவல் ஏசண்ட்,நூர்முகமத் ஆகியோர்களை கோர்ட்டு விடுவித்துள்ளது.
இதற்கிடையில் போலி பாஸ்போர்ட் வழக்கில் விசாரணைக்காக அபுசலீமை லக்னோவுக்கு அழைத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற மனு மீதான விசாரணையை வருகின்ற 19_ம் தேதிக்கு மும்பை தடா கோரட்டு தள்ளிவைத்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்திலும் அபுசலீம் போலியான பெயரில் பாஸ்போர்ட்டு வாங்கியுள்ளான். அதில் போடப்பட்டுள்ள கையெழுத்தும் அபுசலீமின் கையெழுத்தையும் ஒப்பிட்டு பார்க்க லக்னோவுக்கு அவனை அழைத்துச் செல்ல டெல்லி போலீஸ் அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளது.