விவசாயத்தின் வீழ்ச்சியும் ஏற்றுமதி தேக்க நிலையும் !! (கட்டுரை)

Read Time:12 Minute, 4 Second

அண்மைய காலத்தில் இலங்கையின் விவசாயத்துறையில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியானது, இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டின் ஏற்றுமதி வருமானம், சென்மதி நிலுவை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் நேர்மறைத் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.

கடந்த வருடத்தில் விவசாயத்துறையின் பங்களிப்பானது குறைவடைந்ததன் விளைவாக, ஏற்றுமதியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாண்டிலும் ஏற்றுமதியில் விவசாயத்துறையில் மிகப்பெரும் பங்களிப்பைச் செலுத்தாத நிலையில், இலங்கையின் ஏற்றுமதி வருமான சமநிலையைப் பேணுவதில் மிகப்பெரும் சிக்கலை இது ஏற்படுத்தியிருக்கிறது.

2017ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த ஏற்றுமதியானது, 10.2 சதவீதமாகவும் 2018இல் இது மேலதிகமாக 4.7 சதவீதமாகவும ் 2019ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 5 சதவீதம் ​ேமலதிக அதிகரிப்பையும் கொண்டிருந்தது. ஆனால், இந்த ஏற்றுமதி அதிகரிப்பிலும் இலங்கையின் விவசாயத்துறை, கடந்த ஆண்டில் 6.8 சதவீதத்தால் குறைவடைந்திருந்ததுடன், இவ்வாண்டில் முதல் ஆறு மாதங்களில் மேலதிகமாக 6சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்திருந்தது. இந்தக் குறைவானது, விவசாய ஏற்றுமதி மூலமாக அரசாங்கம் எதிர்பார்த்திருந்த வருமானத்துக்குத் தடையாக அமைந்துள்ளதுடன், நாட்டின் சென்மதி நிலுவை, வர்த்தகப் பற்றாக்குறை தொடர்பில் மாற்றுத் திட்டங்களை நோக்கி நகர்வதற்கான அறிகுறியை வழங்கியிருக்கிறது.

விவசாய ஏற்றுமதிகளின் முக்கியத்துவம்

இலங்கையின் ஆரம்பகால ஏற்றுமதியில் விவசாயத்துறையின் பங்களிப்பானது, அளப்பரியதாகும். குறிப்பாக, 1950ஆம் ஆண்டில், இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தேயிலை, இறப்பர், தேங்காய் என்பன, 94சதவீத கொண்டிருந்தது. அதுபோல, 1977ஆம் ஆண்டில் மேற்கூறிய இந்த மூன்று பயிர்களும் 79 சதவீதமான பங்களிப்​ைப ஏற்றுமதியில் கொண்டிருந்தது. இதற்குப் பின்னான, திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாக, ஏற்றுமதியில் விவசாயத்துறையின் பங்களிப்பில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படத் தொடங்கியிருந்தது.

2000ஆம் ஆண்டளவில், இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் விவசாயத்துறையின் பங்களிப்பானது, 20 சதவீதமாகக் குறைவடைந்ததுடன், அதில் மேற்கூறிய மூன்று பயிர்களின் பங்களிப்பானது, சுமார் 17 சதவீதமாக இருந்தது. 2017ஆம் ஆண்டில் இந்நிலை, மேலும் மோசமடைந்து, ஒட்டுமொத்த ஏற்றுமதியில், விவசாயத்துறையின் பங்களிப்பானது, 17 சதவீதமாகக் குறைவடைந்திருந்தது. இலங்கையின் சேவைத்துறையிலும் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளிலும் ஏற்பட்ட மாற்றமானது, விவசாயத்துறையில் பங்களிப்ைப, ஒப்பீட்டளவில் குறைத்திருந்தாலும் விவசாயத்துறையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

குறிப்பாக, இலங்கையின் பருவநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், இலங்கையின் உள்நாட்டு தேவையிலான அதிகரிப்பு, செலவீன அதிகரிப்பு என்பன, உலக சந்தையில் இலங்கையின் விவசாயத்துறையின் பங்களிப்பைக் குறைவடையச் செய்துள்ளது.

இலங்கையின் விவசாய ஏற்றுமதியில், தேயிலைக்கான இடமானது, மிக முக்கியமானதாகும். சுதந்திரத்துக்கு பின்னான இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில், தேயிலை மூலமான ஏற்றுமதி வருமானமே, ஆரம்பத்தில் அதிகமாகவிருந்தது. தற்போதும் கூட விவசாய ஏற்றுமதியில் தேயிலையின் பங்களிப்பே அதிகமாகவிருக்கிறது. ஆனாலும், இலங்கையின் தேயிலை ஏற்றுமதியானது, ஒப்பீட்டளவில் குறைவடைந்தே சென்று கொண்டிருக்கிறது. 2018ஆம் ஆண்டில் இது 6.6 சதவீதமாக குறைவடைந்திருந்ததுடன், 2019ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில், இது 6 சதவீதமாக குறைவடைந்துள்ளது. இதற்கு, தேயிலை உற்பத்திக்கான செலவீன அதிகரிப்பும் தரத்திலானக் குறைபாடும் காரணமாக அமைந்துள்ளது.

அதேபோல, இலங்கையின் விவசாய ஏற்றுமதியில் பங்களிப்புச் செய்யும் மற்றுமொரு பயிராக, இறப்பர் உள்ளது. பெரும்பாலும் இலங்கையின் இறப்பர் மூலப்பொருளாகவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக, பெற்றுக்கொள்ளும் வருமானமானது, இறப்பர் உற்பத்திகள் மூலம் கிடைக்கப்பெறுகின்ற வருமானத்திலும் குறைவாக இருக்கின்றது. உதாரணத்துக்கு, கடந்த 2018ஆம் ஆண்டில் இலங்கையின் இறப்பர் மூலப்பொருள் ஏற்றுமதி மூலமாகப் பெற்றுக்கொண்ட வருமானம் சுமார் 31.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். ஆனால், இதைப் பயன்படுத்தி இறப்பர் உற்பத்தி பொருள்கள் மூலமாக உற்பத்தியாளர்கள் பெற்றுக்கொண்ட வருமானம் சுமார் 875 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

ஆகவே, மூலப்பொருளை முடிவுப்பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்யுமாறு எமது உட்கட்டமைப்பு வசதிகளை முன்னேற்றாததன் காரணமாக, மிகப்பெரும் வருமான இழப்பை ஆண்டுதோறும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகிறது. அத்துடன், இலங்கையானது இன்னமும் பழமையான இறப்பர் மரங்களிலிருந்து பெறப்படும் இறப்பர் மூலப்பொருளையே, பெரும்பாலும் ஏற்றுமதி செய்வதன் விளைவாக, ஏற்றுமதி சந்தையில் ஏனைய நாடுகளின் தரத்துடன் கடுமையாகப் போட்டி போட்டே வருமானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறது. ஆனால், இறப்பர் உற்பத்திகளை, சந்தைக்கு வழங்கும்போது, இத்தகைய போட்டிநிலையை முறியடிப்பதுடன், வருமானத்தை அதிகப்படுத்திக்கொள்ளவும் ஏதுவாக அமையும்.

இதேபோல இலங்கையின் விவசாயத்துறையில் பங்களிப்புச் செய்யும் மற்றுமொரு பயிராக, தேங்காய் உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டில் தேங்காய் சார்ந்த ஏற்றுமதி மூலமாக இலங்கையானது, சுமார் 316 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுக்கொண்டுள்ளது.இது, 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து, 11.7 சதவீதம் குறைவான வருமானமாகவுள்ளது. இது, இலங்கையின் விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் தெள்ளத்தெளிவாகக் காட்டி நிற்கிறது. அத்துடன், இலங்கையின் உள்நாட்டு சந்தையில் அதிகரித்த கேள்வியைப் பூர்த்தி செய்ய, அதிகளவிலான தேங்காய் உற்பத்திகள் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக, ஏற்றுமதியில் முழுமையாகக் கவனத்தைச் செலுத்த முடியாமையும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

மேற்கூறிய முக்கிய விவசாய ஏற்றுமதி பயிர்களில் ஏற்பட்ட வீழ்ச்சியானது, ஒட்டுமொத்த விவசாய ஏற்றுமதி வருமானத்தையும் கேள்விக்குறிக்குள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக, இலங்கையானது, 2018ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த விவசாய ஏற்றுமதிகளின் மூலமாக, 2.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றிருந்தது. இது 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து, 0.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைவானதாகும்.

ஒட்டுமொத்த விவசாய ஏற்றுமதியில் கடலுணவு சார்ந்த ஏற்றுமதியைத் தவிர்த்து, ஏனைய ஏற்றுமதி பொருள்களில் தொடர்ச்சியாக வீழ்ச்சி நிலையே, காணப்படுகிறது. இது இலங்கையின் எதிர்பார்க்கை ஏற்றுமது வருமானத்துக்கு மிகப்பெரும் தடைக்கல்லாக அமைந்திருக்கிறது.

எதிர்வரும் காலத்தில் இலங்கை தனது மீளச்செலுத்துகை நிலுவைகளுக்கு ஏற்றுமதி வருமானத்தைப் பெரும்பாலும் நம்பியுள்ள நிலையில், முன்னரே எதிர்வு கூரப்பட்ட வருமானத்தை விவசாய ஏற்றுமதிகள் மூலமாகப் பெறமுடியாது போவதென்பது இலங்கையின் பொருளாதார சூழ்நிலையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கி விடக்கூடிய ஒன்றாக உள்ளது.

இவற்றுக்கு மேலாக, விவசாய ஏற்றுமதிகளில் காணப்படும் தொடர்ச்சியான வீழ்ச்சியானது, குறித்த தொழிலை நம்பியிருக்கும் மிகப்பெரும் உள்நாட்டு ஊழியப்படையையும் அதுசார்ந்த மக்களின் வாழ்வியலையும், மிகப்பெரும் பாதிப்புக்குள்ளாக்குவதாக அமைந்துள்ளது.

இதன்காரணமாக, இலங்கையின் உள்நாட்டு வருமானத்திலும் வேலை வாய்ப்பிலும் மிகப்பெரும் தாக்கநிலை ஏற்படுவதுடன், அதன் தொடர்ச்சியாக இலங்கையின் பொருளாதார பின்விளைவுகள் மிகப்பாரதூரமாக அமையவும் வாய்ப்பிருக்கிறது.

எனவே, நாட்டின் முதுகெலும்பாக பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வை வழங்கும் விவசாயத்துறையையும் விவசாய ஏற்றுமதிகளையும் பாதுகாக்கவும், முன்னேற்றவும் தேவையான வசதிகளைக் காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கறுப்பின மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற கருஞ்சிறுத்தை!! (வீடியோ)
Next post ஃப்ளட்டர் ஸ்லீவ் ஸ்பெஷல்! (மகளிர் பக்கம்)